சினிமா - 6


(லாவணி)


மிழகத்தின் நாட்டுப்புறக் கலைகள் மெல்ல மெல்ல அழிவை நோக்கி பயணிக்கத் தொடங்கி வெகுகாலமாகி விட்டன. இன்று தொழில்நுட்ப புரட்சியின் விளைவாக கிராமங்களும் தங்களது வேர்களை மறந்துவிட்டு தொலைக்காட்சி, அலைபேசி, இணையம் என புதிய திசையில் பயணிக்கத் தொடங்கி விட்டன. மரபு சார்ந்த கலைஞர்களும் கூட, பிழைப்பிற்காக தங்களது கலையை மறந்துவிட்டு, மாற்று வேலைத் தேடி நகரத்திற்கு குடிபெயர்ந்து, சுயத்தை இழந்து, வாழ்வை கழித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றிருக்கும் அடிப்படையான காரணம் விவசாயம் பொய்த்துப் போனதுதான். பல விளைச்சல் கண்ட நிலங்கள், இன்று ரியல் எஸ்டேட்டுகளாக மாறிவிட்ட படியால், விவசாயத்தை நம்பி உயிர் வாழ்வது என்பது இன்றைய சாமான்யனுக்கு இயலாத ஒன்றாகிவிட்டது. ஆகவேதான் பல விவசாயக் குடும்பங்கள் இன்று நகரம் நோக்கி படையெடுக்க துவங்கி விட்டன. இதனால் நகரங்கள் பெருத்து, வீங்கிக்கொண்டே வருவது தனிக்கதை! இன்னும்கூட என் நினைவில் இருக்கிறது. அது சிறார் பருவம். இரவின் மாலைப் பொழுதுகளில் கிராமத்தில் ஏதேனும் ஒரு கலை நிகழ்ச்சி நடந்து கொண்டேயிருக்கும் (அப்போது தொலைக்காட்சி கிராமங்களை பீடித்துக் கொள்ளாத காலம். ஊர் பஞ்சாயத்து அலுவலகத்தில் மட்டுமே தொலைக்காட்சி இருக்கும். பெரும்பாலும் அதில் செய்திகளும், வாரத்தின் இறுதி நாட்களில் ஒரு படமும் மட்டுமே காட்டுவார்கள். மீதி நேரங்களில் அந்த தொலைக்காட்சி பெட்டி பூட்டப்பட்டே இருக்கும்). தோல்பாவைக் கூத்தும், மேடை நாடகங்களும், தெருக் கூத்துக்களும், குறவன், குறத்தி ஆட்டங்களும் எங்கள் ஊரில் அரங்கேறிக் கொண்டே இருக்கும். காலையிலிருந்து விவசாய வேலைகளைப் பார்த்துவிட்டு, மாலையில் சோர்ந்து போய் வீட்டிற்கு வரும் நாங்கள், பொழுதைப் போக்கிக் கொள்ளவும், எங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளவும் இந்த கலை நிகழ்வுகள் பெரும்பங்கை வகித்திருக்கின்றன. (அப்பா நாடகக் கலைஞர் என்பதால் மேடை நாடகத்தில் குறிப்பாக "நல்லதாங்கள் கதை', "அரிச்சந்திரன் கதை'களை தொடர்ந்து பார்க்கக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதில் பெரும்பாலும் அரிச்சந்திரனின் மனைவியாக அப்பா, பெண் வேடமிட்டு நடிப்பார்!) கூடி வாழ்தல் என்பதை மறைமுகமாக இந்த கலைகள் அன்று செய்து கொண்டேயிருந்தன. இன்று நகரத்தின் சந்தடி மிகுந்த அடுக்குமாடி குடியிருப்பில் எங்களை நுழைத்துக்கொண்டு, தனித்தனி தீவுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நெடுந்தொடர்கள் எங்கள் குடும்பங்களை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டு விட்டன. வாழ்தல் என்பது மறந்துபோய் வாழ்ந்து கழித்தல் என்கிற நிலைக்கு எங்கள் குடும்பங்கள் இன்று தள்ளப்பட்டிருக்கிறது. இந்த இழிநிலைக்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்?

மராட்டிய மாநிலத்திலிருந்து தஞ்சாவூருக்கு மாராட்டியர்களால் கொண்டுவரப்பட்ட கலைதான் "லாவணி'. இக்கலை நானூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்ததாகும். தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் "லாவணி' பிரபலம். "லாவணி' என்பது நாற்று நடுதல் என்று பொருள்படும். வயலில் நடவு நடும் பெண்கள் தங்களின் உழைப்பின் களைப்பைப் போக்க பாடும் பாடல் எனவும் கூறலாம். "லாவணி' நாட்டுப்புற இசைக்கலையில் முக்கியமானதாகும். மாசி மாதம், மக நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும் "காம தகன விழா'வில் "லாவணி' நிகழ்த்தப்படும். ஆரம்பத்தில் "லாவணி'யைப் பாடுவதற்கும், அதை காண்பதற்கும் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். அதற்குக் காரணம், இந்த "லாவணி' என்பது காமச்சுவை நிறைந்த பாடல்களால் அதிகம் நிரம்பியிருந்தது என்பதால்தான். பிறகு, இந்த "லாவணி'யை வரையறை செய்த பிறகு, பெண்களும் அதிகம் பங்கேற்க ஆரம்பித்தார்கள். முதலில் இரு ஆண்கள் எதிர் எதிராக அமர்ந்து, "எரிந்த கட்சி', "எரியாத கட்சி' என்று பிரிந்து "லாவணி'யைப் பாடுவார்கள். இந்தப் பாடலின் முடிவில் காமன் எரிக்கப்படும் நிகழ்ச்சி "காம தகன விழா'வாக கொண்டாடப்படுகிறது. இக்கலையில் தமிழகத்தில் பிரபலமானவர்கள் எஸ்நா, எல்லம்மா, குளிச்சப்பட்டு ராமசுவாமி, "டேப்' அப்துல் காதர் மற்றும் சச்சிதானந்தன் உள்ளிட்டோராவார். தற்போது இக்கலையை நிகழ்த்துபவர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணுமளவிற்கே உள்ளது என்பது வருத்தத்திற்குரியது. தஞ்சாவூரில் மராட்டியத்தைச் சேர்ந்த எஸ்நாவுடன் எல்லம்மா என்ற பெண்மணி இணைந்து "லாவணி'யைப் பாடியது பிரபலமாகியிருக்கிறது. அதன் பிறகு, ஆண்களும், பெண்களும் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ "லாவணி'யைப் பாடும் முறை வழக்கத்திற்கு வந்திருக்கிறது. 1990க்குப் பிறகு, தமிழகத்தில் "லாவணி'க் கலைஞர்கள் நலிவடைய ஆரம்பித்ததன் விளைவாக இக்கலை இன்று அழிவை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டன. "லாவணி' என்னும் இவ் ஆவணப்படத்தை எஸ். ராஜகுமாரன் என்பவர் இயக்கியிருக்கிறார். "லாவணி' கலைஞர்களான "டேப்' அப்துல் காதர் (வயது 85) மற்றும் சச்சிதானந்தன் ஆகியோர் "லாவணி'ப் பாடலை பாடுவது இந்த ஆவணப்படத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதில் அப்துல் காதர் என்பவர் ஆரம்பத்தில் குளிச்சப்பட்டு ராமசுவாமியுடன் இணைந்து பாடியிருக்கிறார். இவர் பொதுவுடைமை மேடைகளில் சமூக பாடல்களோடு, "லாவணி'யையும் இணைத்துப் பாடுவது வழக்கம். தற்போது இவருடன் இணைந்து பாடும் சச்சிதானந்தன், மறைந்த "லாவணி'க் கலைஞரான குளிச்சப்பட்டு ராமசுவாமியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆவணப்படத்தில் இவர்கள் இருவரும் பாடுவதற்கு இடையிடையே பார்வையாளர்களின் மனோபாவங்களையும், "லாவணி' குறித்த தகவல்களையும் இயக்குநர் சொல்லிச் செல்வது அழகு. 90 நிமிடங்கள் கொண்ட இவ் ஆவணப்படம் அழகியலோடும், சிறந்த தொழில்நுட்பத்தோடும் எடுக்கப்பட்டிருக்கிறது சிறப்பான ஒன்றாகும். இவ் ஆவணப்படத்தைப் பார்த்து, முடித்தவுடன் தமிழகத்தின் பூர்வீகக் கலைகளை கட்டிக் காக்க வேண்டும் என்று எழும் நம் ஆவலைத் தவிர்க்க முடியவில்லை!

கலை, இலக்கிய ஆளுமைகளில் முக்கியமானவர் எஸ்.ராஜகுமாரன். இலக்கியம், இணைய ஊடகம், திரைப்படம், தொலைக்காட்சி என பல துறைகளில் தனது முத்திரையை பதித்துக் கொண்டிருப்பவர். "மழைவாசனை', "மேகவீடு' ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும், "வண்ணத்துப்பூச்சிக்கு எந்த நிறம் பிடிக்கும்', "நதியோடிய காலம்' உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். தமிழக முதல்வர் கலைஞரின் பவளவிழா குறித்த கவிதைப் படமான "ஓய்வறியா சூரியன்', தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான தி.க.சி.யின் வாழ்க்கைக் குறித்த ஆவணப்படமான "21-இ, சுடலைமாடன் தெரு, திருநெல்வேலி டவுன்' போன்ற படங்களைத் தொடர்ந்து இவர் இயக்கியிருக்கும் ஆவணப்படம்தான் "லாவணி'. எழுத்தாளர் தி.க.சி. குறித்த ஆவணப்படத்திற்கு திருப்பூர் மத்திய அரிமா சங்கம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளிடமிருந்து சிறந்த ஆவணப்படத்திற்கான விருது இவருக்கு கிடைத்துள்ளது. தற்போது இவர், தமிழகத்தின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான தோழர்.நல்லக்கண்ணு குறித்த "சின்ன சின்ன சிறகுகள்' என்னும் ஆவணப்படத்திற்கான விவரண சேகரிப்புப் பணிகளில் மும்முரமாகியிருக்கிறார்.

Comments

  1. erintha katchi eriyaatha katchi endru irandu vagai paadalgal undu . ithil THANJAI PAAPU THAASANIN eriyatha katchi paadalgal migavum pirabalamanavai. karuthu chuvaiyum thamizh ilakkana chuvaiyum nirainthavai. Athanai Madhavaathigal agankaaram kondu azhithu vittarargal. intha padal thoguppu kidaippathu arithaayullathu.
    E.MUTHEZHILAN

    ReplyDelete

Post a Comment