இந்த உலகத்தில் தோல்வி என்பதெல்லாம் தோல்வியே அல்ல கண்மணி!


பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானவுடன் நண்பர்கள் பலரின் வேதனைக் குரல்கள் நாலா பக்கமும் எதிரொலித்துக்கொண்டே இருக்கின்றன. பெரும்பாலான மாணவர்கள் போதுமான மதிப்பெண்கள் பெற்றிருந்தபோதும் அது போதாது என்பதே அவர்கள் முன் வைக்கும் வாதம். இந்த சமயத்தில் பெய்கிற மழை சில ஞாபகங்களை அழைத்துக்கொண்டுவந்து காலையில் என் வீட்டின் முன்னால் நிறுத்தியது. பிளஸ் டூ தேர்வில் அதிகமான பாடங்களில் நான் தோல்வியடைந்திருந்தேன் (ஏறக்குறைய தமிழ், ஆங்கிலம் நீங்கலாக). முடிவு தெரிந்தபோது அதிகம் சந்தோஷமாக இருந்தேன். காரணம், அந்த தேர்வில் நான் மனப்பாடம் செய்யாமல் தேர்வு எழுத வேண்டும் என்று எடுத்த முடிவுக்கு கிடைத்த பரிசுதான். ஜே.கே.வும், ஒஷோவும் என்னை அப்போது முழுவதுமாக ஆக்கிரமித்து இருந்தார்கள். 

வாழ்க்கையை கொண்டாட்டமாக வைத்திருந்த நாட்கள் அவை. தோல்வி என்று இந்த சமூகம் குறிப்பிடுகிற விஷயம், எனக்கு சந்தோஷத்தின் கடலாக தோன்றியது. தோல்வியை கொண்டாடும் விதமாக என்னை சுற்றிய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இனிப்பு வழங்கி, தேர்வில் நான் பெயிலானதை தெரிவித்தேன். ஒருவரும் நம்பவில்லை! காரணம், பத்தாம் வகுப்பில் எங்க ஊர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களில் நானும் ஒருவன். தமிழில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண். நம்புவார்களா, ஆனால், பிறகு இரண்டுமுறை விடுபட்ட பேப்பர்களை எழுத முயன்றேன். அப்போது, ஹால்டிக்கெட்டில் கையெழுத்து போட மறுத்த, பள்ளி முதல்வரோடு எதை சண்டையிட்டது ஞாபகம். 

பிறகு, அப்படியே கைவிட்டுவிட்டு பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை கொண்டு சென்னை தரமணியில் உள்ள மத்திய தொழில்நுட்பக் கல்லூரியில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்தேன். ஏறக்குறைய 23 அரியர்ஸ் பேப்பர்கள். கடைசி செமஸ்டரில்தான் காதலில் சொதப்பினேன். பிறகு, ஒரு மழைக்காலத்தில் எனது ப்ரியத்துக்குரிய முதல்வர், அழைத்துப் பேசினார். அனைத்து அர்ரியர்களையும் எழுதி, முடிக்க ஒட்டுமொத்த கல்லூரிப் பேராசிரியர்களும் விழுந்து விழுந்து எனக்காக முயன்றார்கள். விருப்பத்தோடு அத்தனை பேப்பரையும் எழுதினேன். காலை, மாலை என இரண்டு வாரங்கள் (ஞாயிறு நீங்கலாக) விழுந்து விழுந்து எழுதினேன். ஒருமுறை தான் வரும் அனைத்து வகுப்புக்கும் ஒருவன் வந்து தேர்வு எழுதுகிறானா என்று யோசித்து, என்னுடைய ஹால் டிக்கெட்டை பரிசோதித்துவிட்டு, நெஞ்சடைத்து போய்விட்டார் பேராசிரியர் நெடுஞ்செழியன் (கணினித்துறை). ஹால்டிக்கெட்டில் அரியர்ஸ் பேப்பர்களின் லிஸ்ட்டில் பிரிண்ட் செய்ய இடமே இருக்காது. பின்னர், அரியர்ஸ் 23 பிளஸ் பைனல் செமஸ்டர் 6 இரண்டும் சேர்த்து 29 பேப்பர்களில் 26 பேப்பரில் ஐ ஆம் பாஸ். தேர்வு முடிவுகள் வெளியானதை பார்த்துவிட்டு, முதன்முதலாக எனது துறை பேராசிரியர் புள்ளியப்பன் குறுஞ்செய்தி ஒன்று அனுப்பியிருந்தார். “படவா... 26 தாண்டிட்ட... இன்னும் மூணுதான். உன்னால முடியும்டா!) மீண்டும் அடுத்த வருடம் எழுதபோனபோதுதான் காதலில் சொதப்பிய அவளும் அரியர் எழுத வந்ததை கண்டு, வாழ்வின் புனிதத்தைக் கண்டு சிரித்துக்கொண்ட எழுதினேன். மூன்று தேர்வுகளிலும் ப்ளாக் பாஸ். அந்த வருடம் நடந்த கல்லூரியில் நடந்த ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவர்களிடையே உரையாற்றினேன். அப்போது நான் மாணவர்களுக்கு சொன்னது இதுதான். 

“மை டியர் பிரண்ட்ஸ். இந்த உலகத்துல அற்புதமான நாட்கள் என்று ஒன்று இருந்தால் அல்லது சொர்க்கத்தில் நீங்கள் வாழ்ந்ததாக நினைத்தீர்கள் என்றால் அது உங்களுடைய கல்லூரியில் நீங்கள் பயின்ற வருடங்கள் மட்டும்தான். இந்தக் கல்லூரியில் நீங்கள் பாடங்களை படிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், அவ்வப்போது வகுப்பறையை விட்டுவிட்டு வெளியே செல்லுங்கள். நம் கல்லூரியைச் சுற்றி நிற்கும் மரங்களோடு பேசுங்கள். கட்டிடங்களின் தூண்களை ஆரத் தழுவங்கள். அரியர்ஸ் வைத்து, திரும்ப எழுதுங்கள், தியேட்டருக்கு சென்று நல்ல படங்களை பார்த்து ரசியுங்கள். நண்பர்களோடு சண்டையிடுங்கள். மனசுக்குப் பிடித்த விருப்பமான பெண்ணை காதலியுங்கள்... காதலித்து தோற்றுப்போங்கள்... வாழ்த்துக்கள்” என்று சொல்லி, முடிப்பதற்குள்ளாகவே, அரங்கம் நிறைந்த கைத்தட்டல்கள் மாணவர்கள் மத்தியில் இருந்து எழுந்தது. 

பிறகு, கல்லூரியின் முதல்வர் பேசினார். “நமது கல்லூரியில் அதிகமான அரியர்ஸ் பேப்பர்களை வைத்திருந்தது இயக்குநர் ஷங்கர் தான். ஆனால், அதை முறியடித்தவன் ப்ளாக்” என்று பேசியதும் அரங்கத்தில் விசிலோடு, கைத்தட்டல்களின் சப்தம் காதை கிழித்தது. நண்பர்களே, அதன்பிறகு, விஷுவல் கம்யூனிகேஷன் எடுத்து படித்ததும், ஒரு அரியர் கூட இல்லாமல் பாஸ் செய்ததுதும் வரலாற்றின் மிச்சம் உள்ள பக்கங்களே. நிற்க. இப்போதும் கூட பிளஸ் டூ தேர்வில் நான் பெயிலான மாணவன் தான். எனது மகள் யு.கே.ஜி. நுழைவுத்தேர்வு எழுதப்போகும்போது சிரித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தேன். அவள் வளர்ந்து, பிளஸ் டூ படிக்கும்போது சொல்ல வேண்டும்... “இந்த உலகத்தில் தோல்வி என்பதெல்லாம் தோல்வியே அல்ல கண்மணி!”

Comments

Popular Posts