சீர்வரிசைக் கனவு

த்தரி வெயிலில்
கரி உருவம் தரித்து
தகிக்கிற அனலில்
உயிரின் வியர்வைகளை
மனதில் சுமந்துகொண்டு
தெருவில் இறங்கி
குரல்தொலைத்து கூவி
விற்கிறாள் பசியை
சூடேறிய கால்களோடு
தெருவையே நகர்த்திச் செல்கிறாள்
காய்கனி வண்டியோடு
காய்ந்துபோய் கிடக்கின்றன
வெங்காய பூண்டு சருகுகளோடு
ஒட்டிய வயிறும்
ஆறு சக்கரங்களோடும்
அகதியாகி நிற்கிறாள்
நடுத்தெருவில்
வியர்வைகாய விலாமுட்ட
வாடிக்கையாளர்களின்
சுவடுகளை பின் தொடர்ந்து
தளராத நம்பிக்கையோடு
தேடித்தொலைகிறாள்
நகரத்தின் பின்வாசலில்
நெறிகெட்ட குரலுடன்
தறிகெட்ட வாழ்க்கையில்
மகளின் சீர்வரிசைக் கனவுகளோடு
ஓங்கி எழுந்து அடங்குகிறது
அவளின் சுவாசம்
நடுநிசியில்
நகரத்தை அடைத்தபடி.

Comments