புத்தகங்கள்... கனவுகள்... புலப்படாத நினைவுகள்!

மிழ் இலக்கிய சூழலில் முக்கிய ஆளுமைகளின் புத்தகங்களை அது நாவலோ, சிறுகதை தொகுப்போ, கவிதையோ, கட்டுரையோ ஏதோ ஒன்று. வாசிக்க நேர்ந்தவை பற்றி ஒரு பின்னிரவில் அசைப்போட்டுக்கொண்டேயிருந்தேன். நூலகத்தில் ஆயிரமாயிரம் புத்தகங்களுக்கு நடுவே ஒரு பதின்மர் பருவத்து இளைஞனை எது கவர்ந்து இழுத்திருக்கும்?
நீண்ட கடந்த கால நினைவு. புத்தகங்கள்... கனவுகள்... புலப்படாத நினைவுகள்... இவற்றின் வழியேயான பயணத்தில் நான் இறுதியில் போய் நின்றது ஓவியங்களின் முன்னால். பெருங்கொடுமையென்று கழிந்த வாழ்வின் இடையே சற்று நிம்மதியடையச் செய்யும் கோட்டு உருவங்களில் என் சக தோழமையின் கரங்களை நான் கண்டேன். மருதுவின் ஓவியம் கொடுத்த பாதிப்புகளுக்கு இணையாக அவ் ஓவியத்தி்ல் இடம் பெற்றிருந்த மருதுவின் கையெழுத்தும் மிகவும் வசீகரத்தின் கைக் கொண்டு என்னை இழுத்தது. மருது வரையும் மனிதர்கள் முதலில் என் அகத்தோடு பேசத் தொடங்குவார்கள். பின்னர் அவர்களின் அக மனதின் வழியே நான் என் புற உலகின் சொல்லவொண்ணா அழகியலைக் காண்பேன். இயல்பாக கிறுக்கன் என்று நண்பர்களிடத்தில் பெயர் பெற்றிருந்த எனக்கு கிறுக்கலாய் தோன்றிய ஓவியங்கள் யாவும் மனித சமூகத்தின் அவலங்களுக்கு கொடுக்கப்படும் சவுக்கடியாக தோழர்களின் வழியே கண்டபோது மனம் கொண்ட ஆனந்தம் எல்லையில்லாது. மருதுவின் மனிதர்கள் யாவருக்கும் புறத்தில் தோன்றும் நாம் காணும் முகம் இல்லை. எல்லோரும் அகத்தை முகத் திரையாகக் கொண்டு கையை கட்டிக்கொண்டோ அல்லது தலைகவிழ்ந்து கொண்டோ இருக்கிறார்கள். ஆனந்த விகடன் வார இதழின் வாயிலாக மருது வரைந்த கதாபாத்திரங்களை வாழ்வின் வெவ்வேறு சூழல்களில் காண நேர்ந்ததுண்டு. அசாத்தியமான வீச்சுகள் மருதுவின் ஓவியத்தூரிகையின் வழியே வண்ணங்களுக்குள் சிக்கி கேன்வாஸில் உயிர்பெறும் அதிசயத்தை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் - கலைஞர்கள் சங்கம் நடத்திய ஊர் கூடி ஓவியம் என்ற நிகழ்வில் காணக் கிடைத்தபோது அடைந்த ஆனந்தத்தின் எல்லை அளவிட இயலாதது. கவிஞனின் சொற்கள் வார்த்தைகளில் சிக்கியிருப்பதைப் போல ஓவியனின் சொற்கள் கைகளில் சிக்கியிருப்பதை அன்றுதான் கண்டேன். சென்னையில் பல ஓவியக் கண்காட்சிகளை சென்று தரிசிக்கும் வாய்ப்பு அவ்வப்போது தொழில் நிமித்தமாய் கிட்டுவதுண்டு. ஆனால் எதுவும் அக தரிசனத்தை தரவேயில்லை. மிஷ்கினிடம் உதவியாளராய் சேர்ந்து பணியாற்றிய சமயத்தில் முதல் முறையாக மருதுவை அழைத்து வரும் பொறுப்பை என்னிடம் விட்டிருந்தார். அவரை அழைத்துக்கொண்டு அலுவலகம் வரும் வரை இருவரும் பேசிக்கொள்ளவேயில்லை. அக மனம் எத்தனையோ விஷயங்களை அசைப்போட்டுக்கொண்டேயிருந்தது. மூன்று வருடங்களுக்குப் பிறகு அவரின் வட்டத்தில் எனக்கும் ஒரு சிம்மாசனமிட்டு கொடுத்தார். பலரும் உறக்கத்தை நாடிச் சென்றிருந்த ஒரு பின்னரவில் தனது கணினியில் முதன் முறையாக அவருடைய அகத்தை எனக்கு திறந்து காட்டினார். கோப்பெருஞ்சோழனும், கரிகாலனும் இன்னும் பிற வீரத் தமிழ் அரசர்களும் மிகுந்த கரிசனத்துடனும், தன்னடகத்துடனும், அன்புடனும், போர் வெற்றியின் களிப்பிலும், ஆழந்தறியா மென் சோகத்துடன், கம்பீரத்துடனும் இன்னும் எத்தனையோ வார்த்தைகளில் கொண்டு வர முடியாத பாவனைகளுடன் உயிர் பெற்று நின்று கொண்டிருந்தனர். மருது தன் டிஜிட்டல் புகைப்பட, வண்ண, தூரிகை, கை, ஸ்கேனிங் பார்வை கொண்டு வீரத் தமிழர்களை உயிர்பூக்க செய்திருந்தார். தன்னுடைய, என்னுடைய மூதாதையர்களைப் பற்றி அந்த இரவில் அவர் இதுவரை சமூகம் எனக்குள் கட்டி வைத்திருந்த பல தவறான கட்டமைப்புகளை உடைத்தெறிந்தார். உண்மையான தமிழ் மன்னர்களை தரிசித்த வெற்றிக் களிப்போடு அவர் அடுக்குமாடி குடியிருப்பை விட்டு வெளியே வந்தேன். இதோ "வாளோர் ஆடும் அமலை' என்னும் கனத்த புத்தகமாக உங்கள் முன் எம் மன்னர்களின் அக மனம் கைக்கட்டி நிற்கிறது. புத்தகத்தை கையிலேந்துங்கள்!

Comments

Popular Posts