சலனம்- 2

ரு படைப்பாளி தமிழ் கூறும் இலக்கிய உலகில் எதிர்கொள்ள வேண்டிய சோதனைகள் ஆயிரம். ஆனால், அவையெல்லாம் அவனை புடம்போட்டு மேலும் சிறந்த படைப்பாளியாகவே இருக்க வைக்கும். மேலும் அவனுக்கு மேன்மையையே சேர்க்கும் (காசு, பணத்தை தவிர்த்து) இதற்கு சிறந்த உதாரணம் கவிஞர் மனுஷ்யபுத்திரன். அதிக நேரங்கள் அவர் அருகில் இருந்து கவனிப்பவன் என்கிற முறையில் இதை சொல்லக்கூடிய தகுதி எனக்கு இருப்பதாக உறுதியாக நினைக்கிறேன்.

உறக்கத்தை சேட்டு கடையில் அடமானம் வைத்துவிட்டு, உடலும், மன-மும் மன்றாடி ஓய்வு கேட்டாலும், அதை ஒதுக்கிவைத்துவிட்டு விடாப்பிடியாக தொடர்ந்து வாரப் பத்திரிகைகளுக்கு பத்தி எழுதுவதும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள, சம்பந்தப்பட்ட பிரச்சனை குறித்து நூலிலும், இணையத்திலும், நண்பர்களிடம் கேட்டறிவதும், இடையில் நண்பர்கள் வந்து தரும் தொல்லைகளை சகித்துக்கொண்டு உயிர்மை மாத இதழுக்காகவும், பதிப்பக வேலைகளை தடையில்லாமல் செல்ல உழைப்பதும், முகநூலில் அன்றைய பிரச்சனைகள் குறித்த தனது கருத்தை வெளியிடுவதும்... இவற்றுக்கு இடையில் தனது ஃப்ரியமான இதயத்தை பாதுகாத்து கவிதைகள் எழுதுவதும், (இதற்கிடையில்தான் அவருக்கு வரும் மிரட்டல் போன்கால்கள் உள்ளிட்டவை) சில விநாடிகள் கிடைத்தாலும் தன் செல்ல மழலைகளோடு கொஞ்சுவதும், தன்னை மேலும் புதுப்பித்துக்கொள்ள.. மாலை நேரத்தில் கொஞ்சம் கடற்கரை காற்று, புதிய புத்தகங்கள் என்று கவிஞர் மனுஷ்யபுத்திரனின் ஒரு நாளினுடைய ஒவ்வொரு நொடியும் ரசிக்கவும், பிரமிக்கவும் வைப்பவை!

எல்லா விமர்சனங்களை தாண்டியும், அவற்றை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் மனுஷின் நதியில்தான் என்னைப் போன்ற, ஆர்.அபிலாஷ், விநாயகமூர்த்தி போன்ற இளம் தலைமுறை எழுத்தாளர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
அடுத்த தலைமுறையை வளர்த்து எடுக்க குளிரூட்டப்பட்ட நான்கு பக்க அறைகளுக்குள் மட்டுமே விவாதித்து, டீ குடித்துவிட்டு பின் இன்னும் ஏன் எழுதித் தொலைக்கிறீர்கள்-? என்று கேட்டாலும் எழுதுவதை நிறுத்த தயாராக இல்லாத காலம் கடந்த எழுத்தாளனுக்கு அல்லது எழுத்தாளினுக்கு போன் போட்டு சிறுகதை, தொடர்கதை, கவிதை, கட்டுரை என கேட்கும் தமிழின் நம்பர் ஒன் வருட, மாத, வார, நாள் இதழ்களுக்கு மத்தியில் உயிர்மை மாத இதழில் புதியவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிப்பது என்பது மனுஷ்யபுத்திரன் போன்ற விரல் விட்டு (அது என்ன விரல்விட்டு) அவர் ஒருவரேதான்!

வளர்த்த கிடா மார்பில் எட்டி உதைத்தாலும் அந்த வலியை எல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு மீண்டும் உயிரோசை இணைய இதழுக்கு கட்டுரை கேட்கும் எளிய மனம் மனுஷ்யபுத்திரனுக்கு மட்டுமே உண்டு.
சூடு, சுரணையற்ற இந்த சமூகத்தில் தொடர்ந்து தன்னை முன்னெடுத்து செல்ல, ஒரு படைப்பாளி தான் மட்டும்தான் முழுவதுமாக போராட வேண்டியிருக்கிறது. முற்போக்கு, பிற்போக்கு, நடுநிலை என்று புதுப்புது வார்த்தைகளை தேடிக் கண்டுபிடித்து தங்களை பறைசாற்றிக் கொள்ளும் போக்கு மனுஷிடம் இல்லை. தன் கோபத்தை, ஃப்ரியத்தை முகத்துக்கு நேரே சொல்லக்கூடிய பண்பை இயல்பாகவே பெற்றவர்.

சில நாட்களுக்கு முன் இலக்கிய நண்பர் ஒருவரை நீண்ட மாதங்களுக்கு பின் சந்தித்தேன். அவர் பார்த்ததும், என்னிடம் கேட்ட கேள்வி, ‘‘உன்னை மனுஷோட சேர்த்து பார்த்தேனே. உன் வளர்ச்சி இனிமேல் சந்தேகங்தான்’’ என்றார். நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன். இதோ உங்கள் முன் நிற்கிற தகுதியை வழங்கியதே மனுஷ்யபுத்திரன் தான்! என்று எனக்குள் குரல் ஒலித்துக்கொண்டிருந்ததை நண்பரின் காதுகள் கேட்டிருக்க வாய்ப்பில்லை ஆனால், காலம் அதை கேட்டும், கவனித்தபடியும் அருகில் நின்றுகொண்டிருந்தது நண்பர்களே!

Comments

Popular Posts