நாம் நண்பர்கள்...காதலர்கள் அல்ல!

நாம் சந்தித்துக்கொண்டது அழகிய மரங்கள் சூழந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் அலுவலக வளாகத்தில். முதல் சந்திப்பில் நீ என் மனதைக் கவரவில்லை என்பதை நான் சொல்லித்தான் ஆக வேண்டும். பின் எப்போது எப்படி, எவ்விதம் நீ என்னை பாதித்தாய்... உன்னையே எண்ணி பிதற்றும்படி செய்தாய் என்றெல்லாம் பல இரவுகளில் யோசித்திருக்கிறேன்.

என் மீதான உன் அக்கறையே உன் மீது எனக்கு ஈர்ப்பை  கொண்டு வந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். என்னுடைய தாய்க்கு பின் என் மீதான உன் கரிசனமும், அன்பும் மெய்சிலிர்க்க வைக்கவில்லையென்றாலும் உன்னைப் பற்றி அடிக்கடி யோசிக்க வைத்தது. நாம் சந்தித்து, பேசத்தொடங்கிய சில நாட்களிலேயே காதலர் தினம் வந்தது.. . நீ கேட்டதை மறந்துவிட்டாயா என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு ஞாபகம் இருக்கிறது...நீ யாரையாவது காதலிக்கிறாயா... அல்லது காதலை சொல்லப் போகிறாயா... என்று நான் உடனே உன்னிடம்தான் காதலை சொல்லலாம் என்று இருக்கிறேன் என்றேன்.

நீ மௌனமாக சிரித்து, காமெடி பண்ணாத ...என்று வழக்கம்போல் சிரித்து, மறுத்தாய். அப்போது நான் உண்மையில் காமெடிதான் செய்தேன்.


எனக்கு இன்னொரு பெண் மீது இனம் புரியாத ஈர்ப்பு இருந்ததையும் அதற்கு நீயே ஒரு காரணமாய் இருந்தது எல்லாம் உனக்கு தெரியும்.

ஒருமுறை எனக்கு உடல்நலமில்லை என்றபோது அந்தப் பெண் அவள் பெயர் கிளாரா என்று நினைக்கிறேன் என் மீது கொஞ்சம் கருணை காட்டியதற்குப் பின்னால் உன்னுடைய அதீதமான அன்புதான் என்பது எனக்கு தெரிந்து, ஆச்ச்ர்யப்பட்டேன். என்னுடைய காய்ச்சல் பறந்துபோனதோ தெரியாது. ஆனால், புதுவகையான காய்ச்சல் மனதிற்குள் உட்கார்ந்து கொண்டது. எனக்கு ஏற்பட்டது ஒரு பெண் மீதான இனக்கவரச்சிதான் என்று விளங்கியபோது நீயோ என் அருகருகே இருந்தாய். நான் ஒருத்தியை ஒருதலைப்பட்சமாய் காதலி்த்தேன். என்னை ஒருத்தி காதலித்தாள் எனக்குத் தெரியாமல். ஆனால், எங்கள் மூவரையும் தெரிந்த நீ...எதையும்சொல்லாமல் மௌனம் காத்தாய். காலம்தான் எல்லா ரகசியங்களையும் புதைத்து வைத்துக்கொண்டு வேடிக்கை காட்டும் விநோதமான விளையாட்டை கொண்டிருக்கிறது என்று எண்ணியிருந்தேன். ஆனால், பெண்கள் கூட அந்த விசித்திர விளையாட்டை அடிக்கடி தங்கள் வாழ்வில் விளையாடி பார்க்கிறார்கள் என்பதை நீதான் எனக்கு முதன்முதலில் கற்பித்தாய்.

பின் ஒரு சந்திப்பில் நான் வீடற்று அலைந்துபோது என் உறவுக்காரரின் வீட்டில் வந்து தங்கிக் கொள்கிறாயா என்று கேட்டாய்...நீ அங்கிருந்தால் நான் தங்கிக்கொள்ள எப்போதும் தயார்... என்றேன். நீ மறுபடியும் காமெடி பண்ணாத...என்று, என்னை மெல்லியதாக அடித்து, சிரித்தாய். முதன்முதலாக அன்றுதான் உன் மேல் நான் காதல் வயப்பட்டேன் என்று எண்ணுகிறேன். 
பிறகு, பல முறை நாம் அருகருகே நின்றிருக்கிறோம், செல்லமாக ஒருவரையொருவர் சீண்டி பார்த்திருக்கிறோம்...

நான் கலைஞன் என்பது தெரிந்ததும் நீ என் மேல் அதிகம் அக்கறை கொண்டாய். என்னிடம் முதல் ஆட்டோகிராபை பெண் நீதான். இப்போதும் கூட யாரேனும் ஆட்டோகிராப் கேட்கும்போது உன் சினுங்கலான முகமே ஞாபகத்திற்கு வருகிறது. ஆனால், எத்தனை ரசிகர்களைப் பார்த்தாலும் உன் சினுங்கலைப் போல யாருடையதும் இல்லை. எல்லாம் என் எழுத்தைதான் விரும்புகிறார்கள். என்னையில்லை என்பது எனக்கும் நன்றாகவே தெரியும்.

நானும் அவர்களிடம் பொய்யாகத்தான் சிரிக்கிறேன். அதுபோகட்டும்.
பின் நாம் அந்த அலுவலகத்திலிருந்து பிரிந்தோம். மீண்டும் சேர்வதற்காக... ஆனால், காலம் நம்மை பிரித்து வைத்து அழகு பார்த்ததே தவிர, சேர்த்து வைக்கவேயில்லை.

காலம் மிக வேகமாக கடந்துகொண்டிருந்த ஒரு இரவு வேளையில் நீ என் அலைபேசியை தொடர்பு கொண்டாய். முறிந்த என் சிறகுகள் மீண்டும் என்னோடு வந்து ஒட்டிக்கொண்டதாக உணர்ந்தேன். அதற்குள் நீ என் சிறகுகளை வெட்டத்துவங்கினாய். குடும்பம், சுமை, வேலை என்று ஏதேதோ பிதற்றினாய். என் இதயத்தின் உறக்கமற்ற சப்தம் உன் காதுக்கு கேட்கவேயி்ல்லை என்பதை அறிந்துபோது கதறி அழுதேன். பியரும் பின்னிரவும், நண்பனும் மட்டுமே அப்போது ஆறுதலாக இருந்தார்கள்.


காதல் ஒரு மோசமான விளையாட்டு என்றான் நண்பன்.

காதல் ஒரு அற்பமான விசயம் என்றார் எழு்த்தாளர் ஜெயகாந்தன்.
நான் தெளிந்தேன். பின்தான் நான் ஆழமாக காதலிக்கத் தொடங்கினேன்.
உன் அலைபேசி எப்போதும் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்தது.

மறுபடியும் மேகங்களும், காகங்களும், வாழ்வும் அதன்போக்கில் பறந்து கொண்டிருந்தன. நான் மெல்ல என் கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் வேலைகளில் மூழ்கினேன். அவ்வப்போது மத்திம இரவுகளில் என் படுக்கையறை நாசம் செய்வாய். சகித்து கொள்வேன். அப்போதும் ஜெயகாந்தனே துணை நிற்பார். உன் நினைவுகளை சுமந்துகொண்டு இரவை கடந்து செல்வது கடினமான காரியம் என்பதை பின் புரிந்து கொண்டேன். 

மறைக்கப்படும் எல்லா உண்மைகளும் ஒருநாள் வீதிக்கு வரும் என்பதை நானும் கண்கூடாய கண்டேன். ஆமாம். நிலாவுக்கு உறக்கம் வாராத ஓர் வேளையில் உன்னிடம் என் காதலைச் சொன்னேன்.  


பொதுபுத்தியிலிருந்து சொன்னாய்... நாம் நண்பர்கள்...காதலர்கள் அல்ல. நீ மறுத்திருக்கலாம். ஆனால் நட்பு என்று கூறி ஒரு முட் கீரிடத்தை என் தலையில் அணிவி்த்தாய். இந்த உலகின் காதல் தேவனாக என்னை எண்ணிக்கொண்டேன். வலிகளும், வேதனைகளும் யாருக்குதான் இல்லை. மீண்டும் பியரும், பின்னிரவும், நண்பனுமே ஆறுதலாய் இருந்தார்கள். அந்த இரவில் உனக்காக ஒரு கவிதையை வாசித்தேன். அதைக் கேடக் சில காகங்களும் அன்று கடற்கரை மணலில் கூடியிருந்தன. கடலலைகளும் கூட அன்று அதிராமல் என் மென்சோக கவிதையைக் கேட்டுக் கொண்டிருந்தன. நண்பன் நீ அதிகம் புலம்புகிறாய் என்றான். ஜெயகாந்தன்...காதல் தோன்றுவதற்கும், மறைவதற்கும் அற்பமான காரணங்களே போதுமானது என்றார். நான் அதிகம் குடித்தேன். பியர் போதையேறறவேயில்லை. நான்காவது பியர் பாட்டிலைத் தூக்கி கடலில் காட்டமாக எறிந்தேன். என் செயலைப் பார்த்து, நண்பன் அந்த இரவே பயப்படும்படியாக சிரித்தான். அருகில் இருக்கும்போது எந்த பிரச்னையிலும் இல்லை. விலகலே எல்லாவற்றையும் யோசிக்க வைக்கிறது என்றார் ஜே.கே.

நான் மறுபடியும் பேனாவைத் திறந்து மற்றொரு கவிதையை எழுதத் தொடங்கினேன். பாதியிலேயே நிறுத்திவிட்டு அதிகமாக அழுதேன்..ஜே.கே.தலையை வருடினார். நண்பன் கட்டிக்கொண்டு எனக்காக அழுதான். அந்த இரவும் எங்களுக்காக அழுதது.

Comments

Popular Posts