உறவுக்கூட்டம் (சிறுகதை)

ஸ்தூரி கண்ணயர்ந்து படுக்கையில் கிடந்தாள். வார்த்தைகள் முழுமையின்றி பாதியிலேயே விழுங்கி ஏதேதோ உளறினாள். சற்று நேரத்தில் எல்லாம் அடங்கிப்போயின. அமைதி...பேரமைதி. பாவாடைராயனுக்குத்தான் அவள் தன் முந்தாணியை விரித்திருந்தாள். இருந்தாலும்கூட ஏனோ இருவரும் கூடி வாழ வழியில்லாமல் போனது...?
""எத்தனை நாளுக்குத்தான் இந்த நாதியத்துப்போனவாரு செருப்பையே தைச்சிக்கிட்டிருப்பது...ஆண்டைங்க முன்னபோல இப்பெல்லாம் செருப்புக்குஅளவுகூட கொடுக்கறதில்ல...எல்லாம் டவுனுக்குள்ளப்போய்மாட்டிக்கிட்டு வந்துடுதுங்க...எல்லாம் என் அப்பனோட போச்சு!...........................................ம்ம்...ஏதோ அந்த ஒன்னு, ரெண்டு பெரிய ஆண்டைங்கதான் வாரு செருப்பைப் போடுதுங்க.அதுங்களும் அப்பவோ...இப்பவோன்னு உசிர கையிலபுடிச்சிக்கிட்டு இருக்குதுங்க...மாட்டுத்தோல உரிக்கக்கூட ஒரு பய கூப்பிட மாட்டேங்கிறான்.அவனோலே உரிச்சிக்கிறானுவோ...எங்கிருந்து வால...வயித்துப்பாடு பெரும்பாடால்ல இருக்கு...அதான் ஒரு முடிவு பண்ணிட்டேன். துபாயி போயிடாலாம்னு...''
என்று ஆவேசமாக பேசிக்கொண்டிருக்கும் தன் புருஷனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த கஸ்தூரி,"அது சரிய்யா...அங்கெல்லாம் போவணும்னாபணம், காசு வேண்டாமா? வெறும் கையையா முழம் போடுவே?' என்றாள்.""அதுக்கெல்லாம் ஒரு வழி பண்ணி வைச்சிருக்கேன் புள்ள...' என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் எதிரே இருந்த சுடு கஞ்சியை ஓரே மடக்கில் குடித்து முடிக்க..."எலேய்...பாவாட...வெளியே வால...' அதட்டலாய் வெளியிலிருந்து ஒரு குரல் உள்ளே வந்தது. அது மேலத்தெரு பெரியாண்ட மவன் சின்ராசுவின் குரல் மாதிரியில்ல இருக்கு என்ற யோசனையிலேயே மூழ்கியிருந்தவனை, "எலேய்...'குரல் மறுபடியும் அதட்டகுடிசையினுள்ளிலிருந்து, லுங்கியை கையில் பிடித்தவாறே வெளியே வந்த பாவாடையின் முகத்தில் அதர்ச்சி ரேகைகள் படர ஆரம்பித்தன."சின்ன ஆண்ட மொவன்களோடு இந்த நாதியத்த பயலுக எதற்கு வந்தானுவோ' என்று பாவாடையின் மனதிற்குள் வார்த்தைகள் சுழன்று அடித்துக் கொண்டிருக்கும்போதே..."எலேய்...உன் குழந்தியா மொவன் எங்கல்ல?' திமிறி எழுந்தது கூட்டத்திலிருந்த ஒரு குரல். ஏதோ அசம்பாவிதம் நடந்து இருக்கிறது என்பதை உணர்ந்த பாவாடையின் முகம் பயத்தில் உரைய ஆரம்பித்தது."ரமேசு கலேச்சிக்கி போயிருக்கும்ங்களே...என்ன சங்கதிங்க?'"ஒன்னுமே தெரியாதமாறி நடிக்காதல்ல...ஊரே நாறிக்கிடக்கு.உண்மையைச் சொல்லுல...'என்று உருட்டைக் கட்டையோடு நின்று கொண்டிருந்த ஒருவன் கத்தினான். "ரமேசும்...மலரும் எங்கல்ல?' மற்றொரு குரல்.கூட்டத்தின் எதிரே மலங்க மலங்க விழித்தபடி நின்றிருந்தான் பாவாடை."மொவனே...உன் அப்பனுக்காக பாக்குறோம்இல்ல...மாட்டை உரிக்கிற மாதிரி உரிச்சிடுவோம்...சொல்றா, கண்களில் கொலைவெறியைத் தேக்கி வைத்துக்கொண்டு கேட்டான், கூட்டத்தில் முன்னால் நின்றவன்."இவனுகள எல்லாம் இப்படியே விட்டாநாளைக்கி நம்ம புள்ளைகளையும் கூட...'வெறித்தனமாய் அவன் ஓங்கி பாவாடையை உதைக்க...சற்றும் இதை எதிர்பாராத பாவாடை, நிலை தடுமாறி கிழே விழந்தான். அவன் உடல் பயத்தில், கூனிக்குறுகி நடுங்க ஆரம்பித்தது. உடன் வந்தவர்கள் அந்த இளைஞனை பிடித்து, அமுக்கி, தடுத்து நிறுத்தினார்கள்."நீ ஏண்டா எகிறுரே...அதான் பஞ்சாயத்து பண்றோம்ல...'கும்பலில் தலைமையேற்று வந்தவன் அந்த இளைஞனை அதட்டிவிட்டு,பாவாடையிடம்..."பாவாடை...நீ என்ன செய்வியோ...ஏது செய்வியோ...தெரியாது.இன்னிக்கு பொழுதுக்குள்ள அவன் புள்ளையகொண்டாந்து வூட்ல வுடல...அப்புறம் அவனுங்க தண்டு முண்டா ஏதாவது செய்திடுவானுவோ...நல்லாயிருக்காது...பாத்துக்க' அவன் பேசி முடிக்க. பாவாடையின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. அவன் அந்த கூட்டத்தின் முன் தலைகவிழ்ந்து உட்கார்ந்திருந்தான். அவர்கள் விலகிச் சென்றார்கள். குடிசையின் உள்ளே, பயத்தில் வீட்டுத்தட்டியின் பின்னே ஒட்டிக் கொண்டிருந்த கஸ்தூரி வெளியே வந்து, பாவாடையின் அருகே அமர்ந்தாள்.
இரண்டொரு நாட்களாகவே பாவாடை ஊருக்குள் இல்லாமல், வெளியூர் வரை போயிருந்தான். விழுப்புரத்தில் இருக்கும் அவன் அண்ணன் மொவன் குழந்தை வேலுவை பார்க்கப் போயிருந்தான். வேலு டிராவல்ஸ் கம்பெனியில் டிரைவராக இருக்கிறான். அவன்தான் பாவாடைக்கு துபாய் போகும் ஐடியாவை கொடுத்தவன். "அங்கு போவதற்கு பாஸ்போர்ட்டு, விசால்லாம் வேணுமே'எனக் கேட்ட பாவாடையிடம், வேலு வீட்டோரமாய் இருக்கும் அந்த அரை ஏக்கர் நிலத்தையும் வித்திடலாம்னு சொல்லியிருக்கான்.ரொம்ப நாளா அந்த நிலமும் எந்த சாகுபடியும் இல்லாமல் மானம் பார்த்த பூமியாத்தான் கிடக்கு."ஏண்டா...வேலு அத வித்துட்டு என்னை என்ன நடு ஆத்திலியா நிக்க சொல்ற...'"அண்ணே...நீ துபாயில்லாம் போயீட்டீன்னா அரை ஏக்கர் எண்ணான்னே...உன் வரப்போற புள்ளக்கி அஞ்சி ஏக்கரே வாங்கிப் போடலாம்...'"ஏதோ உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்...இந்த சான்ஸ் விடாதேண்ணே...'வேலு உற்சாகமாய் பேசினான்."அது சரிடா...அங்க போயி நான் என்னா செய்வேன்?' "அதெல்லாம் ஏஜென்ட் பார்த்திருப்பாருண்ணே...அதான் அவரு ஸ்கூலு வச்சிருக்காருல்ல...அங்கிய கம்பி கட்டிறதெல்லாம் கூட சொல்லித் தராறு...மொதல்ல...நீ பத்தாயிரம் பணத்தை கட்டிட்டாமீதிய அப்புறம் பாத்துக்கலாம்'என்ற வேலுவின் வார்த்தைகளில் மனம் கிறங்கி கிடந்தான் பாவாடை. அவன் மனக்கண்ணில் ஹெலிஹாப்டர், ஏரோப்ளான்கள் எல்லாம் வண்ணத்துப்பூச்சி போல் வட்டமடித்து சுழன்றன. இரவு டாஸ்மாக்கில் கட்டிங்கோடு, பீப் பிரியாணியும் வேலு வாங்கி கொடுக்க, வாழ்க்கை தனக்கு வசமாகி, விட்டதாக எண்ணி ப்ளாட்டாகி, அறையில் விழுந்து கிடந்தான் பாவாடை. விடிந்ததும் போதை தெளிய வீடு சேர்நதவனின் கனவில்தான் காய்ச்சல் வந்து புகுந்தது.
கண்ணீரும், கம்பலையுமாக உட்கார்ந்திருந்த பாவாடையைச் சுற்றி அவனது உறவுக்கூட்டம் கூடி விட்டது. ரமேசு காணாது போனதும், சதாசிவம் மொவள் மலரும் அவனோடு ஓடிப்போன சங்கதியும் தெரிய வந்தது மிக மிக தாமதமே!"படுபாவி...அந்த செறுக்கி மொவளயோட போவஅந்த பயபுள்ளயோ எதற்கும் துணிஞ்சவனோளேஏலேய் பாவாட...ஏதேனும் செய்யுலாயப்பா...சூலக்கருப்பா எம்புள்ளயோ என்னபாடுபடுதோ...ஓவ்...வ்...'என தெருவின் புழுதியை வாரி அணைத்துக்கொண்டு ஒப்பாரி வைத்த ராசாயிக்கு வலிப்பு வந்து விட்டது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த அந்த நான்கு குடும்பங்களும், திடீரென நடந்தேறிவிட்ட இந்த களேபரத்தை எதிர்கொள்ள முடியாது திணறின. கஸ்தூரி "யாத்தே...' என்று அலறிக்கொண்டு அங்குமிங்கும் ஓடினாள். செய்வதறியாது திகைத்தாள். கூடியிருந்த பெண்கள் ராசாயியை தூக்கி கயிற்று கட்டிலில் போட்டு கையில் இரும்புச்சாவியை கொடுத்து, ஆசுவாசப்படுத்தினர். தலைவிரிக் கோலமாக அழுது கொண்டிருந்த கஸ்தூரியை ஜெயக்கொடிதான் அதட்டினாள்."ஏம்புள்ள...இப்படி ஓலமிடுறவேபுள்ளக்கி ஏதாவது ஆயிடப் போகுது...பச்சவயிறு வலி தாங்காதுவாய மூடுயேய்...யெண்ணே நீ ஏன் சிலையாட்ட உக்கார்ந்திருக்கவேன்போய் அந்தபயல எங்கிருந்தாலும் தேடி இழுத்துட்டு வருவியா...அதவுட்டுட்டு' என்றவள், விறுவிறுவென தன் முந்தானையின் முடிச்சை அவிழ்த்து கசங்கிய நூறு ரூவாய் நோட்டை பாவாடையின் கையில் திணித்தாள். பாவாடை செய்வதறியாது நிற்க...விஷயம் கேள்விப்பட்டு அங்கு வேகமாக சைக்கிளில் வந்து சேர்ந்தான் தொப்பையன்."பொழுதுசாயறதுக்குள்ளே புள்ளைங்க பத்திரமாவீடு வந்து சேரணும்னே...என்ன பண்ணூவீகளோதெரியாது...ரெண்டுபேருமாபோய் தேடி கூட்டிக்கிட்டு வாங்க...' ஜெயக்கொடியின் வார்த்தைகளில் உக்கிரம் தாண்டவாடமாடியது. ஜெயக்கொடியின் மூத்த மகளான சுமதி ஓடிப்போய் பாவாடையின் வீட்டிலிருந்து அவனுடைய முழுக்கை சட்டையை எடுத்து வந்தாள். பாவைடை அரைகுறையாக அதை வாங்கி அணிந்து கொண்டு, சைக்கிளில் ஏறி அமர, தொப்பையின் விருட்டென்று சைக்கிளில் பெடலை மிதித்தவாறே செம்மண் புழுதியில் விரைந்தான். ராசாயின் உடல் சவம்போல அந்தக் கட்டிலில் கிடந்தது.
மிகக் குறைவாண எண்ணிக்கையைக் கொண்ட அந்த குடும்பங்களின் பெண்கள் இந்த நிகழ்வினால், பயத்தினால் ஒன்றையொன்று சார்ந்து உட்கார்ந்திருந்தனர். ஜெயக்கொடி மட்டுமே துணிச்சலோடு காணப்பட்டாள். ஆனால், அவளுக்குள்ளே பயம் குமைந்துகொண்டு இருந்தது யாருக்கும் தெரியவில்லை. கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்திருந்த கஸ்தூரியை தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தனர் சுமதியும், ஜெயக்கொடியும். கஸ்தூரியினால் அங்கே சிறிது நேரம் கூட உட்கார முடியாது தவித்தாள். அவளுக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வந்ததன. அடிவயிற்றில் புறப்பட்ட பெருத்த வலியின் காரணமாக "ம்மா...'வென அலறியபடி சட்டென தரையில் சாய்ந்தாள். அடுப்பில் வைத்திருந்த உலையில் அரிசியைக் கழுவிப் போட்டுக்கொண்டிருந்த ஜெயக்கொடி, அலறல் கேட்டு அப்படியே அரிசி கிண்ணத்தை விட்டு விட்டு அடுப்படியில் இருந்து ஓடி வந்தாள்."எட்டியேய்...அடியேய்...சுமதி...ப்பானுஎங்கடிபோய் தொலைஞ்சீங்க..'சரிந்து கிடந்த கஸ்தூரியின் தலையை தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டு கத்தினாள்."ய்ய...ஆத்தா...எஞ்சாமிஅடியேய்...யாராவது வாங்கலன்டீய்ய்..' ஜெயக்கொடியின் இரண்டு மொவள்களும் வீட்டில் நடக்கும் விபரீதம் புரியாமல் எநேசன் வீட்டு ராசாயிக்கிழவியின் ஒப்பாரியைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
உச்சி வெயில் உயிரை பொளந்து கொண்டு நின்றிருந்தது. தொப்பையனின் கால்கள் தொடர்ந்து காலையிலிருந்து சைக்கிளில் மிதித்தால் துவண்டு போயிருந்தன. சைக்கிளை தெரிந்த கடை ஒன்றில் போட்டுவிட்டு, அவர்கள் இருவரும் அந்த டவுனில் தமக்கு தெரிந்த எல்லா முகங்களிடமும் விசாரித்து விட்டனர். பயனில்லை. அலைந்து திரிந்ததுதான் மிச்சம். பொழுது இரவை நோக்கி நகர ஆரம்பித்து, இருட்டத் தொடங்கி விட்டது. அது இவர்களின் துயரத்தைக் கண்டு கொள்ளவே இல்லை.தொப்பையனுக்கு பயம் கவ்வத் தொடங்கி அவனது விரல்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டன."மச்சான்...இப்ப என்னலே பன்றதுஒரு எலவும் புரியலலேய்...அவனுங்களுக்குஎன்னல சொல்றது...'தொப்பையனின் குரல் கம்மத் தொடங்கிற்று. பாவாடை பேசுபவனையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவன்..."எல்லாம் உன் வளர்ப்பால வந்ததுலேய்இப்ப தெருத்தெருவால அலையிறோம்.பயல கண்டனா அங்கனவே பொலி போட்டுறேவேன்ல்ல'
"இப்ப இங்கன அவன கொல்லவா வந்தோம்அங்க நம்ம புள்ளை சாதிங்க தனியால நிக்குது' தொப்பையன், பாவாடையை சமாதானப்படுத்த முயன்றான். இருவரும் அடுத்து என்ன செய்வது? என்பதையறியமால் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றனர். அந்திம இரவு. நியான் லைட் விளக்கின் கீழ் நின்றிருந்த பாவாடைக்கு சட்டென ஒரு யோசனை தோன்றியது. தொப்பையனை அழைத்துக்கொண்டு போன் பூத்தை நோக்கி பாவாடை வேகமாக நடக்க ஆரம்பித்தான்.
இருள் கவ்விய அவ்வூரின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த அக்கல்லு வீட்டில் மட்டும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. பஞ்சாயத்து தலைவர் வீடுதான் அது. அங்குதான் இந்த பிரச்சினைக்காக பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது. மலரின் தந்தை சதாசிவம் அவ்வீட்டுத் திண்ணையின் திண்டை பிடித்தபடி எதையோ வெறித்தப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்."துணர் அண்டி கிடக்கிறானுவோய்இத இப்படியே விட்டா...நாளைக்கி அவனுங்கஎன்ன வேணாலும் பண்ணுவானுங்கஎன்ன மயித்துக்கு நாங்க இருக்கோம்' கூட்டத்தில் பாவாடையை அறைந்த அந்த இளைஞன் ஆவேசமாகப் பேசினான். மலருக்கு முறைப்பையன். அவனது கண்கள் ஆவேச வெறி கொண்டிருந்தது. அவனோடு சேர்ந்துகொண்டு மேலும் சில இளவட்டங்களும் கூச்சலிட்டன. அவர்கள் எல்லோரும் சிறிது நேரத்திற்கு முன்னர்தான் சிங்காரத்திற்கு சொந்தமான மாந்தோப்பில் மறைத்து வைத்திருந்த கஞ்சாவை உறிஞ்சிவிட்டு வந்திருந்தனர். கொஞ்ச நாளாக யாருக்கும் தெரியாமல் இது நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த இளைஞர்களின் எல்லோருடைய கண்களிலும் உக்கிரம் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. அவை எத்தகைய கொடுபாதக செயலுக்கும் தயாராயிருந்தன. ஓடிப்போன ஜோடிகள் இருக்கும் இடம் பற்றி அவர்களுக்கு செய்தி வந்து வெகுநேரம் ஆகிறது. மேற்கொண்டு என்ன செய்வது என்பதுதான் பஞ்சாயத்தே!"என்னய்யா சதாசிவம்...உம்புள்ளைய அந்தப்பயக்கிட்டேயிருந்துபிரிச்சு வுட்டுறோம்.என்ன சொல்ற?' பஞ்சாயத்தாரின் குரலில் கட்டளை தொனித்தது. சதாசிவம் எதுவும் பேசாமல் விருட்டென்று துண்டை உதறிக்கொண்டு எழுந்து, திண்ணையை விட்டு இறங்கி, நகர்ந்து வெளியே வந்து தன் வாயில் இருந்த எச்சிலைத் துப்பிவிட்டு, உள்ளே வரும்போது ஓரமாய் நின்று கொண்டிருந்த தன் மனைவியை, அந்த வயசாளி பெண்ணின் முகத்தில் ஒங்கி "பொளேர்...' என அறைய...அவள் வீறிட்டு..."உன்ன கொண்டுபோய் ஆத்துல வைக்க...அந்த ஈனச்சிறுக்கி பண்ணினத்துக்குஏன் தாலிய ஏன்டா அறுக்கிற...ஓவ்...வ்வ்...'என ஓலமிட்டாள்."அவ மண்ணா போவோ....நாதியத்து நிக்கோ' அவள் திட்டிக்கொண்டே மண்ணை வாரி தூற்றிவிட...அது கரிய இரவினை சலசலப்புக்குள்ளாக்கிற்று.விடிவதற்கு இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் இருந்தது. இருளை விரட்டிக்கொண்டு நின்றிருந்த அந்த விளக்கின் கீழ் குறட்டை விட்டுக்கொண்டு, கம்பத்தின் கீழே அலங்கோலமாக விழுந்து கிடக்கும் தொப்பையனைப் பார்த்து, நாய்கள் குரைக்கத் தொடங்க...அவன் சுயநினைவின்றி கிடந்தான். விழுப்பரம் மாநகர பேருந்து நிருத்தத்தின் பிளாட்பாரத்தில் விசும்பிக் கொண்டிருந்த அந்த இளம் ஜோடிகளின் முகத்தில் கலவரம் அப்பிக் கிடக்க...அந்தப் பெண்ணின் காலைப்பிடித்து கெஞ்சிக் கொண்டிருந்தான் பாவாடை. அந்த இளைஞனோ குழந்தை வேலுவின் தோளில் சாய்ந்துகொண்டு குலுங்கி குலுங்கி அழுதான். வேலுவின் கையிலிருந்த மணமாலைகளின் கணம் கூடிக்கொண்டேப் போக...அவன் மனது நழுவி கீழே விழுந்தது. பஞ்சாயத்து முடிந்தது. பெரிதாக ஒன்றும் முடிவு எடுக்கப்படவில்லை. அவர்கள் இருவரும் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டனர். கலைந்து சென்ற இளவட்டங்கள் மறுபடியும் அந்த இருட்டான தோப்பிற்குள் சென்றனர். மறைத்து வைத்திருந்த அந்த வஸ்துவை எடுத்து போதை ஏற்றிக் கொண்டனர். தங்களை மறந்த நிலையில் அத்தோப்பை விட்டு அவர்கள் தவறான திசைநோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். தூரத்தில் இருளைக் கிழித்துக்கொண்டு ஊரின் ஒதுக்குப்புறமாய் அமைந்திருந்த அந்த வீட்டில் மட்டும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. விஷமேறிய அந்த கண்களுக்கு தெரிய...எல்லாம் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டு வெறி கொண்டன. இறைச்சியை கண்ட ஓநாயைப்போல காமம் அந்த வீடுகளை நோக்கி விரைந்தது. ஆலமர பொந்தில் அமர்ந்திருந்த ஆந்தை ஒன்று வெளியே எட்டிப்பார்த்து, பொந்திலிருந்து வெளியேறியது. கருமை அப்பிய அந்த வீடுகளிலிருந்து அந்த இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு வெளியேறியன அலறல்கள்...ஓலங்கள்... பல கூக்குரல்கள். தூரத்தில் இதுவரை தெரிந்து கொண்டிருந்த அந்த வெளிச்சம் திடீரென அணைந்தது. சிறுமி பானுவின் அலறல் தூங்குமூஞ்சி மரத்தில் அமர்ந்திருந்த ஆந்தையை திடுக்கிட வைத்தது. அது தன் உருண்டை விழிகளை அங்குமிங்கும் ஆட்டியபடி, திருதிருவென விழித்துக்கொண்டு தன் இறக்கைகளை அடித்துக்கொண்டும், வீறிட்டுக்கொண்டும் "க்கீய்ய்....க்கீய்ய்..' என அரட்டியபடியே அந்த வீடுகளைச் சுற்றி சுற்றி வந்து வட்டமடித்து, திரும்பி மறுபடியும் மரத்தில் வந்து அமர்ந்து அந்த வீட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த அதிகாலை கரிய இருளில் ஆறு, ஏழு மிருகங்கள் அந்த வீட்டின் பின்வாசல் வழியே வெளியேறியதை அது தவிர வேறு யாரும் பார்க்கவில்லை...கவனிக்கவில்லை. சுவாசம் மட்டும் மேலும், கீழுமாய் இழக்க ஜெயக்கொடி பேச்சற்றுக் கிடந்தாள். பானுவிற்கு நினைவு தப்பியிருந்தது. அடுப்படியில் இறைந்து கிடக்கும் மிளகாய்தூளின் மீது ஆடைகளற்று கவிழ்ந்து கிடந்தது சுமதியின் உடல். மரத்தொம்பையின் அடியில் அவளது முகம் புதைந்திருக்க...வெளியே நீட்டிக்கொண்டிருந்த கால்களுக்கு இடையில் கிடந்த உள்பாவாடையிலிருந்த குருதியில் உறைந்து நின்றது உயிர்...அவள்? அது?
"க்க்...கொக்கரக்கோ..க்கோ..க்க்க்...கோக்கரக்...கோ' மிக தாமதமாக கூரையின் மீதேறி தகிக்கும் சூரியனை நோக்கி, ஓங்கி கூவிற்றது சேவல். தேடி தன் டீ சொம்பை கையில் எடுத்துக்கொண்டு, குடிசையின் தட்டியைத் திறந்துகொண்டு வெளியே வந்து ராசாயிக் கிழவி வீட்டு முற்றத்திரலிருந்த மண்பானையிலிருந்த தண்ணீரை மொண்டு தனது தளர்ந்த மார்பிலும், முகத்திலும் அடித்துக்கொண்டாள். அது குளிர்ந்த நீராதலால், அவளுக்கு அது பரவசத்தைக் கொடுத்தது அவளை விழிப்படையச் செய்தது. தன்னிடமிருந்து பெருமூச்சு ஒன்றை வெளியே எடுத்து விட்டபடி, இடுப்பில் சுற்றியிருந்த கொசுவத்தை உதறி, மராப்புப் போட்டுக்கொண்டு தள்ளாடியபடி நடந்து வந்தவள்...ஜெயக்கொடி வீட்டின்முன்பு நின்று..."யெட்டியேய்...யாரடி இவளே...சுமதியி...ப்பானு....................செறுக்கியோ...விடிந்ததுகூட தெரியாமதூங்குறாளுவோ...விடியாமூஞ்சி கழுதைங்கசாணம் கரைச்சிக்கூட தெளிக்காம...காலியாலப் போறளுவோ...தூக்கத்தைப்பாரு...' திட்டியபடியே முனுசாமி டீக்கடை நோக்கிப் போனாள். அதை முதலில் பார்த்தவள் வெள்ளையம்மாள்தான். அவள்தான் அலறியபடி மார்பில் மாறி மாறி அடித்துக்கொண்டு, தரையில் விழுந்து, தலைவிரிக்கோலமாய் கதறினாள். சைக்கிளில் பால் எடுத்துக்கொண்டு அவ்வழியேப்போன அழகேசு...இவளின் அலங்கோலத்தைப் பார்த்து, சைக்கிளை நிறுத்திவிட்டு தன்னிடம் வந்த அழகேசுவிடம் எதுவும் சொல்ல முடியாமல்..."வ்வாவ்...ழ்வ்வோ...ஆவ்...ஆவாவ்...வுவ்...அய்யோ...ஆவ்..வ்'என்று உளறியபடியே எதிரே கைகளை நீட்டி...ஆட்டி ஆட்டி அவன் தோளில் சாய்ந்து அலற...எதையோ புரிந்து கொண்டவனாய் அழகேசு, அவளை உதறிவிட்டு ஜெயக்கொடியின் வீட்டை நோக்கி ஓடினான். வீட்டுக் கதவு தட்டியும் திறக்கப்படாததால், தன் பலம் முழுவதையும் திரட்டி சேர்த்து ஓங்கி ஒரு உதை விட்டான். ம்ஹூம்....கதவு திறக்கப்படவேயில்லை.
தனது குடிசையின் வெளியே கூடியிருந்த கும்பலை உற்றுப் பார்த்துக்கொண்டே கையில் டீ சொம்புடன் வந்த ராசாயிக் கிழவி, எதிரே தலையில் அடித்துக்கொண்டு வந்த முருகம்மாளிடம்..."என்னடி அங்க...'"ஆத்தேய்...அவ மண்ணை அள்ளிப்போட்டுட்டுபோயிட்டாடியேய்....ஒவ்...ஆவ்...ஓவ்வ்...'அவள் ராசாயிக்கிழவியைப் பிடித்துக்கொண்டு அழ...அவளது தளர்ந்த தேகம், முருகம்மாளின் கணம் தாங்காமல் ஆட..."அடிப்பாவி மொவளே...என்னைப்பெத்த ஆத்தே...' கையிலிருந்த டீ சொம்பு நழுவியதை கூட அறியாமல் பெருங்குரலெடுத்து அழுதாள் ராசாயிக்கிழவி. அவளின் ஓலம் அந்தப்பகுதியையே கிடுகிடுக்க வைத்தது.

Comments

Popular Posts