அழகன் பக்கம் - 2

அன்று மழை பெய்து ஓய்ந்திருந்தது. வழக்கம்போல் கொஞ்சம் லேட்டாகத்தான் படுக்கையை விட்டு எழுந்திருந்தேன். {ஜன்னலோரக் கம்பிகளில் மழைத்துளிகளின் குமிழ்கள் சின்ன சின்னதாய் இடைவெளி இட்டு நின்று கொண்டிருந்தன. கொஞ்சமாய் அதை ரசித்துவிட்டு குமிழ்களில் இரண்டைத் தட்டி விட்டேன். கையில் பட்ட ஈரம் சில்லென்று மனதை என்னவோ செய்தது. மழையின் வாசனை படுக்கயறைக்குள் புதிய மணத்தைக் கொண்டு வந்திருந்தது. பிறகு எழுந்து,கையில் பிரஷூடன் பாத்ரூம் கண்ணாடி முன் நின்று என்னையே வில்லத்தனமாக உற்றுப் பார்த்தபடி என் பல்லுக்கு வலிக்காமல் தேய்த்துக் கொண்டிருந்தேன். ஒன்றரை மணி நேரத்தில் நான் தயாராகி விட்டேன். அடர்த்தியான நீல நிற ஜீன்ஸþம், வெளிர் நீலத்தில் இடையிடையே வெள்ளைக் கோடுகளும் நிறைந்த டீ-ஷர்ட்டும் அணிந்து ரீ-போக் ஷூவை எடுத்து கீழே போட்டுவிட்டு, காலில் சாக்ஸ் மாட்டிக் கொண்டிருந்த சமயம் என்னுடைய செல்போன் சிணுங்கியது. வேறு யாராக இருக்க முடியும்? அருண்மொழியேதான்! விநோதினியைப் பார்க்கப் போவது மாலையில்தான் என்றும், இன்று காலை உங்களுடன் அலுவலக விழாவில் கலந்து கொள்ளப் போகிறேன் என்றும் தகவலைச் சொல்லிவிட்டு வழக்கம்போலவே என் பதிலை எதிர்பார்க்காமலேயே இணைப்பைத் துண்டித்துக் கொண்டார். செல்போனையே சிறிது நேரம் முறைத்துப் பார்த்துவிட்டு, தெருவில் இறங்கி நடக்க எத்தனிக்கையில் மெல்ல மெல்லத் தூறல் விழத் தொடங்கிப் பிறகு பெருமழைப் பிடித்துக் கொண்டது. மறுபடியும் வீட்டுக்குள்ளேயே தலையை நுழைத்துக்கொண்டு சிறிது நேரம் வண்ணதாசன் சிறுகதைகளில் மேய்ந்து கொண்டிருந்தேன். சரியாக ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு மழை சற்று நிதானமாக நின்றது. புத்தகத்தின் பின் அட்டையில் நின்று கொண்டிருந்த வண்ணதாசனின் புகைப்படத்தில் அவரிடம் இருந்த நேர்த்தியை ரசித்தபடி புத்தகத்தை அறையில் வீசியெறிந்து விட்டு, தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினேன். அன்று எதிர்பார்த்த அளவிற்கு ஊழியர்கள் நிகழ்வுகளில் பங்குப் பெற்றிருக்கவில்லை. இருந்தபோதிலும் தெரிந்த முகங்கள் அனைத்தும் ஆஜராகியிருந்தன. கூட்டத்தை நோட்டம் விட்டுக்கொண்டு தனித்து ஒரு சேரைத் தேடி உட்கார்ந்து கொண்டேன். அருண்மொழியும் வந்து சேர்ந்த சில நிமிடங்களிலேயே நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்திருந்தன (மிக மிக தாமதமாக அலுவலகத்திற்குப் போனால் பின் எப்படி நிகழ்ச்சிகளை கண்டுக்களிக்க முடியும்?) சுவையான மதிய உணவு அனைவருக்கும் ஏற்பாடாகியிருந்தது. மெல்ல மெல்ல தூறலும் நின்றுபோய் வானம் பளிச்சென நீல நிறத்தில் மாறத் தொடங்கியிருந்தது. அன்று முழுவதும் அருண்மொழியை நானே பிடித்து, என்னுடன் தங்க வைத்துக் கொண்டதால் அன்று விநோதினியைச் சந்திக்க வேண்டியிருந்த நிகழ்வு தள்ளிப்போனது. (இதைச் சொல்லத்தான் இவ்வளவு நேரம் கஷ்டப்பட்டேன்!) ஆனால், விநோதினியைப் பற்றிய ஒரு பிம்பத்தை மட்டும் எனக்குள் தோற்றுவித்திருந்தார் அருண்மொழி! தொடர்ச்சியான வேலைப் பளுவால் இடையில் சில நாட்கள் நான் அருண்மொழியைச் சந்திக்க முடியவில்லை. பிறகு, அவ்வாரத்தின் கடைசி நாளில் பிரபல எழுத்தாளர் "கறுக்கு' பாமா, கேணிச் சந்திப்பிற்கு வருவதாகவும், அவருடன் இலக்கிய ஆர்வலர்கள் கலந்துரையாடலாம் என்றும், அதற்கு முன்னதாக விநோதினியின் "சாமியாட்டம்' நாடகம் மாலை நான்கு மணிக்கு தொடங்கிவிடுவதாகவும், சீக்கிரமாக வந்து சேரவும் என்று அருண்மொழி அனுப்பியிருந்த குறுஞ்செய்தி வந்திருந்தபோது நான் ஆழ்ந்த உறக்கதிலிருந்தேன். ஞாயிறு மாலை. தம்பி சக்திவேலும், நானும் கேணிச் சந்திப்பிற்குச் செல்ல ஆயத்தமாகி, சரியாக 3.30 மணித்துளியில் நாங்கள் கே.கே.நகரை வந்தடைந்திருந்தோம். அவர் அனுப்பியிருந்த எண்.36யைத் தேடியலைந்தது தனிக்கதை. நீ இன்னும் விஷயத்திற்குள்ளேயே வரலீயே தம்பி...என்று நீங்கள் மனதில் எண்ணுவது எனக்குப் புரிகிறது. உண்மையிலேயே எனக்குப் எழுத்தாளர் பாமாவைப் பற்றி எதுவும் தெரியாது. அவருடைய "கறுக்கு' நாவல் உட்பட அவருடைய எழுத்து எதையும் நான் படித்ததும் இல்லை (என்ன மனோ தைரியம் உனக்கு என்கிறீர்களா?) ஆனால், அந்த நாவல் சம காலத்தில் எழுதப்பட்ட நாவல்களில் மிக முக்கியமான ஒன்று என்று எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய "நவீன தமிழிலக்கிய அறிமுகம்' புத்தகத்தை வாசித்தபோது அறிந்திருந்தேன். கேணிச் சந்திப்பிற்கு முதன்முதலாக இப்போதுதான் நான் செல்வதால் அந்த முகவரியைக் கண்டுபிடிப்பதில் மிகுந்த சிரமமிருந்தது. கண்டடைந்த பிறகு, நானும், தம்பியும் எங்கள் முட்டாள்தனத்தை நினைத்து நடுத்தெருவிலேயே டூ-வீலரை நிறுத்தி விட்டு வாய்விட்டு சிரித்துக் கொண்டோம். எழுத்தாளர் ஞாநியின் வீட்டின் பின்பகுதி அது! தென்னை, மா உள்ளிட்ட பல்வேறு மரங்களின் அடர்த்தியான சூழலில், சற்று ஈரமான தரைப்பகுதியில் அந்த இடத்தில் போடப்பட்டிருந்த ஒரு சில சேர்களைத் தவிர, அனைத்தும் இளைஞர், இளைஞி பட்டாளத்தால் நிரம்பியிருந்தது. நாங்கள் நுழையும் போது ஞாநி பேசிக் கொண்டிருந்தார். விநோதினியின் நாடகம் முடிந்திருந்தது. ஒரு கையில் டிஜிட்டல் கேமிராவையும், மறுகையில் வீடியோ கேமிராவையும் வைத்துக்கொண்டு அருண்மொழி தீவிரமாக நிகழ்வைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் அந்தப் பெண்மணியைக் கவனித்தேன். சிகப்பு புள்ளி போட்ட புடைவையும், அறக்கு சிவப்பு நிறத்தில் ஜாக்கெட்டும் (ஏறக்குறைய நாற்பத்தைந்து வயதிருக்கலாம்) அணிந்து, மிக கம்பீரமாக, கையைக் கட்டிக்கொண்டு, கூட்டத்தைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தார். அவர்தான் பாமாவாக இருக்க முடியும் என்று யூகித்துக் கொண்டேன். ஏனெனில் மற்றவர்கள் அனைவரும் எனக்கு நன்குத் தெரிந்தவர்களே! சில மணித்துளிகளில் பாமா பேசத் தொடங்கினார். அப்போதுதான் சூழலின் ரம்மியத்தையும், பாமாவின் ஆர்ப்பாட்டமில்லாத, நகைச்சுவையுடன் கூடிய அறிவுபூர்வமான பேச்சையும் உற்றுக் கவனிக்க ஆரம்பித்தேன். எல்லோருடைய கண்களும் பாமாவின் வார்த்தைகள் மீதே கவனமாக இருந்ததை நான் காணவும்,உணரவும் முடிந்தது. பாமா, தான் எழுத வந்ததற்கான காரணத்தையும், தன் எழுத்து ஏற்படுத்திய தாக்கத்தையும், அதனால் விளைந்த பிரச்சினைகளையும், எதிர்வினைகளையும் மிக நயம்பட எடுத்துக் கூறினார். சூழல் மிக அமைதியாக இருந்தது. அவருடைய பேச்சைத் தாண்டி இடையில் சில குயில்களின் கூவல்களையும், காக்கைகளின் இரைச்சலையும் தவிர்த்து மற்ற அனைவரும் அமைதியாக அவருடைய பேச்சையேக் கவனித்துக் கொண்டிருந்தனர். பிறகு, அவருடன் இலக்கிய ஆர்வலர்கள் தங்களது சந்தேகங்களையும், கேள்விகளையும் முன் வைக்கும் நிகழ்வு தொடங்கியது. பெரும்பாலான இளைஞர்களின் குறிப்பாக இளைஞிகளின் கேள்வி, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகளைப் பற்றியும், கலப்புத் திருமணங்கள் குறித்ததுமாக இருந்தது. பல தலைமுறைத் தாண்டியும் இன்னும் சாதியத்தின் வேர் அறுபடமால் இருக்கிறது என்பதை இந்த இளைஞர், இளைஞிகளின் கேள்விகள் மிக அப்பட்டமாக அங்கே தோலிரித்துக் காட்டின. வேவ்வேறு பூசி, மெழுகப்பட்ட வார்த்தைகளில் மிக நாகரீகமாக தங்கள் கேள்விகளில் எதிர்ப்பைக் காட்டினர். சில முற்போக்கான இலக்கிய ஆர்வலர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததால் அவர்களின் சில கேள்விகளுக்கு பதிலை பாமாவிடமிருந்து எதிர்பார்க்காமல் இவர்களே பதிலளித்தனர். இலக்கிய ஆர்வலர்களுக்கு இடையேயான கருத்து மற்றும் சாதிய மோதலாகவும் அது எனக்குப்பட்டது. எல்லாவற்றிக்கும் மிக தெளிவான பதிலை எடுத்துரைத்த பாமாவின் பேச்சு என்னையும், என் சக நண்பர்களையும் கவர்ந்தது என்றால் அது மிகையில்லை. குறிப்பாக, ""நீங்கள் பேசியபடியே இருங்கள். நாங்கள் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளப் போவதில்லை. இப்போது எங்களுடைய ஒரே மூச்சு எங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதில் மட்டும்தான்!'' இந்த வார்த்தைகளுக்கு இணையாக ஒரு பேச்சை என் நண்பரிடத்தில் கேட்க முடிந்தது. அது, ""எம் பிள்ளைகள் நல்ல ஆடைகள் அணிந்தால், அது ஏன் உங்களுக்கு பொறுக்க மாட்டேங்கிறது. காலம் காலமாக நாங்கள் கோவணத்தோடு திரிவதைதான் நீங்கள் விரும்புகிறீர்களா?'' மிக நல்லதொரு இலக்கியச் சந்திப்பிற்கு வந்திருக்கிறோம் என்று மனதில் எண்ணிக்கொண்டேன். இருட்டத் தொடங்கிய வேளையில் வசனகர்த்தாவும், எழுத்தாளருமான பாஸ்கர் சக்தியின் நன்றியுரையோடு நிகழ்வு முடிவடைந்தது. பாமாவையும், விநோதினியையும் இலக்கியக் கும்பல் சுற்றிக் கொள்ள, நானும் தம்பியும் மிக கவனமாக வெளியேறுகையில் அருண்மொழியின் கண்களில் மாட்டிக்கொண்டோம். எல்லோருக்கும் அருண்மொழியைப் பிடிக்கும்தானே? பின்னே பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா?

Comments

Popular Posts