கலக்கிய காவலன்!

மிழ் சினிமா ஒருபுறம் ஆரோக்கியமான "புதிய அலை'யை நோக்கி மெல்ல நகர்ந்து கொண்டிருந்தாலும், மறுபுறம் சினிமாவுக்குள்ளேயே "உள் குத்து' வேலைகளும் வலுக்கத் தொடங்கியிருக்கின்றன. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழ் சினிமாவின் குரல்வளை நெறிக்கப்பட்டு வருகின்றது. சமீபத்தில் நம் இதழுக்கு நடிகர் நாசர் அளித்திருந்த "கேள்வி - பதில்' பகுதியில், தான் திரைப்படங்கள் இயக்காததற்கு காரணம், ""படம் உருவாக்கி, வெளியிடும் முறையில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன...'' என்று குறிப்பிட்டிருந்தார். ""இந்தப் பதிலில் பல்லாயிரம் விஷயங்கள் பதிவாகியுள்ளன'' என்று நாம் சந்தித்த கலையுலகப் பிரமுகர்கள் கவலையோடு சொல்கின்றனர். மேலும் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் ஒரு வார இதழுக்கு அளித்திருந்த நேர்காணலில், ""நல்ல சினிமா எடுத்தால் கூட, அதைத் திரையிட தியேட்டர்கள் கிடைப்பதில்லை. மதுரையில் 20 தியேட்டர்கள் ஒரே நபரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அவர் வேறு ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். "ரெட் ஜெயன்ட்', "கிளவுட் நைன்' போன்ற நிறுவனங்கள், ஒரு மாதத்துக்கு ஒரு படத்தை வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன. அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள தியேட்டர்களில் மற்றவர்களின் திரைப்படங்களை வெளியிட முடியாத நிலை நீடிக்கிறது. இதனால் பல தயாரிப்பாளர்கள் சினிமாவை விட்டே ஓட வேண்டிய நெருக்கடி நிலை...'' என்று குறிப்பிட்டிருந்தார். இதையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. சினிமாவில் அமைக்கப்படும் காட்சிகள், வசனங்கள், படத் தலைப்புகள், கதாபாத்திரங்களின் பெயர்கள், படத்தின் கதைக்களன்கள் உள்ளிட்டவற்றில் எப்படியெல்லாம் குற்றம் கண்டுபிடித்து பிரச்சினைகளை உருவாக்க முடியுமோ அத்தனை வேலைகளையும் சில அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், சில பெரிய இடத்து ஆட்களும் தொடர்ந்து செய்து, கோலிவுட்டில் நெருக்கடியான ஒரு நிலையை ஏற்படுத்தி வருகின்றனர். இவர்களின் பிடிக்குள் சிக்குவது பெரும்பாலும் பெரிய பட்ஜெட் படங்களாகத்தான் இருக்கின்றன. இதனால் பல கோடி இழப்பு மட்டுமின்றி சினிமாவை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் சிக்கலுக்குள்ளான படம் சித்திக் இயக்கத்தில், விஜய் நடித்த "காவலன்'. விஜயின் ஆரம்பக் கால படங்கள் சில மெச்சும் தரத்தில் இருந்ததில்லை என்பது உண்மையே! ஆனாலும் போகப்போக அவர் தனக்கென்று ஒரு தனிப்பாதை அமைத்துக் கொண்டார். தான் நடித்த படங்களின் தொடர் வெற்றியின் மூலமாக அரசியல் பிரவேசத்திற்கும் அடிகோலினார். தமிழ் சினிமாவில் நடிகர்கள் அரசியலுக்குள் குதிப்பது புதிய விஷயம் இல்லையென்றாலும், விஜயின் அரசியல் ஃபார்முலாவும், அவரது சில செயல்பாடுகளும் பெரிய இடத்து ஆட்களை சற்று எரிச்சலடைய வைத்தன. விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த "அழகிய தமிழ்மகன்', "வேட்டைக்காரன்', "சுறா' போன்ற படங்கள் அவருக்கு காவலனாக இருந்து கைகொடுக்காத நிலையில், சித்திக்கின் "காவலன்'தான் தன்னுடைய வெற்றி இமைஜை மீட்டுத்தரும் என்று நம்பியிருந்தார் விஜய். இந்த நிலையில் அந்தப் படத்தை கடந்த பொங்கல் தினத்தன்று வெளியிடுவதில் ஏற்பட்ட சிக்கல்கள், இது வரையிலும் தமிழ் சினிமா காணாதது; அல்லது அபூர்வமாகக் கண்டது (உதாரணம்: முகமது பின் துக்ளக், உலகம் சுற்றும் வாலிபன்) என்று சொல்லலாம். தற்போது "காவலன்' வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்றாலும் அப்படம் குறித்த சர்ச்சைகள் இன்னும் குறைந்தபாடில்லை. அதுப்பற்றிய ஒரு கண்ணோட்டம் இதோ!
"சுறா' போட்ட சுழி!
விஜயின் நடிப்பில் வெளியான "சுறா'வில் மீனவர்களின் பிரச்சினையை மையப்படுத்தி அமைக்கப்பட்ட காட்சியொன்றில், பெரிய இடத்தின் மனம் புண்படும் படியான வசனங்கள் இடம்பெற்றுள்ளதுதான் "காவலனை' கட்டம் கட்டுவதற்கு பிள்ளையார் சுழி போட்டது என்கிறது கோலிவுட் தரப்பு! அதில், "நிலைமைமாறும்னு நினைக்கிறேன்' என்ற ரீதியில் விஜய் பேசும் வசனம், "ஒரு பெரிய குடும்ப அளவிலான பிரச்சினை' என்கிற அளவுக்கு சினிமா வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டது. "வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது' என்பார்களே! அதுபோல விஜய் அரசியலில் இறங்குவது குறித்து தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கலந்துரையாடியது, பிறகு அவரது தந்தை ஒரு பிரபல கட்சியின் மேலிடத்தை சந்தித்தது உள்ளிட்டவை பத்திரிகையில் பரபரப்பு செய்திகளாக வர, அது பெரிய இடத்தின் பார்வை "காவலன்' மீது "நெற்றி கண்ணாக' விழுவதற்குக் காரணமானது என்றும் கூறப்பட்டது. கோகுலம் கொடுத்த குடைச்சல்!
"காவலனா'க உருவாகியிருக்கும் "பாடிகார்ட்' மலையாள திரைப்படத்தின் உரிமை "கோகுலம்' கோபாலன் என்பவரிடமே இருந்திருக்கிறது. அவரிடம் முறைப்படி உரிமையைப் பெறாமல் இயக்குநர் சித்திக் அந்த கதையை தமிழில் "காவலனா'க உருவாக்க ஆரம்பித்ததிலிருந்தே பிரச்சினையின் வேர் ஊன்ற ஆரம்பித்துவிட்டது.
இயக்குநருக்கு செக்!
"அகலக்கால் ஆபத்து' என்பது மற்ற துறைகளுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ? கோடம்பாக்கத்திற்கு நன்றாகவேப் பொருந்தும். அதுவும் "காவலனை' பாதித்ததாகச் சொல்கின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தின் உரிமை விஷயத்தில் தொடரப்பட்ட வழக்கில், "படத்தை ரிலீஸ் செய்ய வேண்டுமென்றால் பதினைந்து கோடி ரூபாயை நீதிமன்றத்தில் கட்டிவிட வேண்டும்' என்று சென்னை உயர்நீதி மன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பிக்க, விஜய் தரப்பில் டென்ஷன் கூடியது. இதற்கிடையில், "படத்தின் சேட்டிலைட் உரிமை யார் வசம்?' என்பதிலும் கேள்விகள் நீடித்தன. இந்நிலையில், படத்தின் சென்னை விநியோக உரிமையை வாங்கியிருந்த பிரபல அரசியல்வாதி ஒருவரும் கழன்று கொண்டதால் "காவலனு'க்கு மேலும் பிரச்சினை ஏற்பட்டதோடு, பெரிய இடத்தின் தலையீடுகளும் இருக்கின்ற விஷயம், வேகமாகவே கசியத் தொடங்கின. விஜயின் தந்தை, பகிரங்கமாகவே தன் நிலைப்பாடு பற்றி பரபரப்பு பேட்டி அளித்தார்.
எகிறிய ஹார்ட்பீட்?
விஜயின் எந்தப் படமும் இப்படியொரு சவாலை எதிர்கொண்டதில்லை. ஏன், அவருடைய படங்களில் வரும் வில்லன்கள் கூட இந்தளவிற்கு அவருக்கு நெருக்கடியை கொடுத்திருக்க மாட்டார்கள்! ஆனால் இந்தப் படத்தின் மூலம் பல நிஜ வில்லன்கள் உலவுவதை திரையுலகமே அயர்ந்து போய் பார்த்தது. "பொங்கல் அன்று படம் வெளியாகுமா?' என்பதில் மலைபோல் கேள்விகள் குவிந்தன. பொங்கல் நெருங்க, நெருங்க பலரின் ஹார்ட்பீட்டும் எகிற ஆரம்பித்தது. ""தானுண்டு தன் வேலையுண்டு என்று சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும் என் மகன் விஜயை சிலர் கைப்பிடித்து இழுத்து வந்து முழு நேர அரசியல்வாதியாக்கப் பார்க்கிறார்கள்...'' என்று ஓப்பன் ஸ்டேட்மெண்டே விட்டார் எஸ்.ஏ.சி! இது ஒருபுறமிருக்க தியேட்டர் முன்பு ரசிகர்கள் தீக்குளிக்க முயலும் அளவிற்கு நிலைமை மோசமடைந்தன. இதனால் கோலிவுட்டின் "ஹாட் டாபிக்'காக "காவலன்' பட வெளியீடு மாறிப்போனது. இத்தோடு பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. விஜயின் படங்களில் இறுதிக் காட்சியில் வரும் பெரிய சண்டைக் காட்சி போல "காவலன்' தியேட்டர்களில் முட்டி மோத வேண்டியிருந்தது.
"ஆண் பாவ' ஓப்பனிங்!
"காவலனு'க்கு ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்க "கேப்டன்' நடிகர் முன் வந்ததாகவும் ஒரு பரபரப்பு பேச்சு உலா வந்தது. பிறகு, அது பிரச்சினையை மேலும் பெரிதாக்கும் என்பதை புரிந்துகொண்ட விஜய், அந்த உதவியை நாகரீகமாக மறுத்ததாகவும் தகவல் பரவியது. அதனைத் தொடர்ந்து பொங்கலுக்கு முதல் நாள் இரவு முக்கிய சில சினிமாப் புள்ளிகள் கூடி பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து படம் வெளியாகப் பேருதவி புரிந்தனர். விஜயின் இமேஜும் காப்பாற்றப்பட்டது. ஆனாலும் தென் மாவட்டத்தை தன் கைவசம் வைத்திருக்கும் தியேட்டர் அதிபர் ஒருவர் கிராமம், நகரம் என அனைத்து தியேட்டர்களிலும் "ஆடுகள'த்தையே களமிறக்கி, "ஆண் பாவம்' படத்தில் வரும் ஓப்பனிங் காட்சி போல, ""பெட்டி இன்னும் வரவில்லை...'' என்று கையை விரித்தார். பல மாவட்டங்களில் இந்தப் பிரச்சினை வெவ்வேறு கோணங்களில் வெளிப்பட்டது! விஜய்க்கு விடப்பட்ட சவாலில் அவர் ஜெயிப்பாரா? "காவலன்' காப்பாற்றப்படுவானா? என்று ரசிகர்கள் நகத்தை கடித்துக்கொண்டு முதல் காட்சிக்கு சென்று தியேட்டர் இருக்கையில் உட்கார, படத்தின் இடைவேளையைத் தாண்டி கரகோஷம் காதைப் பிளந்தவுடன்தான் பாதிக்கப்பட்டவர்களின் ஹார்ட் பீட் மெல்ல மெல்ல இயல்புக்கு வந்தது. படம் "பிக்-அப்' என்ற செய்தி காற்றில் வேகமாய் பரவ, காவலனின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. கலக்கிய "காவலன்!'
பொதுவாக விஜய் படங்களில் அதிகமாக காணப்படும் அனல் பறக்கும் வசனங்கள், நம்ப முடியாத சண்டைக் காட்சிகள் எதுவும் "காவலனி'ல் இல்லை என்பதும், இந்தத் திரைப்படத்தை தன்னுடைய அரசியல் பிரவேசத்திற்கான ஒரு கருவியாக விஜய் பயன்படுத்தாமல் நடிப்புக்கும், கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்துதான் நடித்திருக்கிறார் என்பதும் பட வெற்றிக்கு பெரிதும் உதவியுள்ளன. விஜய்க்கு, குடும்பங்களின் மத்தியில் நற்பெயரை பெற்றுத் தந்த இயக்குநர்களில் பாசில், சித்திக் ஆகியோருக்கு முக்கியப் பங்குண்டு. பாசிலின் இயக்கத்தில், விஜய் நடித்த, "காதலுக்கு மரியாதை' அவருக்கு மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்திருந்தது. "கண்ணுக்குள் நிலவு' பெரிய அளவில் வெற்றி பெறவில்லையென்றாலும் படத்தின் கதையமைப்பும், விஜயின் நடிப்பும் பேசப்பட்டன. அதேபோல விஜய்க்கு காமெடியும் நன்றாக வரும் என்பதை இயக்குநர் சித்திக்தான் தன்னுடைய "ஃப்ரெண்ட்ஸ்' படம் மூலம் அழுத்தமாக நிரூபித்தார்; இப்போது விஜய்க்கு தன்னுடைய "காவலன்' மூலமாக மீண்டும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்திருக்கிறார். எப்போதும் நல்ல திரைப்படங்களை கைத்தட்டி வரவேற்கும் ரசிகர்கள், வழக்கம்போல் தங்களுடைய தார்மீகக் கடமையை "காவலன்' பட விஷயத்திலும் காண்பித்து மீண்டும் நடிகர்களுக்கும், இயக்குநர்களுக்கும் நம்பிக்கையூட்டியுள்ளனர். எப்படியோ இந்தப் பொங்கலில் விஜய்க்கு விடப்பட்ட சவாலில் கலக்கி விட்டார் "காவலன்'!

Comments