சங்கம் இல்லாமல் சங்கடங்கள் தீராது!

மிழ்த் திரையுலகில் முக்கிய சங்கங்களாக கருதப்படும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், தொழிலாளர்கள் சம்மேளனம் இந்த மூன்று அமைப்புகளிலும் பதவிக்கு யார் வருவது என்பதில் பலத்த போட்டி நிலவுகிறது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து இராம. நாராயணன், செயலாளர் பதவியிலிருந்து சிவசக்தி பாண்டியன் இருவரும் ராஜினாமா செய்ததிலிருந்து, அங்கு பிரச்னைகள் வெடித்து அதற்கான தீர்வை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. துணைத் தலைவராக இருந்த எஸ்.ஏ.சந்திரசேகர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், பலர் அதை அங்கீகரிக்கவில்லை. "தேர்தல் மட்டுமே தீர்வு' என்று நீதிமன்றப் படியேறி வருகிறார்கள்.
இது ஒருபுறமிருக்க ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து "பெப்சி' (தொழிலாளர் சம்மேளனம்)யின் தலைவராக இருந்த வி.சி.குகநாதன், அந்தப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனாலும் தொழிலாளர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில், தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த பிரச்னை கிளம்பியது. மூன்று வருடத்துக்கு ஒரு முறை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும், தொழிலாளர் சம்மேளன நிர்வாகிகளும் அமர்ந்து ஒவ்வொரு சங்கமாக அழைத்துப் பேசுவார்கள். கூலி எவ்வளவு, எத்தனை சதவீதம் உயர்த்துவது போன்றவற்றை விவாதித்து முடிவு செய்வார்கள். இப்படியாக 23 சங்கங்களுக்கும் ஒப்பந்தம் போட்டு அதை நடைமுறைபடுத்துவார்கள்.
ஏற்கெனவே போட்ட ஒப்பந்தப்படி மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டதால், அடுத்த மூன்றாண்டுக்கு ஒப்பந்தம் போட வேண்டிய சூழ்நிலை இப்போது. ஆனால் சங்கங்களிடையே ஏற்பட்ட தலைவர் மாற்றம் தங்களுடைய கூலி உயர்வுக்கு தடையாகி விடுமோ என்று அஞ்சின சில அமைப்புகள். எனவே தங்கள் கூலியை நூறு சதவீதத்துக்கு மேல் உயர்த்திக் கொடுத்தால்தான் வேலை செய்யப் போவதாக விலைவாசியை காரணம் சொல்லிப் பேச ஆரம்பித்தனர்.
இதனால் தற்போது படப்பிடிப்பு நடக்கும் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம், சம்பளத்தை பல மடங்கு அவர்கள் உயர்த்திக் கேட்டதுதான். அதுமட்டுமின்றி குறிப்பிட்ட சில சங்கங்கள் வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டன. இந்தச் சூழ்நிலையில் சங்க நிர்வாகிகளும், தொழிலாளர் சம்மேளன நிர்வாகிகளும் பேச்சு வார்த்தையில் ஈடுபட தீர்மானித்தனர்.
வழக்கமாக முப்பது சதவீதம் சம்பளத்தை உயர்த்தி வழங்குவதை விட, விலைவாசியை மனதில் வைத்து நூற்றி இருபது சதவீதம் உயர்த்த வேண்டும் என சில சங்கங்கள் கோரிக்கை வைக்க, இதனால் பொதுக்குழுவைக் கூட்டியுள்ளது தொழிலாளர் சம்மேளனம்.
அந்தப் பொதுக்குழுவின் முடிவு குறித்து தொழிலாளர் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதனை தொடர்பு கொண்டோம். ""நான் வெளியூரில் இருக்கிறேன். சென்னை வந்த பிறகு சந்தித்துப் பேசுவோம்'' என்றார். அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்க செயலாளர் கே.முரளிதரனை தொடர்பு கொண்டோம். ""இன்னும் பேச்சு வார்த்தை தொடங்கவில்லை. பேச்சு வார்த்தை தொடங்கிய பிறகு பதில் சொல்கிறேனே'' என்றார் அவர்.
""தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்த இராம.நாராயணன் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ததையொட்டி, அந்த இடத்திற்கு எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், முறைப்படி தேர்தல் நடத்தாமல் எஸ்.ஏ.சி.யை தேர்ந்தெடுத்தது சரியல்ல என்று இயக்குநரும், தயாரிப்பாளருமான பாபு கணேஷ் நீதிமன்றத்தை நாடினார். தற்போது நீதிமன்றம் எஸ்.ஏ.சி. தலைவராக நீடிப்பதற்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் "பெப்ஸி' தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்த பிரச்சினையில் உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக ஒரு சாரார் கூறினாலும் உண்மையில் "பெப்ஸி' தொழிலாளர்களின் ஊதிய உயர்வில் இழுபறி நீடிக்கிறது'' என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத தமிழ் சினிமாவின் முக்கியத் தயாரிப்பாளர் ஒருவர்.
அவரிடம், ""சங்கங்கள் கட்சி ரீதியாக பிளவுபட்டுக் கிடக்கிறதா?'' என்று கேட்டோம். ""பொதுவாக சங்கத்தில் எல்லா கட்சியைச் சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாகவும், முக்கியப் பொறுப்பிலும் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கட்சியின் மீது அனுதாபம் இருந்தாலும் சங்கம் என்று வரும்போது ஒரே அணியிலியே நிற்கின்றனர். பதவி ஆசையுள்ள ஒரு சிலரே பாகுபடுத்தி பார்க்கின்றனர். தவறான பிரச்சாரங்களிலும் ஈடுபடுகின்றனர். எந்த ஆட்சி பதவிக்கு வந்தாலும் தயாரிப்பாளர்களும், தொழிலாளர்களும் அந்த ஆட்சியோடு ஒத்து போவதையே விரும்புகின்றனர். காரணம், தயாரிப்பாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தொழில் பாதுகாப்பு அவசியமானது என்பதால்தான்'' என்கிறார்.
"பெரும்பாலும் சங்கத் தேர்தல்களில் பெரிய நிறுவனங்களைச் சேர்ந்த தயாரிப்பாளர்களோ, இயக்குநர்களோ போட்டியிடுவது இல்லை. இது ஏன்?' என்று கேட்டோம். அதற்கு அந்தத் தயாரிப்பாளர், ""பெரிய நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு சமூகத்தின் முன்னால் ஒரு இமேஜ் இருக்கிறது. அவர்களிடம் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். ஆகவே, அவர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடும்போது எதிர் அணியினரின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடும். இதனால் அவர்களது இமேஜ் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஆகவேதான் அவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் விலகி நிற்கிறார்கள். ஆனால், அவர்கள் போட்டியிடுவதில்லையே தவிர, அவர்கள் பின்னணியிலிருந்து வேலை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் யார் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள். இதுதான் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது'' என்று ஆச்சர்யமூட்டினார்.
""ஒன்றாய் சேருங்கள். சங்கம் இல்லாமல் சங்கடங்கள் தீராது. அதனால் சங்கமாய் சேருங்கள்'' என்று சொல்வார்கள். இப்போது சங்கங்களே சங்கடத்திற்குரிய இடமாகிவிட்டன.

Comments

Popular Posts