"தி லெஜன்ட் ஆஃப் 1900'

"1900ம் ஆண்டில் அமெரிக்க கப்பல் ஒன்றின் உல்லாச விடுதியில் குழந்தையொன்றை யாரோ விட்டுவிட்டுச் செல்கிறார்கள். அந்தக் குழந்தையை அதேக் கப்பலின் வேலைப் பார்க்கும் மெக்கானிக் டேனி பூட்மேன் கண்டெடுக்கிறார். அநாதையான டேனி அந்தக் குழந்தையை கப்பலின் கேப்டனுக்குத் தெரியாமல் தன்னுடனே வளர்க்கிறார். அந்தக் குழந்தைக்கு 1900 என்றும் பெயரிடுகிறார்.
டேனியின் இருப்பிடம் கப்பலின் அடிப்பாகத்தில் அமைந்திருக்கிறது. அங்கே கப்பலை இயக்குவதற்கான நிலக்கரி குடோனில் அந்தக் குழந்தை வளர்கிறது. 1900க்கு அந்த நிலக்கரி குடோனும், அந்தக் குடோனின் ஜன்னல் ஓரம் அமைந்திருக்கும் கண்ணாடி வழியே தெரியும் கடல் அலைகளும்தான் உலகம். இச்சூழலில் எதிர்பாராத விபத்தொன்றில் டேனி பூட்மேன் இறந்துபோகிறார்.
கப்பலின் கேப்டனுக்கு டேனி வளர்த்த சிறுவனை அநாதை இல்லத்தில் சேர்க்க முயல்கிறார். ஆனால், அச்சிறுவன் அவரிடமிருந்து தப்பித்து கப்பலின் மேல்தளத்தில் இருக்கும் முதல் வகுப்புக்கு வந்துவிடுகிறான். அங்கேயிருக்கும் பியானோவில் டேனியிடமிருந்து கற்ற இசையை மீட்டுகிறான். அவனது இசை அங்கேயிருக்கும் பலரை வியப்பிலும், சந்தோஷத்திலும் ஆழ்த்துகிறது. இதனால் அவன் அநாதை இல்லத்திற்குச் செல்வது தவிர்க்கப்படுகிறது.
அக்கப்பலிலே வளர்ந்து பெரியவனாகும் 1900 மேல்தட்டு, கீழ்தட்டு என எல்லா மக்களையும் தன்னுடைய இசையால் சந்தோஷப்படுத்துகிறான். ஆனால், அவனுடைய வாழ்க்கை மட்டும் துயரத்திலேதான் இருக்கிறது. பல நாடுகளைச் சுற்றும் அந்தக் கப்பலின் வழியே பல நாட்டு மக்களை 1900ஆல் மகிழ்விக்க முடிகிறது. இப்படியாக துயரம் மிகுந்த கண்களையுடைய அழகி ஒருத்தியை அவன் கண்டடைகிறான். ஆனால், அவளோடு சேர்ந்து வாழ முடியாமல் போய்விடுகிறது. அது அவனை மீளாத் துயரத்தில் ஆழ்த்துகிறது. அதேக் கப்பலில் அவனுக்கு மாக்ஸ் எனும் நண்பனும் கிடைக்கிறான். அவன் அடிப்படையில் ஒரு கதை சொல்லி. இந்தக் கதை சொல்லியின் வழியாகத்தான் நமக்கு படத்தின் கதை முழுவதும் விவரிக்கப்படுகிறது.
மாக்ஸ் ஒரு பழைய இசைக்கருவிகள் விற்கும் கடையில் 1900 - யின் இசை ஆல்பம் ஒன்றைக் கண்டெடுக்கிறான். இந்நிலையில் கப்பல் மிகப் பழமையடைந்துவிட்டதால் அந்தக் கப்பல் நடுக்கடலில் குண்டு வைத்து தகர்க்கப்படப் போகும் செய்தியையும் அறிகிறான். அந்தக் கப்பலில்தான் 1900 இருப்பான் என்கிற நம்பிக்கையோடு மாக்ஸ் செல்கிறான். அவனோடு தரைக்கு வர 1900 மறுத்துவிடுகிறான். இறுதியில் தரையில் பாதம் படாத 1900 அந்தக் கப்பலோடு சேர்ந்து மடிந்துபோகிறான் என்பதோடு படம் நிறைவடைகிறது.
இத்தாலியப் படமான இதை இயக்கியிருக்கிறார். சிறந்த இசை, அரங்க வடிவமைப்பு, நடிப்பு, இயக்கம் உள்ளிட்ட பல்வேறு விருதுகைளை இப்படம் பெற்றுள்ளது.
ஒரு இசைக்கலைஞனுடைய நுட்பமான உணர்வுகளைச் சொன்ன விதத்தில் இந்தப் படம் என்னைக் கவர்ந்துவிட்டதோடு, என் மனதை விட்டு நீங்காமலும் இருக்கிறது'' என்கிறார் எஸ்.பரீத்.

பார்வை:
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் எஸ்.பரீத். சரபோஜி கலைக் கல்லூரியில் பி.காம். படித்தவர். தமிழ் சினிமாவில் "ஜே.ஜே', "இதயத்திருடன்', "கஜேந்திரா' ஆகிய படங்களில் தயாரிப்பு நிர்வாகியாகவும், சற்குணம் இயக்கிய "களவாணி', வெங்கட் இயக்கியிருக்கும் "கதிர்வேல்' ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்தவர். மேலும், இயக்குநருமான, வசனகர்த்தாவுமான கலைமணியிடம் பயிற்சிப் பெற்றவர். தற்போது "பாடம்' என்ற படத்தை இயக்க இருக்கிறார்.


Comments