"தி ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன்'

"வங்கியில் பணிபுரியும் டிம் ராபின்சன் தனது மனைவியை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறார். சாட்சியங்களை அடிப்படையாக வைத்து, அவருக்கு ஷாவ்ஷாங்க் மாநிலத்தில் உள்ள மெய்னில் உள்ள சீர்த்திருத்த சிறைச்சாலையில் இரட்டை ஆயுள் தண்டையை அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
சிறைச்சாலையில் ஆயுள் தண்டனையை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் மோர்கன் ஃப்ரீமேனின் நட்பு ராபின்சனுக்கு கிடைக்கிறது. மோர்கன் பலமுறை பரோல் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகிறார். இவருக்கு சிறைக்கு வெளியில் இருப்பவர்களுடன் கள்ள வணிகம் இருப்பதை ராபின்சனுக்குத் தெரியவருகிறது. அதைப் பயன்படுத்தி ஒரு சுத்தியலையும், ஹாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகைகளின் கவர்ச்சிப் படத்தையும் பெறுகிறார்.
இந்நிலையில் சிறைச்சாலையில் சிறை அதிகாரி நோர்டான் என்பவரின் அறிமுகம் ராபின்சனுக்கு கிடைக்கிறது.
நோர்டான் சிறைப் பணியாளர்களை பொது வேலைகளுக்காகப் பயன்படுத்தி, திறமையான பணியாளர்களை விற்று, அதன்மூலம் தவறான வழியில் பணம் ஈட்டுகிறார். இப்படியாக வரும் கறுப்பு பணத்தை, வெள்ளைப் பணமாக்க ராபின்சனை அறிவுத்திறனைப் பயன்படுத்திக் கொள்கிறார். இதற்கு கைமாறாக, தனிப்பட்ட சிறையைப் பயன்படுத்திக் கொள்வதற்கும், சிறை நூலகத்தைத் தொடர்ந்து பராமரிப்பதற்கும் அனுமதியளிக்கிறார்.
இந்நிலையில் சிறைச்சாலுக்கு வரும் ஒரு இளம் குற்றவாளியின் மூலமாக தன்னுடைய மனைவியை கொன்ற உண்மையான குற்றவாளி யார் என்பது ராபின்சனுக்குத் தெரிய வருகிறது. இதை நோர்டானிடம் கூறுகிறார். ஆனால், நோர்டானோ தனக்கு கீழ் உள்ள அதிகாரி ஒருவரின் மூலமாக அந்த இளம் குற்றவாளியை கொன்றுவிடுவதோடு, ராபின்சனையும் எச்சரிக்கிறார்.
சிறைச்சாலையில் பல மாற்றங்களை ராபின்சன் கொண்டு வருகிறார். இச்சூழலில் மெக்ஸிகனில் உள்ள பசிபிக் கடற்கரை ஓரம் உள்ள சிவிட்டாநெக்ஸôவில் வாழ வேண்டுமென்கிற ஆசையை தனது நண்பரான மோர்கனிடம் தெரிவிக்கிறார். மேலும், அங்கே தான் வாழப்போவதாகவும், சிறையிலிருந்து வெளியான பிறகு குறிப்பிட்ட ஓர் இடத்தைச் சொல்லி, அங்கே மோர்கனுக்கு ஒரு செய்தி காத்திருக்கிறது என்றும் தெரிவிக்கிறார். இப்படி அவர் பேசுவது மோர்கனுக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.
மறுநாள், ராபின்சனின் சிறையறை காலியாக இருப்பதை சிறை அதிகாரி கண்டறிகிறார். அவர் எப்படி தப்பித்தார் என்பது யாருக்கும் புலப்படாமல் இருக்கும் சமயத்தில், கோபத்தில் ஒரு கல்லை எடுத்து, சிறையறையில் ஒட்டப்பட்டிருக்கும் நடிகையின் போஸ்டர் மீது அடிக்கிறார். போஸ்டர் கிழிந்து, அங்கே ஒரு சுரங்க வழி தென்படுகிறது.
கடந்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ராபின்சன் சிறிய சுத்தியலைப் பயன்படுத்தி அந்தச் சுரங்கப்பாதையை தோண்டியிருப்பது எல்லோருக்கும் தெரியவருகிறது.
மேலும், தனது அறிவைப் பயன்படுத்தி சிறை அதிகாரி தவறாகச் சேர்த்த பணம் முழுவதையும் தன்னுடைய பெயருக்கு மாற்றுவதோடு, அதிகாரியின் ஊழலுக்கான ஆதாரங்களை அந்த நகரத்தில் அமைந்துள்ள பிரபல பத்திரிகைக்கும் அனுப்பி விடுகிறார்.
ராபின்சன் தப்பிய அதே நாளில் விஷயம் அறிந்து காவல்துறை சிறை அதிகாரியை கைது செய்ய உள்ளே வருகிறது. தவறாகச் சேர்த்த பணம் பறிபோய், தான் சிறைப்பிடிக்கப்படுவோம் என்பதை அறியும் அதிகாரி தற்கொலை செய்து கொள்கிறார்.
நாற்பது ஆண்டுகள் சிறை தண்டனைப் பெற்ற மோர்கன் பரோலில் விடுவிக்கப்படுகிறார். ராபின்சன் சுட்டிக்காட்டிய இடத்திற்குச் செல்லும் மோர்கனுக்கு பணத்துடன் கூடிய ஒரு முகவரி இருக்கிறது. அது ராபின்சன் வசிக்கும் இடத்தினுடையது. பின்னர் மோர்கனும், ராபின்சனும் கடற்கரையில் சந்திப்பதோடு படம் நிறைவடைகிறது.
ஹாலிவுட் படமான இதை ஃப்ரான்க் டாராபோன்ட் இயக்கியிருக்கிறார். சிறந்த நடிப்பு, திரைக்கதை உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இப்படம் பெற்றுள்ளது.
மனிதர்களில் சிலர் ஊழல் செய்பவர்களாக இருந்து, நல்லமுறையில் வாழ்கிறார்கள். மோசமான சூழலில் மாட்டிக்கொள்ளும் நல்லவர்களோ பாதிப்புக்குள்ளாகிறார்கள். வாழ்க்கையில் மோசமான சூழலுக்குள் மாட்டிக்கொள்ளும்போது அந்த வாழ்வை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதிலேயே வாழ்க்கை அடங்கியிருக்கிறது என்பதை எனக்கு உணர்த்திய படம் இது'' என்கிறார் அ.வ.உத்திரக்குமரன்.

பார்வை:

விழுப்புரம் மாவட்டம் அரசூரைச் சேர்ந்தவர் அ.வ.உத்திரக்குமரன். சென்னை-பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ.,எம்.பில்., படித்திருக்கிறார். புவனேஷ் இயக்கிய "ஆறாவது வனம்', தியாகராஜன் இயக்கிய "பொன்னர் சங்கர்' ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். "சிகரத்தை நோக்கி சிட்டுக்குருவிகள்', "அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் காதலி' ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.


Comments

Popular Posts