நம்பிக்கைக் கீற்று!

தவி ஒளிப்பதிவாளராகும் கனவோடு கோடம்பாக்கத்துக்குள் காலடி எடுத்து வைத்து, தீவிரமாக புகைப்படங்களின் பின்னால் அலைந்து கொண்டிருந்த நாள் ஒன்றின்போது தோழர் பாரதிகண்ணனின் பரிச்சயம் கிடைத்தது. மார்க்சியத்தின் மீதும், இடதுசாரிகளின் மீதும் மிகுந்த மரியாதையும், புரிதலும் கொண்டிருந்த தோழர் அவர். இலக்கியம், அரசியல், சினிமா, நாடகம், சமூகம் என அவரிடம் எது குறித்தும் நாம் கலந்துரையாடலாம். மணிக்கணக்கில் தொடர்ச்சியாக விவாதிக்கக் கூடிய திறமைப் பெற்ற அந்த தோழரின் மூலமாகத்தான் இடதுசாரி சிந்தனையுடைய, தமிழனத்தின் மீது தீராக் காதல் கொண்ட இயக்குநரும், நடிகருமான மணிவண்ணனை பற்றி அறிந்துகொண்டேன். இயக்குநர் மணிவண்ணன் தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிய நினைக்கும் இளைஞர்களிடம் முதலில் இலக்கியத்தின் மீதும், சம கால அரசியலின் மீதும் அவர்களுக்கு எந்தளவுக்கு புரிதல் இருக்கிறது என்பதைத்தான் சோதிப்பார் என்பதையும் தோழர் மூலமாகத்தான் தெரிய வந்தது.

இயக்குநர் மணிவண்ணன், கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். நடிகர் சத்யராஜ், மணிவண்ணனும் கல்லூரி நண்பர்கள். இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக சேர்ந்து பணிபுரிந்த மணிவண்ணன், பின்னாட்களில் பாரதிராஜாவின் திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாகவும், வில்லனாக நடிகர் அவதாரத்தையும் எடுத்தார். நிழல்கள் திரைப்படம் 80---_களில் இளைஞர்களின் வாழ்வியலைப் படம் பிடித்ததில் மிக முக்கியமான படம். அந்தப் படத்தின் வசனங்கள் தமிழ் சினிமா ரசிகனை திரும்பிப்பார்க்க வைத்தது. அதற்கு காரணம், அப்படத்தில் இளைஞர்கள் பேசும் வசனங்களில் தெளிவான அரசியல் பார்வை இருந்ததுதான். அந்தத் தெளிவுக்கு காரணம் மணிவண்ணன்!

“காதல் ரசம் சொட்டும் படங்களை மட்டுமே எடுக்கத் தெரிந்தவர் பாரதிராஜா...’’ என்ற பிம்பம் கோடம்பாக்கத்தில் வலிமையாக நிலைகொண்டிருந்தபோது, அதை உடைத்தெரிய பாரதிராஜாவுக்குப் பின்னால் மணிவண்ணனின் பங்கு கனிசமாக இருந்தது என்றால், அது மிகையில்லை. பின்னர், அவரின் இயக்கத்திலேயே வெளியான அலைகள் ஓய்வதில்லை (1981), காதல் ஓவியம் (1982) போன்ற படங்களுக்கும் மணிவண்ணன் வசனம் எழுதினார். புகழ்பெற்ற ரஷ்ய இலக்கியங்களில் “கண் தெரியா இசைஞன்’’ நாவலை அடிப்படையாகக் கொண்டது காதல் ஓவியம் திரைப்படம். அந்த நாவலின் வாசிப்புக்கு எவ்வகையிலும் குறைவைக்காமல் படத்தின் வசனங்கள் இடம் பெற்றிருந்தது மணிவண்ணனின் திறமைக்கு சான்று! `கொடி பறக்குது’ திரைப்படம்தான் பாரதிராஜா இயக்கிய படங்களிலேயே மிகவும் மோசமான படம் என்று இன்று வரை கோடம்பாக்கத்து உதவி இயக்குநர்களால் விவாதிக்கப்படுகிறது. அதற்குக் காரணம், பாரதிராஜா தான் நம்பிக்கொண்டிருந்த பல விஷயங்களை இந்தப் படத்தில் கோட்டைவிட்டிருந்ததுதான்! ஆனால், அந்தப் படம் வேறு ஒரு வகையில் தமிழ் சினிமா ரசிகனால் கொண்டாடப்பட்டு வருவதற்கு காரணம், கோவை கொஞ்சும் தமிழ் பேச்சை திரையில் சரியாக கையாளும் மணிவண்ணன் என்கிற நடிகனை அறிமுகம் செய்த படம் என்பதால்தான்! அந்தப் படத்தின் வில்லனுக்காக பாரதிராஜா தேடி, ஓய்ந்துபோன நிலையில் படத்தில் உதவியாளராக பணிபுரிந்த மணிவண்ணனின் பேச்சும், பழக்கவழக்கமும் பிடித்ததுப்போன ரஜினிகாந்த் சிபாரிசில்தான் வில்லன் பாத்திரம் மணிவண்ணனுக்கு கிடைத்தது தனிக்கதை. ரஜினியின் கண்ணுக்குத்தெரியாத பல நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று!

ஒரு இயக்குநரிடம் உதவியாளராக சேர்ந்து சினிமாவின் தொழில்நுட்பங்களையும், திரைக்கதையையும் கற்றுக்கொண்டு, ஒரு திரைப்படம் இயக்குவது என்பது இன்று வேண்டுமானால் எளிதானதாக மாறியிருக்கலாம். ஆனால், ஷாட், ஆங்கிள், மூவ்மெண்ட் என்ற வார்த்தைகளை தெரிந்துகொள்வதற்கே பல மாதங்களை, வருடங்களை தொலைக்க வேண்டிய காலக்கட்டத்தில்தான் மணிவண்ணனின், உதவி இயக்குநர் திரைப்பிரவேசம் நிகழ்ந்தது. அதுவும், திடகாத்திரமான உடல் அமைப்போ, வசீகரிக்கும் முகமோ இல்லாத சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட இளைஞன் திரைத்துறைக்குள் நுழைந்து, சாதிப்பது என்பது நிச்சயம் மகத்தான வரலாறாக மட்டுமே இருக்க முடியும். மணிவண்ணன் மகத்தான கலைஞனாக, வரலாறாக இன்று நிலைப்பெற்றுவிட்டார்!

மணிவண்ணன், கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை அழுத்தமாக பிடித்துக் கொண்டார். 24 மணிநேரம், நூறாவது நாள் படங்கள் உதவி இயக்குநர்கள் திரைக்கதையிலும், பாத்திர வடிவமைப்பிலும் கற்றுக்கொள்ள வேண்டிய பால படமாகும். வெற்றிகரமான படங்களாக மட்டுமல்லாமல், வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை இப்படங்கள் என்பதை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. பாலைவன ரோஜாக்கள், ஜல்லிக்கட்டு, சின்னதம்பி பெரிய தம்பி, அமைதிப்படை, நாகராஜ சோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ போன்ற படங்கள் மாறுபட்ட கதைகளன்களை கொண்டிருந்தாலும் தமிழக அரசியலின் வரலாற்றை மறைமுகமாக தனக்குள் ஒளித்துவைத்துக்கொண்டிருப்பவை. அடுத்து வரும் இளைய தலைமுறையினருக்கு முன் உதாரணமாய் பிலிம் சுருளுக்குள் உயிரோட்டமாய் உலவும் பாத்திரங்களை உள்ளடக்கியவை. இயக்குநர் மணிவண்ணனின் மகத்தான வெற்றி என்பது இதுதான்... நாட்டில் எப்போதும் மும்மாரி மழை பொழிவதாகவும், மக்கள் காதலிலும், காமத்திலும் திளைத்-து கிடப்பதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு வியாபாரத்தை மட்டுமே கண்ணும், கருத்துமாய் பார்த்துக்கொண்டிருந்த இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு மத்தியில் தயாரிப்பாளரின் பணத்துக்கு பங்கம் வராமல், காட்டமான அரசியல் படங்களை எடுத்தவர் மணிவண்ணன் மட்டுமே! சத்யராஜ் என்கிற திறமைமிக்க சமூக அக்கறை கொண்ட கலைஞனை உருவாக்கியதிலும் மணிவண்ணனே முன்னணியில் நிற்கிறார். தான் இயக்கிய 50 படங்களில் 25 படங்களில் சத்யாராஜுக்கு முக்கியத்துவம் அளித்தது இருந்தே அவர்களுக்குள் இருந்த நட்பின் ஆழம் எளிதாக யாவரும் உணர முடியும்!

பணத்தை வாயில் திணித்தால் எந்த பாத்திரத்திலும் நடித்துக்கொடுக்க தயாராய் இருக்கும் நடிகர்களுக்கு மத்தியில் (சில விதிவிலக்கு நடிகர்களைத் தவிர...) சமுதாய மாற்றத்துக்கான கொள்கையிலும், கோட்பாட்டி-லும் இயங்கும் நடிகர் சத்யராஜை தமிழ் சினிமாவுக்கு அளித்தது மணிவண்ணனின் கொடை! சுமார் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளவர் மணிவண்ணன். நகைச்சுவை, வில்லன், அரசியல்வாதி, பொறுப்பான தந்தை, போராளி என பன்முகப்பட்ட கதாபாத்திரங்களுக்குள் வாழ்ந்தவர். காதலுக்கு மரியாதை, சங்கமம், பொற்காலம், உள்ளத்தை அள்ளித்தா, அமைத்திப்படை என அந்தப் பட்டியல் நீளமானது. கொடுத்த பணத்திற்கு மேல் நடித்துக்கொட்டும் நடிகர்களுக்கு மத்தியில் மீண்டும், மீண்டும் தன் பாத்திரம் உணர்ந்து நடித்த கலைஞன் மணிவண்ணன் மட்டும்தான்!

தமிழ் சினிமாவில் இன்று சிறந்த இயக்குநர்களாக மட்டும் இன்றி அரசியல் செயல்பாடுகளிலும் இயக்குநர்கள் பங்கெடுக்க வேண்டும் என்று தீவிரமாக முழங்கிய தோழர் மணிவண்ணன். கோடம்பாக்கத்து உதவி இயக்குநர்கள் இன்று பெற்றிருக்கும் அரசியல் பார்வைக்கு முதல் விதையை ஊன்றியவர் மணிவண்ணன், அந்த விதை இன்று ஆலமரமாக விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருக்கிறது. அதன் கிளைகளில் ஒன்றுதான் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான். சிறந்த இயக்குநராக, மொழியின் மீதும், இனத்தின் மீதும் பேரன்பும் கொண்டவராக சீமான் என்கிற பகுத்தறிவு அரசியல்வாதியை உருவாக்கியதன் பின்னணியில் இயக்குநர் மணிவண்ணனின் பங்குதான் அதிகம். தன் சிஷ்யன் தன்னை விட அரசியல் பலம் வாய்ந்தவனாக சமூகத்தின் முன் நின்றபோது அவருக்கு பக்க பலமாய் குருவான மணிவண்ணன் நின்றதை இமயங்களும், சிகரங்களும், தொட்டபெட்டாக்களும் கற்றுக்கொள்ள வேண்டிய சமூகப்பாடமாகும். தன் பிள்ளை, தன்னை விட வீர்யமுள்ளதாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்தவர் தோழர் மணிவண்ணன். சிறந்த படங்களையும், சிறந்த இயக்குநர்களையும், முன்னெடுத்து செல்லவேண்டிய அரசியல் பாதையையும் மணிவண்ணன் நம்மிடையே விட்டுச் சென்றிருக்கிறார். சரித்திரத்தின் மகத்தான தலைவர்கள் நீண்ட நாள் வாழும் பாக்கியம் பெறுவதில்லை. அதில் மணிவண்ணனுக்கும் விதிவிலக்கில்லை!

 காலம், நம்மிடமிருந்து ஒரு இயக்குநரை, நடிகரை, சமூகப் போராளியை அழைத்துக்கொண்டு விட்டது. தோழரின் மரணத்தை விடவும், கேட்கும் எத்தகைய மனதையும் கரைத்துவிடும் அழுகை, அவர் இறப்பதற்கு முன் ஒரு எப்.எம்.மிற்கு அளித்த நேர்காணல். 58 வயதான குழந்தையின் தேம்பல் நிறைந்த அழுகையே தம்பிகளின் செவியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எம் தம்பிகள் அண்ணனையும், சொந்தத்தையும் இழந்த துக்கத்தில் இருந்து மீள்வதற்குள் இப்போது தந்தையை இ-ழந்து..இன்றும் கூட எதோ ஒரு கனவை மனதிற்குள் சுமந்துகொண்டு, ஒரு இளைஞன் எதோ ஒரு பேருந்து நிறுத்தத்திலோ, ரயில்வே நிலையத்திலோ நின்று கொண்டிருக்கிறான். அவன் கண்களில் இந்த சமூகத்தில் தான் ஒரு கலைஞனாக ஏற்றுக் கொள்ளப்படுவோம் என்கிற நம்பிக்கை அவனது கண்களில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது...அந்த நம்பிக்கைக் கீற்று வேறு எவரும் அல்ல... நண்பர்களே... தோழர் மணிவண்ணனேதான்!

Comments

Popular Posts