விருது எனக்கு எட்டாக் கனியா? - ஒளிப்பதிவாளர் ராம்ஜி


டத்தின் கதையோடு ஒளிப்பதிவை ஒன்ற வைப்பதில் சிலரே வெற்றி பெறுகிறார்கள். கண்ணை உறுத்தாத, துருத்திக்கொண்டு வெளியே தெரியாத ஒளிப்பதிவு என்பது அபூர்வமான ஒன்றுதான். அத்தகைய அபூர்வமான ஒளிப்பதிவுக்குச் சொந்தக்காரர் ராம்ஜி. இந்திய அளவில் ஒளிப்பதிவில் மிகப் பெரும் ஆளுமைகளை உருவாக்கிய பி.சி.ஸ்ரீராமின் பள்ளியில் ஒளிப்பதிவைப் பயின்றவர். இசை வித்தகரான செம்மங்குடி சீனிவாச அய்யரின் சிஷ்யர்களின் ஒருவரான டி.எம். தியாகராஜனின் புதல்வர். பாலிவுட்டிலும், தமிழிலும் தனக்கென தனிப்பாதை வகுத்துக்கொண்டவர். "டும் டும் டும்', "ராம்', "பருத்தி வீரன்', "ஆயிரத்தில் ஒருவன்', "மயக்கம் என்ன' போன்ற படங்கள் அவருடைய திறமையான ஒளிப்பதிவுக்குச் சான்று.

இயல்பாக என் மனதிற்குள் ஒரு கேள்வி எழுவதுண்டு. நமது வீட்டிலும், வெளியிடங்களிலும் பார்க்கப்படும் காட்சிகளில் தோன்றும் ஒளிக்கும், சினிமா காட்சிகளில் காணப்படும் ஒளிக்கும் ஏன் இவ்வளவு பெரிய வேறுபாடு என்று அடிக்கடி யோசிப்பதுண்டு. அப்படி யோசித்ததன் விளைவாகத்தான் நான் பணிபுரியும் படங்களில் யதார்த்தமான ஒளியமைப்பைக் கையாண்டேன். பொருளாதாரத் தேவையைக் குறைப்பதற்காக நான் ஒளி விளக்குகளை குறைப்பதில்லை. எனக்கு அமைந்த கதைகள் பெரும்பாலும் யதார்த்த வகை சினிமா என்பதால் செயற்கையான ஒளிகளை அமைத்துப் படம் பிடிக்கும் தேவை எனக்கு இருந்ததில்லை.
ஒரு வீட்டின் ஜன்னல் வழியாக நுழையும் ஒளியைத்தான் பார்த்திருக்கிறேன். ஆகவே, ஒரு காட்சியை இயல்பாய்க் காட்டுவதற்கு என்ன ஒளி விளக்குகள் தேவையோ அதை மட்டுமே என்னுடைய படங்களில் பயன்படுத்துகிறேன். அந்தவகையில் "பருத்திவீரன்' படத்தை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
பெரும்பாலும் ஒளிப்பதிவாளர்கள் டாப்லைட்டில்(ற்ர்ல் ப்ண்ஞ்ட்ற்) ஒளிப்பதிவு செய்வதைத் தவிர்ப்பார்கள். காரணம், டாப் லைட்டைப் பயன்படுத்தும்போது கதாபாத்திரங்களின் முகத்தில் நிழல் விழும். அதைத் தவிர்ப்பதற்கு பில் லைட்டை(ச்ண்ப்ப் ப்ண்ஞ்ட்ற்) பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆனால், நான் டாப் லைட்டை "பருத்திவீரன்' படத்தில் பயன்படுத்தினேன். அந்தப் படத்தில் நடித்த கார்த்திக்கு தான்தோன்றித்தனமாகத் திரியும் பாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது. ஆகவே, அந்தப் பாத்திரத்திற்கு ஏற்றவாறு நிறத்தின் அளவைக் குறைத்துப் படம் பிடித்தேன். "பருத்திவீரன்' படப்பிடிப்பு சுமார் 160 நாட்கள் நடந்தது. படப்பிடிப்பில் நிறைய ஒளி விளக்குகளை நான் பயன்படுத்தவில்லை. அந்தச் சூழலில் கிடைக்கும் ஒளி விளக்குகளை மட்டுமே பயன்படுத்திக்கொண்டேன்.
இந்தப் படத்தைப் பார்த்த பலர் ""டி.ஐ.(டிஜிட்டல் இன்டர்மீடியட்) பண்ணினீங்களா?'' என்று கேட்டார்கள். உண்மையில் அந்தப் படத்திற்கு டி.ஐ. பண்ணவில்லை. பிரிண்டிங் லேபில் உட்கார்ந்து கவனமாக ஒளியைச் சரி செய்ததுதான். என்னைப் பொருத்தவரை தியேட்டரில் அமைந்திருக்கும் திரைக்கும், பார்வையாளனுக்கும் இடையேதான் இடைவெளி இருக்க வேண்டுமே தவிர, படத்திற்கும் அவனுக்கும் இடைவெளி இருக்கக் கூடாது. அதை உணர்ந்துதான் என்னுடைய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்கிறேன்.
நான் பணிபுரியும் படங்களில் ஒளிப்பதிவு ஒன்றுக்கொன்று மாறுபட்டு பயணிப்பதற்குக் காரணம், ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதுதான். இதை ஒளிப்பதிவுத் துறைக்குள் வருவதற்கு முன்பாகவே நான் யோசித்திருந்தேன். "ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளுக்கு கறுப்பு நிறமுடைய தொனியை முழுவதுமாகப் பயன்படுத்தியிருப்பேன். படத்தில் முக்கியப் பாத்திரம் ஏற்றிருந்த பார்த்திபனின் முகத்தில் கூட மேலும் கறுப்பு வண்ணம் சேர்க்கப்பட்டுத்தான் படம் பிடிக்கப்பட்டது. அவருடைய முகத்தில் ஒரு ஓரத்தில் அடர்ந்த கருப்பு கோடு ஒன்றிருக்கும். அது கூட உருவாக்கப்பட்டதுதான். 2000 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களைப் பயன்படுத்தி வெளிப்புறப் படப்பிடிப்பில் "நைட் ஃபார் டே' யுக்தியைக் கொண்டு வந்தேன். இதற்காக படப்பிடிப்புத் தளத்தையும் கறுப்பு வண்ணத்தில் அமைக்க சொன்னேன். படப்பிடிப்பு தளத்திலிருந்து 40 அடிக்கு மேல் ஒளி விளக்குகளை அமைத்தேன்.
நம்முடைய மூதாதையர்கள் குகைக்குள் வாழ்ந்தார்கள் என்பதால் அவர்களுக்கு சூரிய ஒளி என்பது குகையின் மேல் பக்கத்தில் இருக்கும் சிறு சிறு துவராங்களின் வழியாகத்தான் ஒளி குகைக்குள் வந்திருக்கும். அதை மனதில் வைத்துதான் அந்தக் காட்சிகளுக்கு ஒளியமைத்தேன். என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய வரையில் இந்திய சினிமாவிலும் சரி, தமிழ் சினிமாவிலும் சரி "நைட் ஃபார் டே' யுக்தியை யாரும் வெளிப்புறப் படப்பிடிப்பில் கையாண்டதில்லை. அந்த யுக்தியை நான் "ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் கையாண்டேன். "பருத்திவீரன்' படத்திற்கு ஒளிவிளக்குகள் இன்றி படம் பிடித்தேன். ஆனால், "ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் இரண்டாம் பாதி முழுக்க அதிகமான ஒளிவிளக்குகளைப் பயன்படுத்தி, அதன் அளவைக் குறைத்துப் படம் பிடித்தேன்.
தமிழ் சினிமாவில் வீட்டை எப்போதும் அதிகமான ஒளி நிறைந்ததாகத்தான் காட்டுவார்கள். அதை மாற்ற வேண்டும் என்பதற்காக சிங்கிள் சோர்ஸில் "மயக்கம் என்ன?' படத்திற்கு ஒளிப்பதிவு செய்தேன். ஒரு வீட்டில் வசிப்பவர்களின் முகத்தில் ஒரு பக்கம்தான் ஒளிவிழும். மறுபுறம் நிழலாகத்தான் இருக்கும். அதே இயல்பு திரையிலும் தோன்றுமாறு படம் பிடித்தேன். அவர்களின் நிழலில் இருந்தாலும் அப்போது என்ன வெளிச்சம் அவர்களது முகத்தில் தெரியுமோ அந்த ஒளியையே பயன்படுத்திக்கொண்டேன். இதற்குக் காரணம், படத்தின் கதையோடு பார்வையாளனை ஒன்ற வைக்க வேண்டும் என்பதுதான். "படத்திற்கு டி.ஐ. செய்யும்போது கூட கதாபாத்திரங்களின் முகத்திற்கு மட்டும் நிறத்தின் தொனியைக் கூட்டுங்கள், மற்ற இடங்களில் குறையுங்கள்' என்றுதான் அனலைஸரிடம் சொன்னேன். படத்தின் கதை புகைப்படக்கலைஞரைப் பற்றியது என்பதால் அவர் கேமிரா வழியாக இந்த உலகத்தைப் பார்த்தால் எப்படியிருக்கும் என்று யோசித்து, அதன்படி ஒளிப்பதிவு செய்தேன். இதை யாருக்கும் சொல்லவில்லை. இப்போதுதான் இதைப் பகிர்ந்து கொள்கிறேன்.
"மயக்கம் என்ன?' படத்தை பதினைந்து வருடங்களுக்கு முன்பு உள்ள ரசிகர்கள் பார்த்திருந்தால் நிச்சயம், ""படத்தை டார்ச் லைட் அடித்துதான் பார்க்க வேண்டியிருக்கிறது...'' என்று கூறி, தியேட்டரில் கத்தியிருப்பார்கள். ஆனால், இன்று அப்படி யாரும் குறிப்பிடாமல், படத்தின் கதைப் போக்கிற்கு ஒளிப்பதிவு பெரிய அளவில் உதவியிருக்கிறது என்று பாராட்டுகிறார்கள். அதுதான் என்னுடைய வெற்றியும் கூட!
சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பு பாலிவுட் பின்தங்கிதான் இருந்தது. அங்குள்ள நடிகர், நடிகையர் குறிப்பிட்ட நேரத்திற்குள் படப்பிடிப்புக்கு வர மாட்டார்கள். காலையில் ஏழு மணிக்கு படப்பிடிப்பில் காத்துக்கொண்டிருந்தால் அவர்கள் 11 மணிக்கு மேல்தான் படப்பிடிப்புத் தளத்திற்குள்ளேயே நுழைவார்கள். ஆகவே, எனக்கு நடிகர், நடிகைகள் மீது கோபம் வரும். சத்தம் போடுவேன். இரண்டு நாள் ஒழுங்காக படப்பிடிப்புக்கு வருவார்கள். மறுபடியும் பழைய கதைதான்.
ஆனால், படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் தங்கள் கடமையைச் சரியாகச் செய்வார்கள். ஆனால், தற்போது அவர்கள் அந்த நிலையிலிருந்து பல படிகள் முன்னேறி வந்திருக்கிறார்கள். ஆரோக்யமான போட்டியும், விதவிதமான கதை சொல்லல் முறைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. பாலிவுட் நல்ல சினிமாவை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது. தற்போது அவர்கள் தென்னிந்தியாவை நம்பித்தான் உள்ளார்கள். சுமார் ஆறு படங்கள் பாலிவுட்டில் ரீ-மேக் செய்யப்பட்டுள்ளன. அதில் தமிழ்தான் முன்னுதாரணமாக உள்ளது.
நாளைய சினிமாவை ஆளப்போவது டிஜிட்டல்தான். ஆனால், என்னைப் பொருத்தவரை ஃபிலிமில் இருக்கும் உயிர், டிஜிட்டலில் கிடையாது. ஃபிலிம் என்பது லாட்டிட்டூட் சம்பந்தப்பட்ட விஷயம். டிஜிட்டலுக்கு லாட்டிட்டூட் என்கிற விஷயமே கிடையாது. நிறைய தொழில்நுட்பம் சார்ந்து பிரித்துப் பேச வேண்டியுள்ளது. ஆகவே, எளிதாகப் புரிந்துகொள்ளும்படி சொல்லவேண்டுமென்றால் தாய்க்கும், வாடகைத் தாய்க்குமான வித்தியாசம்தான் ஃபிலிமுக்கும், டிஜிட்டலுக்கும் இடையேயான வேறுபாடு.
தமிழ் சினிமாவில் டிஜிட்டலைப் பயன்படுத்தவற்கான அதிகப்படியான சாத்தியங்கள் இன்னும் ஏற்படவில்லை. உதாரணத்திற்கு ஃபிலிமில் எனக்குக் கிடைக்கும் கறுப்பு வண்ணமானது டிஜிட்டலில் கிடைக்காது. அது கறுப்பு போன்ற ஒரு மாய வண்ணத்தைத்தான் எனக்குக் கொடுக்கும். ஆகவேதான் அதை தற்போது தள்ளிவைத்துவிட்டு ஃபிலிமில் பணியாற்றுகிறேன். கறுப்பு நிறம் சேராத ஒரு காட்சியை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியாது. காரணம், ஒரு காட்சியின் உயிரோட்டத்திற்கு கறுப்பு நிறம்தான் துணை நிற்கிறது.
அபூர்வமான மனிதர் பி.சி.ஸ்ரீராம். என்னைப் போன்ற முட்டாளைக் கூட ஒரு ஒளிப்பதிவாளராக மாற்ற முடியும் என்பது அவரால் மட்டுமே முடியும். எந்தக் கல்லூரியின் ஒளிப்பதிவைப் படிக்காத, ஒரு புகைப்படத்தைக் கூட சரியா எடுக்கத் தெரியாத என்னை ஒரு தேர்ந்த தொழில்நுட்பவாதியாக மாற்றியதற்குப் பின்னால் அவருடைய கடுமையான உழைப்பும், அர்ப்பணிப்பும் இருக்கிறது. ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட ஒளிப்பதிவாளர்களை இந்திய சினிமாவுக்கு வழங்கியிருக்கிறார். ஒளிப்பதிவு மட்டுமின்றி பல விஷயங்களை அவரிடமிருந்து நாங்கள் கற்றுக் கொண்டிருக்கிறோம். அவர் எது சொன்னாலும் அது எங்களுக்கு வேத வாக்குதான்.
விருது பற்றிய ஆசையை "பருத்திவீரன்' படம் மூலம் என்னுடைய நண்பர்களும், ரசிகர்களும் எனக்குள் உருவாக்கினார்கள். அதற்கு முன் அப்படியொரு ஆசை என்னிடமில்லை. 2008-ல் "பருத்திவீரன்' படத்திற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. அன்றிரவு தேர்வுக் குழுவிலிருந்து ஒரு முக்கியமான நபர் இரவு 12.30 மணியளவில் என்னிடம், ""பருத்திவீரன் படத்தின் கதைக்கு உங்களுடைய ஒளிப்பதிவு பக்க பலமாக உள்ளது. உண்மையில் உங்களுக்கும் தேசிய விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், விருது அளிக்கப்படவில்லை. என்னுடைய மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. அதனால்தான் பேசுகிறேன்...'' என்றார். அவரைப் போலவே படம் குறித்து பாராட்டிய அனைத்து ரசிகர்களின் வார்த்தைகளைத்தான் மிகப் பெரிய கெüரவமாக கருதுகிறேன். விருது எனக்கு எட்டாக் கனியா என்று தெரியவில்லை. ஆனால், விருதை மட்டுமே குறி வைத்து செல்லும் நபரும் நானில்லை. என்னைப் பொருத்தவரை "கடமைச் செய் பலனை எதிர்பாராதே' என்பதுதான்!


Comments

Popular Posts