பார்த்ததும் ரசித்ததும்! "ரோஷாமான்'


""ஒரு கொலையைப் பல்வேறு கோணங்களில் அலசும் இப்படம், படத்தின் முடிவை பார்வையாளனிடமே விட்டுவிடுவதுதான் படத்தின் சிறப்பு.
படத்தின் கதை அடர்ந்து பெய்யும் மழையிலிருந்து ஆரம்பிக்கிறது. ரோஷாமான் எனும் பெயருடைய பிரம்மாண்ட நுழைவாயிலிருந்து மழை கொட்டுகிறது. நுழைவாயிலை ஒட்டிய மண்டபத்தில் ஒரு துறவியும், விறகு வெட்டியும் தாங்கள் நீதிமன்றத்திற்கு சாட்சியாய் போன ஒரு கொலை வழக்கு குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்த இடத்திற்கு வரும் மூன்றாவது நபரிடம் தாங்கள் கூறிய சாட்சியத்தையும், கேட்ட சாட்சியங்கள் குறித்தும் கூறுகின்றனர்.
விசாரணைக் கூடம் காண்பிக்கப்படுகிறது.
காட்டு வழியே பயணம் மேற்கொள்ளும் ஒரு சாமுராய் கொலை செய்யப்பட்டு, அவனுடைய மனைவியை கற்பழிக்கப்படுகிறாள். இதற்குக் காரணமான கொள்ளையன் மீது நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்படுகிறது.
வழிப்பறி கொள்ளையன், சாமுராயின் மனைவி, ஆவியாய் வந்து பெண்ணொருத்தியின் உடலில் புகுந்து சாட்சியம் சொல்லும் சாமுராய் மற்றும் விறகு வெட்டி ஆகியோர் நீதிமன்றத்தில் தங்களுடைய சாட்சியத்தைச் சொல்கின்றனர்.
ஒரு சம்பவத்துக்கு ஓர் உண்மைதானே இருக்க முடியும். ஆனால், இங்கு அவரவர் அவரவர் கோணத்தில் அந்தக் கொலையை விவரிக்கின்றனர்.
சாமுராயின் மனைவி மனமுவந்து தன்னோடு வர சம்மதித்து, கணவனைக் கொலை செய்யத் தூண்டியதாய் வழிப்பறி கொள்ளையன் கூறுகிறான். அவளோ,வழிப்பறி கொள்ளையனுடன் தனது கணவனை வாள் சண்டை போடச் சொன்னதாக கூறுகிறாள். ஆவியாய் வந்து பேசும் சாமுராய் இதையெல்லாம் மறுத்து, தனது மனைவியின் மீதே பழி போடுகிறான். கொலையை நேரில் கண்ட விறகு வெட்டி இந்த எல்லா சாட்சியங்களையும் முற்றிலுமாக மறுக்கிறான்.
இதில் நால்வர் சொல்வதும் நம்பக்கூடியதாகத்தான் இருக்கிறது. ஆனால், ஒருவருக்கொருவர் முரண்படுகின்றனர். இதில் யார் சொல்வதில் உண்மையிருக்கிறது என்பது இறுதியில் பார்வையாளனின் முடிவுக்கே விடப்பட்டு படம் முடிகிறது.

உலகம் முழுக்க இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு என்பது அதன் திரைக்கதைக்கானது மட்டுமல்ல; படத்தின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, ஒலி ஒருங்கிணைப்பு,கதாபாத்திரங்களின் நடிப்பு, அரங்கப் பொருட்கள்.. என பல முக்கியக் காரணிகள் உண்டு. இப்படத்தில்தான் முதன் முதலாக சூரியனை நேரடியாகந்க் காமிரா மூலம் படம் பிடிக்கப்பட்டது. மேலும், ரசம் பூசப்பட்ட கண்ணாடி மூலம் வெளிச்சத்தை நடிகர்களின் முகத்தில் பிரதிபலிக்கச் செய்து படம் பிடிக்கும் முறையும் ஒளிப்பதிவில் பிரபலமானது. இப்படத்தை இயக்கிய அகிரா குரசோவா உலகம் முழுவதும் சிறந்த இயக்குநராக அறியப்பட்டார். வெனிஸ் திரைப்பட விழாவில் பங்கு பெற்று தங்கச் சிங்கம் விருது பெற்றுள்ளதோடு, அமெரிக்க உள்ளிட்ட பல பட விழாக்களில் கலந்துகொண்டு சிறந்த நடிப்பு, திரைக்கதை, இயக்கம் ஆகிய விருதுகளையும் இப்படம் பெற்றுள்ளது.
சூழ்நிலையிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள எதையும் செய்ய மனித மனங்கள் தயங்காது என்பதை இப்படத்தின் மூலமாக அறிந்து கொண்டேன்'' என்கிறார் ஏ. சரவணக்குமார்.

பார்வை:

திருச்சி- உறையூரைச் சேர்ந்தவரான ஏ.சரவணக்குமார், சென்னை - பூந்தமல்லியிலுள்ள எஸ்.ஐ.ஈ.டி. பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் பாடத்தில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். தற்போது பெற்றோருடன் ராயப்பேட்டையில் வசிக்கிறார். "பிரபலங்கள்' எனும் குறும்படத்தை இயக்கியிருக்கும் இவர், ஜெயபாலன் இயக்கியுள்ள "மாமல்லன்' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார்.


Comments

Popular Posts