"காட் ஃபாதர்'



"காட் ஃபாதர்'

""இத்தாலியிலிருந்து ஓடி வரும் ஒரு சிறுவன், அமெரிக்காவில் பெரிய தாதாவாக உருவாகிறார்(மார்லன் பிராண்டோ). ஒரு கட்டத்தில் அரசியல் செல்வாக்கும், பணபலமும் படைத்த பெரும்புள்ளியாகவும் உருவெடுக்கிறார். சாம் என்ற ஒருவனைத் தத்தெடுத்துத் தன் தலைப்பிள்ளைபோல தன்னுடனே வைத்துக் கொள்கிறார். கடைசிப் பையனான அல்பாசினோ அப்பாவின் நடவடிக்கைகள் எதிலும் பங்கெடுத்துக்கொள்ளாமல் தனித்திருக்கிறான்.
அமெரிக்கா நிழல் உலகத்தில் சூதாட்டம், கட்டப் பஞ்சாயத்து போன்ற செயல்களில் பிராண்டோ ஈடுபட்டாலும், போதைப் பொருள் விற்பனை உள்ளிட்ட சில செயல்களை தவிர்த்து வாழ்கிறார். இந்நிலையில் போதைப் பொருட்களை விற்பனை செய்ய பெரிய பணக்காரக் கும்பல் ஒன்று இவரிடம் உதவி கேட்கிறது. அதை மறுத்துவிடுகிறார் பிராண்டோ. இதனால் ஆத்திரமடையும் கும்பல் அவரைக் கொலை செய்ய முயற்சிக்கிறது. இதிலிருந்து தப்பித்துவிடுகிறார்.
அப்பாவைக் கொல்ல நடக்கும் சதிகளை அறியும் அல்பாசினோ, எதிரிகளைத் தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறான். அதன்படி எதிரிகளிடம் சமரசம் செய்வதுபோல் சென்று எதிரிகள் இருவரை சுட்டு வீழ்த்துகிறான். பிறகு, அங்கிருந்து தப்பித்து வெளியூர் செல்பவனுக்கு அங்கு ஒரு பெண்ணுடன் காதல் மலர்கிறது. அந்தப் பெண்ணையே பாசினோ திருமணமும் செய்துகொள்கிறான். இந்நிலையில் பாசினோவைக் கொலை செய்ய எதிரிகள் முற்படும்போது அதில் சிக்கி, அவருடைய மனைவி உயிர் துறக்கிறார். அதேபோன்று எதிரிகள் பாசினோவின் அண்ணனின் கதையையும் முடிக்கின்றனர்.
தன் சொந்த ஊருக்குத் திரும்பும் பாசினோ தன்னுடைய பழைய காதலியையே கரம் பிடிக்கிறார். அவர்களுக்குக் குழந்தையும் பிறக்கிறது. மார்லன் பிராண்டோ தனது முழு பொறுப்பையும் பாசினோவிடம் ஒப்படைக்கிறார். தனது பேத்தியுடன் விளையாடிக்கொண்டிருக்கும்போது பிராண்டோவின் உயிர் பிரிந்துவிடுகிறது.
தனது குழந்தையின் பெயர் சூட்டு விழாவிற்கு பாசினோ எதிரிகளையும் அழைக்கிறார். பழைய பகையெல்லாம் மறந்து எல்லோரும் ஒன்றாக இருக்கலாம் என்று அதற்குக் காரணம் சொல்கிறார். ஆனால், பெயர் சூட்டு விழா முடிவதற்குள் தனது அண்ணன் மற்றும் தந்தையின் சாவுக்கு காரணமானவர்களைக் கொன்றுவிடுகிறார். பாசினோவை அடுத்த டானாக எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள் ஆனால், அவரது மனைவிக்கு இது பிடிக்காமல் பிரிந்துபோகிறார் என்பதோடு படம் முடிகிறது.
ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்ட இப்படத்தை பிரான்சிஸ் போர்டு கொப்போலா இயக்கியிருக்கிறார். நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களிலேயே மிகச் சிறந்த திரைக்கதையமைப்புடன் வெளியான இப்படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இன்றும் ஏதோ ஒரு மூலையில் பார்க்கப்பட்டுக்கொண்டிருக்கிறது'' என்கிறார் சின்னப்ப கணேசன்.

பார்வை:

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் தோப்பூரைச் சேர்ந்தவர் சின்னப்ப கணேசன். முதுநிலை பட்டப் படிப்பில் எம்.ஏ.ஆங்கிலம் மற்றும் டிப்ளமோ ஜர்னலிசமும் படித்திருக்கிறார். செய்தி நிறுவனங்களில் சில காலம் பணியாற்றியிருக்கிறார். தற்போது வி.எஸ்.வி.ரங்கராஜனிடம் "விருதுநகர்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.


Comments

Popular Posts