தி அல்காமிஸ்ட் (The Alchemist) புத்தகத்தை மிகவும் தாமதமாக படிப்பதாக நெருங்கிய நண்பர் ஒருவர் என் மீது கோபப்பட்டார்.........!


தி அல்காமிஸ்ட் (The Alchemist) புத்தகத்தை மிகவும் தாமதமாக படிப்பதாக நெருங்கிய நண்பர் ஒருவர் என் மீது கோபப்பட்டார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு... அவர் எதிர்வினை புரிந்ததே முதலில் மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கான பதில் இதுதான்! ஒரு புத்தகம் எப்போது உங்களை வந்து அடைய வேண்டுமோ... மிகச் சரியான நேரத்தில் அந்தப் புத்தகம் ஒரு காதலியின் வரவைப் போல... ரம்மியமான ஒரு காலைப் பொழுதில்... மதிமயங்கும் மாலைப் பொழுதில்... அல்லது ஊரடங்கிய சாமத்தின் நடுநிசியில் அது உங்களை வந்து தழுவிக் கொள்ளும். தி அல்காமிஸ்ட் (The Alchemist) புத்தகமும் அப்படி வந்துதான் என்னை இரண்டு நாட்களுக்கு முன்பு அணைத்துக் கொண்டது.

காதலியின் மடியில் படுத்துக்கொண்டு ஆகாயத்தில் எந்த இலக்கும் அற்று கனநேரத்தில் விதவிதமான உருவங்களுக்குள் தன்னை மாற்றிக்கொண்டே கரைந்து போகும் மேகக் கூட்டங்களை பார்த்துக்கொண்டிருக்கும் காதலனின் மனோநிலையில்தான் தி அல்காமிஸ்ட் (The Alchemist) புத்தகத்தின் முதல் பக்கத்தை திறந்தேன்! முதல் 20 பக்கங்கள் வாழக்கையின் மர்மமுடிச்சை அவிழ்த்துப்போட்டுவிட்டது.

''உலகத்தில் இருக்கிற அனைத்துப் புத்தகங்களும் ஒரே விஷயத்தைத்தான் சொல்கின்றன. மனிதர்கள் தங்களுடைய தலைவிதியைத் தீர்மானிக்கக் கூடிய சக்தியற்றவர்களாக இருப்பதை விவரிக்கிறது. இந்த உலகத்தின் மிகப்பெரிய பொய்யை ஒவ்வொருவரும் நம்புவதாகச் சொல்லி முடிவடைகிறது...''  ''நம்முடைய வாழ்க்கையில்.... ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நமக்கு நிகழக்கூடியவற்றின் மீதான கட்டுப்பாட்டை நாம் இழந்துவிடுகிறோம். நம்முடைய வாழ்க்கை விதியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதுதான் உலகத்தின் மிகப்பெரிய பொய்!''  கடந்து 20-வது ஆண்டுகளில் எந்தவொரு புத்தகமும் முதல் 20 பக்கங்களில் இந்த பேருண்மையை வெளிக்காட்டியதேயில்லை... ஏன் உலகம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட புத்தகம் எல்லோரையும் ஒன்றிணைக்கிறது என்பதற்கு இந்தப் புத்தகம் ஒரு உதாரணம் என்றே நினைக்கிறேன். ஒரு புத்தகத்தை சிபாரிசு செய்வதற்கு எந்த எதிர்ப்பார்ப்பும் அற்ற, திறந்த மனநிலை வேண்டும்... சிலரால் மட்டுமே அப்படியாக இருக்க முடிகிறது. கோபப்பட்ட நண்பரோடு பல மாதங்கள் ஒரே அறையில் தங்கியபோதும் கூட ஏன் அவர், எனக்கு தி அல்காமிஸ்ட் (The Alchemist) புத்தகத்தை அறிமுகப்படுத்த தோன்றவில்லை?

சிங்கப்பூரில் வசிக்கும் எனது தோழி ஒருவர் கேட்டார், ''இந்தப் புத்தகத்தை உனக்குப் பிடிக்குமா?'' தான் நீண்டநாள் தேடிக்கொண்டிருந்த காதலியை யாருக்காவது பிடிக்காமல் போகுமா...ஸ்நேகிதி!

Comments

Popular Posts