25 வருடங்கள் உத்தம எழுத்தாளர்களைப் போல காத்துக்கொண்டு இருக்க முடியுமா?

டந்த சில மாதங்களாக ஏன் நீங்கள் சினிமா சார்ந்த கட்டுரைகள் எழுதுவதில்லை என்கிற கேள்வியை விருப்பமான நண்பர்களிடத்தில் இருந்து அடிக்கடி வருகிறது. எளிமையான காரணம்தான். பல்வேறு இலக்கிய இதழ்களில் தொடர்ச்சியாக சினிமா கட்டுரைகள் எழுதி வந்தபோதிலும், மறுபுறம் தீவிரமான சிறுகதை, நாவல் குறித்த பயிற்சிகளையும், பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட நாவல்கள், சிறுகதைகளை வாசித்தும், எழுதியும் வந்தேன். தினமணி கதிர், தினமலர், கல்கி, தாமரை, வீதி, நவீன விருட்சம் உள்ளிட்ட இதழ்களில் சிறுகதைகள் வெளியாகின. பரவலான நண்பர்களின் விமர்சனங்கள் கிடைத்தன. குறிப்பாக, விஜய் டிவி “நீயா நானா’’ இயக்குநர் ஆண்டனி அவர்கள் ஒரு சந்திப்பின்போது,  “ப்ளாக் சினிமா கட்டுரைகளை தவிர்த்து சிறுகதை, நாவல் சார்ந்து இயங்கலாமே...!’’ என்றார். மேலும், ஒரு சினிமா கட்டுரை எழுதுவது எளிமையான காரியம் அல்ல. அதற்கு நிறைய உழைப்பு தேவைப்படும் என்பது என் சக நண்பர்களும் ஒத்துக்கொள்ளும் உண்மைதான்!

ஆனால், அவ்வளவு பிரயத்தனங்களும், நேரமும், உழைப்பையும் வாங்கிக்கொள்ளும் ஒரு கட்டுரை உரிய நேரத்தில் வராமல் போவது இயல்புதான். ஆனால், தொடர்ச்சியாக கட்டுரைகளை எழுதியும், அது பிரசுரிக்கப் படாமல் மாத மாதம் தள்ளிப்போவதும் இயல்பானதாக இருக்க முடியாது இல்லையா? தமிழ் கூறும் உத்தம எழுத்தாளர்களுக்கு வேண்டுமானால் இது சாதாரணமாக இருக்கலாம். ஆனால், மூத்த படைப்பாளியின் விரல் பிடித்துக்கொண்டு பின்னால் வரும் இளம் படைப்பாளியும் அதை அவ்வாறே எடுத்துக்கொள்ள முடியுமா?

இன்றைய சமூகச் சூழலில் காலம் எவ்வளவு முக்கிய பங்கை ஆற்றுகிறது. காலவிரயத்தை சமூகமும், குடும்பமும், நண்பர்களும் ஏற்றுக்கொள்ளுகிறார்களா? ஆகவேதான் கால விரயத்தை தவிர்க்கும் பொருட்டும் கட்டுரைகள் எழுதுவதை தீவிரமாக தவிர்த்தேன். மிக   மிக முக்கியமான ஒன்று. தொடர்ச்சியாக என்னுடைய கட்டுரைகளை வெளியிட்ட இலக்கிய பத்திரிகைகள் ஒரேயொரு சிறுகதையை (இரண்டு ஆண்டுக்கு ஒரு சிறுகதை என்கிற விதிவிலக்கில்...) கூட பிரசுரிக்கவில்லை. அட! நீ எல்லாம் கதை எழுத வந்துட்டியா? என்கிற வர்ணாசிரம சிந்தனையாகக் கூட இருக்கலாம். தன்னை பிரபலமாக்கிக் கொண்டிருக்கும் ஒரு உத்தம எழுத்தாளர் நேரடியாகவே கேட்டார், “என்ன ப்ளாக்... படைப்பாளியாக வேண்டுமா?’’

பிறகுதான் முடிவு எடுத்தேன். இனி கட்டுரைகளே எழுதக்கூடாது என்று. ஆனாலும், பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துவிடவில்லை. ஒரு சிறுகதை வெளியாவதற்குப் பின்னால் ஒரு நாவல் கொண்டு வரும் அளவுக்கு அரசியல், பிரச்சனை, பழிவாங்கும்போக்கு, குரோதம், குழு மனப்பான்மை என நீண்டு கொண்டே போகிறது. அதைவிட கொடுமை, ஒரு படைப்பின் தரத்தை எடைபோடுவதை தவிர்த்து அவனுடைய சாதி, மதம், இனம் சார்ந்த அடையாளங்களும் கூட முன்வைக்கப்படுகின்றன! “அப்படியெல்லாம் இல்ல தோழா...’’ என்று சொல்லும் இடதுசாரிகளும் கூட இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல!

இவ்வளவு மன உளைச்சல்களில் சிக்கிக் கொள்ளாமல், மாற்றாக திரைப்படங்களுக்கு திரைக்கதை அமைக்கும் பணிகளிலும் என்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டேன். உண்மையில் பொருளாதார ரீதியான பலத்தையும், படைப்பாளிக்கான அடையாளத்தையும்  அதுதான் தற்போது எனக்கு பெற்று தந்திருக்கிறது. தொடர்ச்சியாக அதில் கவனம் செலுத்தி வருகிறேன். ஐந்து நிமிட குறும்படத்திற்காக அடித்துப் பிடித்து அனைத்து இதழ்களிலும் எழுதும் ஒரு எழுத்தாளரின் சிறுகதையை திரைக்கதையாக்கி நண்பர் ஒருவரிடம் கொடுத்தேன். அதற்கு எடுத்துக்கொண்டது 3 மணி நேரம் மட்டுமே. கையில் திரைக்கதையை கொடுத்தபோது ரூ. 3 ஆயிரத்தை கையில் உடனே தந்தார் (வாய்ப்பை பெற்று தந்தவர் தம்பி சக்திவேல்) ஒரு சிறுகதை உண்மையில் தேர்வு செய்யப்படுமானால் (குறிப்பிட்ட வார இதழை தவிர்த்து) ரூ. 300 தருவார்கள். பல இதழ்களில் அதுவும் கிடையாது. (பல இதழ்கள் சிறுகதையை வெளியிடாது என்பது வேறு. சிறுகதையை வெளியிட்டால் அவன் ஒரே நாளில் உலகப்புகழும், உள்ளூர் புகழும் அடைந்துவிடுவான் என்று தான் மட்டுமே கருதுவதாக கூட இருக்கலாம்) 

மேலும், தன்னை நம்பர் ஒன் என பிரகடனப்படுத்திக்கொள்ளும் ஒரு குப்பையான வார பத்திரிகையில் சிறுகதை வெளியாகும் என்று 25 வருடங்கள் உத்தம எழுத்தாளர்களைப் போல காத்துக்கொண்டு இருக்க முடியுமா?  இது புதிய தலைமுறை... புதிய சிந்தனையுடனும், தொழில்நுட்ப சாத்தியங்களையும் உள்ளடக்கிக் கொண்டு வாழ்க்கையை கொண்டாட்டமாக வைத்திருக்க நினைக்கும் தலைமுறை, தடைகள் போடலாம், தள்ளி வைக்கலாம், ஆனால், நீண்டகாலம் அதை அப்படியே தொடர முடியாது இல்லையா நண்பர்களே!

Comments

Popular Posts