கபட நாடகத்தின் இறுதிக்காட்சி!

டந்த சில நாட்களாக நான் பெரிதும் மதிக்கும் இரண்டு எழுத்தாளர்களின் கடுமையான மோதலை உங்களைப் போலவே நானும் அவதானித்து வருகிறேன். அவர்கள் இருவருக்குள்ளே நடக்கும் கபட நாடகத்தின் காட்சிகள் சலிப்பூட்டுவதாக உள்ளன. பொதுவெளியில் எழுத்தாளன் எப்படி நடந்துகொள்கிறான், பேசுகிறான், எழுதுகிறான் என்பதை காலம் மட்டும் அல்ல... மனிதர்களும், பறவைகளும் கூட கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றன. தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்டிருக்கும் வியத்தகு மாற்றங்கள் பிரமிப்பூட்டுபவையாக இருந்தாலும், அந்த மாற்றங்களை ஏற்படுத்திய எழுத்தாளனுக்கு எந்த அங்கீகாரத்தையும், பாராட்டையும், வெகுமதியையும் அளிக்காமல் தொடர்ந்து அவனை கீழான நிலையில் வைத்தே இச்சமூகம் வைத்து அழகு பார்க்கிறது. முன் எப்போதை விடவும் சிற்றிதழ்கள் அதிகரித்து இருக்கின்றன, மாத இலக்கிய இதழ்கள் அதிகரித்திருக்கின்றன, பல மடங்கு பதிப்பகங்கள் பெருகியு-ள்ளன, கார்ப்பரேட் மயமாகி புத்தக தொழிற்சாலைகள் சென்னையில் தனி ஏரியாவையே குத்தகைக்கு எடுத்து, விடாமல் எழுத்தாளனின் சொற்களை பிரிண்ட் செய்கின்றன!

எழுத்தாளனின் சொற்களால் பல நூறு குடும்பங்கள் பெசன்ட்நகரிலும், அண்ணாசாலை அடுக்குமாடி வணிக வளாகங்களில் நுழைந்து சிக்கன் பர்கர் சாப்பிடுகின்றன. ஆனால், எழுத்தாளன் சொற்களை விற்றுவிட்டு நகரத்தின் தெருக்களில் பைத்தியக்காரனாய், மனம் வெதும்பி செருப்புகளற்று நடந்து கொண்டிருக்கிறான். பசியை விடவும், வலி மிகுந்ததாய் புறக்கணிப்பு அவன் கால்களை பற்றிக்கொண்டு பின்தொடர்ந்தபடியே இருக்கிறது!

அவனால் இந்த நகரத்தை விட்டும், சொற்களை விட்டும் எங்கும் ஓட முடியாது. அது அவனுக்கு இடப்பட்ட சாபம். அதை அவனது பதிப்பாளர்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். ஆகவே, அந்த சாபத்தையே கேடயமாக்கி, அவனிடம் இருந்து மேலும், மேலும் சொற்களை பிடுங்குகிறார்கள். கூடுமானவரை அவற்றை வெள்ளைக் காகிதங்களில் நிரப்பி சொற்களை தேடும் கூட்டத்திடும் விற்கவும் செய்கிறார்கள்.போதை வஸ்துக்களால் அளிக்க முடியாத இன்பத்தை தரும் சொற்கள் உடைய எழுத்தாளர்களே பதிப்பகங்களின் விருப்பம். ஓயாமல் நடந்து, களைத்து, மயக்கத்தின் போதையில் அவனிடம் இருந்து சொற்கள் உதிக்கின்றன. இப் பூகோளத்தின் ஆகப்பெரும் சக்தி தான்தான் என்கிற பெருமயக்கமே அவனிடம் சொற்களை உற்பத்தி செய்கின்றன. ஆனாலும், அவன் பிச்சைக்காரனாய், அவன் எழுதிய புத்தகத்தை அவனே வாங்க முடியாத பரதேசியாய், ஒரு புத்தகம் கூட விற்கவில்லை என்று வாய்நோகாமல் பேசும் பதிப்பாளனின் வார்த்தையை உண்மையென நம்பி புன்னகைக்க எழுத்தாளனால் மட்டும்தான் முடியும்!

எழுத்தாளனுக்கு பசி உண்டு, இச்சை உண்டு, குடும்பம், குட்டி, உறவுகள், நண்பர்கள் எல்லாமும் உண்டு. ஆனால், அப்படி ஒன்று இருக்கிறது என்பது நாள், மாத, வார, வருட இதழ்கள், பதிப்பாளர்கள், பதிப்பகங்களின் மெமரியில் மட்டும் சேமித்து வைக்கப்படுவதில்லை.  நான் உங்களிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன். எனக்கு விருப்பமான சொற்களை விதைத்த ஒரு எழுத்தாளனை பற்றி...அவனை எல்லோரும் மகாராஜா என்றுதான்அழைப்பார்கள். அவனை இந்த நகரம் கொஞ்சம் கூட ஈவு, இறக்கமின்றி ஓட ஓட விரட்டிவிட்டது நண்பர்களே... அவன் சொற்கள் இப்போதும் கூட நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன. குடிப்பது அவனுடைய குணம். ஆனால், குடித்துவிட்டு அவன் யார் குடியையும் கெடுத்ததாக அவனுடைய அல்லது என்னுடைய நண்பர்களோ சொன்னதில்லை. மதுவை விடவும் மோசமான மனிதர்கள் நம்மிடையே இனிக்க, இனிக்க பேசுவதை நாம் மவுனமாக கேட்டுக்கொண்டுதானே இருக்கிறோம்!

எழுத்தாளனின் வாழ்க்கையை மேம்படுத்த நம் சமூகத்தில் சங்கங்களும் கூட ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கானோர் அதில் உறுப்பினர்களாக இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. ஆனால், அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது பல நேரங்களில் அவர்களுக்கே தெரியவில்லை. சங்கத்தின் அலுவலக முகவரி, இமெயில், மொபைல் நம்பர் உள்ளிட்டவற்றை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துக்கொண்டுவிடுகிறார்கள். இதனாலும் ஒரு எழுத்தாளன் தன் வேதனையை, கோரிக்கையை பகிர்ந்து கொள்ள இடமில்லாததால் தொடர்ந்து வார்த்தைகளிடமே தஞ்சம் அடைய வேண்டியிருக்கிறது!

சொற்களின் நடனம், வார்த்தை ஜாலம், மந்திர எழுத்து, மயக்கும் சொற்றொடர் என்றெல்லாம் கற்பித்துக்கொண்டும், யதார்த்தம், பின்நவீனத்துவம், மேஜிக்கல் ரியலிசம் என்றெல்லாம் பெயரிட்டுக்கொண்டும் எழுத்தாளன் தொடர்ந்து சமூகத்தின் சந்துகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனால், சந்திலிருந்து வெளியே வந்து பார்க்க ஒருபோதும் அவனது பெரும் மயக்கம் இடமளிப்பதில்லை. உண்மையில் சந்துக்கு வெளியே ஒற்றைபாதை, பின் நெடும்பாதை, தெரு, சாலை, நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை, கிராமம், ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாநகரம், மாவட்டம், மாநிலம், தேசம் என விரிந்து கிடக்கிறது உலகம்!

வானம், மேகங்கள், பறவைகள், மரங்கள், மலைகள், நதி, ஓடை, ஆறு, கடல், மீன்கள், படகுகள், பூக்கள் என இயற்கையால் எழுதப்பட்ட மாபெரும் மயக்க எழுத்து ஒவ்வொரு கனமும் காற்றில் எழுதபட்டுக்கொண்டேயிருக்கின்றன... கண்களும், மனமும் அதை வாசித்தபடியே மனித மனம் வாழ்வை கடந்துகொண்டிருக்கிறது. அதையெல்லாம் மறந்துவிட்டு எழுத்தாளர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வது வேடிக்கையானதுதான் இல்லையா. நண்பர்களே... சமூகத்தை நேர்வழியில் நடத்திட வேண்டிய பெரும் பொறுப்பு எழுத்தாளனின் கையில் கொடுத்துள்ளதாக பெரியவர்கள் சொல்கிறார்கள். சமூக மாற்றத்தை விதைக்க வேண்டியவர்களும் அவர்கள்தான் என்கிறார் அந்தப் பெரியோர்கள். எழுத்தாளர்கள் சிந்திப்பார்களாக!

Comments

Popular Posts