தங்களின் முன் தலைவணங்குகிறேன் குருவே!

சென்னையில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிக்க இடம் கிடைத்தது. அரசின் உதவித்தொகையோடு, ஆனால் பெரும்பாலான நேரங்கள் திரைப்படக்கல்லூரியில் வாசல் முன் உள்ள குட்டிச்சுவரில்தான் வாசம். எப்படியாவது பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக சேர வேண்டும் என்று! பின்னர் நடந்தது எல்லாம் தனிக்கதை. இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக சேர்ந்து நந்தலாலா படத்திற்கு தீவிரமாக உழைத்துக்கொண்டிருந்தோம். படத்திற்கு ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம். இசை இளையராஜா என்றுதான் முதலில் முடிவாகி இருந்தது. அப்படத்தில் திரைக்கதை, நடிகர்கள் தேர்வு, புகைப்படம், ஆடிஷனை வீடியோ எடுப்பது என இயக்குநர் என்னை நன்றாக மெருகூற்றினார். படப்பிடிப்பு மிக அருகாமையில் இருந்தது. ஒரு நாள் திடீரென்று இயக்குநர் “இன்று பி.சி. நம்முடைய ஆடிஷன் புட்டேஜை பார்க்க வருகிறார்.. சீக்கிரம் தயார் செய்’’ என்று கட்டளையிட்டார். எனக்கு தூக்குவாரி போட்டது. நடுக்கத்துடன் எல்லா ஏற்பாடுகளையும் செய்தேன். 

வளசரவாக்கத்தில் நடிகர் நாசரின் அலுவலகத்தில்தான் எங்கள் குழு தங்கியிருந்தது. சரியாக மாலை 4.30 மணிக்கு பி.சிஸ்ரீராம் வந்தார். முதன்முதலாக அவரை அப்போதுதான் பார்த்தேன். என்ன உயரம்? என்று வியப்பதற்குள், பி.சி., மிஷ்கினிடம் “பார்க்கலாமா...’’ என்றார். மிஷ்கின் பார்த்தார். நாங்கள் தயாராக வைத்திருந்தோம். படத்தின் கதையின் பெரும்பாலான வீடியோ காட்சிகளை பொறுமையாக பார்த்தார் பி.சி.ஸ்ரீராம். நான் பயத்துடன் இயக்குநரின் பின்னால் ஒளிந்துகொண்டிருந்தேன். அரை மணி நேரத்திற்கு பிறகு, “போதும்...’’ என்று எழுந்தார். எனக்கு நடுக்கமே வந்துவிட்டது. இன்னும் 2 மணி நேர காட்சிகள் மிச்சம் இருந்தன. 

மிஷ்கினும், பி.சி.யும் பரஸ்பரம் சில காட்சிகள் குறித்து பேசிக்கொண்டிருந்தார்கள். நான் இருவரின் முகபாவங்க¬யும் பார்த்துக்கொண்டிருந்தேன். மிஷ்கின் என் மனதை படித்துவிட்டவர்போல, “இந்த புட்டேஜெல்லாம் இவன்தான் ஷூட் பண்ணான்...உங்க ரசிகன்’’ என்று சிரித்தார். எனக்கு அந்தச் சூழலில் என்ன ரியாக்ஷன் கொடுப்பது என்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றிருந்தேன்! பி.சி.ஸ்ரீராம் ஒரு நிமிடம் என்னையே உற்றுப் பார்த்தார். அவரை நேராக பார்க்கும் தைரியமற்றவனாக அங்கே நின்றுகொண்டு, இயக்குநரின் முகத்தை பார்த்தேன். சட்டென்று பி.சி.ஸ்ரீராம் ஒரு புன்முறுவலுடன் என்னை பார்த்து, “குட் வொர்க்‘‘ என்றார். இயக்குநர் என் தோளில் தட்டிக்கொடுத்தார். பிறகு அந்தப் படத்தை சூர்யா மூவிஸ் கைவிட்டதும்... அதன்பிறகு நடந்த மாற்றங்களும் கூட சுவராஸ்யம் நிறைந்தவைதான்!

சில வருடங்களுக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் செழியன் அண்ணனின் நட்பும், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதரோடு இணைந்து பணியாற்றும்போதுதான் அவர்கள் எனக்கு கற்பித்தார்கள்! பி.சி.ஸ்ரீராமின் அந்த வார்த்தை எவ்வளவு பெரிய பாராட்டு, வெகுமதி என்று! தங்களின் முன் தலைவணங்குகிறேன் குருவே!

Comments

Popular Posts