இது வக்காலத்து அல்ல!

ழுத்துலகில் நண்பர்களின் மனோபாவம் விசித்திரமாக இருக்கிறது. பெரும் ஆளுமைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜெயமோகன், சாருநிவேதிதா குறித்து நண்பர்கள் இடும் பதிவுகள் அவர்கள் மீதான படிமங்களை கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கிறது. ஜெ. எல்லாவற்றிக்கும் எதிர்வினை ஆற்றியதில்லை. குறிப்பிட்ட சில விஷயங்களுக்கு மட்டும் அவரிடம் இருந்து பதில் வரும். ஒரு எழுத்தாளன் சமூகத்தில் நடக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் தன்னுடைய பங்களிப்பை பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை முகநூலில் பதிவிடுவதால் மட்டும் தீர்வாகி விடாது. மேலும், எல்லா நேரங்களிலும் உண்மை உதவாது என்பதையும் அவன் புரிந்து வைத்திருக்கிறான். தன் கருத்து எவ்வகையான எதிர்விளைவுகளை கொண்டு வரும் என்பதும் அவன் அறியாதது அல்லவே! லட்சக்கணக்கில் ஒரு கூட்டம் உண்மையை உணர்ந்தபோதும் அதை ஏற்காமல் போராட்டத்தில் குதிக்கும்போது எந்த கருத்தும்., பதிவும், எதிர்வினையும் உதவாது என்பதை ஜெ. அறிந்திருந்துதான்! பப்ளிசிட்டிக்காக நொடி, , நிமிடம், மணி, நாள், வாரம், மாதம், வருடம் என கருத்து சொல்பவர்களுக்கு வேண்டுமானால் அது பொருந்தும்! ஆனாலும், அப்படி கருத்து சொன்னதால் ஏதேனும் சமூகத்தில் மாற்றம் நிகழ்ந்ததா?

உண்மையில் அரசியல்வாதிகள்... இந்தப் பிரச்சினையில் எழுத்தாளனின் கருத்து என்னவாக இருக்கிறது என்பதை மறந்தும் கூட தன் பி.ஏ.விடம் கேட்டதில்லை. நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தால் மட்டும்தான் அது சாத்தியம். இதை அடிமட்ட தொண்டனும் அறிவான். இதை உணர்ந்துதான் மவுனம் காத்தார் ஜெ. என்றே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்!

சாருவின் இணைய பக்கத்தை தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். உண்மையில் சமூகத்தின் மீது அக்கறையுள்ள யாவரும் அவரின் எழுத்தை தவிர்க்க முடியாது. உண்மையில் நவீன முற்போக்கு எழுத்தாளர் சாருதான்! சாருவின் கருத்தை வெளியிட்டிருக்கும் அந்த தினசரி நாளிதழின் அரசியல் தெரியாதவர்கள் வேண்டுமானால் சாருவை கலாய்க்கலாம் அல்லது தெரியாத மாதிரி நடிப்பவர்களும்! சாருவின் கருத்தை வெளியிட்ட தினசரியின் கலை, இலக்கியம் பிரிவுக்கு தலைமை தாங்குபவர்களும் தங்களை இலக்கியவாதியாக எண்ணிக்கொண்டு புகழ்பெற்ற பலரை வேண்டுமென்றே தவிர்ப்பதும், சிலரின் பலவீனங்களை பயன்படுத்திக்கொண்டு அவர்களின் மனம் நோகும்படி சித்தரிப்பதும் தொடர்ச்சியாகதான் நடந்து கொண்டிருக்கிறது. இது அந்த தினசரிக்கு மட்டுமா என்றால் இல்லை.... அடிக்கடி நான் குறிப்பிடும் நம்பர் ஒன் வார, மாத, வருட இதழ்களுக்கும் இது பொருந்தும்!

அடிப்படையான பிரச்சனை என்னவெனில், அந்த தினசரியில் இருப்பவர்களும் கூட ஒரு குழு மனப்பான்மையில்தான் இயங்குகின்றனர். அவர்களுடைய லிஸ்ட்டில் இல்லாத எவரும் தமிழ், மலையாள, கன்னட, வங்க, ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள்/படைப்பாளிகள் இல்லை. ஆகவே, நவீன தமிழ் இலக்கியத்தில் எவ்வளவு தீவிர வாசகர்களை கொண்டிருந்தாலும் அவர்களுக்கு அவர் ஒரு விலைபோகாத சல்லிகாசுதான் (வீட்டில் அந்த தினசரி நாளிதழை எடைக்குப் போடாமல் வைத்திருந்தால் உடனே எடுத்து கலை, இலக்கிய பக்கங்களை மட்டும் திருப்பவும்... எங்கேனும் மறந்தும்கூட முழுநேர எழுத்தாளர், முழு நேர கவிஞர், முழு நேர பதிப்பாளர், முழு நேர ஊடகவியலாளர். முழு நேர பேச்சாளர், முழுநேர பத்திகையாளர், முழுநேர அரசியல்வாதி மனுஷ்யபுத்திரன் தென்பட மாட்டார்... இது ஒரு சாம்பிள்தான்!) அப்படியானவர்கள் சாருவின் கருத்தைதான் பெற்றிருக்கிறார்கள். அதை தனித்து போடாததால் அவரின் புகழ் ஒன்றும் மங்கிவிடப் போவதில்லை. மாறாக, மேலும் வளரதான் செய்யும். 

சக எழுத்தாளனின் கருத்துக்கள் மீது வேண்டுமானால் வன்மம் இருக்கலாம். ஆனால், அவன் மீது அல்ல. அவன் கருத்துக்களுக்கு எதிர்வினை புரியலாம். மாறாக அவன் காப்பாற்றிக்கொண்டு வரும் படைப்பு மனதை கீறிப்பார்த்து சந்தோஷப்படுவதை எவ்வகையிலும் ஆதரிக்க முடியாது நண்பர்களே!

Comments

Popular Posts