உலகக் கடவுளின் உபதேசமும்.... திடீர் இலக்கியவாதியும்...இன்னபிற சமூகமும்!

தான் இலக்கியவாதி இல்லை. உண்மையில் மசாலா சரக்குதான் என்பதை ஒப்புக்கொள்ளும் உலகக் கடவுள் ஒன்று, “திடீர் இலக்கியவாதிகள்’’ பற்றி கருத்து சொல்லியிருப்பதை வாசித்தேன். அறம், நேர்மை, விசுவாசம் பற்றியெல்லாம் கடவுள் கவலைப்பட்டிருப்பதை நண்பர்களும் படித்திருப்பீர்கள். உண்மையில், “அ...நே..வி..’’க்கெல்லாம்  இந்திய, தமிழ் இலக்கிய சமூகத்தில் மதிப்பிருக்கிறதா என்ன? 2014 புத்தகக் கண்காட்சியில் கடவுளிடம் மனம் வெதும்பி பதிப்பாளர் கூறியதை அடைப்புகுறியிட்டு புலம்பியிருக்கிறது. உண்மையில் கடவுளின் கரிசனம் எழுத்தாளர்கள் மீது இல்லை என்பது நமக்கு தெரிகிறது. திடீரென்று நவீன இலக்கிய பதிப்பாளர் மீது கடவுளுக்கு அக்கறை வருவது எவ்வகையிலோ?

உண்மையில் ஒரு படைப்பாளி தன் முதல் படைப்பை பெரும் பொருட்செலவில் வெளியிடும் பதிப்பாளர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறான். அவன் தொடர்ச்சியாக படைப்பு வேலைகளில் கவனம் செலுத்துகிறான். அடுத்தடுத்த படைப்புகளும் தன் முதல் பதிப்பாளரே வெளியிட வேண்டும் என்று எண்ணுகிறான். ஆனால், முதல் படைப்பு ஏறக்குறைய விற்றுத் தீர்ந்தாலும் (ஒரு புத்தகம் கூட விற்கவில்லை என்றும் விமர்சனம் வரும்) அடுத்த படைப்பை பதிப்பிக்க முடியாது என்று நேரிடையான பதில் அளித்தால் கூட பரவாயில்லை. “உங்களால் புத்தகத்தை விற்றுத் தர முடிந்தால் . உங்கள் படைப்பை பிரசுரிக்கிறேன்....’’ என்று கேட்பார் இது எனக்கு என் முதல் பதிப்பாளரிடம் நடந்தது. தான் எழுதிய புத்தகம் தன் வாசகர்களை சென்றடைய ஒரு எழுத்தாளன் மெனக்கெட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இருந்ததேயில்லை. ஆனால், எழுத்தாளனுக்கு சமூகத்தில் என்ன மதிப்பிருக்கிறது என்பதை நீங்கள் படித்து தெரிந்து கொள்ள வேண்டியதேயில்லை. பார்த்தாலே புரிந்துவிடும்!

படைப்பாளிக்கு தெரியும். அரை லிட்டர் பால் விலை 5 ரூபாய் உயர்ந்தாலே ஒரு நாளில் தான் அருந்தும் இரண்டு டீயில் ஒன்றை நிறுத்திவிட துணியும் வாசகனுக்கு கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் படைப்பை வாங்க மனம்/பணம் இருக்காது. அதையும் மீறி கையில் புத்தகங்களை அள்ளிச் சென்றால் மனைவியின் வசையில் இருந்து கடவுளாலும் கூட காப்பாற்ற முடியாது என்பதை அறிந்தும் பெரும் துணிச்சலோடுதான் அவன் புத்தகங்களின் மீது நேசம் கொள்கிறான். பி.எம்.டபள்யூ, ஆடி காரில் செல்பவனுக்கு பீட்சா, கே.எப்.சி தெரிந்த அளவுக்கு புத்தகக் கடைகள் தெரிவதில்லை என்பதும் திடீர் இலக்கியவாதி அறியாமல் இல்லை. ஆனாலும் அவன் தொடர்ந்து எழுதுவது ஏன்? பெருமயக்கம்தான். தம் மக்கள் மீதான காதல்தான்! 

எனது மூன்றாவது படைப்பை பிரபல பதிப்பகம் வெளியிட்டது. இன்றுவரை அந்த பதிப்பாளர் பதிப்பித்தாலும், பதிப்பிக்க மறந்தாலும் அவர் மீதான அன்பும், ப்ரியமும் குறையவில்லை. அப்படியென்றால் முதல் பதிப்பாளர் மீது கோபமா இல்லவேயில்லை. முதல் காதலி, முதல் முத்தம் எப்படி மறக்க முடியாதோ....அப்படியாகவே ஒருபோதும் முதல் பிரசுரத்தையும் மறக்கவியலாது. படைப்பாளி இச்சமூகத்தில் சபிக்கப்பட்டவன். அவன் ‘‘அ..நே...வி’’ நம்புவதால்தான் இன்னும் நெஞ்சுரம் படைத்தவனாக, வறுமையிலும் சோடை போகாத செல்வமாக மிளர்கிறான். இரண்டு வருடத்துக்கு ஒருமுறை நிறுவனத்தை மாற்றிக்கொண்டு தன் சம்பளத்தை இரட்டிப்பாக்கிக் கொள்ளும் உலகக் கடவுளுக்கு வேண்டுமானால் ‘‘அ..நே...வி’’ தெரியாமல் இருக்கலாம். குறைந்தது பத்து வருடங்கள் இலக்கியத்தின் பக்கம் நின்றிருந்தால் மட்டும்தான் ஒருவன் படைப்பு மனதை அடைய முடியும் (சமீபத்திய உதாரணம் திரைப்படக் கல்லூரியில் இருந்து இலக்கியம் பக்கம் வந்திருக்கும் சக்திவேல்) உலகத்தின் மிகப் பெரிய போதை வஸ்து எழுத்துதான். எழுதி, எழுதித் தீராத இலக்கியம்தான். அதற்கு படைப்பின் மொழியையும், சமூகத்தையும், அதன் பிரச்சனைகளையும் அறிந்திருக்க வேண்டும். குறைந்தபட்ச மனிதநேயமாவது இருக்க வேண்டும். ஆமாம். உலகக் கடவுளால் ஒருநாளும் பாலாவாக முடியாது நண்பர்களே!

Comments

Popular Posts