திரை - 17

திரைப்படக் கல்லூரியில் வெவ்வேறு பிரிவுகளில் பயின்ற மாணவர்களில் பலர் அந்தக் குறிப்பிட்ட பிரிவைத் தாண்டியும் சினிமா சார்ந்த மற்றும் சாராத பிரிவுகளில் வேலைப் பார்த்திருக்கிறார்கள். குறிப்பாக, இயக்கம் பிரிவில் பயின்றவர்கள் சிறந்த ஆவணப்படங்களையும், குறும்படங்களையும் எடுத்ததோடு, சமூக வாழ்க்கைக்கு அவசியமான அறிவியல் சார்ந்த படங்களையும் எடுத்து, சமூக மாற்றத்திற்கு முன் நின்றிருக்கின்றனர். இன்னும் சிலரோ சிறந்த பேராசிரியர்களாகவும் பரிணமித்துள்ளனர். அந்தவகையில், எம். சிவக்குமார் குறிப்பிடத்தகுந்தவர். கோலிவுட்டில் சினிமாவுக்கான கோட்பாடுகளை முறையாகப் பயன்படுத்தும் போக்கு என்பது மிகக் குறைவாக ஆரம்ப காலங்களில் இருந்து வந்தது. அதற்கு காரணம் பெரும்பாலான தமிழ் சினிமா இயக்குநர்கள் திரைப்படக் கல்லூரியில் பயிலாமல், திரைப்படங்களில் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையிலும் மற்றும் இலக்கிய உலகிலிருந்தும் வந்ததுதான்! மேலும் தமிழ் இலக்கியத் துறையில் சினிமா சார்ந்த புத்தகங்கள் என்பது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு கூட எழுதப்படாமல் தேக்க நிலையிலேயே இருந்தது. கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் உள்ளிட்டவற்றில் ஏற்பட்ட வீச்சு, கலை சார்ந்த குறிப்பாக சினிமா சார்ந்த விஷயங்களில் பின்தங்கியே இருந்தது. அப்படியே ஒரு சில சினிமா சார்ந்த தொகுப்புகள் வெளிவந்திருந்தாலும் அவை யாவும் சினிமாவில் பிரபலங்களாகத் திகழ்ந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒட்டியே எழுதப்பட்டிருந்தன. சினிமாவை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் திரைப்படங்கள் பற்றிய விரிவான விமர்சனப் பார்வையோ அல்லது உலகத் திரைப்படங்கள் குறித்த அறிமுகங்களையோ எந்தப் புத்தகமும் பேசவில்லை. நல்லவேளையாக, தற்போது தமிழ் இலக்கியத்தில் பெரிய அளவில் தரமான சினிமா சார்ந்த பயனுள்ள புத்தகங்கள் பிரபல எழுத்தாளர்களால் எழுதப்பட்டுள்ளன. மேலும் எழுதப்பட்டும் வருகின்றன. அந்தவகையில், சினிமா குறித்த கோட்பாடுகளை உள்ளடக்கிய சிறந்த நூல்களில் ஒன்றான "பெல பேலாஸ்' எழுதிய "சினிமா கோட்பாடு' என்னும் நூலை தமிழுக்குப் மொழி பெயர்த்தவர் இயக்குநரும், எழுத்தாளருமான எம். சிவக்குமார். இந்நூல் தற்போது மறுபதிப்பு கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு எம். சிவக்குமாரிடம் அவருடைய திரைப்படக் கல்லூரி நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டோம். ""மும்பையிலிருந்து சென்னை திரும்பியதும் சினிமா குறித்த என்னுடைய சிந்தனைகளில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டிருந்தது. 1981ம் வருடம் சென்னை - தரமணி திரைப்படக் கல்லூரியில் இயக்கம் பிரிவில் சேருவதற்கு விண்ணப்பித்தேன். பிரபல வழக்கறிஞர் கே.எஸ். சீனிவாசன் அப்போது திரைப்படக் கல்லூரியில் சிறப்பு ஆசிரியராகப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அவர்தான் என்னை கல்லூரியில் நேர்காணல் செய்தார். அதில் நான் தேர்ச்சி அடையவே இயக்கம் பிரிவில் எனக்கு அனுமதி கிடைத்தது. அப்போது ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனன், இயக்குநர் யூகிசேது போன்றோரும் என்னுடன் படித்தார்கள். நாங்கள் ஒரு குழுவாக கல்லூரியில் இருந்தோம், ஒருவருக்கொருவர் சினிமா குறித்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்வோம். அப்போது எனக்கு சீனியர் மாணவராக இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் படித்துக் கொண்டிருந்தார். திரைப்படக் கல்லூரியில் இயக்கம் பிரிவை நான் தேர்ந்தெடுத்தது தற்செயலாக நிகழ்ந்தது அல்ல! சினிமாவின் மீதிருந்த தாக்கத்தால் தீர்மானமாக எடுக்கப்பட்டதுதான். அப்போது, எங்கள் கல்லூரியில் இயக்குநர் ஹரிஹரன் திரைப்பட இயக்கம் சம்பந்தமான வகுப்புகள் எடுத்துக் கொண்டிருந்தார். திரைப்படக் கல்லூரியைச் சேர்ந்த பல மாணவர்களுடன் ஆசிரியர் என்பதைத் தாண்டியும் அவர் நல்ல நண்பராக திகழ்ந்து வந்தார். அவருடைய சினிமா சார்ந்த பேச்சைக் கேட்பதற்கு என்றே ஒரு குழு அவரைச் சுற்றி கொண்டிருக்கும். அந்தக் குழுவில் நானும், ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனனும் இடம் பெற்றிருந்தோம். இன்று சினிமாவில் அடையாளம் காணப்பட்டிருக்கும் பல திரைத்துறை பிரபலங்கள் அவரிடம் பாடம் பயின்றவர்களாகத்தான் இருப்பார்கள் என்றால் அது மிகையில்லை! அவ்வாறு கல்லூரியில் அவர் மாணவர்களுக்கு திரைத்துறைப் பயிற்சியை அளித்துக் கொண்டிருந்தபோது அவருக்குத் திரைப்படம் இயக்குவதற்கான வாய்ப்பு வந்தது. எங்களுடைய குழு எப்போதும் அவருடன்தான் இருக்கும் என்பதால் அவருடைய "ஏழாவது மனிதன்' திரைப்படத்தில் பணிபுரிவதற்கான வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. கல்லூரியில் படித்துக்கொண்டே மறுபுறம் திரைப்படத்திலும் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுத்தது. திரைப்படக் கல்லூரியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களில் நடக்கும் திரைப்பட விழாக்களுக்கு கல்லூரி அனுப்பி வைப்பது வழக்கம். அந்தவகையில், நான் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது "கொல்கத்தா திரைப்பட விழா'வுக்கு சக கல்லூரி மாணவர்களோடு சென்றேன். ஏறக்குறைய, பதினேழு நாட்களுக்கு மேலாக நடந்த அந்தத் திரைப்பட விழாவில் சுமார் 93 படங்களுக்கும் மேலாக கண்டு களித்தேன். அங்கே படங்களைப் பார்க்கும்போது உடனுக்குடன் அந்தப் படம் சம்பந்தமான குறிப்புகளையும் எடுத்துக்கொள்வேன். திரைப்பட விழா முடிந்து எல்லோரும் சென்னை திரும்பினோம். திரைப்படக் கல்லூரியில் "கொல்கத்தா திரைப்பட விழா' குறித்த கலந்தாய்வின்போது அங்கே திரையிடப்பட்ட படங்களை அதிகம் பார்த்த மாணவனாக நான்தான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, மறுபடியும் "ஏழாவது மனிதன்' படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அப்போது என்னுடன் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனனும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். படப்பிடிப்பு இடைவேளையின்போது இயக்குநர் ஹரிஹரன் ஸôர், உலக சினிமா குறித்தும், அப்போது புதிதாக வந்திருக்கும் தொழில்நுட்பம் குறித்தும் விவாதித்துக் கொண்டேயிருப்பார். இடையே உலக இலக்கியங்கள் குறித்த விவாதங்களும் நடக்கும். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து அதன் "போஸ்ட் - புரொடக்ஷன்' வேலைகளிலும் பங்கெடுத்தேன். ""திரைப்படக் கல்லூரியில் ஏ.எஸ்.ஏ. சாமி ஸôரின் புலமையைக் கண்டு மாணவர்களான நாங்கள் எல்லோருமே வியந்திருக்கிறோம். அப்போது நடிப்பு பிரிவில் நாசர் படித்துக்கொண்டிருந்தார். அதே பிரிவில் மீனாட்சி சுந்தரம் என்கிற என்னுடைய நண்பரும் படித்துக் கொண்டிருந்தார். கல்லூரியில் படிக்கும்போது "கன்டினியூட்டி பயிற்சி'யை நானும் மீனாட்சி சுந்தரமும் இணைந்துதான் எடுத்தோம். கல்லூரியில் படிக்கும்போது மீனாட்சி சுந்தரம் பெரிய நடிகனாக வருவான் என்று நினைத்தேன். ஆனால், நாசர்தான் பெரிய நடிகராக அடையாளம் காணப்பட்டார்! அதுபோன்று, கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது பல திரைப்பட இயக்குநர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்தவகையில், இயக்குநர் அரவிந்தன் அவர்களின் மூலமாக கிளாசிக் வரிசையில் இடம்பெறும் சிறந்த உலகத் திரைப்படங்களை கல்லூரியில் மாணவர்களுக்குத் திரையிட்டு காட்டினேன். இதன் தொடர்ச்சியாக கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது "சென்னை ஃபிலிம் சொûஸட்டி'யையும் ஆரம்பித்தேன். அதன் நிறுவனராகவும், செயலாளராகவும் இருந்தேன். நான் விரும்பாத அடைப்புக் குறிகளுக்குள் இப்போதும் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் "ஃபிலிம் சொûஸட்டி சிவக்குமார்' என்றுதான் என்னை ஞாபகம் வைத்திருக்கிறார்கள்...'' என்றார்.

Comments