சினிமா - 23

என் உயிர் தோழன்!

து மெல்லிய பனிபொழிப்பு நிறைந்த காலை நேரம். சைதாப்பேட்டையின் ரயில் நிலையத்தில் மின்சார வண்டிக்காக காத்திருந்தோம். வண்டி வருவதற்கு சில மணித்துளிகள் இருந்தது. அது வார விடுமுறை என்பதால் பயணிகளின் கூட்டமின்றி ப்ளாட்பாரம் வெறிச்சோடியிருந்தது. யாருமற்ற தனித்திருந்த ஒரு நடைமேடையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கையில் வைத்திருந்த எழுத்தாளர் ஷாஜியின் "இசையின் தனிமை' நூலின் சில பக்கங்களை வாசித்துக்கொண்டிருந்தோம். தன் கணவனின் கைகளை இறுகப் பற்றியபடி மணமான ஒரு புதுப்பெண் வந்து எனது அருகே இருந்த மற்றொரு நடைமேடையின் அருகில் அமர்ந்துகொண்டாள். இனம்புரியாத வெட்கம் அந்தப் பெண்ணுடைய கணவனின் முகத்தில் குடி கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டு இளம்பெண்களும், மீன் கூடையைச் சுமந்து வந்த நான்கு நடுத்தர வயது பெண்களும் எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்தனர். ஒரு மின்சார வண்டி மிகுந்த கூட்டத்தோடு வந்து நின்றது. அதில் ஏற மனமின்றி நின்று கொண்டிருந்தோம். மீன்காரப் பெண்களும், அந்த இரு இளம் பெண்களும் கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு ஏறிவிட்டனர். அந்த தம்பதி ரயில் கூட்டத்தை ரசித்தபடியே அமர்ந்திருந்தது. வண்டி சென்று விட்டது. மீண்டும் ப்ளாட்பாரம் எங்களைத் தவிர தனித்து விடப்பட்டு கிடந்தது. சில நிமிடங்களில் அங்கே ஒருவர் கையை ஒருவர் பற்றியபடி மாற்றுத் திறனாளிகளான பார்வையற்றோர் குழு ஒன்று எங்கள் அருகே நின்று கொண்டிருந்தனர். இசை எம் காதில் எஃப்.எம். மூலமாக ஒலித்துக் கொண்டிருந்தது. "கிளாசிக் சண்டே' என்பதால் மெலடிப் பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து மனதின் லயத்தை தட்டிக்கொண்டிருந்தன. அந்தக் குழு வந்தபோது ""காற்றின் மொழி....'' எனத் தொடங்கும் பாடலின் இரண்டாவது சரணத்தை பலராம் பாடிக் கொண்டிருந்தார். பலராம் குறித்து சொன்ன இசைத்துறை நண்பனின் வார்த்தைகள் மனதில் வந்து போய்க் கொண்டிருந்தன. மனம் இசையின் முன் கைக்கூப்பி கரைந்து நின்றது. புத்தக தாட்களின் முனை வீசிய மெல்லிய காற்று பட்டு படபடத்தது. அதை ரசித்தபடியே புத்தகத்தை மூடி, பாடலின் இறுதி வரிகளை கண்கள் மூடி கேட்டுக் கொண்டிருந்தோம். இருண்ட உலகில் இசை எல்லாமுமாக வியாப்பித்திருந்தது. மனம் துயரம் அப்பிய ஒரு சந்தோஷத்தில் திளைக்க, வீசிய மெல்லிய பனிக்காற்றும், பாடலின் வரிகளும் உடலையும், மனதையும் என்னவோ செய்தன. விழி திறந்தபோது பார்வையற்றோர் குழு ஒருவரையொருவர் கிள்ளிக்கொண்டும், தட்டிக்கொண்டும், கேலிப்பேசியபடியும் நின்றிருந்தனர். அந்தக் குழுவின் செய்கைகள் அந்த புதுமணத் தம்பதியையும் கவர்ந்திருந்தது. அப்போதுதான் அதை கவனித்தேன். அந்தக் குழுவிலிருந்து இருவர் மட்டும் சிறிய வகை ரேடியோ பெட்டியை தங்களது காதருகே மிக நெருக்கமாக வைத்துக் கொண்டு கண்களை மூடி நின்று கொண்டிருந்தனர். சிறியதாக ஒரு புன்முறுவல் பூத்து நாம் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தோம். வாழ்க்கை எப்போதும் தன்னை அழகாகத்தான் வைத்துக் கொண்டிருக்கிறது. இளையராஜாவும், இசையும் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்த்தால் பயமாகத்தான் இருக்கிறது நண்பர்களே!
கதை: நகரத்தின் குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் இளைஞன் ஒருவனின் தம்பி மாற்றுத் திறனாளியாக இருக்கிறான். வீட்டிற்குள்ளே அடைந்து கிடைக்கும் அவனை தனிமை மிகவும் வதைத்து எடுக்கிறது. அண்ணனுடன் முரண்பட்டு இருட்டறைக்குள்ளே அடைந்து கிடக்கிறான். இந்தச் சூழலில் வெளியூர் பயணம் செய்யும் அந்த இளைஞன் மாற்றுத் திறனாளியான கண்பார்வையற்ற தன் தம்பியான குணாவைப் பார்த்துக் கொள்ள நண்பன் குவாட்டர் கோவிந்த (சிவா) னிடம் சொல்லிவிட்டுச் செல்கிறான். வாழ்க்கையை சகல விஷயங்களோடும் கொண்டாடும் மனப்போக்கை உடைய குவாட்டர் கோவிந்தனுக்கு கண்பார்வையற்ற குணாவைக் காணச் செல்லும் போது அவனின் செயல்கள் அச்சத்தை மூட்டுகின்றன. அச்சத்தை போக்கிக்கொள்ள அதே வீட்டில் உட்கார்ந்து மது அருந்துகிறான். அவன் மதுப் பாட்டிலை காலி செய்யும்போது அறை இருளில் மிதக்கிறது. விநோதமான குரல்கள் இருளில் கேட்கத் துவங்க, அவன் மிரட்சியுற்று திகைக்கிறான். பிறகு, அறைக்குள் வெளிச்சம் வரத் துவங்கியவுடன் தைரியத்தை வரவழைத்துக் கொள்ளும் அவனுக்கு விநோதமான சப்தம் கேட்டபடியே இருக்கிறது. அந்த சப்தம் பார்வையற்றவனின் அறையிலிருந்து வருகிறது என்பதை உணருபவன் கதவை தள்ளிக்கொண்டு உள்ளே செல்ல, அங்கே குணா தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்று கொண்டிருக்கிறான். செய்வது அறியாது திகைக்கும் குவாட்டர் கோவிந்தன் அவனை காப்பாற்றுகிறான். அப்போது அவன் சாப்பிட வேண்டிய மாத்திரை பெட்டி அவனது பாக்கெட்டிலிருந்து தவறி கட்டிலுக்கு அடியில் சென்று மறைந்து போகிறது. இதை கோவிந்தன் கவனிக்கத் தவறுகிறான் (அவனுக்கு புற்று நோய் இருப்பது தொலைபேசி உரையாடல் மூலம் உணர்த்தப்படுகிறது). குணாவின் நிலையை கேட்டறியும் கோவிந்தன் நம்பிக்கையான வார்த்தைகளை அவனுக்கு சொல்லிவிட்டு கிளம்பி செல்கிறான். மறுநாள் குணாவின் வீட்டுக்கு வரும் கோவிந்தனுக்கு குணாவின் மாற்றம் வியப்பையும், சந்தோஷத்தையும் அளிக்கிறது. குணா முற்றிலும் புதிய மனிதனாக, நம்பிக்கையுடன் அமர்ந்திருக்கிறான். அருகில் இருக்கும் ஒரு இடத்துக்குச் செல்ல வேண்டும் என்று கூறி ஒரு கடிதத்தை கோவிந்தனிடம் கொடுக்கும் குணாவை வியப்பு மேலிட பார்க்கும் கோவிந்தன், அந்த கடிதத்தில் இருக்கும் மொழியை அவனால் படிக்க முடியவில்லை. இருந்தாலும் நம்பிக்கையோடு அவனை அழைத்துக்கொண்டு செல்கிறான். வழியில் மற்றொரு மாற்றுத் திறனாளியைக் காணும் கோவிந்தன் அந்தக் கடிதத்தில் இருக்கும் முகவரியைக் குறித்து கேட்கிறான். அவன் அந்தப் பேப்பரில் எழுதியிருக்கும் முகவரியைப் படித்து கூறுகிறான். கோவிந்தன், கண்பார்வையற்ற குணாவை அழைத்துக்கொண்டு அந்த முகவரியைக் தேடிக் கண்டு பிடிக்கிறான். அந்த முகவரியில் கண்பார்வையற்ற இளம் பெண்ணொருத்தி இருக்கிறாள். குணா தன்னை தேடி வந்திருப்பதை அறியும் அவள் சந்தோஷத்தில் பூத்து நிற்கிறாள். பிறகு, அந்தப் பெண்ணும், குணாவும் தனிமையில் பேசிக்கொள்கின்றனர். அவர்கள் பேச்சினிடையே அவர்கள் இருவரும் பள்ளித் தோழர்கள், அந்தப் பெண்ணிற்கு வரைவதில் ஆர்வம் உள்ளது, குணாவிற்கு இசையில் நாட்டம் உண்டு என்பதெல்லாம் அந்தக் காட்சியின் மூலம் நமக்கு தெரிய வருகிறது. அவள் நம்பிக்கையான வார்த்தைகளை கூறி அவனை அடுத்த முறை சந்திக்கும்போது பாடகனாகத்தான் சந்திக்க வேண்டும் என்று கூறுகிறாள். குணாவும் அதற்கு சம்மதித்து அவளிடமிருந்து விடைப்பெற்றுக்கொண்டு கோவிந்தனோடு கிளம்புகிறான். குவாட்டர் கோவிந்தன் அவனை கடற்கரைக்கு அழைத்து செல்கிறான். ""வாழ்க்கை மீது உனக்கு வெறுப்பு இருந்தால் இதோ உனக்கு முன்னால் கடல் இருக்கிறது. ஓடிப்போய் உன்னை மாய்த்துக்கொள். வாழ வேண்டும் என்றால் அதன் முன்னால் போய் உட்கார்ந்து கொள்...'' என்று கூற கண்பார்வையற்ற குணா ஓடத் துவங்குகிறான். அவனது கால்கள் கடல் அலையின் முன்பாக மண்டியிட்டு உட்காருகின்றன. அவனுக்கு வாழ வேண்டும் என்கிற வேட்கை அதிகமாகிறது. குணா தன் மகிழ்ச்சியை அவனிடம் பகிர்ந்து கொள்ளும்போது சந்தோஷமும், வியப்பும் மேலிட பரிதாபமாக பார்க்கிறான் கோவிந்தன். அவனுக்கு இருமல் வருகிறது. பின்பு அது அதிகமாக அவன் தன் ஹியர் ஃபோனை கழற்றி வைக்கிறான் (அவனும் ஒரு காது கேளாத மாற்றுத் திறனாளி என்பது முன் காட்சிகளிலேயே உணர்த்தப்படுகிறது). குணா மிகுந்த சந்தோஷத்துடன் தன் வாழ்வு குறித்து எதையோ கூறியபடியே இருக்கிறான். ஆனால், குவாட்டர் கோவிந்தனுக்கு எதுவுமே கேட்பதில்லை. அவனது உலகத்தில் சொற்களற்ற உலகமே நீடிக்கிறது. பெருத்த இருமலுடன் ரத்த வாந்தியெடுத்து கடற்கரை மணலில் மயங்கி விழுகிறான் கோவிந்தன். குணாவின் வார்த்தைகள் யாருமற்ற கடற்கரையில் உலவிய வண்ணம் இருக்கின்றன. இங்கே இடைச் செருகல் காட்சி ஒன்று வருகிறது. அது குணா, கோவிந்தனுக்கு எழுதிய கடிதம். அதில் வாழ்வின் மீதான நம்பிக்கை வார்த்தைகளால் தொடுக்கப்பட்டிருக்கிறது. துயரம் போர்த்திய மெüனத்துடன் அந்தக் காட்சி நிறைவு பெறுவதோடு படம் முடிவடைகிறது.
விமர்சனம்: பார்வையற்ற ஒருவனின் வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கொண்டு வரும் நண்பனின் கதைதான் "என் உயிர்த் தோழன்'. அதை சற்று நவீன திரை மொழியில் சொல்லி கவனம் பெற்றிருக்கிறார் இயக்குநரான சூர்யா பாலகுமாரன். குணாவை அறிமுகப்படுத்தும் காட்சியிலும், குவாட்டர் கோவிந்தனின் பாத்திரப் படைப்பிலும் நம்முடைய கவனத்தை தொடுகிறார். சில நிமிடக் காட்சியே வந்து போனாலும் அந்த பார்வையற்ற பெண்ணின் இயல்பான நடிப்பு மெச்சும்படி உள்ளது. படத்தின் ஒளிப்பதிவும், படத்தொகுப்பும், பின்னணி இசையும் பாராட்டும் படியாக அமைக்கப்பட்டுள்ளது. டி.சி.எஸ். நிறுவனத்தில் கணிப்பொறி வல்லுநராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சூர்யா பாலகுமாரன், சினிமாவின் மீதான காதலால் தன்னுடைய பணியை தூக்கியெறிந்துவிட்டு வந்து முதல் முயற்சியாக "என் உயிர்த் தோழன்' குறும்படத்தை இயக்கியிருக்கிறார். பிரபல எழுத்தாளர் பாலகுமாரனின் புதல்வரான இவர் ""தந்தையின் பெயரை வைத்து தான் சினிமாவில் வெற்றிபெற விரும்பவில்லை...'' என்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து சூர்யா பாலகுமாரன் "காதலிக்க நேரமில்லை' என்னும் படத்தையும் இயக்கி இருக்கிறார். வரவேற்போம்!

Comments

Popular Posts