சினிமா - 22

முகவரிகள்

மிழ் இலக்கியத் துறையில் நகுலன் என்கிற எழுத்தாளரின் ஆளுமை பலராலும் சிலாகிக்கப்படுகிற ஒன்று. தனது கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல்களால், நவீன இலக்கியத் தளத்தில் அதிர்வை ஏற்படுத்திய நகுலனின் முதுமை கால புகைப்படங்களை முதன் முறையாக நாம் காண நேர்ந்த போது மனதில் இனம் புரியாத பயமே மனதை கவ்விக்கொண்டது. ஆவணப்பட இயக்குநர் அருண்மொழி ஒரு நேர்காணலில் நகுலனைப் பற்றிய தனது நினைவலைகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டபோது அவரைப் பற்றிய எமது பிம்பத்தில் மாற்றம் வந்தது. வாழ்க்கையை நுட்பமாக நெருங்கிச் சென்று தரிசித்த ஒரு மகா பெரிய எழுத்தாளனின் கடைசி நாட்கள் மிகவும் அற்புதமானவை என்பதை அருண்மொழியின் சொற்களின் வழியாகத்தான் அறிந்து கொண்டேன். மனித வாழ்க்கையில் முதுமையின் போது ஏற்படுகிற தனிமையும், புறக்கணிப்பும்தான் எதன்கொண்டும் ஈடு செய்ய முடியாதவையாக எஞ்சி நிற்கின்றன. பள்ளிப் பருவத்தில் எங்கள் வீட்டுத் திண்ணையில் தங்கியிருந்த வயது முதிர்ந்த ஒரு தாத்தாவின் பிம்பமே நகுலனைப் பார்க்கிறபோதெல்லாம் மனதில் தோன்றுகிறது. அது என் அம்மா வழி தந்தையின் வீடு. அவ்வீட்டில்தான் அந்தப் பெரியவர் தங்கியிருந்தார். அவரது மகன்கள் எங்கள் வீட்டின் அருகிலேயேதான் தங்கியிருந்தனர். ஆனால், எதன் பொருட்டு அவர் எங்கள் வீட்டுத் திண்ணையிலேயே வாழ்ந்து கழிக்க நேர்ந்தது என்பதை அப்போது அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள ஒரு போதும் ஆவல் எழுந்ததில்லை. எதன் மேலும் கவனம் குவியாத பருவமல்லவா அது! ஆனால், வாழ்வின் போக்கில் நிகழும் அனுபவங்களின் வழியாக இன்று அந்த முதியவரின் தனிமையை நினைத்துப் பார்க்கும்போது அச்சமே மேலும் மேலும் துளிர்விடுகிறது. அடர் கறுத்த நிறமுடைய அவரிடம் தெருப்பிள்ளைகளான நாங்கள் எல்லோரும் மிகுந்த ஸ்நேகம் வைத்திருந்தோம். அந்த ஸ்நேகத்திற்குள் ஒரு சுயநலமும் எங்களிடமிருந்தது. காரணம், எந்தப் பண்டிகையின்போதும் அவர் எங்களுக்கு கொடுப்பதற்கு என்று ஏதேனும் தின்பண்டங்களோ, பரிசுப் பொருட்களோ வைத்திருப்பார் என்பதால்தான்! பண்டிகை நாட்களில் மட்டும் நாங்கள் அவரைச் சுற்றியே ஒரு பட்டாம்பூச்சியைப் போல வட்டமடித்துக் கொண்டிருப்போம். அன்று மட்டும் அவருடைய உடல் வெள்ளை நிற ஆடைகளால் முழுவதும் போர்த்தியிருக்கும். மீதி நாட்கள் யாவும் அவர் வெறும் கோவணத்துடனும், கையில் ஒரு நீண்ட தடியுடனும்தான் எதையோ தேடியவாறு தெருக்களில் அலைந்து கொண்டிருப்பார். செருப்பனியாத அவருடைய கால்கள் எங்கள் கிராமத்தின் எல்லா காடு, மேடுகளையும் தரிசித்திருக்கின்றன. அந்தப் பெரியவரிடம் வேறொரு விசேஷமும் இருந்தது. அது, எங்களை பட்டப்பெயர் வைத்து அழைப்பது. அவருக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்றாகவும் அது இருந்தது. ஆனால், அவர் எங்களுக்கு வைக்கும் பட்டப்பெயர்கள் நாள்தோறும் மாறிக்கொண்டேயிருந்தன. கிராமத்தில் நிகழும் எந்தொவொரு பிரச்சினையையும் அவருடைய அனுபவத்திலிருந்து எடுத்துச் சொல்லி, முடித்து வைக்கும் திறமையை அவர் பெற்றிருந்தார். அவருக்கு அதே ஊரில் நெருங்கிய நண்பர்களும் இருந்தார்கள். ஆனால், அவர்களோடு பேசியதை ஒருபோதும் நாங்கள் பார்த்ததில்லை. ஒருமுறை அடர்ந்து பெய்த ஒரு மழை நாளில் எங்கள் வீட்டு கொடிக்கம்பத்தில் சிக்கி, அந்தப் பெரியவர் மின்சார தாக்குதலுக்கு உள்ளானார். அதன் பிறகு அவர் தெருக்களில் நடமாடுவது குறைந்து போனது. மற்றுமொரு மழை நாளின்போது அவர் திண்ணையில் காணாதது கண்டு தெருவிலுள்ள எல்லோரும் அவரைப் பல இடங்களில் தேடத் தொடங்கினார்கள். சுமார் இரண்டு நாட்களுக்கு மேலாக தேடியும் அவர் எங்கே போனார்? என்ன ஆனார்? என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு, வீட்டின் அருகிலிருந்த ஒரு சிறிய குட்டையில் அவருடைய உடல் மிதந்து கொண்டிருந்ததை, முதலில் என்னுடைய தோழிதான் கண்டுபிடித்தாள். அவரை அந்தக் குட்டையிலிருந்து தூக்குவதற்கு முன்பாக அவருடைய கூன் விழுந்த முதுப்பகுதிதான் ஒரு வட்ட வடிவ பானையைப் போல் வெளியே தெரிந்து கொண்டிருந்தது. அந்தப் பெரியவரின் உடல் கிராமத்தினரால் வெளியே எடுக்கப்பட்டது. சுமார் மூன்று நாட்களாக அந்த உடல் அந்த குட்டையில் மூழ்கி, விரைத்துப் போயிருந்தது. இன்றளவும் கிராமம் பற்றிய நினைவுகள் எழுகிறபோதெல்லம் அந்த சம்பவம் மனதில் மையம் கொண்டபடியேதான் இருக்கிறது. அகல மறுக்கும் நகுலனின் முதுமைப் புகைப்படத்தைப் போல!
கதை: இருள் திரையின் பின்னணியில் எஃப்.எம்.மில் யாரோ ஒரு ரேடியோ ஜாக்கி மூச்சு விடாமல் பேசிக்கொண்டிருக்கிறான். அவனுடைய ஓசையைத் தொடர்ந்து திரையில் பிம்பங்கள் தெரியத் துவங்குகின்றன. அது ஒரு முதியோர் இல்லம். ஆண்களும் பெண்களும் நிறைந்த அந்த இல்லத்தில் அவர்களுடைய செவிகளில் அந்த எஃப்.எம்.மின் வார்த்தைகள் மட்டுமே ஒலித்துக்கொண்டிருக்கின்றன. காட்சி மாறுகிறது. அது ஒரு மெல்லிய பனிப்பொழிவோடு கூடிய காலைப்பொழுது. ஒரு கோவிலின் அருகேயுள்ள பெரிய குளத்தை நோக்கி, ஒரு வயதானப் பெரியவர் கையில் மஞ்சள் பையுடன் சென்று கொண்டிருக்கிறார். பிறகு, அந்த குளத்தின் படியில் அமர்ந்து பெரியவர் அந்த குளத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருக்க... குளம் சலனமற்று அமைதியாகக் கிடக்கிறது. குளத்தினோரம் இருக்கும் நீர்ச்செடிகளின் பிம்பம் தண்ணீரின் மீது பட்டு மெல்லிய அலையில் தவழ்ந்து கொண்டேயிருக்கிறது. பெரியவர் அதை கவனித்தபடி சிறிது நேரம் இருந்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகருகிறார். அங்கே மற்றொரு வயது முதிர்ந்தவரும் அமர்ந்திருக்கிறார். கையில் பையுடன் செல்லும் முதியவர், சாலைகளை கடந்து முதியோர் இல்லத்துக்கு வருகிறார். அந்த அறையில் எல்லோரும் தனித்தனியே வீற்றிருக்கின்றனர். யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. முதியவர் அறையை நோட்டமிடுகிறார். அடுக்கடுக்காக அமைந்த ஒரு படுக்கையில் யாரோ ஒருவர் காலாட்டியபடி இருக்கிறார். அவருக்கு கீழே பெரிய பூனை ஒன்றும் அதனுடைய குட்டியும் இருக்கிறது. ஒரு பாட்டி மிகுந்த ஆர்வத்துடன் யாருக்கோ கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறாள். பெரியவரின் பார்வை தன் கையில் இருக்கும் மஞ்சள் பையின் மீது விழுகிறது. அதில் அடுக்கடுக்காக கடிதங்கள் மடிக்கப்பட்டு இருக்கின்றன. அவர் மீண்டும் அந்தப் பூனையைப் பார்க்கிறார். அங்கே பெரிய பூனையினுடைய குட்டி தன் தாயின் வாலைப் பிடித்துக் கவ்வியும், இழுத்தும் விளையாடிக் கொண்டிருக்க... பெரியவரின் உதட்டில் ஒரு சிறிய புன்னகை மட்டும் எட்டிப் பார்க்கிறது. காட்சி மாறுகிறது. அந்தப் பெரியவர் அந்த இல்லத்தின் வெளிப்புற புற்கள் அடர்ந்த பகுதியொன்றில் தனியே அமர்ந்து மூங்கில் ஒன்றை பல்வேறு துண்டுகளாக வெட்டிக் கொண்டிருக்கிறார். பின், அது ஒரு விளையாட்டுப் பொருளாக மாற்றம் அடைகிறது. அவருடைய இந்த செய்கையை ஆவலுடன் அவருடன் தங்கியிருக்கும் மற்ற முதியவர்களும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து அந்த மூங்கில் குச்சியை கொண்டு விளையாட்டில் ஈடுபடுகிறார் பெரியவர். விளையாட்டில் ஈடுபட்ட முதியவர்களின் முகத்தில் சந்தோஷம் எட்டிப் பார்த்து ஆனந்தம் கொள்கிறது. அதன்பிறகு பெரியவர் தன் படுக்கையின் ஜன்னலருகே வந்து நின்று, வெளியே பார்க்கிறார். அது ஒரு விளையாட்டுத் திடல். அங்கே நிறைய சிறுவர்கள் உற்சாகமாக விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு சிறுவன் மட்டும் தனியே அமர்ந்து தன்னுடைய பள்ளிப் பாடத்தை எழுதிக் கொண்டிருக்கிறான். அவனிடம் செல்லும் பெரியவர் கடிதம் ஒன்றை கொடுத்து எழுதச் சொல்லுகிறார். பின்னணியில் மனதை மீட்டும் இசையில் காட்சி வடிவத்தில் இது சொல்லப்படுகிறது. மிகவும் கவனமாக அவர் தன் வார்த்தைகளை அந்த சிறுவனிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார். சிறுவனும் கவனமாக கடிதத்தில் எழுதத் தொடங்குகிறான். கடிதம் எழுதி, முடிக்கப்பட்டு அவரிடம் கொடுக்கப்படுகிறது. கடிதத்தை வாங்கிக்கொண்டு அதற்குப் பதிலாக அவர் தனது விளையாட்டுப் பொருளான மூங்கில் குச்சிகளை அச்சிறுவனுக்குப் பரிசளிக்கிறார். பின்னர் தன் இல்லத்தை நோக்கி திரும்புகிறார். வாயிலில் ஒரு வயதான பாட்டி யாருக்கோ கர்ம சிரத்தையுடன் கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கிறாள். அதைப் பார்த்தபடியே தன்னுடைய இருப்பிடத்துக்கு வரும் அவர், படுக்கையில் அமர்ந்து கவனமாக பையிலிருந்து அடுக்கடுக்காக இருக்கும் முகவரி இடப்படாத தபால்களை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து எண்ணுகிறார். யாருக்கோ அனுப்ப வேண்டிய அந்த கடிதங்கள் யாவும் கனத்த மெüனத்தை தாங்கிக்கொண்டு அவருடைய பையில் காத்துக் கிடக்கின்றன. மறுநாள், வழக்கம்போல் அந்தப் பெரியவர் அந்த கோவில் குளத்தின் முன் இன்னதென்று அறியமுடியாத இறுக்கத்தோடு வானத்தை அன்னார்ந்து பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். நீர்க்காகங்கள் வானத்தில் சப்தமிட்டபடி அவரைத் தாண்டி கூட்டமாகப் பறந்து எங்கேயோ போய்க்கொண்டிருக்கின்றன. அவர் நிதானமாக எழுந்து தனது இல்லம் நோக்கி புறப்படுகிறார். முதியோர் இல்லத்தில் இப்போதும்கூட எஃப்.எம்.மின் ரேடியோ ஜாக்கிகளின் விதவிதமான உளறல்கள் அறையை நிரப்பிக்கொண்டிருக்கின்றன. ஜன்னலில் உட்புறம் ஒரு கைத்தடி மாட்டப்பட்டு இருக்க... அதற்கு வெளியே ஒரு பூங்கொத்து காத்து கிடப்பதோடு படம் நிறைவடைகிறது.
விமர்சனம்: தமிழில் பிரபலமாக அறியப்பட்ட எழுத்தாளர் ஜி.நாகராஜனின் "நாளை மற்றுமொரு நாளே' நாவலை வாசித்து முடித்தபோது கிடைத்த மனத் துயரத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு இக்குறும்படத்தை காண நேர்ந்தபோதும் அடைய நேரிட்டது. மனித வாழ்க்கையில் முதுமையின் போது ஏற்படும் தனிமையின் உக்கிரத்தை சொல்லும் குறும்படம்தான் "முகவரிகள்'. பனிரெண்டு நிமிடங்களுக்குள் வாழ்வின் உன்னதத்தையும், புறக்கணிப்பின் வலியையும் சொல்லி செல்கிறார் இயக்குநர் ஹரிகோபி. உன்னதமான படைப்புகள் மிக இயல்பாகத்தான் எடுக்கப்படுகின்றன. அதற்கு "முகவரிகள்' குறும்படத்தையும் உதாரணமாகச் சொல்லலாம். படத்தில் இடம்பெற்றிருக்கும் பாத்திரங்கள் யாவும் நடிக்காமல், அந்தக் கதையில் வாழ்ந்திருக்கின்றன. இதுவே இப்படத்தின் பலம். யதார்த்தத்தின் வீச்சு குறும்படத்தில் ஆங்காங்கே பளிச்சென நம் மனதை தாக்குகிறது. உதாரணமாக இரண்டு இடங்களை குறிப்பிட்டு சொல்லலாம். ஒன்று, தாய் பூனைக்கும், அதன் குட்டிக்கும் இடையேயான விளையாட்டு, மற்றொன்று இறுதிக் காட்சியில் வானில் நீர்க்காகங்கள் பறப்பது. இவையிரண்டு எந்தக் குறும்படத்திலும் காணக் கிடக்காதவை. வாழ்வின் நிமிடங்களை ரத்தமும், சதையுமாகப் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளரான ராசாமதி. தேவையான பிம்பங்களைத் தேர்ந்து காட்சியாக கச்சிதமாக தொகுத்திருக்கும் எஸ். ஆனந்தும், பின்னணி இசையில் கவனம் ஈர்க்கும் சேவியரும் பாராட்டுக்குரியவர்கள். தமிழ் குறும்படச் சூழலில் நல்லதொரு படைப்பு. வரவேற்போம்!

Comments

Popular Posts