தமிழ் சினிமா ரசிகனின் ரசனை!

பொதுவாக, எந்த மொழியாய் இருப்பினும், சினிமாவில் பலத்த போட்டா போட்டியைச் சந்தித்துதான் ஒருவர் நட்சத்திர அந்தஸ்தைப் பிடிக்க முடியும். இப்படி நட்சத்திர அந்தஸ்தைப் பிடித்து விட்டாலும் அதை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது என்பதும் மிக் கடினமான விஷயம். தொடர்ந்து தன்னைச் சுற்றி நிகழும் மாற்றங்களில் கவனம் செலுத்தி திட்டமிடத் தவறினால், கால ஓட்டத்தில் நட்சத்திரங்கள் காணாமல் போக நேரிடும். இதனால், அவர்களின் புகழின் வெளிச்சமும் மங்கி, மரித்துப் போவது தனிக் கொடுமை. ஆகவே, தொடர் போட்டியில் பங்கேற்று, சரியான திட்டமிடலோடு தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு, பாதுகாப்பாக வாழத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே திரையுலகம் நிம்மதியையும் தரும்; நிரந்தரமாக சோறும் இடும். அந்தவகையில், இப்போது சில முன்னணி திரைத்துறைப் பிரபலங்களை, சிம்மாசனத்திலிருந்து கீழே இறக்கிவிடுவதற்கான சூழல்கள் தமிழ் சினிமாவில் தலைக்காட்டத் துவங்கியிருக்கின்றன. இதனால், புகழின் வெளிச்சத்தில் இருந்த சில திரைப் பிரபலங்களை மன அழுத்தம் வாட்டி வதைக்க துவங்கியிருக்கிறது என்பதுதான் சப்தமில்லாமல் பலரிடமும் கசிந்து கொண்டிருக்கும் செய்தி.
கோடம்பாக்கத்தில் தங்களைப் பட்டைத் தீட்டிக்கொண்டு பெரிய இயக்குநராக அடையாளம் காணப்பட்ட சிலர், தங்களது பிள்ளைகளை வைத்துப் படம் இயக்கியும், தயாரித்தும் அவர்களை தங்களைப் போல புகழின் வெளிச்சத்தில் உலவ விட நினைத்தனர். ஆனால் சாமானிய தமிழ் ரசிகனோ இந்த உத்தியையெல்லாம் தாண்டி சிந்திக்க துவங்கிவிட்டான் என்பதை அவர்கள் மறந்ததாலோ என்னவோ, அவர்களது பிள்ளைகள் நடித்த படங்கள் பெரும்பாலும் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் வந்த வேகத்திலேயே பெட்டிக்குத் திரும்பின. சரி! நாம் இயக்கினால்தானே படம் "ஃப்ளாப்' ஆகிறது என்றெண்ணி, ஏற்கனவே ஜெயித்துக் காட்டியுள்ள இயக்குநர்களை வைத்தும் படம் இயக்க முடிவு செய்து, களத்தில் இறங்கிய பலருக்கும் பலத்த நஷ்டமே பரிசாகக் கிடைத்தது. அப்படியே அவர்களது முதல் முயற்சி வெற்றி பெற்றாலும் அடுத்தடுத்த முயற்சிகள் எல்லாமே கையைச் சுட்டுக்கொள்ள வைத்தன. இதற்கு காரணம் தமிழ் சினிமா ரசிகனின் ரசனை, மேம்பட்ட தளத்தில் விரிவடைய ஆரம்பித்ததுதான். இங்கே சில உதாரணங்கள்... கோலிவுட்டில் அவருக்கு பெரிய இயக்குநர் அந்தஸ்து உண்டு. அவர் தெருவில் யதார்த்த முகங்களாக திரிந்து கொண்டிருந்தவர்களையெல்லாம் நடிகனாக்கி, தமிழ் சினிமாவில் வெற்றி நாயகர்களாக உலா வர வழிவகுத்தவர். அப்படிப்பட்ட இயக்குநராலே தனது மகனை ஒரு சிறந்த நடிகனாக்க முடியவில்லை. சரி! தங்களது பிள்ளைகளை வெற்றிப் பெற்ற நடிகர்களாக்கத்தான் முடியவில்லை; தன்னுடைய இயக்கத்தில் வெளிவரும் படங்களையாவது வெற்றிப் பெற வைத்து விடலாம் என்றால் அதுவும் கைகூடவில்லை. மேலும், சின்னத்திரையில் கால் பதித்து, வெற்றியைப் பெறலாம் என்கிற அவரது எண்ணமும் நிறைவேறவில்லை. இதுமட்டுமின்றி, இவர்களுடைய படங்களின் தாக்கத்தால் தமிழ் சினிமாவிற்குள் இயக்குநர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் முற்றிலும் புதிய ரசனையும், கதை சொல்லலையும் கொண்டு தமிழ் சினிமாவை வேறு பாதைக்கு நகர்த்திக்கொண்டிருக்கும்போது அவர்களோடு போட்டி போட்டுக்கொண்டு படங்கள் இயக்குவதற்கு அவர்களுடைய உடலும், மனமும் மட்டுமின்றி, பெரும்பாலானத் தயாரிப்பாளர்கள் அவர்களை வைத்து படம் தயாரிக்க முன் வராததும் ஒரு காரணமாகும். இதனால், திரையில் கோலோச்சிய இயக்குநர் என்ற அடையாளத்தோடு மட்டுமே இவர்கள் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்தச் சிக்கலில் மற்றொரு பெரிய இயக்குநரும் மாட்டிக்கொண்டிருப்பதன் வெளிப்பாடுதான் அவர் சமீபத்தில் சின்னத்திரை விளம்பரங்களில் தலைக்காட்டுவது என்கிறது விவரமறிந்த வட்டாரம். இவரும் தன்னுடைய புதல்வரை வைத்து இயக்கியிருக்கும் படம் வெளிவருவதற்குப் பெரும் போராட்டங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய திரைத்துறை வாழ்க்கையில் இப்படியொரு சிக்கலான சூழலை தான் சந்தித்தில்லை என்று அவர் சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் குறைபட்டுக்கொண்டார். அந்தக் காலத்தில் இவருடைய கைவண்ணத்தில் உருவான பெரும்பாலான படங்கள் தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளில் எல்லாம் பட்டையைக் கிளப்பியதை நாடே அறியும். இது ஒருபுறம் என்றால், மறுபுறம் படத்தை எடுத்து, அதை தியேட்டர்களில் வெளியிட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களின் நிலையும் பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. திரைப்படத் தயாரிப்பு என்பது பெரிய விஷயம் என்பது போய், தற்போது படத்தைத் தயாரிப்பதை விட அதை வெளியிடுவதுதான் கடினமான காரியமாக மாறியிருக்கிறது. இவையெல்லாம் சேர்ந்துதான் வெற்றி பெற்ற இயக்குநர்களின் பிரச்சினைகளை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியிருக்கின்றன. ஒரு இயக்குநருக்கு பெரிய இடத்து ஆதரவு இருக்கிற நிலையில் கூட, அவர் தன் மகனை வைத்து இயக்கிய படத்தை வெளியிட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். பல வெற்றிப் படங்கள் கொடுத்த இயக்குநருக்கே இந்தக் கதியென்றால், ஓரிரு படங்கள் மட்டுமே வெற்றிப் படங்களாக அமைந்த இயக்குநர்களின் நிலைமையை என்னவென்று சொல்வது? இது ஒருபுறமிருக்க, பல வெற்றிப் படங்களில் நடித்து, தன்னை முன்னணி நடிகராக நிலை நிறுத்திக் கொண்ட சில நடிகர்களின் நிலையும் போராட்டமாகவே உள்ளதாகத் தகவல். இங்கே நடிகர்களுக்குப் பிரச்சினை பொருளாதாரம் மட்டுமல்ல; அவர்களுடைய எதிர்காலம் மீது அவர்களுக்கே உண்டாகியிருக்கும் பலத்த சந்தேகமும்தான். இதற்குக் காரணம், தற்போது தமிழ் சினிமா மாறுபட்ட பாதையில் பயணித்து கொண்டிருப்பதும், முன்பு போல அரைத்த மசாலாவையே அரைத்தால் அதைத் தூக்கியெறிய ரசிகர்கள் தயங்குவதில்லை என்பதும்தான்! தொடர்ந்து பல திரை ஆய்வாளர்கள் திரைப்பட ரசிகனின் மனப்போக்கு மாறி வருவதைச் சுட்டிக்காட்டிய போதிலும், அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் தங்களின் அதிகப்படியான நம்பிக்கையில், நான்கு சுவர்களுக்குள்ளேயே இவர்கள் கட்டி வைத்திருந்த கோட்டை இன்று கட்டுமானத் தளர்வுக்கு ஆளாகியிருக்கிறது. உலகப் படங்களின் டி.வி.டி.க்களும், தமிழில் யதார்த்தமானப் படங்களுடன் வந்த புதிய இயக்குநர்களின் வருகையும் இவர்களது மனக்கோட்டை சரிவதற்கு காரணமாகியிருக்கின்றன என்பதை இன்று வரையும் அவர்கள் உணர மறுப்பதும்தான் சங்கடங்களுக்குக் காரணம்.
சமீபத்தில் புதுவிதமான கதை சொல்லல் முறையில், புதுமுகங்களுடன் அல்லது இயக்குநரே கதையின் பாத்திரமாகத் தோன்றி நடித்து, வெளியான படங்கள் (உதாரணத்திற்கு: "மகிழ்ச்சி', "மந்திரப் புன்னகை', "நந்தலாலா') தமிழ்ப் பட விசிறிகளால் வரவேற்கப்பட்டுள்ளன. தமிழ் சினிமாவில் சிகரத்தைத் தொட நினைப்பவர்கள், இந்த மாற்றத்தை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய தருணம் இதுவாகும். மறைந்த பிரபல எழுத்தாளரான நீல. பத்மநாபனின், "தலைமுறைகள்' நாவலை எடுத்துக்கொண்டு அதை திரை மொழியில் சொல்லி, கவனம் பெற்றிருக்கும் இயக்குநரான வ.கெüதமன், தற்போதைய சமூகத்தில் பெண்களிடையே ஏற்பட்டிருக்கும் பாலியல் பிரச்சினையைக் கதைக்களமாகக் கொண்டு கரு.பழனியப்பன் இயக்கியிருக்கும் "மந்திரப் புன்னகை', புகழ் பெற்ற ஜப்பானிய இயக்குநரான தகஷி கிட்டானோவின் "குட்டிஜீரோ' படத்தால் ஈர்க்கப்பட்டு, அதைத் தமிழ்ச் சூழலுக்கு மாறுபட்ட, புதிய வடிவில் "நந்தலாலா'வாக சொல்லியிருக்கும் இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட யாவருமே அந்தக் கதையின் நாயகப் பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்கள் என்பதை நாம் இங்கே கவனித்தாக வேண்டும். மேலும், மூன்று படங்களுமே மாறுப்பட்ட கதைக்களங்களைக் கொண்டிருக்கின்றன என்பதையும், மூன்று படங்களின் நாயகர்களுமே மாறுபட்ட பாத்திரத்தில் (அக்காவின் மீது பாசத்தை பொழியும் தம்பியாக வ.கெüதமன், பாலியல் பிரச்சினையில், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் இளைஞனாக கரு.பழனியப்பன், மனநிலை பாதிக்கப்பட்டு பேரன்புடன் வாழும் பைத்தியக்காரனாக மிஷ்கின்) நடித்திருக்கிறார்கள். மேற்கண்ட சில படங்களின் நாயகப் பாத்திரத்தில் நடிக்க பெரும்பாலான முன்னணி நாயகர்கள் ஒதுங்கிக் கொண்டதன் விளைவாகத்தான் மிஷ்கின் உள்ளிட்ட இயக்குநர்கள், நடிகர் அவதாரம் எடுத்தார்கள். மிஷ்கின் மட்டுமின்றி, தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் நாயகர்களாகும் போக்கிற்கு வழி வகுத்ததே முன்னணி நாயகர்களின் தவறான மதிப்பீடுகள்தான் என்பதை முன்கூட்டியே நாம் பல முறை, நமது இதழில் பதிவு செய்துள்ளோம். விளைவு, இன்று முன்னணி நாயகர்களின் படங்கள் வெள்ளி விழா காணுமா என்பது போய், திரையில் வெளியாகுமா என்கிற கேள்விக்கு ஆளாகியிருக்கின்றன. இதற்கு சமீபத்திய உதாரணமாக ஒரு முன்னணி நடிகரின் படத்தையே குறிப்பிடலாம். படத்தின் தலைப்பில் ஏற்பட்ட பிரச்சினை இன்னும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. இதற்கிடையில் அவரது அரசியல் பிரவேசம் பற்றியும் கோடம்பாக்கத்தில் சர்ச்சை கிளம்பியுள்ளது. இதன் பின்னணியில் அவரை அரசியலுக்கு கொண்டு வர ரசிகர்களும், சில கட்சிகளும் போட்டா போட்டியில் இருக்கின்றன என்ற தகவல்கள் ஒரு பக்கம் கசிந்து கொண்டிருந்தாலும், இதற்கெல்லாம் அவருடைய சமீபத்திய படங்களின் தோல்விதான் காரணம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். விரைவில் அவரே, தான் துவக்கப்போகும் கட்சி குறித்த தகவல்களை வெளியிடுவார் என்ற வதந்தியும் வேகமாகப் பரவி வருகிறது. இதேபோன்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தனது தனிப்பட்ட நடிப்பால் திரைத்துறை ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தவருக்கும் தற்போது கைவசம் படங்கள் குறைந்து போயுள்ளதால் அவரும் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதாக கோலிவுட் கிளி கவலை தெரிவிக்கிறது. சமீபத்தில் நம்பிக்கையளிக்கும் இயக்குநராகவும், நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவரை வைத்து, தன்னுடைய சொந்தத் தயாரிப்பில் படத்தைத் தயாரித்தார் அந்த நடிகர். பாதி வரை படப்பிடிப்பு போன பிறகு, நடிகரின் குறுக்கீட்டால் இயக்குநரே தயாரிப்புப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு நடிகரை விட்டு விலகினார். இதற்கு இயக்குநரின் அதிகப்படியான செலவு காரணமென்று நடிகரும், கதைக்கேற்ற செலவுதான் செய்கிறேன் என்று இயக்குநருக்கும் பரஸ்பரம் தங்களுடைய நியாயங்களை தங்களது பேட்டிகளின் மூலம் வெளிப்படுத்தினர். தமிழின் பிரபலமான சில முன்னணி நாயகர்களுக்கே இப்படி மனநிலையில் பெருத்த மாற்றங்கள் உண்டானதற்கு தற்போதைய அரசியல் சூழ்நிலையும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், சில முக்கிய குணச்சித்திர நடிகர்களும் சின்னத்திரையில் தலைக் காட்டத் துவங்கியிருப்பதும்கூட தங்களது வருமானத்தை தக்க வைத்துக்கொள்வதற்காகத்தான் என்கிறார்கள். நிலைமை இப்படியிருக்க, முன்னணி நடிகையாக அடையாளம் காணப்பட்ட ஒருவர், சமீபத்தில் தன்னுடைய கணவரை நாயகனாக்கி எடுத்தத் திரைப்படம், அவரை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியதாம். இந்த மன அழுத்தத்திற்கு அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பது சமீபத்தில் நடிக்க வந்த நடிகைகள்தான் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானபோது இழுத்துப் போர்த்திக்கொண்டு "கவர்ச்சிக்கு தடா' என்கிற ரீதியில் ஸ்டேட்மெண்ட் விட்டுக் கொண்டிருந்த சில நடிகைகள், ஓரிரு படங்களுக்குப் பிறகு பட வாய்ப்பேதும் இல்லாமல் தவித்த நிலையில், வேறு வழியின்றி அந்த ஸ்டேட்மெண்டை மறந்துவிட்டு பட வாய்ப்புக்காக, தங்களது சொந்தப் பணத்தைச் செலவு செய்து எடுக்கப்பட்ட சிறப்புப் புகைப்படங்களை இணையதளத்தில் வலம்வர வைத்துள்ளனர். இந்த உத்தியின் மூலம் ஒரு சிலருக்கு பட வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. அந்தப் படங்களில் இவர்களின் தாராளமயக் கொள்கையைப் பார்த்து, ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் வாயடைத்துப் போயிருக்கின்றனர். பொதுவாக, பட வாய்ப்பில்லையென்றால் கவர்ச்சி ஆடைகளில் நடிகைகள் தோன்றி திரையை அலங்கரிப்பது வழக்கம்தான் என்றாலும் இவர்களுடைய கவர்ச்சி சற்று கோடம்பாக்கத்தை மிரட்சியடையவே வைத்திருக்கிறது. பொதுவாக, தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தவர்கள் அதில் தாங்கள் பெரிய வெற்றிகளைக் குவிக்க முடியாது என்கிற நிலை வரும்போது, அதை உதறிவிட்டு வேறு பாதைக்குத் திரும்பி, தங்களை நிலை நிறுத்திக் கொள்வதே நல்லது என்பதே தற்போதைய சூழல் உணர்த்தும் பாடம். ஆனால் வழக்கம். இது அபூர்வமாகவே தமிழ் சினிமாவில் நடந்தேறியிருக்கிறது. சினிமா மூலம் கிடைக்கும் புகழையும், பணத்தையும் விட்டுவிட்டு சராசரியான ஒரு வாழ்க்கைக்குத் திரும்ப பலரால் முடிவதில்லை. இதற்கான காரணமும், "உளவியல்' ரீதியாக உணரத் தக்கதுதான். ஆனால் வேறு வழியில்லை! "பிரஷர்' மட்டுமே சினிமா என்றாகிவிட்டது. ஏற்றமும், இறக்கமும் கலந்ததே வாழ்க்கை! வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்! வாசல்கள்தோறும் வேதனை இருக்கும்' என்பதற்கு சினிமா மட்டும் எப்படி விதி விலக்காகும்? இதை முழுதும் புரிந்து கொள்ளாதவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். அரைகுறையாகத் தெரிந்து வைத்திருப்பவர்கள் தாயத்து, பரிகாரம் என்று போகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே, "என் பொற்காலம் முடிந்துவிட்டதைப் புரிந்து கொண்டேன்' என்று கம்பீரமாக விலகி நிற்கிறார்கள். இந்தப் புரிதல் உணர்வு இருந்துவிட்டால் சினிமாவை தொழிலாக மட்டுமே பார்க்கும் மன வலிமை உண்டாகும். அதை உருவாக்கிக் கொள்வதே இன்றைய அவசரத் தேவை!

Comments

Popular Posts