உதவி இயக்குநர்கள் உதவாக்கரைகளா?

மிழ்த் திரையுலகில் தொழில் நுட்ப வளர்ச்சி, புதிதாகக் கதை சொல்லும முறைகள், வித்தியாசமான முயற்சிகள், புதிய வரவுகளின் அதிகரிப்பு, சினிமா கலைஞர்களுக்கு அரசின் புதிய சலுகைகள் என எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்தாலும், மாறாமல் தொடர்வது உதவி இயக்குநர்களின் அவல வாழ்க்கைதான்! பெரும்பாலும் உதவி இயக்குநர்களாக ஆசைப்படுவது, பெரும்பாலும் சென்னையை தவிர்த்த மற்ற நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள இளைஞர்களே! இவர்களில் சிலர் அடிப்படை பள்ளிக் கல்வியைக்கூட முடிக்காதவர்கள். அப்படிப்பட்டவர்களின் சினிமாக் கனவு கோடம்பாக்கத்தில்தான் தொடங்குகிறது. சென்னைக்குக் கனவுகளோடு ரயிலேறும் இந்த இளைஞர்கள், இயக்குநர்களாக உருவெடுப்பது, ஆயிரத்தில் ஒன்றாகவே அமைகிறது. உதவி இயக்குநராக ஆவதற்கே சில ஆண்டுகள் இவர்கள் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அப்படியே இவர்கள் உதவி இயக்குநர்களாக ஆனாலும் அந்தப் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்குப் பெரும்பாடு பட வேண்டும். அதை மீறிப் பதவியைத் தக்க வைத்துக் கொண்டாலும் திரையில் வெளியாகும் உதவி இயக்குநர்களின் பட்டியலில் இவர்களின் பெயர்கள் இடம் பெறுவது நிகழாமல் போகலாம்! அதற்கு ஒரு தனிப் போராட்டமே உதவி இயக்குநர்கள் நடத்த வேண்டியிருக்கும். அந்தப் போராட்டத்தையும் கடந்து அவர்களின் பெயர்கள் உதவி இயக்குநர்களின் பட்டியலில் இடம்பெற்று விட்டால் உடனே திரைப்படம் இயக்குவதற்கான வாய்ப்பு என்பது அவர்களது வாசல் கதவை வந்து தட்டிவிடும் என்கிறீர்களா? அதுதான் இல்லை (பல உதவி இயக்குநர்களின் வீடுகளில் வாசற் கதவே இல்லையென்பது சோகத்தின் சுவடு). இங்கேதான் உண்மையில் ஒரு உதவி இயக்குநரின் போராட்டமே துவங்குகிறது. இந்த உதவி இயக்குநர்களின் வாழ்க்கையைப் பற்றி, சென்னை - மாநகரில் தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்திருக்கும் தெருக்களிடம் கேட்டால் வித்தியாசமான பல கதைகள் சொல்லும். பல வருடங்கள் நடையாய் நடந்து ஒரு படக் கம்பெனியில் இயக்குநர் வாய்ப்பைப் பெற்றுவிட்டாலும், அந்தப் படத்தை வெற்றிப் படமாக்குவதற்கு பெரும் யுத்தத்தை அவர்கள் நடத்த வேண்டியிருக்கும் (இப்போதெல்லாம் படத்தை வெளியிடுவதற்கும் சேர்த்தே யுத்தம் நடத்த வேண்டியிருக்கிறது). இந்தப் பெரும் யுத்தத்தில் வெற்றி பெறுபவர்களே அடுத்தடுத்தப் படங்களை இயக்க முடியும். தொடர்ந்து வெற்றியைக் கொடுக்கத் தவறினால் மிக வேகமாக தமிழ் சினிமா ரசிகர்கள் அந்த இயக்குநரை மறந்து போவார்கள். சரி! இயக்குநர் ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்து விட்டார் என்று வைத்துக்கொள்வோம். அடுத்து? அவருக்கும் வாழ்க்கையென்று ஒன்று இருக்கிறதல்லவா? இங்கேதான் அந்த இயக்குநரின் "ஆன்ம பலம்' சோதனை செய்யப்படும். ஆமாம் நண்பர்களே! வெற்றி பெற்ற அந்த இயக்குநருக்கு இந்தத் தமிழ்ச் சமூகம் மறந்தும்கூட தன் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க முன் வராது. ஏற்கனவே, திரைப்பட இயக்குநர் கனவு பலிப்பதற்காக தன் இளமையை அடகு வைத்த அந்த இளைஞர்களின் வாழ்வு இங்கே கேள்விக்குரிய இடமாகித் தொக்கி நிற்கும் (உஷாராக, திருமணம் செய்துகொண்டு, பிறகு உதவி இயக்குநரானவர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற முடியாது). இப்படி வெற்றி பெற்ற இயக்குநருக்கே திருமணம் என்பது வெறும் கானலாகிப் போகும்போது, மற்ற உதவி இயக்குநர்களுக்குத் திருமணம் என்பது கற்பனைகூட செய்ய முடியாத விஷயம் அல்லவா? சரி! கோடம்பாக்கத்தின் உதவி இயக்குநர்களின் பாடுகளை மேலும் விரிவாகப் பார்ப்போம். தமிழ் சினிமாவில், குறிப்பாக விரல் விட்டு எண்ணும் சில இயக்குநர்களைத் தவிர்த்து மற்ற பெரும்பாலான இயக்குநர்கள், தங்களின் உதவி இயக்குநர்களுக்கு முறைப்படியான சம்பளத்தைப் பெற்றுத் தருவதில்லை என்ற பேச்சு அடிபடுகிறது. (சமீபத்தில் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சில முயற்சிகளை எடுத்து, உதவி இயக்குநர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு சங்கம் வழி சம்பளம் என்பதை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதிலும் சில இயக்குநர்கள் தவிர்த்து மற்ற அனைவரும் ஜகாவாங்கி விட்டார்கள் என்பது தனிக் கதை). விலைவாசி உயர்வு எல்.ஐ.சி. பில்டிங்கைத் தாண்டி வளர்ந்து நிற்கும் இன்றைய வேளையில், ஒரு உதவி இயக்குநர் சென்னையில் உயிர்வாழ்வது என்பது சந்தேகத்திற்கிடமானதுதான் (சராசரியாக ஒரு டீயின் விலை ரூபாய் 5/-). முன்பெல்லாம் டீயை மட்டுமே நம்பி வாழ்ந்த உதவி இயக்குநர்களால் இன்று அதற்கும் போராட வேண்டிய நிலைமையே பல இடங்களில் உள்ளது. அப்படித் தங்களுடைய கனவுக்காக வாழ்க்கையை அடகு வைக்கும் அவர்களின் மனம் புண்படும்படி, சமீபத்தில் வெற்றி பெற்ற இயக்குநராக அடையாளம் காணப்பட்டிருக்கும் இயக்குநர் மிஷ்கின், தரக் குறைவாகப் பேசிவிட்டதற்காக உதவி இயக்குநர்கள் வேதனையுடன் ஒன்று திரண்டுள்ளனர்; இயக்குநர் மிஷ்கினுக்கு எதிராக வெகுண்டெழுந்து இயக்குநர்கள் சங்கம் முன்பாக கடந்த வாரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மிஷ்கின் மன்னிப்புக் கடிதம் கொடுத்தும் கூட, நேரில் வந்து மன்னிப்புக் கேட்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சினையின் பின்னணியில் உள்ள இரண்டு விதமான விஷயங்களைத்தான் இங்கே நாம் கவனிக்க வேண்டியுள்ளது. ஒன்று, ஒரு இயக்குநர் வெற்றி பெற்றுவிட்டால் உடனடியாகப் படையெடுத்து சென்று அவரிடம் உதவியாளராக சேருவதற்கு இளைஞர்கள் முயற்சிப்பது (இப்போதெல்லாம் பொறியியல் படித்த பல இளைஞர்களும் கூட உதவி இயக்குநராகவதற்கு அதிகம் முயற்சிக்கின்றனர். இது சினிமாவின் மீதான தாக்கமா? மோகமா? அறியாமையா? ஆர்வக் கோளாறா? என்பது ஆய்வுக்குரியது); மற்றொன்று வெற்றி பெற்ற இயக்குநர்கள் பொது இடங்களில் பேசும்போது தங்களின் தகுதியை மீறிப் பேசுவது. மிஷ்கினின் பேச்சில் சில விஷயங்களை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. அதாவது திரைப்படம் இயக்க வேண்டுமென்கிற வேட்கையோடு கோலிவுட் நோக்கி வரும் உதவி இயக்குநர்கள், வாழ்க்கை பற்றிய புரிதல், இலக்கியப் பரிச்சயம் இல்லாமல் வருகிறார்கள் என்று கூறியிருக்கிறார். இது ஓர் வகையில் ஏற்கக் கூடியதே! ஆனால் அவர்கள் "வாழ்க்கைப் போராட்டம்' என்ற கல்வியைக் கரைத்துக் குடித்த பிறகே தங்கள் கனங்களை இறக்கி வைக்க, களங்களை நோக்கி வருகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை! ஒரு புகழ் பெற்ற மருத்துவராகவோ, போலீஸ் அதிகாரியாகவோ, தொழில் அதிபராகவோ ஆவதற்கு ஆசைப்படுவர்கள் அந்தத் துறையைப் பற்றிய முழுமையான அறிவைப் பெற்ற பிறகேதான் அடையாளம் காணப்படுகிறார்கள். அப்படியிருக்கும்போது சினிமாவில் வெற்றி பெற்ற இயக்குநர்களாக ஜொலிக்க வேண்டும் என நினைப்பவர்கள், திரைப்பட இயக்கத்திற்கு இன்றியமையாததான மக்களின் வாழ்நிலை குறித்தும், தன்னை சுற்றி நிகழும் அரசியல் குறித்தும் அறிவு பலத்துடன் இல்லாமல் இருப்பின் அது கவலைக்கிடமான விஷயம்தான்! ஆனால், நிலைமை இன்று மாறியிருக்கிறது. இன்றைய பெரும்பாலான உதவி இயக்குநர்களிடம் வாசிக்கும் பழக்கம் அதிகமாகியிருக்கிறது என்பதை நாம் ஆண்டுதோறும் நடக்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனையாகும் புத்தகங்களைக் கொண்டு கணக்கிட முடியும். அதுவும் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழில் திரைப்படங்களைப் பற்றிய புத்தகங்கள் தற்போது அதிக அளவில் எழுதப்பட்டுள்ளன. ஆகவே, நல்ல புத்தகங்களைத் தேடிச் சென்று வாசிக்கும் உதவி இயக்குநர்களும் கோடம்பாக்கத்தில் அதிக அளவு உள்ளனர் என்பதே உண்மை. ஆகவே, ஒரு சில உதவி இயக்குநர்கள் வேண்டுமானால் வாசிப்புப் பழக்கம் இல்லாமலிருக்கலாம். ஆனால், அதற்காக ஒட்டுமொத்த உதவி இயக்குநர்கள் கூட்டத்தையும் வார்த்தைகளில் புண்படுத்துவது முறையல்ல என்பதே உதவி இயக்குநர்களின் குமுறல். மொத்தத்தில் மிஷ்கினுடைய சில கருத்துகளை மட்டுமே ஏற்கும் அதே நேரத்தில் (உதவி இயக்குநர்கள் பற்றிய கடும் விமர்சனங்கள் நீங்களாக) தனது பலத்தைப் பயன்படுத்தி - தகுதி வாய்ந்த உதவி இயக்குநர்களை அவர் வளர்த்துப் புகழ் பெற செய்தால், திரையுலகம் மேலும் வளரத்தான் செய்யும். மாறாக அவர் கடும் விமர்சனங்களைச் செய்தால், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக ஆகாதா? "இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்' என்ற வள்ளுவரின் வாக்கு, இரு தரப்பினருக்குமே பொருந்தும். விமர்சிப்பவர்கள் "நா காப்பது' அவசியம்! விமர்சிக்கப்படுகிறவர்கள், ஆக்க பூர்வமான முறைகளில் அதை நிராகரிக்க வேண்டும். இத்தகைய நாகரீகம் மேன்மேலும் உயரும் என்ற நம்பிக்கையைத் தளரவிடாதிருப்போம்.

Comments

Popular Posts