திரை: 18

"திரைப்படக் கல்லூரியில் படிக்கும்போது எங்களுடைய முதல்வராக நாகராஜன் ஸôர் பொறுப்பேற்றிருந்தார். அவர் திரைப்படக் கல்லூரியில் ஒலிப்பதிவு பிரிவை எடுத்துப் படித்தவர். அப்போது நான் சைதாப்பேட்டையில்தான் தங்கியிருந்தேன். அவரும் சைதாப்பேட்டை வழியாகத்தான் கல்லூரிக்கு செல்வார். அப்படி செல்லும்போது வழியில் என்னையும் காரில் ஏற்றிக்கொள்ளுவார். அப்படியாக பல நாட்கள் திரைப்படக் கல்லூரிக்கு அவருடைய காரிலேயே பயணம் செய்திருக்கிறேன். இதனால் கல்லூரியில் எனக்கு மாணவர்களிடத்தில் செல்வாக்கு உண்டு. கல்லூரியில் மாணவர்களுக்கு திரையிடுவதற்காக வெளியிலிருந்து தரமான உலக சினிமாக்களையெல்லாம் கொண்டு வந்து திரையிடுவேன். அந்த வகையில் மேக்ஸ் முல்லர் பவன் (ஜெர்மன்) படங்களையெல்லாம் திரையிட்டு காட்டியிருக்கிறேன். அதுபோல "டின்ட்ரம்' என்கிற புகழ்பெற்ற உலகத் திரைப்படம் ஒன்றையும் திரையிட்டேன். இந்தப் படத்தின் இயக்குநர் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளராவார். இந்தப் படம் பாலியல் சிக்கலை மையமாகக் கொண்டதாகும். கல்லூரியில் இந்தப் படத்தை திரையிட்டபோது முதல் இரண்டு ரீல் போனவுடனேயே நிறுத்தப்பட்டுவிட்டது. பிறகு, கல்லூரி முதல்வருடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இப்படம் குறித்து நான் விவாதித்த பின்புதான் அவர் படத்தை மீண்டும் திரையிட அனுமதித்தார். அப்போது புரொஜெக்ஷனிஸ்ட்டாக மணி என்பவர் பொறுப்பு வகித்தார். நல்ல திரைப்படங்களை மாணவர்களுக்கு கல்லூரியில் திரையிட்டு காட்டியதைப் போல, சிறந்த இலக்கியவாதிகளை மாணவர்கள் சந்தித்து, உரையாடவும் வைத்திருக்கிறேன். அந்த வகையில் மூத்த இலக்கியவாதியான கா.சிவத்தம்பி அவர்களை "தமிழ் சமூகமும் அதன் சினிமாவும்' என்கிற தலைப்பில் பேச ஏற்பாடு செய்தேன். இதற்கு ஏ.எஸ்.ஏ. சாமி ஸôர் மிகவும் உதவிகரமாக இருந்தார். ஏற்கனவே சென்னை புக் ஹவுஸýடன் இணைந்து கா.சிவத்தம்பி அவர்களின் புத்தகங்களைப் பதிப்பித்திருக்கிறேன். அதன் மூலமாக அவரிடம் எனக்கு அறிமுகமிருந்தது. எழுத்தாளரும், பேராசிரியருமான கா.சிவத்தம்பியின் சொற்பொழிவை தனி புத்தகமாகவும் கொண்டுவந்தேன். திரைப்படக் கல்லூரியில் 1994ம் ஆண்டு இயக்கம் பிரிவை முடித்துவிட்டு வெளியே வந்தேன். கேரள அரசின் "டிபார்ட்மென்ட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி'யில் சேர்ந்து முதல் மூன்று ஆண்டுகள் ஃப்ரீலேன்ஸ் இயக்குநராக அறிவியல் பற்றிய பல படங்களை இயக்கினேன். நான் இயக்கிய அத்தகைய படங்களில் பல சர்வதேச விருதுகளையும் பெற்றிருக்கிறது. கேரள அரசுக்கு படம் இயக்கியதோடு, கேரளத்தின் சிறந்த கலைப்படங்களை உருவாக்கியவர்களான அரவிந்தன் மற்றும் அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்களோடு திரைப்படங்கள் குறித்த விவாதங்களிலும் ஈடுபட்டு வந்தேன். அடூரின் வீட்டுக்குப் பல முறை போய் வந்திருக்கிறேன். அதுபோல கேரள அரசின் "சித்ராஞ்சலி ஸ்டூடியோ'வில் "சி.பி.எம்' குறித்த படம் ஒன்றையும் இயக்கினேன். குறிப்பிட்ட சில வருடங்கள் அங்கே பணிபுரிந்து விட்டு, பிறகு சென்னை திரும்பி விளம்பரப் படங்கள் மற்றும் கார்ப்பரேட் படங்கள் எடுப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். தற்போது "சிவா ஃபிலிம்ஸ்' என்கிற நிறுவனத்தின் மூலமாக நிறைய சினிமா சார்ந்த பலதரப்பட்ட பணிகளைச் செய்து வருகிறேன். அதில் குறிப்பாக ஐ.ஐ.டி மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு குறித்தும், செய்முறைப் பயிற்சிகள் போன்றவற்றை எளிதாகப் புரிந்துகொள்ளும் வண்ணம் படங்களாக உருவாக்கி வருகிறேன். அத்துடன் பிரபல கம்பெனிகளுக்காக கார்ப்பரேட் ஃபிலிம்களையும் எடுத்து வருகிறேன். தொடர்ந்து என்னுடைய சினிமா தேடலும் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது திரைத்துறை என்பது புரொஃபஷனலிஸமாக மாறிவிட்டது. இந்தத் துறையில் வெற்றிப் பெறுவதற்கு அறிவு மட்டும் இருந்தால் பத்தாது, சாமர்த்தியமும் வேண்டும். அப்போதுதான் ஜெயிக்க முடியும். இப்போது சினிமா குறித்து படிப்பது குறைந்து போயிருக்கிறது. அது மாற வேண்டும். பல தரப்பட்ட இலக்கியங்களை கற்க வேண்டும். என்னுடைய பதினேழாவது வயதிலேயே "கணையாழி' பத்திரிகையில் "நட்சத்திரங்கள்' என்கிற என்னுடைய சிறுகதை வெளியானது. அதைத் தொடர்ந்து "சிகரம்' பத்திரிகையில் "ஒரு பிரதிநிதி உருவாக்கப்படுகிறான்' என்கிற சிறுகதையும், பிரபல இயக்குநர் கிரிஷ் கேசரவள்ளியின் "கடஷாத்தா' என்கிற படத்தின் விமர்சனமும் ஒரு சேர வெளியானது. இப்படியாக நான் திரைப்படக் கல்லூரியில் பயில்வதற்கு முன்பாக இலக்கியத்தோடும் பரிச்சயம் கொண்டிருந்தேன். அதனால் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இலக்கியத்தை கற்பதோடு தொடர்ந்து திரைத்துறை சம்பந்தப்பட்டவர்களோடு தொடர்பில் இருப்பதும் அவசியமானதாகும். அப்போதுதான் நம்மைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்பதை நீங்கள் அறிய முடியும். அதேபோல ஆங்கில அறிவும் அவசியமானது. அப்போதுதான் உலக சினிமாக்களோடு நாம் போட்டி போட முடியும்!
திரைப்படக் கல்லூரியில் பயின்று, இன்று இந்திய அளவில் பல்வேறு ஆளுமைகள் வெளியே தெரிந்தாலும், சென்னை - தரமணி எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி திரைப்படக் கல்லூரி என்றால் கோலிவுட்டைச் சேர்ந்த பலருக்கும், திரைத்துறை ரசிகர்களுக்கும் சட்டென்று ஞாபகத்திற்கு வருவது இயக்குநர் ஆபாவாணன்தான்! தனது "ஊமைவிழிகள்' திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்குள் ஒரு மறுமலர்ச்சியைக் கொண்டு வந்தவர் ஆபாவாணன் என்றால் அது மிகையாகாது. இப்படத்தைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களைத் தயாரித்து, அவர் இயக்கியிருந்தாலும் இந்தப் படமே அவருடைய உட்சபட்ச சாதனைப் படமாக இன்றளவும் திரைத்துறை ஆய்வாளர்களால் போற்றப்பட்டு வருகிறது. படத்தயாரிப்பு, இயக்கம் போன்றவற்றை தொடர்ந்து சிறந்த தொலைக்காட்சி தொடர்களையும் ஆபாவாணன் இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நுங்கம்பாக்கத்திலுள்ள அவருடைய அலுவலகத்தில் ஒரு காலை வேளையில் சந்தித்து அவரின் திரைப்படக் கல்லூரி நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டோம். ""மேட்டூர் அணைக்கட்டு அருகேயுள்ள குளத்தூரில் இருக்கும் நிர்மலா உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்து, பிறகு பதினொன்றாம் வகுப்பில்தான் வெளியே வந்தேன். இப்பள்ளிதான் என்னுடைய வாழ்க்கைக்கு தேவையான அடிப்படைகளையெல்லாம் கற்றுக்கொடுத்தது. இன்று நான் ஒரு பிரபலமாக இருப்பதற்கு என் பள்ளிதான் காரணம்! இந்தப் பள்ளியில் நான் பயின்ற காலங்களை என் வாழ்வின் பொற்காலம் என்றே சொல்லுவேன். ஆறாம் வகுப்பில் படிக்கும்போது பிரதர் பாக்யநாதன் என்ற ஆசிரியர்தான் எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர்களில் ஒருவராக இருந்தார். அதற்கு காரணமும் இருக்கிறது. என்னுடைய திறமைகளை கண்டுபிடித்து அதனை வெளிக்கொண்டு வந்து பட்டைத் தீட்டியவர்களில் முக்கியமானவராகவும், முதலாமானவராகவும் அவர் திகழ்ந்ததால்தான் அப்படி கூறினேன். பாக்யநாதன் ஸôர் பள்ளியில் அறிவியல் பிரிவு ஆசிரியராக இருந்து எங்களுக்கு பாடம் கற்பித்துக் கொண்டிருந்தார். அந்தப் பள்ளியில் நான் சேர்ந்தபோது எனக்கு முதலில் அறிமுகமானவரும் பாக்யநாதன் ஸôர்தான்! ஐந்தாம் வகுப்பு வரை அப்பா, அம்மாவின் வளர்ப்பிலேயே நான் வளர்ந்ததால், ஆறாம் வகுப்பு வந்ததும் ஹாஸ்டலில் சேர்த்துவிடப்பட்டேன். ஹாஸ்டல் வாழ்க்கை எனக்குப் புது அனுபவமாக இருந்தது. வீட்டில் சந்தோஷமாக, சுதந்திரமாகத் திரிந்த நான், ஹாஸ்டலில் சிலரின் கட்டுப்பாட்டுக்குள் வளர்வது எனக்குள் தடுமாற்றத்தை கொண்டுவந்தது. ஆனால், இரண்டு வருடங்களில் நான் ஹாஸ்டல் வாழ்க்கையை விரும்புகிற மாணவனாக மாறிவிட்டேன். அப்போது வகுப்பில் என்னுடைய ஆர்வத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் பாக்யநாதன் ஸôர் மாலை தன்னை வந்து பார்க்குமாறு சொல்லிவிட்டுப் போனார். நானும் அவருடைய அறையில் சென்று அவரைப் பார்த்தபோது, அவர் தனக்கு முன்னால் ஒரு ஹார்மோனிய பெட்டியை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். நான் ஹார்மோனியப் பெட்டியை ஆச்சர்யமும், வியப்பும் மேலிட பார்த்துக்கொண்டு நின்றேன். என்னை அருகில் அழைத்தவர், ஹார்மோனியத்திலுள்ள ஒவ்வொரு கட்டையையும் அழுத்தும்போது ஏற்படும் இசைக்கு ஏற்றவாறு என்னுடைய குரலை மேட்ச் செய்து பாடச் சொன்னார். நானும் அதற்கேற்றவாறு பாடினேன். இப்படியாக அவர்தான் எனக்கு இசைப்பயிற்சி கொடுத்து என்னை ஒரு தேர்ந்த இசைக்கலைஞனாக மாற்றினார். இன்றுவரை அவரிடம் கற்றப் பாடங்கள்தான் என்னுடைய திரைத்துறை வேலைகளுக்கு மிகவும் உதவிகரமாக இருந்து வருகின்றன. இசையின் மீது எனக்கு நாட்டம் வந்ததற்கு காரணம் எங்கள் கிராமத்தில் நடக்கும் கூத்தும், சிலோன் ரேடியோவின் தாக்கமும்தான்! இவைதான் என்னை சர்ச்சில் பாடுமளவிற்கு கொண்டு சென்றது. பள்ளியில் படிக்கும் பாட்டுப் போட்டியில் மட்டுமில்லை. பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளிலும் நான் கலந்து கொள்வதுண்டு. அத்தகைய போட்டிகளில் கலந்துகொள்ள சொல்லி என்னுடைய ஆசிரியர் பாக்யநாதன் ஸôர்தான் ஊக்கமளிப்பார். அத்துடன் நான் கலந்து கொள்ள இருக்கும் போட்டி குறித்தும் பயிற்சியளிப்பார். குறிப்பாக பேச்சுப் போட்டியில் கலந்துகொள்கிறேன் என்றால், பேசும்போது எந்த வாக்கியத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், எந்த இடத்தில் குரல் உயர வேண்டும், எந்த வார்த்தை பேசும்போது மேசையின் மீது குத்த வேண்டும் உள்ளிட்ட டிப்ஸ்கள் எல்லாம் கொடுப்பார். அவர் கொடுத்த பயிற்சியினால் பெரும்பாலான போட்டிகளில் முதல் பரிசைத் தட்டி வந்திருக்கிறேன். எங்களது பள்ளி கிறித்துவ பள்ளி என்பதால் அதற்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கிளைகள் இருந்தது. ஆகவே, அனைத்து கிளைகளில் இருக்கும் பள்ளி மாணவர்களிடையே கலை இலக்கிய போட்டிகள் வைத்து சிறந்த மாணவ, மாணவிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். நான் இத்தகைய போட்டிகள் நடக்கும்போது பெரும்பாலான போட்டிகளில் கலந்து கொள்வேன். அத்தகைய போட்டிகள் பல்வேறு நிலைகளாக பிரித்து நடத்தப்படும். அத்தகைய ஒவ்வொரு நிலையிலும் வெற்றிப் பெற்று சிறந்த மாணவனாக நான் பரிசுப் பெற்றிருக்கிறேன். இந்த வெற்றியின் பின்னால் எல்லாம் பாக்யநாதன் ஸôரின் உழைப்பும், அர்ப்பணிப்பு உணர்வும்தான் இருக்கிறது. அதேபோல பள்ளியில் படிக்கும்போது நாடகம் சிலவற்றையும் போட்டிருக்கிறேன். ஒரு நாடகத்தில் "பொய்யாமொழிப் புலவர்' பாத்திரத்திலும் நடித்திருக்கிறேன். ஆரம்பத்தில் பாக்யநாதன் ஸôர் இயக்கிய நாடகங்களில் நடித்தேன். பின்னர் படிப்படியாக நானே நாடகம் எழுதி நடிக்கவும், பிற வகுப்பு மாணவர்களுக்கு நாடகம் எழுதவும் செய்தேன். இது என் பள்ளி வாழ்க்கையில் மிகவும் முக்கியமான செயல்பாடாகும். பின்னாளில் நான் திரைப்படம் இயக்குவதற்கான தூண்டுகோல் இந்த நாடகங்களிலிருந்துதான் பெற்றிருந்தேன். ஏழாம் வகுப்புக்கு நான் மாறியபோது எனக்கு ஆங்கில வகுப்பை பாக்யநாதன் ஸôர்தான் எடுப்பார். அவர் ஆங்கில பாடத்திற்கான தேர்வு வைத்தால் அந்த தேர்வை நான் மனப்பாடம் செய்து எழுதாமல் என்னுடைய சொந்த அறிவைக் கொண்டு சுயமாக எழுதுவேன். அப்படி ஒருமுறை தேர்வு எழுதியபோது, வகுப்பில் எல்லோருடைய விடைத்தாளைக் கொடுக்கும்போது என்னை எழுந்து நிற்க சொல்லி பாராட்டினார். அந்தப் பாராட்டிற்கு காரணம் நான் சொந்தமாக விடையளிக்க முயற்சித்திருந்ததுதான்! அதேபோல என்னுடைய பள்ளி வாழ்க்கையில் மறக்க முடியாத மற்றொரு சம்பவமும் உள்ளது. அது புத்தகங்களைப் பற்றியது. பள்ளிப் பாடங்களை ஒருபுறம் படித்துக்கொண்டே அப்போது வெளிவந்து கொண்டிருந்த சிறுவர் நூல்களான "வாண்டு மாமா', "கலைமகள்', "சாண்டில்யன் கதைகள்'உள்ளிட்டவற்றையும் வாசிப்பேன். இதன் தாக்கமாக நானே சொந்தமாக "சித்திரக் குள்ளர்கள்' என்னும் நூலையும் எழுதினேன். பன்னிரெண்டு பக்கமுள்ள இந்தப் புத்தகத்தை என்னுடைய சொந்த செலவிலேயே பதிப்பித்தேன். அப்போது எனக்கு புத்தக விற்பனை குறித்தெல்லாம் பெரிய அனுபவம் இல்லையென்றாலும் எங்கள் பகுதியைச் சேர்ந்த ஊர்களுக்கு சென்று அங்குள்ள புத்தகக் கடைகளில் என்னுடைய புத்தகங்களை விற்பேன். அப்படி விற்ற புத்தகங்களின் தொகை என்னுடைய பயணச் செலவுகளுக்கும், சாப்பாட்டுக்குமே சரியாக இருக்கும். அப்போது எங்கள் பள்ளிக்கு தலைமையாசிரியராக இருந்த டோம்னிக் சேவியர் ஸôர் இந்த புத்தகம் வெளிவருவதற்கும், விற்பனை செய்வதற்கும் பக்கபலமாக இருந்தார். அதே சமயத்தில் அந்தப் பள்ளியில் என்னைப் பிடிக்காத ஆசிரியர் ஒருவரும் இருந்தார். பெரும்பாலும் அவருக்கு என்னுடைய செயல்கள் எரிச்சலூட்டுபவையாக இருக்கும். ஆனால், அந்த ஆசிரியர், நான் புத்தகம் எழுதியிருப்பதை அறிந்ததும் என்னை அழைத்துப் பாராட்டினார். மேலும், என் புத்தகத்தை தன்னுடைய வகுப்பில் இருக்கும் மாணவர்கள் வாங்கிக்கொள்ளும்படியும் சிபாரிசு செய்தார். அதுமட்டுமின்றி எனது புத்தகத்தின் பெரும்பகுதியை விற்றும் கொடுத்தார். அதன்பிறகு அவருக்குப் பிடித்த மாணவர்களில் நானும் ஒருவனாக மாறிப்போனேன். பின் நாட்களில் எழுத்தாளர் சாண்டியல்னின் உத்தியைத்தான், நான் இயக்கிய நெடுந்தொடரான "கங்கா யமுனா சரஸ்வதி'யில் பயன்படுத்தினேன். இத்தொடர் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது. தலைமையாசிரியரான டோம்னிக் சேவியர் ஸôர் பள்ளியில் "யார் ஆல் ரவுண்டர்?' என்பதை அறிந்து கொள்வதற்காக மாணவர்களிடையே வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினார். அதில் அதிகமான ஓட்டு எண்ணிக்கையில் ஆல் ரவுண்டராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அன்று எனக்கேற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பதினொன்றாம் வகுப்பு எனது இறுதி வகுப்பு என்பதால் பள்ளியில் தேர்வுகள் தொடங்கி நடைப்பெற்றுக்கொண்டிருந்த ஒரு வேளையில் தலைமையாசிரியரைப் பார்த்து வர சென்றேன். அப்போதுதான் எனக்கு ஒரு உண்மை தெரிந்தது. ""பள்ளியில் நீ சிறந்த மாணவன் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. ஆனால், நான் எந்த வாக்கெடுப்பும் நடத்தாமல் உன்னை தேர்ந்தெடுத்தால் உன் மீதுள்ள அன்பால்தான் உன்னை தேர்ந்தெடுத்தேன் என்று பலரும் கூறுவார்கள். அதனால்தான் அந்த உண்மையை மாணவர்கள் மூலமாகவே செயல்படுத்தினேன்...'' என்றார். மேலும், ""பள்ளியில் நீ நான்கு சுவர்களுக்குள்ளேயே இருப்பதால் நீ சரியாகத்தான் வளர்வாய். ஆனால், மோசமான சூழ்நிலைக்கு மத்தியில் நீ சரியாக இருந்தால் மட்டுமே நீ சிறந்த மாணவன் என்பதை நான் ஒப்புக்கொள்வேன்... மற்றபடி உன் மீது எனக்கு தனிப்பட்ட அக்கறையும் உண்டு. சந்தோஷமாகப் போய் வா...'' என்றார். பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானபோது என்னுடைய தலைமையாசிரியரான டோம்னிக் சேவியர் ஸôர், ""முதலில் சின்னசாமி என்ன மதிப்பெண் வாங்கியிருக்கிறான்?'' என்று கேட்டிருக்கிறார். நான் அந்தத் தேர்வில் அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருந்தபோதிலும் அவர் என்னை ஸ்டேட் ரேங்க் ஹோல்டராக எதிர்பார்த்து, அது நடக்காததால் ""என்னை ஏமாத்திட்டான்யா?...'' என்று கூறி வருத்தப்பட்டிருக்கிறார். இதை பாக்யநாதன் ஸôர் மூலமாக அறிந்த நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். என்னுடைய பள்ளி என்னை சிறந்த மாணவனாக மட்டுமில்லை; ஒரு நல்ல கலைஞனாகவும் உருவாக்கியது. கலை, பண்பாடு, ஒழுக்கம் உள்ளிட்ட எல்லாவற்றையும் எனக்குப் பயிற்றுவித்தது. இந்த பூமியில் மறுபடியும் வாழ ஒரு வாய்ப்பு திரும்ப கிடைத்தால் நான் என் பள்ளிக்கூடத்திற்குத்தான் திரும்பிச் செல்வேன்!

Comments

Popular Posts