சினிமா: 24

லங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் சரமாரியாக குண்டுகள் வீசப்படுகின்றன. திசையெங்கும் மக்களின் மரண ஓலங்கள், பதைபதைப்புகள், அலறல்கள், குழந்தைகளின் அழு குரல்கள். மக்கள் எந்தத் திசை நோக்கி சென்று குண்டுகளிடமிருந்து தப்பித்துக் கொள்வது என்று தெரியாமல் திக்குமுக்காடுகிறார்கள். பலம் வாய்ந்த குண்டு சிங்கள ராணுவத்தால் அந்தப் பூமியில் வீசப்படுகிறது. அந்தப் பூமியெங்கும் குரல்களற்ற மயான அமைதியுடன் மண் புகைந்துகொண்டிருக்கிறது. வீடுகள் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. கணக்கிலடங்கா சடலங்கள் பூமியெங்கும் சிதறிக்கிடக்கின்றன. மனதை நொறுக்கும் பின்னணி இசையோடு திரையை இருள் சூழ்கிறது. பிரான்ஸ் நகரத்தின் குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் பாஸ்கர் என்கிற ஈழ இளைஞனின் கனவில் மேற்கண்ட காட்சிகள் தோன்றி, மறைகின்றன. அவன் படுக்கையிலிருந்து திடுக்கிட்டு எழுகிறான். அறையில் பாஸ்கருடன் தங்கியிருக்கும் மற்றொரு நண்பன் அவன் உறங்காமல் கவலை தோய்ந்த முகத்துடன் இருப்பதன் காரணம் தெரிந்து அவனுக்கு ஆறுதல் கூறுகிறான். மறுநாள் பாஸ்கர் தன்னுடைய ஊரின் நிலைமை குறித்து அறிந்து வர கடைவீதிக்குச் செல்கிறான். அங்கு தெரிந்த நண்பர் ஒருவனிடம் தங்களது நாட்டு போர் குறித்த ஏதேனும் செய்திகள் இருக்கிறதா? என்று கேட்கிறான். அவனிடம் லேட்டஸ்ட் நிலவரங்கள் எதுவும் இல்லாததால் கவலை தோய்ந்த முகத்துடன் உணவகம் ஒன்றில் அமர்ந்திருக்கிறான். அன்றிரவு அவனுடைய அறையில் இருக்கும் நண்பனின் செல்பேசிக்கு வரும் அழைப்பில் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் யுத்தம் மிக மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மனதில் தன் தாய்நாட்டுப் பற்றிய ஏக்கங்களுடன் அவன் வேலைப் பார்க்கும் சூப்பர் மார்க்கெட்டிற்கு செல்கிறான். அங்கே அவனுடைய வேலையில் கவனம் சிதறுவதால் அவனுடைய மேற்பார்வையாளர் அவனின் நிலைமைக் குறித்து கேட்கிறார். தன்னுடைய நாட்டு நிலவரம் பற்றிக் கூறி விடுப்பு கேட்கிறான். அவனுக்கு ஒரு நாள் மட்டுமே விடுப்பு கிடைக்கிறது. அந்த ஒரு நாளில் அவன் நகரத்தின் பல இடங்களில் சுற்றியலைகிறான். தன்னுடைய ஊர் குறித்து ஏதேனும் செய்திகள் வந்திருக்கிறதா? என்று பலரிடம விசாரிக்கிறான். அவனுக்கு விடை கிடைக்கவேயில்லை. பிறகு, ஒரு வழியாக பிரான்ஸ் நகரத்தில் வாழும் மற்ற தமிழர்களிடம் நிலவரம் குறித்து விசாரிக்கிறான். அவர்கள் கடைசியாக வந்த நிலவரப்படி முள்ளிவாய்க்கால் பகுதியில்தான் குண்டு விழுந்ததாதாகவும், பலர் அதில் இறந்திருக்காலம் என்றும் கூறுகின்றனர். பாஸ்கர் மேலும் கலவரமடைகிறான். தமிழ் நாளிதழ்களில் ஏதேனும் செய்திகள் வெளிவந்திருக்கிறதா? என்று தேடிப் பார்க்கிறான். ஆனால், அவையெல்லாம் பழைய செய்திகளாகவே இருக்கின்றன. அன்றிரவு தொலைக்காட்சியில் இலங்கை யுத்தம் குறித்த செய்தியைப் பார்க்கும் பாஸ்கர் அதிர்ச்சியடைகிறான். தன்னுடைய குடும்பம் அதில் என்னவாகியிருக்கும்? என்று அவன் மனம் பதற்றமடைகிறது. உடனடியாக அந்தப் பகுதியில் இருக்கும் ஃப்ரவுசிங் சென்டருக்கு செல்லும் பாஸ்கர் இணையத்தில் தன்னுடைய குடும்பம் குறித்த செய்திகள் ஏதாவது வெளிவந்திருக்கிறதா? என்று தேடிப்பார்க்கிறான். ஆனால், எந்த செய்தியும் அவனுக்கு கிடைக்கவில்லை. சோர்வுடன் வீடு திரும்புகிறான். அந்த இரவில் அவனுடைய நண்பனின் செல்பேசிக்கு ஒரு அழைப்பு வருகிறது. அதில் அவனுடைய தம்பி இறந்து விட்டதாக கூறப்படுகிறது. பாஸ்கரன் உடைந்து போய் அழுகிறான். இந்தக் காட்சியின் பின்னணியில் ""எங்கள் தேசத்தில் இடி விழுந்தது ஏனம்மா...'' என்ற மனதைப் பிழியும் பாடல் ஒலிக்கிறது. அந்த இசை அவர்கள் வாழ்வின் மீதான எண்ணற்ற கேள்விகளை நம் மனதில் தட்டிய வண்ணம் இருக்கிறது. தனது தம்பியின் புகைப்படத்திற்கு மாலையிட்டு, மெழுவர்த்தி ஏற்று துக்கம் அனுசரிக்கும் அவனை அந்தப் பகுதியைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் சிலர் வந்து அவனுக்கு ஆறுதல் சொல்லுகிறார்கள். மறுநாள் எந்தவித நிபந்தனையுமின்றி விடிகிறது. பிரான்ஸின் தெருக்களில் தமிழ் இளைஞர்கள் தமிழீழ கொடியை கைகளில் ஏந்தி உற்சாகத்துடன் நடந்துகொண்டிருக்கிறார்கள். பாஸ்கரனுக்கு தன்னுடைய அம்மா, அப்பா,தங்கைகளின் நிலவரம் என்னவானது? என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறான். ஆனால், அவனுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவன் மனம் பல வகைகளிலும் அலைகழிக்கப்படுகிறது. சோர்வுடன் வீடு திரும்பி, ஆடை மாற்றும் போது அறையிலிருக்கும் தொலைபேசி ஒலிக்க, அதை எடுப்பதற்குள் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. பதற்றமடையும் அவன் தனக்கு நெருக்கமான உறவினர்கள் அனைவரிடமும் விசாரிக்கிறான். அவனுடைய தாயைப் பற்றிய எந்த செய்தியும் இல்லை. கவலை தோய்ந்த முகத்துடன் படுக்கறையறைக்குச் செல்லும்போது மறுபடியும் தொலைபேசி அழைப்பு மணி ஒலிக்கிறது. பெருத்த எதிர்பார்ப்புடன் தொலைபேசியை எடுத்து பேசும்போது எதிர்முனையில் இறந்துபோனதாக நினைக்கும் தம்பி பேசுகிறான். அவனின் குரலைக் கேட்கும் பாஸ்கருக்கு வார்த்தைகள் வெளியேறாமல் நாவினுள்ளே சிக்கித் திணருகின்றன. தம்பியின் நலம் குறித்து கேட்கும் பாஸ்கரின் இதயம் விம்மிப் புடைக்கிறது. ""போங்கண்ணே...அப்பா, அம்மா, தங்கச்சிமார்கள் எல்லாம் செத்துட்டாங்கண்ணே...வலி பொறுக்கலைண்ணா...'' என்று அலறுகிறான். பாஸ்கருக்கு தன் தம்பியிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை? துயரத்தில் பெருங்குரலெடுத்து அழுகிறான். தம்பியின் புகைப்படத்தின் மீதிருந்த மாலைகளை கழற்றி வீசுகிறான்...அவன் கையிலிருந்து தொலைபேசி அவனின் கைகளிலிருந்து நழுவி தரையில் விழுகிறது. தொலைபேசியில் துயரம் தோய்ந்த அவனின் தம்பியின் குரல் ஒலித்துக்கொண்டேயிருக்க...பின்னணியில் இப்படியொரு பாடல் வருகிறது ""நம் தேசத்தை காண நாம் போகலாம்...அது மறுபடியும் உயர்ந்து நிற்பதை நாம் காணலாம்...'' பாஸ்கர் அழுதபடியே இருக்கிறான். நம்பிக்கை மிகுந்த பாடலின் வரிகளின் பின்னணியில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது! வெடிகுண்டுகளின் சப்தத்தில் அம்மக்கள் அலறித் துடித்து மடிவதோடு படம் துயரத்தைத் தாங்கி முடிவடைகிறது.
விமர்சனம்: இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் பிரான்ஸ் தமிழர்கள் ஆண்டுதோறும் குறும்பட விழாக்களை நடத்துகிறார்கள். இப்பட விழாவில் இலங்கையின் நெஞ்சைப் பிழியும் பல துயரக்கதைகள் குறும்படங்களாக உருவாக்கப்படுகின்றன. ஈழத் தமிழர்களின் வாழ்வியல் சூழல், போர்க்காலங்களில் அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல்கள், ஏக்கங்கள், நிராசைகள், புறக்கணிப்புகள், பிரச்சினைகள் உள்ளிட்ட பலவும் கதைகளாக்கப்பட்டிருக்கின்றன. அவைகளை கதைகள் என்பதை விட வாழ்வின் துயரம் மிகுந்த தருணங்கள் என்று சொல்வதே சாலச் சிறந்ததாக இருக்கும். அந்தவகையில் உருவாக்கப்படும் படங்களிலிருந்து சிறந்த கதைக் கருக்களை கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து அவற்றிக்கு "சங்கிலியன் விருது' என்ற பெயரில் கொடுத்து கெüரவிக்கிறார்கள். இந்த விருதை தேர்வு செய்ய தமிழகத்திலிருந்து ஓவியர் ட்ராஸ்ட்கி மருது அழைக்கப்பட்டிருந்தார். அவர் தேர்ந்தெடுத்த படங்களில் ஒன்றுதான் "ஈர விழிகள்'. இப்படத்தின் திரைக்கதையை எழுதி, இயக்கியதோடு, நடிக்கவும் செய்திருப்பவர் பாஸ்கர். இப்படம் சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular Posts