ஏன் தோழர் எல்லோரும் மெüனமாகவே இருக்கிறோம்...?


தாய்மண்ணை விட்டுவிட்டு நகரம் தேடிப் பிழைக்கச் சென்ற மனிதர்களின் வாழ்க்கை துயரத்தின் கைப்பிடித்து எழுதிய கவிதை வரிகளாகத்தான் காட்சியளிக்கின்றன. ஆயிரம்தான் சொர்க்கத்தின் வாயிலாக நகரம் சொல்லப்பட்டாலும் பிறந்த மண்ணில் புரண்டு எழுகிற சுகம் உண்டா? இயற்கையின் மீதும், வாழ்வின் மீதும் மிகுந்த நேசம் கொண்ட கவிஞர் ஒருவரை எமக்குத் தெரியும். அவர் வாழும் சூழல் எந்தவொரு கவிஞனுக்கும் வாய்க்கப் பெறாதது. சக மனிதன் ஒவ்வொருவரையும் அன்பின் கை கொண்டு அனைத்துக்கொள்ளும் பேர்வழி. சமீபத்தில் அவருடைய வீட்டில் ஒரு நாள் மட்டும் தங்க வேண்டிய சூழல் உருவானது. சென்னையிலிருந்து சுமார் ஆறு மணி நேர பயணம் செய்து அவருடைய கிராமத்திற்கு செல்லும் ஒரு பேருந்து நிலையத்தை அடைந்தோம். கொட்டும் பனியிலும் பேருந்து நிலையத்தில் யாருமற்று, தனிமையில் எம் வருகைக்காக காத்திருந்ததைக் கண்டபோது இன்னும் மனிதம் சாகாமல் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது என்று தோன்றியது. அவர் வீட்டையடைந்தபோது பின்னிரவு பனி அதிகமாகப் பெய்யத் தொடங்கி சாலைகளை நனைத்துக் கொண்டிருந்தன. சுற்றியிலும் வயல் வெளிகள் நிரம்பிய ஓர் அமைதியான இடத்தில் அவர் தன் வீட்டை மிக எளிமையான முறையில் கட்டியிருந்தார். விடியலுக்கு இன்னும் சில மணித்துளிகளே இருந்ததால் இருவரும் உறங்கச் சென்று விட்டோம். அதிகாலையில் எழுந்தபோது நண்பர் அருகில் இல்லை. அவர் முன்பே எழுந்து, தன்னுடைய பணிகளை கவனிக்கத் தொடங்கியிருந்தார். பிறகு, நம்மை அழைத்துக்கொண்டு வீட்டின் பின்புறத்திலுள்ள மணல் புதற் காட்டுக்கு அழைத்துச் சென்றார். இருவரும் சமகால இலக்கிய நிகழ்வுகள் குறித்து பேசிக்கொண்டே காட்டின் பாதையில் நடக்க ஆரம்பித்தோம். சில நிமிடங்களில் எனது பேச்சு மிக விரைவாகவே முடிவுக்கு வந்துவிட்டது. காட்டின் ரம்மியமான அமைதியின் அழகில் நாம் பேச்சற்று நின்று கொண்டிருந்தோம். நண்பர் புரிந்து கொண்டு காட்டின் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் குறித்து காட்டமாக பேச ஆரம்பித்தார். பிறகு, இருவரும் நடந்து காட்டின் இடையே ஓடும் ஒரு சிற்றோடையை அடைந்தோம். தெளிந்த நீரைக் கொண்ட அந்த சிற்றோடையில் நெத்திலி மீன் குஞ்சுகள் தங்களது மனம்போன போக்கில் சுதந்திரமாக நீந்திக் கொண்டிருந்ததைக் கண்டபோது மனம் நகரம் கொடுக்கும் மன இறுக்கத்தை எண்ணி கவலை கொண்டது. சிற்றோடையில் இறங்கினோம். ஓடையின் நீர் மிக குளிர்ந்த நிலையில் கால்களை இறுகப் பற்றிக்கொண்டு ஆறுதல் வார்த்தைகளால் கழுவிச் செல்வது போல் தோன்றியது. நீண்ட நாட்களாய் மனதை அழுத்திக்கொண்டிருந்த பாரங்கள் எல்லாம் உடைந்து அந்த நீரோடையில் நழுவிச் செல்வதையும் உணர்ந்தோம். ஆலயத்திற்குள் சென்று வந்த பக்தன் போல நாம் காட்டினுள்ளே இருந்து வெளியே வந்தோம். மனம் காற்றில் பறக்கும் மெல்லிய மயிலிறகைப் போல மிதந்த வண்ணம் இருந்தது. அன்றிரவு நண்பர் பேருந்து நிலையத்தில் வண்டியேற்றிவிட உடன் வந்தார். பேருந்து வர சில மணித்துளிகள் இருந்தன. நண்பர் துபாயில் தான் சில காலங்கள் பொருளாதார தேவையின் பொருட்டு பணியாற்ற வேண்டியதன் நிர்பந்தம் குறித்தும், துயரம் அப்பிய அவ்வாழ்வு குறித்தும் பேசிக்கொண்டிருந்தார். சட்டென்று அவரிடம் ""நீங்கள் கொடுத்து வைத்தவர் தோழர்...'' என்றேன். ""நாம் எல்லோருமே கொடுத்து வைத்தவர்கள்தான். ஆனால், அங்கே நம் சொந்தங்கள் பிறந்த மண்ணிலேயே வாழ வழியில்லாமல் போயிருக்கிறதே...அவர்களுக்குத்தான் கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது. வளம் கொழிக்கும் மண்ணை நிர்முலமாக்கி, கன்னிவெடி காடுகளாக்கிவிட்டார்களே! இது யார் செய்த தவறு? எனக்கு உறக்கம் கெட்டு பல நாட்களாகி விட்டது. ஏன் தோழர் எல்லோரும் னமாகவே இருக்கிறோம்...?'' கவிஞரின் குரல் உடைந்துவிட்டது. அதிகாலையில் சென்னையை அடைந்து பரபரப்பு வாழ்வுக்குள் சிக்கும் வரை அவரது குரல் ஒலித்துக்கொண்டே இருந்ததை மறுக்க முடியாது நண்பர்களே!

Comments

Popular Posts