வாசிப்பின் வாசல்

டலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள கம்மாபுரத்தில்தான் நான் பிறந்தேன். தந்தை விவசாயி மற்றும் நாடகக் கலைஞராக இருந்தார். அதிகம் மதுவோடு தொடர்பு வைத்திருந்தார். எனது பத்து வயது வரை அம்மா வழி தாத்தாவின் வீட்டில் வளர்ந்தேன். செல்வச் செழிப்புடன் வாழ்ந்த தாத்தா அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராகவும் இருந்தார். ஐந்தாம் வகுப்பு வரை அந்தக் கிராமப்பள்ளியிலேயேதான் படித்தேன். ஆறாம் வகுப்புக்கு நானே ஏற்படுத்திக்கொண்ட சில சிக்கல்களால் என்னுடைய தந்தையிடம் அனுப்பப்பட்டேன். மிகவும் கொடிய நாட்கள் அவை. அப்பாவும், அம்மாவும் என் மீது நேசமற்றவர்களாக இருந்தார்கள். அந்த வீடு எனக்கு அந்நியமாகவே இருந்தது. இன்றுவரையும் அப்படித்தான் இருக்கிறது. அப்பா என்னை குடித்துவிட்டு வருகிற போதெல்லாம் அடிக்கச் செய்யுவார். அம்மாவும் தடுக்க வந்து அதிகம் அடி வாங்குவாள். அவரிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்காக நாங்கள் அக்கம் பக்கத்து வீடுகளில் தஞ்சமடைவோம். நடுநிசியில் வீட்டில் யாருக்கும் தெரியாமல் நுழையும் திருடனைப் போல அம்மாவுடன் வீட்டினுள் நுழைவேன். புறக்கணப்பின் மீதான வலி மனதில் எப்போதும் நிழலாடிக்கொண்டேயிருக்கும். எதையாவதுப்பற்றிக்கொண்டு அந்த வீட்டிலிருந்து வெளியேறி விட திணறிக்கொண்டிருந்தேன். குடிக்கு அடிமையான தந்தையின் செயல்களால் குடும்பமும், நானும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தோம். குடும்பத்தை வறுமை ஆக்டோபஸ் போல பீடித்திருக்க இரு வேளை சோற்றுக்கு திண்டாடினோம். தாத்தாவின் வீடுதான் எங்கள் உயிரை காப்பாற்றி வந்தது. கம்மாபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியில் படிக்கும்போது அரசால் வழங்கப்படும் இலவச வேட்டி வருடந்தோறும் எனக்கு இரண்டு, மூன்று சட்டைகளாகி விடும். அதை மிக கெüரமாக அணிந்து கொண்டு பள்ளிக்குச் செல்வேன். முதல் மதிப்பெண்ணின் மீதான மோகத்தில் சக நண்பன் மாரிமுத்துவுக்கும் எனக்கும் அடிக்கடி மோதல் வெடிக்கும். பெரும்பாலும் அதில் தோற்றுப்போவது என்னுடைய சட்டையாகத்தான் இருக்கும். அந்த சட்டையை தைப்பதில்தான் பெரிய சிக்கலிருக்கும். காரணம், அந்த ஆடை மிக மிக மெல்லிய நூலிழையால் பிண்ணப்பட்டது என்பதுதான். தையற்கடைக்காரர் ஒவ்வொரு முறை சட்டை கிழியும் போதும் எந்த வசைபாடும் இன்றி மனமுவந்து தைத்துக் கொடுப்பார். அப்படியான ஒரு மோதலின் போது எங்களை விலக்கி விட வந்த செட்டியார் வீட்டுப் பையனான வெங்கட் ரமணி எனக்கு நண்பனான். எங்கள் வகுப்பிலேயே நல்ல திடகாத்திரமான பெரிய மாணவன் அவன்தான், பள்ளி நாட்களில் என் மீது மிகுந்த நேசம் கொண்டிருந்தான். அழகான கையெழுத்தைக் கொண்டிருந்த என்னுடைய நோட்டுப் புத்தகத்தை வீட்டுக்கு இரவல் வாங்கிச் சென்று எழுதி வருவான். பதிலுக்கு அவனிடமிருந்து தின்பதற்கு ஏதாவது கிடைக்கும். மதிய உணவு இடைவேளையில் பள்ளியில் வழங்கப்படும் இலவச உணவை உண்ண மனமின்றி பெரும்பாலும் அவனுடைய சாப்பாட்டு கூடையை நான்தான் காலி செய்திருக்கிறேன். அவனுடைய தந்தை எங்களது பள்ளியின் எதிரே மளிகைக் கடையை வைத்திருந்ததும் என்னுடைய உணவுத் தேவையை ஓரளவிற்கு பூர்த்தி செய்தது. பசியிலிருந்து சற்று இளைப்பாறுகிற இடமாக ரமணி எனக்கு இருந்தான். ஒருமுறை வகுப்பு நடந்துகொண்டிருந்தபோது ரமணி ஏதோ ஓர் புத்தகத்தை மறைத்து வைத்துக்கொண்டு படிப்பதை கண்டுபிடித்த வகுப்பாசிரியர் அவனை பிண்ணியெடுத்துவிட்டார். வகுப்பில் அதிகம் உதைவாங்கும் மாணவனாக ரமணி எப்போதும் முதலிடத்திலேயே இருந்தான். பிறகு, ஒரு மதிய உணவு இடைவேளையில்தான் அவன் மறைத்து வைத்திருந்த புத்தகத்தை நான் காண நேர்ந்தது. அது "ராணி காமிக்ஸ்' வாரம் இருமுறை வெளிவரும் இதழ். அதில் "மாயாவி' என்கிற முகமூடி மனிதனின் அட்டைப்படம் போட்டிருந்தது என்னைக் கவர்ந்தது. வகுப்பாசிரியருக்கு தெரியாமல் இருப்பதற்காக அந்தப் புத்தகத்தை நான்தான் என்னுடைய பையில் மறைத்து வைத்திருந்தேன். மறதியாய் அதை வீட்டுக்கும் கொண்டு வந்து விட்டேன். அன்றைய இரவில் மண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் ராணி காமிக்ûஸ எடுத்து வாசிக்க ஆரம்பித்தபோது முற்றிலும் ஒரு புதிய உலகத்திற்குள் நான் அந்தக் காமிக்ஸின் வழியாக நடந்து செல்வதை உணர்ந்தேன். வாசிக்கும்போது என்னுடைய துயரம் மிகுந்த வாழ்வின் கசப்பான நினைவுகள் எதுவும் என்னிடம் இல்லாமல் அங்கே நான் அனைத்து திறமைகளும் நிரம்பிய நாயகனாக உலவிக்கொண்டிருந்தேன். வாசிப்பின் முதல் ருசியை அடைந்த எனக்கு தொடர்ந்து இரண்டு வருடங்கள் ஏராளமான ராணி காமிக்ஸ் இதழ்களை வாங்கி வந்து ரமணி கொடுப்பான். அந்தப் புத்தகம் என்னுடைய பாடப் புத்தகம் கொடுக்காத பல வாசல்களை எனக்குள் திறந்து விட்டுக்கொண்டேயிருந்தது. என்னை புத்தகங்களுக்குள் கைப்பிடித்து அழைத்து வந்தவன் ரமணிதான். அதன்பிறகு, பாலகுமாரன், ஓஷோவின் வழியாக பிரபஞ்சனை வந்தடைந்தேன். உளுந்தூர்ப்பேட்டையில் தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்துக்கொண்டிருந்தபோது ஓவியர் செங்குட்டுவன் அண்ணன்தான் "ஆனந்த விகடன்' இதழை அறிமுகப்படுத்தினார். என் வாசிப்பிற்கான திறவு கோலாக அந்த இதழ் அமைந்தது. விருத்தாசலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிரென்டாம் வகுப்பு படித்தபோது "ராகா ஆர்ட்ஸ்' ரமேஷ் அண்ணனிடம் பகுதி நேரமாக அவர் கடையில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவருடைய வீட்டில் ஏராளமான புத்தகங்கள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இளையராஜாவும், வைரமுத்துவும், ஓஷோவும் அவருடைய நூலகங்களில் அதிகமான இடங்களைப் பிடித்திருந்தார்கள். இரவில் அவர் வீட்டில் ஓர் இரவு தங்க நேர்ந்தபோது வைரமுத்துவின் "தண்ணீர் தேசம்' நாவலைக் கொடுத்து வாசிக்க சொன்னார். அந்தப் புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கிய நான் புத்தகத்தை முடிக்கும்போது ஏறக்குறைய விடிந்திருந்தது. அந்த நாவல் கொடுத்த பரவசம் என் உடல் எங்கும் வியாபித்திருந்தது. பருவத்தின் சேட்டைகளில் சிக்கியிருந்த எனக்கு அந்தப் புத்தகம் மாபெரும் மனக்கிளர்ச்சியை எனக்குள் உருவாக்கிவிட்டிருந்தது. அவருடைய புத்தக அடுக்கில் இருந்த வைரமுத்துவின் நாவல்களையும், கவிதைகளையும் வாசித்து முடித்தபோது வாசிப்பின் தாகம் அதிகரித்திருந்தது. பிறகுதான், நண்பன் செந்தில் மூலமாக எங்களூரில் அமைந்திருந்த நூலகத்திலிருக்கும் புத்தகங்களை மேய ஆரம்பித்தேன். பாலகுமாரன், சுஜாதா, ஸ்டெல்லா புரூஸ், பிரபஞ்சன் போன்றவர்களின் நாவல்கள் அறிமுகமாகத் தொடங்கின. ஆனந்த விகடனை தொடர்ந்து வாசித்ததன் விளைவாக பல கலை, இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய விவரங்கள் தெரியத் தொடங்கின. அந்த சமயத்தில்தான் சென்னையில் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்வதற்கான அனுமதி கடிதம் வீட்டிற்கு வந்தது. என் வாழ்வின் போக்கை மாற்றியமைத்த நாளும் அதுதான்! சென்னை - சைதாப்பேட்டையில் உறவினரான பி.ஆர்.மகேந்திர பூபதி அண்ணனோடு தங்கிக்கொண்டு கிண்டியிலிருந்த எவரெடி இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் தொழிற்பழகுநராக பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தேன். புதிய இடம், புதிய மனிதர்கள் என்பதால் தனிமை வெகுவாக என்னிடம் நட்பு கொண்டிருந்தது. தனிமையைப் போக்கிக்கொள்ள சைதாப்பேட்டையின் வீதிகளை சுற்றி வருவேன். அப்படி வீதிகளில் அலைந்தபோது ஜோன்ஸ் சாலையில் தீக்கதிர் நாளிதழ் அலுவலகத்தின் கீழ் பாரதி புத்தகாலயம் எனும் புத்தகக் கடை என்னை வசீகரித்தது. பல நாட்கள் வெளியில் நின்று வேடிக்கைப் பார்த்துவிட்டு சென்று விடுவேன். ஒருமுறை பையில் கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு கடைக்குள் சென்று புத்தகங்களை பார்வையிட்டேன். முற்றிலும் இதுவரை நான் அறியாத எழுத்தாளர்களின் புத்தகங்கள், இதழ்கள், சிற்றிதழ்கள் என மிக நேர்த்தியாக புத்தகக் கடை அமைந்திருந்தது. அன்று எந்தப் புத்தகத்தையும் வாங்காமலேயே திரும்பி வந்தேன். கடையிலிருந்தவரும் என்னை ஏன் புத்தகம் எதுவும் வாங்கவில்லை? என்று கேட்காதது ஆச்சர்யமாக இருந்தது. பிறகு, டிக்கடி அந்தப் புத்தகக் கடைக்குள் சென்று புத்தகங்களைப் பார்த்தும், தொட்டும், எடுத்து சில பக்கங்களை வாசித்தும் ஆனந்தமடைந்தேன். என தனிமையை விரட்டியடிக்கும் இடமாக "பாரதி புத்தகாலயம்' மாறிப்போனது. அப்போது அங்கே விற்பனையாளராக இருந்த கவிஞர் மணிவசந்தம் ஒரு அழைப்பிதழை என் கையில் கொடுத்து, ""ஓய்வாக இருந்தால் இந்த நிகழ்ச்சிக்கு வாருங்களேன் தோழர்...'' என்றார். அவருடைய பேச்சிலிருந்த குழைவு என்னை வசீகரித்தது. தோழர் என்ற சொல்லும் எனக்குப் புதியதாக இருந்தது. அந்த அழைப்பிதழை வாங்கிப் பார்த்தேன்...தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் கலை இரவு 2005 என்று சிகப்பும், வெள்ளையும் கலந்த நிறத்தில் அந்த அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டிருந்தது. அழைப்பிதழில் உள்ள சில கலை இலக்கிய ஆளுமைகள் "ஆனந்த விகடன்' மூலமாக அறிமுகமானவர்களாக இருந்தார்கள். அந்த நிகழ்ச்சிக்கு சில நாட்கள் இருந்த நிலையில் மற்றொரு நாள் அங்கே சென்றபோது அந்தக் கடை வாசலில் நான் வைத்திருக்கும் அழைப்பிதழ் போலவே ஏராளமான அழைப்பிதழை வைத்துக்கொண்டு சிலர் அமர்ந்து காரசாரமாக பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய பேச்சிற்கும் அவர்களுடைய உருவத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. நான் தயக்கத்துடன்தான் கேட்டேன்...""ஸôர்... இந்த தமுஎசவில் மெம்பராக நான் என்ன செய்யணும்?'' அவர்கள் என்னை ஆச்சர்யத்துடன் நிமிர்ந்து பார்த்தார்கள். உன் பெயரென்ன? என்று சற்று குரல் உயர்த்தி அவர் கேட்டார்...""கிராபியென் ப்ளாக்'' என்றேன். ""உன் இயற்பெயரைச் சொல்லு...' இயற்பெயரும் அதுவேதான் என்றேன். தன்னுடைய செல் நம்பரை என்னிடம் கொடுத்து ""இந்த நம்பருக்கு போன் பண்ணிவிட்டு வா...''என்றார். இப்போது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தில் தென் சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக இருக்கிறேன். இதோ என்னுடைய இரண்டு கட்டுரைத் தொகுப்புகளை "பாரதி புத்தகாலயம்' வெளியிடுகிறது. மனம் ஆனந்தத்தில் திளைத்து நிற்கிறது. அன்று அந்த வாசிலின் கீழேயிருந்து என்னை இலக்கிய உலகிற்குள் அழைத்து வந்தவர் வேறு யாருமில்லை தோழர் ராமுதான். அவருடன் விவாதத்தில் இருந்த சைதை.ஜெ, சூர்யசந்திரன் போன்றவர்கள் பின்னாட்களில் என்னை வளர்த்தெடுப்பவர்களாக ஆனார்கள். பாரதி புத்தகாலயத்தில் வேலைப் பார்த்த கவிஞர் மணிவசந்தம் எம்.ஜி.ஆர். நகரில் வசித்த சு.பாரதிகண்ணனிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். என் வாழ்வின் போக்கை மாற்றியமைக்கப் போகிற "பிதாமகன்' அவர் என்று அன்றைய சந்திப்பு சொல்லவேயில்லை. பாரதிகண்ணன் என்னுடைய வாசிக்கும் திறனைப் பார்த்துவிட்டு ஏராளமான நூல்களை தேர்ந்தெடுத்து வாசிக்க கொடுத்தார். "புதுமைப்பித்தன் சிறுகதைகள்' முழுத் தொகுப்பு தொடங்கி ஆதவன் தீட்சண்யா வரை பல எழுத்தாளர்களின் புத்தகங்களை அறிமுகப்படுத்தி வைத்தார். ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அவரிடம் கலை இலக்கியப் பயிற்சியை மேற்கொண்டேன். அவர் வீட்டிலேயே உண்டு, படித்து, விவாதித்து அறிவை வளர்த்துக்கொண்ட நாட்கள் அவை. மார்க்சியப் பார்வையும், இலக்கிய கோட்பாடுகளையும் அவர்தான் புரியும்படி எனக்கு சொல்லிக்கொடுத்து எழுதவும் ஊக்கமளித்தார். கவிஞர் சா.இலாகுபாரதி பத்திரிகையாளர் அ.குமரேசனிடம் அறிமுகப்படுத்திவைத்து "வண்ணக்கதிர்' இதழில் சிறுகதைகளுக்கும், கவிதைகளுக்கும் ஓவியம் வரைய வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். பிறகு, தோழர் அ.குவின் சிஷ்யப் பிள்ளையாக மாறிப்போனது தனிக் கதை. தமுஎகச வின் மூலமாக அறிமுகமான எழுத்தாளர் அஜயன்பாலா பல்வேறு இலக்கிய அமைப்புகளை அறிமுகப்படுத்தி வைத்து, இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராக சேர்வதற்கு காரணமாக இருந்தார். அவருடைய எழுத்துக்களின் மீது எனக்கு ஒரு தனிச்சுவை இருந்தது. "மார்லன் பிரான்டோ'வும், "வான்கா'வும் அவருடைய எழுத்தின் வாயிலாக என்னை ஆட்கொண்டார்கள். அண்ணன் அறிவுமதியிடமிருந்து கலை இலக்கியத்துற்குள் மிகப் பெரிய ஆளுமைகள் பரிணமித்தது போல இன்று எங்களுக்கு அண்ணன் அஜயன்பாலாவின் இருப்பிடமே சாந்தி நிகேதனாக இருக்கிறது.

Comments

Popular Posts