எஸ்.ராமகிருஷ்ணனும் திரை இலக்கியமும் - (3)

மாணவர்: தமிழ் சினிமாவில் வட்டார வழக்கு என்றாலே மதுரை, திருநெல்வேலி, சென்னை போன்ற வழக்கு மொழிகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதுவும் வசன உச்சரிப்பில் மட்டுமே வேறுபாடு காட்டுகிறார்கள். அந்தப் பகுதி மக்களின் வாழ்வியல் மற்றும் சூழல் சம்பந்தமாக அவர்கள் மட்டும் பயன்படுத்தும் சொற்களை யாரும் பயன்படுத்துவதில்லையே. இதற்கு காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? எஸ்.ரா: வட்டார வழக்கு என்பது ஒரு நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்களின் பண்பாடு மற்றும் மொழி சார்ந்தது. அதில் நிறைய கிளைகள், உட்பிரிவுகள் இருக்கின்றன. சினிமா அதுபோன்ற கிராமிய பண்பாடு, கலாச்சாரம் சார்ந்து வட்டார வழக்கை அறியவில்லை. அதை கதைக்களத்தின் மாறுபாட்டிற்காகவே எடுத்து கொள்கிறார்கள். அதிலும் சாதிய கூறுகளே முதன்மைப்படுத்தப்படுகின்றன. ஆகவே வட்டார வழக்கு என்பது தனியாக ஒரு மொழியால் மட்டுமே சாத்தியமாகிவிடாது. பழைய கறுப்பு வெள்ளை படங்களை பாருங்கள் அதில் வரும் கிராமம் என்றாலே குடிசை வீடு, பண்ணையார் வீடு, வயல், களத்து மேடு என்று எளிமைப்படுத்தப்பட்டிருக்கும். அதிலிருந்து விலகி நிஜமான கிராமங்களை சினிமாவில் பாரதிராஜாவின் வருகையின் பின்பே காண முடிந்தது. இப்போதும் கிராமிய வாழ்வு திரையில் சரியாக பதிவாகுவதில்லை. தருமபுரி, ராமநாதபுரம், கடலூர் மாவட்ட கிராமங்கள் ஏன் சினிமாவில் வருவதேயில்லை? அங்கே கதைகள் இல்லையா? அல்லது அவை வேறு மாநிலத்தை சேர்ந்தவையா? நான் உண்மையில் வட்டார வழக்கு என்ற பெயரில் அந்த ஊர்களின் பண்ணையார்களை, ரெüடிகளை, குற்றவாளிகளையே அதிகம் திரையில் காட்டியிருக்கிறோம். எளிய மனிதனின் வாழ்க்கை இன்னும் திரையில் வரவில்லை. புதுமைபித்தன் கதையில் வரும் நெல்லை பேச்சு போல, கி.ராஜநாராயணன் கதையில் வரும் கரிசல் கிராமமும் பாஷையும் போல இப்போதும் திரையில் வரவேயில்லை. பொதுவாக சினிமாவில் வட்டார வழக்கு ஏன் தேவைப்படுகிறது என்றால் அந்தக் கதாபாத்திரம் வட்டார வழக்கை பேசும்போது வேறு ஒரு கலாச்சாரத்தை சேர்ந்தவன் என்கிற பிம்பம் கிடைக்கும் என்பதால்தான்! அதில் பாதி வணிக நோக்கு. ஓரளவிற்கு தமிழ் சினிமாவில் பெரும்பாலான வட்டார வழக்குகளை பயன்படுத்தி பார்த்து, வெற்றியடைந்தவர் கமல்ஹாசன் மட்டுமே! தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பான்மையான பிராந்திய வட்டார வழக்குகளை அவர் திரையில் பயன்படுத்திப் பார்த்திருக்கிறார். அது சரியாகவும் அமைந்திருக்கிறது. ஆனால், இன்று கிராமங்களிலே ஆங்கிலப் பள்ளிகள் வந்துவிட்டது. மம்மி டாடி கலாச்சாரம் ஏற்பட்டு விட்டது. டி.வி. பார்க்கிறார்கள். எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார்கள். இன்று தாய் ஒரு ஊரில் பிள்ளைகள் ஒரு ஊரில், ஒரு நாட்டில் என பல கலாச்சார கூறுகள் வீட்டிறக்குள் வந்துவிட்டன. இதில் எந்த வட்டார வழக்கு இருக்கிறது. மாணவர்: சாதிய கூறுகளை சினிமா சரியாக அடையாளம் காட்டியிருக்கிறதா? எஸ்.ரா: இல்லை என்றே சொல்வேன். மாறாக, சாதிய பெருமைகளை சினிமா உருவாக்கியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சாதி வீரமானது என்று பல்வேறு சாதியை சேர்ந்த இயக்குநர்கள் ஏன் படங்களை உருவாக்குகிறார்கள் என்று வியப்பாக இருக்கிறது. சாதிய அடக்குமுறை, சாதிய கட்டுப்பாடுகள் இன்றும் கிராமத்தில் இருக்கின்றன. சொல்லப்போனால் முன்பை விட தற்போது சாதி வலிமையாகியிருக்கிறது. அமெரிக்காவில் வேலை செய்யும் படித்த நமது ஊர் இளைஞன் சொந்த சாதி பெண்தான் வேண்டும் என இணையத்தில் விளம்பரம் தருகிறான். அதுதான் வேதனையாக இருக்கிறது. உத்தப்புரத்தில் தடுப்பு சுவர் கட்டி தீண்டாமை நடைமுறைப்படுத்தப்பட்டது. அதை எந்த சினிமாவும் காட்சிப்படுத்தப்படவில்லை. சாதி குறித்த விழிப்புணர்வு சினிமா ஏற்படுத்த முடியும். ஆனால், இன்னமும் அதை நோக்கி செல்லவில்லை. இன்று இளைஞர்கள் எடுக்கும் குறும்படங்கள் அந்த வேலையை மிக சரியாகச் செய்கின்றன. மாணவர்: ஏன் தமிழ் சினிமா காதல் கதையைத் தவிர, வேறு களத்தை கையில் எடுக்கவே மறுக்கிறது. காதலிலும் நாற்பது வயதில் வரும் காதலோ, ஒரு பெண் நாலைந்து பேரை காதலிப்பதை போலவோ ஏன் காட்ட மறுக்கிறார்கள். அது நடைமுறை நிஜமாகத்தானே இருக்கிறது. எஸ்.ரா: சரியான கேள்வி. காதல் மட்டுமே கதையில்லை. சமகால தமிழ் இலக்கியத்தில் காதல் கதைகள் மிகக் குறைவு. ஒரு எழுத்தாளர் ஒன்றோ, இரண்டோ எழுதியிருப்பார். மற்றபடி வாழ்க்கை பிரச்சினைகள், புதிய வாழ்க்கை களம், சரித்திரம், நினைவுகள் என்று நிறைய எழுதப்பட்டிருக்கிறது. அதை ஏன் சினிமா அறிந்து கொள்ளவேயில்லை. நான் படித்த நல்ல காதல் கதை "குறத்தி முடுக்கு'. அது ஏன் சினிமாவாக உருவாக்கப்படவேயில்லை? காதல் கதைகளை படமாக்கும் வணிக தந்திரத்தை ஹாலிவுட்தான் கற்று தந்தது. அதை நாம் இன்றும் விடவேயில்லை. காதல் கதைகளில் ஏதாவது மாறுபாடு இருக்கிறதா? என்றால் பெரும்பகுதி ஒன்று போலவேயிருக்கிறது. பஷீரின் "மதிலுகள்' நாவலைப் படித்துப் பாருங்கள். அதுவும் காதல் கதைதான். ஆனால் அது ஆண்கள் சிறைச்சாலையில் நடக்கிறது. அப்படி ஏன் ஒரு கதையை நாம் யோசிப்பதில்லை. உண்மையில் நிறைய கதைக்களங்கள், சம்பவங்கள் படமாக்கப்பட வேண்டியுள்ளது. அதை நோக்கி நாம் போகவில்லை. வாஞ்சிநாதன் பற்றி படம் எடுக்கலாம். பாரதியார் காசியில் இருந்த நாட்களை படமாக்கலாம். வி.பி.சிந்தனின் வாழ்க்கை சினிமாவாக எடுக்கப்பட வேண்டியது. ஏன் ஜெயகாந்தனின் வாழ்க்கை கதை ஒரு படமாக்கப்பட வேண்டிய ஒன்றுதானே. இப்படி புகழ் பெற்ற இசை நாடக கலைஞர்கள், ஓவியர்கள், தமிழ் நாட்டின் பாக்சிங் சேம்பியன்கள், சிலம்ப ஆசான்கள், ஊர் ஊராகப் போய் நாடகம் போட்ட பாய்ஸ் கம்பெனி என எத்தனையோ கதைக்களங்கள் இருக்கின்றன. சமகால பிரச்சினைகளாக எடுத்துக்கொண்டாலும் அமெரிக்க தமிழ் வாழ்க்கை, புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் வாழ்க்கை, தலித் மக்களின் எழுச்சி, அரவாணிகளின் வாழ்க்கை கதை என எவ்வளோ இருக்கிறது. ஏன் அதை சினிமாவாக எடுக்கத் தயங்குகிறோம். ஒரே காரணம் சினிமா என்ற வணிகம் மட்டுமே இது போன்ற தீவிரமான கதைகளை படமாக்க எந்தத் தயாரிப்பாளரும் முன்வரவில்லை. அரசோ, கலாச்சார அமைப்புகளோ இதைப் படமாக்க அக்கறை காட்டவில்லை. கலைப் படங்கள் என்ற பிரிவே தமிழில் இல்லையே. "டு லிவ்' என்ற சீனப் படத்தைப் பார்த்தேன். அது சீனாவில் மாவோ காலத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை பேசுகிறது. 1900 பெர்தோலுசியின் படம் சமகால சமூக வரலாற்றை பேசுகிறது. இப்படி சினிமாவை அரசியல் கலாச்சார நடவடிக்கையாக நாம் கைக்கொள்ளவேயில்லை. அறுபதுகளில் திராவிட இயக்கம் இதை முன்னெடுத்தது. ஆனால், அது அப்படியே நின்று போனது. தமிழக அரசியல் வரலாற்றை வெளிப்படையாக பேசும் படம் ஒன்றை சொல்லுங்கள் பார்க்கலாம். இல்லையே? கடந்த பத்து ஆண்டுகாலமாக குற்றவாளிதான் சினிமாவின் நிரந்தர கதாநாயகனாக இருக்கிறான். வேடிக்கையாக இல்லை? மாணவர்: இதை எப்படி மாற்ற முடியும் என நினைக்கிறீர்கள்? எஸ்.ரா: ஹிந்தி சினிமாவில் எதையும் மாற்ற முடியாது. அது வணிக நோக்கம் மட்டுமே கொண்டது என்று ஒரு காலத்தில் சொல்வார்கள். அதுவே இன்று பெரிதாக மாறிவிட்டது. இன்று வில்லன் என்ற ஒருவர் பெரும்பான்மை ஹிந்திப் படங்களில் கிடையாது. நாலு கதாநாயகர்கள் ஒன்றாக நடிக்கிறார்கள். மாற்று கதைக்களம் கொண்ட நிறைய படங்கள் வெளியாகின்றன. அனுராக் காஷ்யப், விஷால் பரத்வாஜ், சுதிர் மிஸ்ரா போன்ற இயக்குநர்கள் புதிய சினிமாவை உருவாக்கி வருகிறார்கள். அதுவே சாத்தியமாகியுள்ளபோது தமிழில் ஏன் மாறாது. அடுத்த பத்து வருடத்தில் தமிழ் சினிமா பெரிய மாற்றத்தை சந்திக்கப் போகிறது. அதன் முந்தைய காலங்களை விட பல் மடங்கு அது தன்னை மாற்றிக் கொள்ளும் என்றே தோன்றுகிறது. சிறிய திரை அரங்குகள், சிறிய எண்ணிக்கை பார்வையாளர்களுக்கான படம் என சினிமாவில் புதிய அலை இப்போது உருவாகி வருகிறது. இதே நேரம் புதிய கதை களத்தை உருவாக்க இய்ககுநர்களும், நடிகர்களும் முன் வர வேண்டும். ஹிந்தியில் ஒரு "ரங் தே பசந்தி', "சக்தே இந்தியா', "தாரே ஜமீன்பர்', "டெல்லி 6' என மாறுபட்ட கதைக்களம் கொண்ட படங்களை உருவாக்கியது இளம் இயக்குநர்கள்தானே. அமீர்கான் இதை தனது பணியாகவே செய்கிறார். அவரது சமீபத்திய தயாரிப்பான "பீப்லி லைவ்' போல தமிழில் ஒரு படத்தை யாரும் எடுக்க முன் வரவில்லை. அதுபோன்ற படங்களை ஏன் தமிழ்ப் படுத்தி கூட நாம் அரங்கில் காட்ட முன்வரவில்லை? ஹாலிவுட் சண்டைப் படங்கள் நாம் தமிழில் உள்ளூர் தியேட்டர்களில் பார்க்க முடிகிறது. ஆனால், உலக சினிமாவை தமிழில் காண ஒரு ஏற்பாடும் கிடையாது. யாராவது அதற்கு முன் முயற்சி எடுக்கலாம்தானே. இந்த மாற்றங்களுக்கு முதல் வேலை நிறைய இலக்கியங்கள் நாவல்களை படிப்பது, உண்மை சம்பவங்களைத் தேடிப்போய் ஆராய்ச்சி செய்வது, சமகால பிரச்சினைகள் மீது அக்கறை கொண்டிருப்பது மற்றும் கடந்த கால ஆளுமைகளின் வரலாற்றை தெரிந்து கொள்வது என மெனக்கெட வேண்டும். அத்துடன் மாற்று சினிமாவிற்கான அரங்குகள் உடனடியாக நமக்கு தேவை. ஒரு நகருக்கு ஒரு அரங்கு அமைக்கப்பட்டால் கூட நல்ல சினிமாவை துணிந்து தயாரிக்க முன் வருவார்கள். அதுபோலவே நல்ல சினிமாவிற்கான ஆதரவும், பாராட்டும் இன்னும் அதிகமாக வேண்டும். இது சாத்தியமானால் தமிழ் சினிமா மாறுதல் அடையும். மாணவர்: தமிழில் திரைக்கதை ஆசிரியர்கள் இல்லாத குறைதான் இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லலாமா? தனியே திரைக்கான கதை என்று எழுதி, வெளியாவது ஏன் தமிழில் நடைபெறவேயில்லை? ஒருவரே ஏன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என நான்கையும் செய்ய வேண்டியிருக்கிறது? எஸ்.ரா: அதுதான் எனக்கும் வியப்பாக இருக்கிறது. எழுத்தாளர் என்ற ஒருவர் ஏன் சினிமாவில் கண்டு கொள்ளப்படாதவராக இருக்கிறார்? புகழ்பெற்ற இயக்குநரான அகிரா குரசோவா தனக்கான திரைக்கதை ஆசிரியர்களை கொண்டிருந்தார். ஹாலிவுட் சினிமாவில் கூட ஸ்பீல்பெர்க், ஸ்கார்ச்சி போன்றவர்கள் திரைக்கதை ஆசிரியர்களைதான் சார்ந்து செயல்படுகிறார்கள். பால் ஷெரடர், மைக்கேல் கிரைக்டன், ராபர்ட் டெüனி என்று புகழ் பெற்ற திரைக்கதை ஆசிரியர்கள் அமெரிக்க சினிமாவில் இருக்கிறார்கள். எனக்கு மிகவும் பிடித்த திரைக்கதை ஆசிரியர் ழான் கிளாடே கேரியர் என்ற பிரெஞ்சு எழுத்தாளர். அவரே ஒரு இயக்குநர். புனுவலின் படங்களுக்கு திரைக்கதை எழுதியவர். மகாபாரதத்தை திரைக்கதையாக்கியவர். சமகால திரைக்கதை ஆசிரியர்களில் மிக முக்கியமானவர் அவரைத்தான் கமல்ஹாசன் தனது "மருதநாயகம்' படத்தின் திரைக்கதையை எழுத அழைத்திருந்தார். அப்படி உலகெங்கும் சினிமாவிற்கு என தனி எழுத்தாளர்கள், திரைக்கதை ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கான அமைப்பு இருக்கிறது. இவ்வளவு ஏன் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், வங்காளம் என இந்திய படங்களில் கூட எழுத்தாளருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. தமிழில் அது இப்போதுதான் கவனம் பெற துவங்கியிருக்கிறது. நல்ல திரைக்கதை ஆசிரியர்கள் உருவானால் நல்ல சினிமா உருவாவது எளிதாகி விடும் என்பது உண்மைதான்!
(முற்றும்)

Comments

Popular Posts