சலனம்-1

நீண்ட பாரம்பரியம் உடைய  பிரபல வார இதழின் ஆசிரியர் ஒருவரை நேற்று சந்தித்தேன் (சந்திக்க உதவிய நண்பருக்கு நன்றி) தனது பரபரப்பான வேலைப் பளுவுக்கு இடையில் சில நிமிடங்கள் எனது சிறுகதை குறித்து அவரது அபிப்ராயத்தை பகிர்ந்து கொண்டார். கதையின் முடிவு குறித்து வினா எழுப்பினார். சில விநாடிகள் கதையின் பாத்திரங்கள் குறித்தும், எழுத்து நடை குறித்தும் பேசிய பின்... என்னுடைய கருத்துக்களையும் கேட்டறிந்தார். இறுதியாக, தொடர்ந்து எழுதுங்கள் என்று உற்சாகப்படுத்தினார். சிறுகதையை மேலும் சிலரும் படித்துள்ளனர் என்பதை அவரது வார்த்தைகளில் இருந்து புரிந்துகொண்டேன். நெகிழ்ச்சியாக இருந்தது.

ஒரு படைப்பு அதன் தளத்தில் யாரிடமோ விவாதத்தையோ, துக்கத்தையோ, கேள்வியையோ, கிளர்ச்சியையோ ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. படைப்பு அச்சில் வந்துதான் வாசகனை சென்றடைய வேண்டும் என்பதில்லை. சில நேரங்களில் குறிப்பிட்ட சிலரால் படிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு பேச்சின் வழியாகவே அது மனம் விட்டு மனம் மாறும் மாயவித்தையை கூட செய்யலாம். என் கதாபாத்திரங்களுக்கு உயிர்வந்து அவை அந்த பிரபல வார இதழின் அலுவலகத்தில் சுற்றித் திரிந்துகொண்டிருப்பதை சிறிது நிமிடம் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அலுவலகத்தில் இருந்து வெளியேறி பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தேன். மனம் காற்றில் பறந்தபடி எதையே துரத்திக்கொண்டிருந்தது. ஒரு உலகில் இருந்து வேறு உலகுக்குள் நுழைந்து கொண்டிருந்தேன். ஒரு படைப்பாளிக்கு இதை விட வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும் நண்பர்களே!

Comments

Popular Posts