சலனம் - 6

நேற்று மாலை எழுத்தாளர் தமிழ்மகனின் புதல்வர் மாக்ஸிம் ஆரம்பித்திருக்கும் “பொக்கிஷம் புத்தக அங்காடி’’க்கு சென்றிருந்தேன். அலுவலகத்தில் நள்ளிரவு பணி முடித்துவிட்டு சென்றதால் உடலில் சோர்வு ஒட்டிக்கொண்டு மிச்சம் இருந்தது. நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் ஆனந்த விகடன், உயிர்மை உள்ளிடட பதிப்பகங்களின் முக்கிய படைப்புகள் முதல் கட்டமாக மாக்ஸிம் வாங்கி வைத்திருக்கிறார். ஒரு கடையில் எந்தப் புத்தகத்தை தேர்வு செய்வது என்கிற குழப்பமில்லாமல் கண்ணை மூடிக்கொண்டு நீங்கள் தேர்வு செய்கிற புத்தகம் ஒவ்வொன்றும் அவசியம் படித்தே ஆக வேண்டியவையாக இருக்கும். காரணம், அங்காடியில் உள்ள புத்தகங்கள் தேர்வு தமிழ்மகன். உயிர்மை பதிப்பக வெளியீட்டில் வந்துள்ள என்னுடைய ‘‘யதார்த்த சினிமாவின் முகம்’’ நூலும் அங்காடியில் கிடைக்கிறது!

தமிழ்மகனோடு நிறைய பேசலாம் என்றுதான் சென்றேன். ஆனால், உடல் சோர்வு அதிகமாகிக்கொண்டே இருந்தால் கொஞ்சமாகதான் கதைக்க முடிந்தது. விடைபெறும்போது முதன்முதலாக தமிழ்மகன் என்னை அணைத்துக்கொண்டு நன்றி சொன்னார். சட்டென்று அந்த மாலையும், அண்ணாநகரின் ப்ளாட்பாரங்களும் அழகாகி விட்டன. சந்தோஷத்துடன் வீடு திரும்பினேன்!

சென்னையில் அண்ணாநகரில் நீண்ட வருடங்களாக இலக்கியத் தேடலுக்கான புத்தகக் கடை இல்லாத குறை இனி இல்லை. நல்ல விஷயங்கள் இப்படித்தான் எளிமையாக தன் பயணத்தை தொடங்கும். வாழ்த்துக்கள் மாக்ஸிம்!

Comments

Popular Posts