அது ஒரு பொன்மாலைப் பொழுது...!

ருமுறை அப்பு... கேஎப்சி சிக்கனை மிகவும் ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அதுவும் ஒரு மாலை வேளைதான். மனிதர்களின் நடமாட்டம் குறைவாகத்தான் இருந்தது. எப்போதும்போல் அம்மு மணலில் தனக்கான வீட்டை தானே கட்டிக்கொண்டிருந்தாள். வழக்கம்போல் தலைவர் எலியட்ஸ் பீச்சில் மாறிவரும் மாலை நேரத்தையும், ஓயாமல் வீசிக்கொண்டிருக்கும் கடல் அலைகளையும், தங்களது கால் தடத்தாலே ஒரு நூற்றாண்டின் காதலை மணலில் எழுதியபடி காதலர்கள் நடந்துகொண்டிருப்பதை கவனித்தவாறே.... அப்புவின், அம்முவின் மீதும் தனது கவனத்தை திருப்பியிருந்தார். 

வழக்கம்போல் நான் அவர்கள் மூவரையும் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். இடையில் கொஞ்சம் மழைத்தூரல் வந்தது. நாங்கள் நால்வரும் அதை அலட்சியப்படுத்திவிட்டு தத்தமது வேலைகளில் கவனமாக இருந்தோம். இரக்கமற்ற மனிதர்கள் மழைத்தூரலை கூட தங்கள் மீது ஒட்டக்கூடாது என ஒதுங்கிப்போய் கட்டிடங்களின் பதுங்கு குழிகளில் மறைந்துகொண்டனர். எங்கள் நால்வரின் அலட்சியத்தை பார்த்து தூரல் சட்டென தன்னை மறைத்துக்கொண்டது. மனுஷ், ஆகாயத்தை கோபமாக பார்த்தார். கற்பனையில்லை அப்புவும், அம்முவும் கூட ஆகாயத்தை நிமிர்ந்து பார்த்தனர். வழக்கம்போல் இரக்கமற்ற வானத்தை நான் கடைசியாக நிமிர்ந்து பார்த்தேன்.


மீண்டும் மனிதர்கள், கால் தடங்கள்.... அப்பு தன் கையில் வைத்திருக்கும் கேஎப்சி சிக்கனில் மேலும் ஒன்று தனக்கு கிடைக்காதா என்று பீச்சில் அநாதையாக விடப்பட்ட செல்லப்பிராணி மௌனமாக நின்றுகொண்டிருப்பதை அப்பு கவனிக்கவில்லை. அம்மு தன் வீட்டை கட்டி முடித்துவிட்டு, மனுஷிடம் அந்த வீட்டை சுட்டிக்காட்டி அதட்டலுடன் ‘‘அப்பா.... வாங்க வீட்டுக்கு போகலாம்“ என்றாள். மனுஷ் புன்னகைத்தார். அப்பு அப்போதுதான் தன் முன்னால் ஏங்கி நிற்கும் செல்லப்பிராணியை கவனித்தான்... சட்டென்று, தன் கையில் உள்ள பெட்டியில் கேஎப்சி சிக்கன் தீர்ந்துபோனதை பார்த்துவிட்டு, உதட்டை பிதுக்கியபடி, ‘‘அச்சச்சோ... ஸாரி... தீர்ந்துபோச்சு... அப்புறம் வாங்கித்தர்ர்ர்ரேன்....’’ என்றான். அவன் இயல்பாகத்தான் சொன்னான். அப்புவின் செய்கையை பார்த்துக்கொண்டிருந்த மனுஷின் புன்னகை இன்னும் நீண்டு கொண்டிருந்தது. மனுஷ், என்ன நினைத்தாரோ.... சட்டென்று நிமிர்ந்து ஆகாயத்தை ப்ரியத்துடன் பார்த்தார்!

Comments

Popular Posts