இந்த ஞாயிறு மாலை ஏன் இவ்வளவு துயரமானதாக இருக்கிறது?

ந்த ஞாயிறு மாலை ஏன் இவ்வளவு துயரமான எண்ண அலைகளை மனதில் சுமந்துகொண்டு நிற்கிறது... என்று யாருமற்ற அறையில் தலையணையில் முகம் புதைத்து அழுதுகொண்டிருந்தேன். இதயத்துக்கு நெருக்கமானவர்கள் எல்லோரும் விரைவிலேயே தற்கொலையை கையில் எடுத்துக்கொண்டதை குறித்து மனம் யோசித்தபடியே படுக்கையில் படுத்துக்கிடந்தது. அதிக மதிப்பெண் எடுக்கவில்லை என்பதற்காக தன்னை மாய்த்துகொண்ட பால்ய நண்பன் ஆறுமுகம், புருஷன் சம்பாதிக்க துப்பில்லை என்பதற்காக உயிரை மாய்த்துக்கொண்ட “மருமவனே’’ என அழுத்தமான முத்தத்துடன் அழைத்துக்கொண்டிருந்த ரோஷக்காரி அத்தை விஜயா, காதலியின் ஒற்றை வார்த்தையால் விடுதி அறையில் ஒரு துணியில் தன் உயிரை புதைத்துக்கொண்ட கல்லூரி ஸ்னேகிதன் பத்மநாபன், ஒருமுறையேனும் “மவனே’’ என்று அழைக்க மாட்டாரா என நான் ஏங்கியபோதிலும், காலம் முழுக்க “அப்பா... அப்பா’’ என கதறவிட்டு ஒரு துளி விஷத்தோடு, மதுவில் உறைந்து நிற்கும் நெஞ்சுரம் படைத்த தந்தை தில்லைசிதம்பரம், இயக்குநர் மிஷ்கினிடம், ஐ லவ் யூ டொட்டோ... என்று உறுதியாக சொன்ன தோழி அபியின் மரணம்....“வாடா கொஞ்சம் கதைப்போம்...’’ என்று தொலைபேசியில் அழைத்துவிட்டு, வருவதற்குள் காலத்துக்குள் புதைந்துவிட்ட என் எழுத்தின் ஆதர்சனமாக இருக்கும் முன்னோடி எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ்... அகவை மூன்று முடிவதற்குள் அவசரம் அவசரமாக கவிதைகளுக்குள் ஒளிந்துகொண்டுவிட்ட ஆத்மாநாம் என எல்லோரின் ஞாபகங்களையும் அழைத்துக்கொண்டு வந்து விட்ட இந்த மாலையை என்ன செய்வது?

முத்தம்

முத்தம் கொடுங்கள்
பரபரத்து
நீங்கள்
முன்னேறிக் கொண்டிருக்கையில்
உங்கள் நண்பி வந்தால்
எந்தத் தயக்கமும் இன்றி
இறுகக் கட்டித் தழுவி
இதமாக....’’

என இறந்துபோன எல்லோருக்குமாக எனக்குப் பிடித்த கவிஞர் ஆத்மாநாமின் முத்தம் கவிதையை மௌனமாக வாசித்துக்கொண்டிருக்கிறேன்... பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்கும் இளையராஜா என்னை மேலும் கண்ணீர்விட வைக்கிறார். ஆத்மநாம் மீண்டும் இந்தப் பூமிக்கு வந்தால், அவரின் கைகளை இறுகப்பற்றிக்கொண்டு இந்தக் கணத்தில் ஒன்றேயொன்றுதான் கேட்க தோன்றுகிறது..

“என்ன அவசரம் அப்பா..
உன் பிள்ளைகள் உன் கரம்
பற்றுவதற்குள்..-.?’’

யாரேனும் அருகில் இருந்தால் புறக்கணிக்கப்பட்ட இந்த இதயத்தை அணைத்துக்கொண்டு ஒரு முத்தமிடுவீர்களா நண்பர்களே!

(இன்று கவிஞர் ஆத்மாநாம்- கவிதைக்குள் ஓடி ஒளிந்துகொண்ட நாளிது -: 18. 1. 1951 - 6. 7. 1984)

Comments

Popular Posts