மாபெரும் துயரமே மிகப்பெரும் வெற்றி!

மை டியர் பார்த்தா... வாழ்க்கையில எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு. அத நாம கொடுத்தே ஆகணும். வெற்றி பெற்றவன் எல்லாம் சந்தோஷமாக இருக்காண்ணு யாராவது சொன்னான்னா அதுதான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொய். சிலருக்கு வாழ்க்கையில ஆசைப்பட்டது எல்லாம் உடனே அமைஞ்சிடும் சிலர் சூழ்ச்சியால அத பெற்றுடுவாங்க. இன்னும் பலர் இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராதுன்னு ஒதுங்கிடுவாங்க. ஆனால், அரிதானவர்கள் மட்டும்தான் 'காத்திருத்தல்' மூலமாக தன் இலக்கை அடைவாங்க.

அது நாம நேசிக்கிற ஒரு இதயத்துல நமக்கான இடத்தை பிடிச்சிருக்கறது மட்டுமில்ல. ஆசைப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளாகவோ, வேலையாகவோ, தொலைத்தூரத்து பயணமாகவோ.... ஏன் நீண்ட நாட்களாக நம்மோட சண்டைபோடுகிற நண்பனோடு/தோழியோடு ஒரு தேநீர் அருந்த நினைப்பதாக கூட இருக்கலாம். எல்லாவற்றுக்கு பின்னாலும் ஒரு விலை இருக்கு. அதை காலம் தன்னுடைய பாதையில கொண்டு வந்து சேர்க்கும். இந்த வாழக்கையில் ராமன்களை விட அதிகம் கொண்டாடப்படுவது ராவணன்களைதான் ! உடனே ராவணன் நல்லவனா, கெட்டவனா என்று எல்லாம் ஆராய்ச்சில இறங்காத. அவன் கெட்டிக்காரன். அவனைப்போல இன்னொருத்தனும் இந்த உலகத்துல கொண்டாடப்படுறான். அவன் பெயர் மெக்பெத். இந்த உலகத்திலேயே ரோமியோ--ஜூலியட் காதலைதான் மகோன்னதம்னு எல்லாரும் சுட்டிக்காட்டுவாங்க. அத நம்பாத. ஆனா, அதையெல்லாம் தாண்டின ஒரு காதல் ராவணனுக்கும், மெக்பெத்துக்கும்தான் கிடைச்சது.

இளவரசனோட காதல் தோத்துப் போயிடுச்சுன்னு நாம சொல்ல முடியுமா பார்த்தா? அது எவ்வளவு வலி மிகுந்த பெரிய துயரம். ஆனா இளவரசன் மாபெரும் துயரத்தின் மூலமா நம்முடைய இதயத்துல மட்டும் இல்ல... உலகத்துல நேசிக்கப்படுகிற எல்லோருடைய இதயத்துலும் இடம் பிடிச்சுட்டான் இல்லையா?

ஒவ்வொரு வருடமும் புது துணிமணிகளோடும், இனிப்பு, பலகாரங்களோடும், இந்தப் பூமியே அதிரும்படி வாண வேடிக்கைகளோடு நாம தீபாவளி பண்டிகைய கொண்டாடுகிறோம் இல்லையா. அது உனக்கு எப்படி கற்பிக்கப்பட்டிருக்குன்னு தெரியல பார்த்தா. ஆனால், ராவணன் அடைந்த ''மாபெரும் துயரமே மிகப்பெரும் வெற்றி''ன்னு அவனுடைய பேரப் பிள்ளைகளான நாம கொண்டாடுறோம். உலகத்தில் தோல்வியை கொண்டாடுகிற உயரிய சமூகம் நம்முடையதுதான் பார்த்தா!

நாம நேசிக்கிற இதயம் சில நேரங்கள்ல தவறான முடிவுகளினால் திசை மாறி போயிடலாம். ஆனாலும், இந்த நள்ளிரவிலும் அவளை/அவனை பற்றி யோசிக்க தோணுது இல்லையா? ஒருமுறை எழுத்தாளர் பாலகுமாரன் வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போ அவருகிட்ட வாழ்வின் சில போக்குகளை பத்தி பேசிக்கிட்டிருந்தேன். எனக்கு ஆறுதல் சொன்னவரு, இறுதியா ஒன்னு சொன்னார் பார்த்தா... அததான் என்னோட ப்ரியமான ஸ்நேகிதங்கள் எல்லாருக்கிட்டேயும் சொல்றேன். உன்கிட்ட கூட அதைதான் சொல்ல தோணுது ‘‘காதல் என்பது விட்டுகொடுத்தல்’’. அவருடைய வார்த்தை உண்மைங்கிறது காலம் அனுபவத்தின் மூலமா இப்போ எனக்கு கற்றுகொடுத்திருக்கு. தோல்வின்னு நாம நினைக்கிற பல விஷயங்கள் தோல்வியே அல்ல.. பார்த்தா.

ராவணனும், மெக்பெத்தும்,இளவரசனும் தோற்றுப்போன வரலாற்று நாயகர்கள் இல்லை. அவர்கள் மாபெரும் துயரங்களை தாங்கிக்கொண்ட மெல்லிய இதயங்கள்... அத்தகைய இதயங்களாலதான் இந்தப் பூமி இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் தன்னுடைய இயக்கத்த நிறுத்தமா சுழன்றபடி இருக்கு! மை டியர் பார்த்தா.. வெற்றி மகத்தானதுதான். ஆனா, சில நேரங்களில் தோல்வி கூட அதைவிட மகத்தானதாக இருக்கும்!

Comments

Popular Posts