ஜே.கே. சில குறிப்புகள்!

வானம் மேகமூட்டமாய் இருந்தது. கொஞ்சம் மழைத்துளிகள். அப்புறம் அதுவும் நின்றுவிட்டது. அலுவலக நண்பர் உடன் சென்னையில் நடந்த எழுத்தாளர் ஜெயகாந்தனின் 80-_வது பிறந்தநாள் மற்றும் நூல் வெளியீட்டு விழாவுக்கு நேற்று சென்றிருந்தேன். ஒரு மணி நேரம் முன்னதாக சென்றபோதும் கூட அரங்கம் 80 சதவீதம் நிரம்பியிருந்தது. கவிஞர் ரவிசுப்ரமணியன் இயக்கிய ஜே.கே. குறித்த ஆவணப்படம் அரங்கில் திரையிடப்பட்டிருந்தது.

முதன்முறையாக இந்தப் படத்தை பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்தது. மயக்கும் ரவியின் மொழியும், மாறுபட்ட கோணங்களில் ஜே.கே. ஒளிக்க்குள் சிறை வைத்ததும், பின் அவரது கோபம், விருப்பங்கள், அரசியல் நிலைப்பாடு, ஆன்மீகம், எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய அம்சங்கள் மற்றும் அவரது சூழல், தெரு, வீடு, அசைவுகள், வர்ணங்கள், ஓவியங்கள், இசை, ஒப்பீடுகள் என ஒரு ஆவணப்படத்திற்குள் எதுவெல்லாம் சாத்தியமோ, அவ்வளவையும் பயன்படுத்தியிருந்தார். குறிப்பாக என்னைப் போல எண்ணற்ற இதயங்களின் மனதை குடைந்து கொண்டிருந்த பல கேள்விக்கான பதிலையும் ஜே.கே. விளக்கியதை கேட்டு நெகிழ்ந்து விட்டேன். உங்களிடம் ஒருமுறை கூட சொல்லியதில்லை. நன்றி என்ற ஒற்றைவரியில் மட்டும் அது முடியாது ரவி!

தமிழனுக்கும், தமிழுக்கும் மாபெரும் கொடை ஜே.கே. மார்க்சீயத்தை தன் எழுத்துக்களில் உயர்த்திப் பிடித்தவர். தன் கருத்தை, விருப்பத்தை தைரியமாக சொல்லக்கூடியவர். எழுத்தாளனுக்கான மரியாதையை இந்த சமூகத்தில் ஏற்படுத்திக்கொடுத்த மற்றொரு பெரியார் அவர். அவரின் இடைவிடாத எழுத்தால்தான் இன்று அவரது பேரப்பிள்ளைகளான நாங்கள் கொஞ்சம் இலக்கியத்தின் பக்கம் நின்று மூச்சுவிட முடிகிறது என்றால் அது மிகையில்லை. ஜே.கே.வை எனக்கு ரொம்பவும் பிடிப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அவர் எங்க ஊர்க்காரர். கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர். இலக்கிய வட்டத்தில் கொஞ்சம் தெனாவட்டாக திரிவதற்கு அதுவும் ஒரு காரணம்!

மற்றொன்று, தன் எழுத்து வீச்சுடன் பாய்ந்துகொண்டிருந்தபோதே அதை நிறுத்திவிட்டவர். எல்லோருக்கும் தெரிந்ததுதான். பத்திரிகை நண்பர் அவரிடம் ஒரு நேர்காணலில் கேட்டது.

கேள்வி: இப்பொழுதெல்லாம் நீங்கள் ஏன் எழுதுவதில்லை?

ஜே.கே.: இன்னும் ஏன் நீங்கள் எழுததித் தொலைக்கிறீர்கள் என்று கேட்காதது சந்தோஷமாயிருக்கு!

இந்தப் பதில் வேறு யாராலும் சொல்ல முடியாது. அவர் எழுதவில்லை. பத்திரிகைகள் பிரிண்ட் செய்யப்பட்டு ஆயிரமாயிரம் வாசகனை சென்றடையவில்லை. ஆனால், எழுதியதை அதன் உள்ள அழகை, அரசியலை, கலகத்தை, சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை, அதனால் மாறிய மனங்களை அதன் அன்பை, துயரத்தை இப்படியாக அவர் தன் வாழ்வை தனக்கு விருப்பமானவரோடு பகிர்ந்து கொண்டிருந்திருக்கிறார். ஒரு படைப்பாளியின் ஆக சந்தோஷம்... படைப்பில் ஈடுபடுவது மட்டுமல்ல. தன் படைப்பு குறித்த பிறரின் விமர்சனத்தை, கருத்தை எந்த கருத்தியலுக்குள்ளும்  அடைக்காமல் வெறுமனே கேட்டுக்கொண்டிருப்பதுதான்!

ஜே.கே. தான் எழுதுவதை நிறுத்திக்கொண்டதன் மூலம் மகத்தான மற்றொரு பணியையும் செய்திருக்கிறார். அடுத்த தலைமுறைக்கு வழிவிடுதல். மற்றவரும் எழுத மறைமுகமாக வாய்ப்பளித்தல் என்பதுதான் அது!

விரல்விட்டுக் கூட எண்ண முடியாத அளவுக்கு இரண்டொரு இலக்கிய, வார, மாத பத்திரிகைகள் வந்து கொண்டிருக்கும் இந்தச் சூழலில் கூட எதோ அந்தப் (சிறு,குறு,வார,மாத) பத்திரிகைகளின் பிராண்ட் அம்பாசிடராக மாறி எழுதிக்குவிக்கும் எழுத்தாளர்களுக்கு மத்தியில், “எப்பதான்யா..... எழுதறத நிறுத்துவீங்க... திரும்பிப் பாருங்க.... இரண்டு தலைமுறை பின்னால் காத்துகிடக்கு’’ என்றுதான் பார்த்தால் கேட்கத் தோன்றுகிறது. கக்கூசின் உள்ளே போனவர் உடனே கடமை முடிந்ததும் திரும்பி வர வேண்டும் இல்லையா-? உள்ளேயே சப்பனம் போட்டு உட்கார்ந்துகொண்டால். வெளியே தவிப்போடு க்யூ கட்டி நிற்பவர்களின் நிலைமை? அப்படிதான் தற்போது தமிழ் இலக்கிய உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை யாராவது மறுக்க முடியுமா? இப்படியிருக்கையில் ஜே.கே. ஒரு...............! (மன்னிக்கவும். உயர்த்தி பிடிக்க வார்த்தைகள் இல்லை நீங்களே நிரப்பிக்கொள்ளுங்கள்)

நிகழ்வில் மேலும் சில அம்சங்கள் பிடித்திருந்தன. லண்டன் வாழ் தமிழர் ஒருவர் தம் குடும்பத்துடன் வந்து தனக்கு ப்ரியமான இலக்கியவாதியை கொண்டாடியது (சலனம் -_ 8 : இயல்பான, எதிர்பார்ப்பற்ற, யதார்த்தமான அந்த இதயம் ராம்தான்!) அரங்க நிர்மானம், நல்லி குப்புசாமி செட்டியாரின் பாசாங்கற்ற பேச்சு, நடிகை லஷ்மியின் உணவுர்பூர்வமான வார்த்தைகள், செல்போனை ஸ்விட்ச் ஆஃப் அல்லது சைலன்ட் மோடில் வைத்துவிட்டு அரங்கத்தை நிரப்பியிருந்த 90 சதவீத மூத்த குடிமகன்கள், கோவையில் இருந்து புறப்பட்டு வந்திருந்த அசல் தமிழர்கள், எந்த இலக்கிய மேடையிலும் காணக்கிடைக்காத காட்சி ஒன்றும் நிகழ்ச்சியில் அரங்கேறியது. இடதுசாரிகளும், வலதுசாரிகளும் ஒரு சேர ஜே.கே.வை கவுரவித்தது, வைரமுத்து வாழ்த்து தெரிவித்த காணொளி காட்சி...!

தன்னை பற்றிய பலரது வாழ்த்துக்கள், புகழுரைகள் எது குறித்தும், சூழல் குறித்த புரிதலின்றி... அல்லது புரிதலுடன் அதிலிருந்து விலகி... ரஷ்ய அரசு அவரை பெருமைப்படுத்தி வெளியிட்டிருந்த புத்தகத்தின் பக்கங்களை மட்டுமே புரட்டிக்கொண்டிருந்தார் ஜே.கே..... வாசி.... வாசித்தல்தான் வாழ்வை கடந்து போக ஒரே வழி.. என்பது போல் அவரது செய்கை இருந்தது. ஆயிரமாயிரம் விழிகளுக்குள் அந்த காட்சி ஊடுறுவிக்கொண்டிருந்தன நண்பர்களே!

Comments

Popular Posts