சலனம் - 5


தினமும் நள்ளிரவின் முடிவிலும், அதிகாலைப் பொழுதின் தொடக்கத்திலும் ‘‘கனா விதைத்த மானுடம் ’’ நாவலின் இறுதிப் பக்கங்களை எழுதுகிறேன்.  நாவலின் முக்கிய பாத்திரங்களில் ஒன்று சண்முகசுந்தரம் என்கிற பட்டாணி. அஹ்ரகாரத் தெருவில் வசிக்கும் இந்தப் பாத்திரத்துக்கும், பட்டாணியின் பக்கத்து வீட்டில் வாழும் மைதிலி என்று அழைக்கப்படும் ராஜ ராஜேஸ்வரி என்ற மாற்றுத் திறனுடைய முதிர்கன்னிக்கும் இடையே நிகழும் காதலின், காமத்தின் எபிசோடை எழுதிக்கொண்டிருக்கிறேன்.


“அதுவும் ஒரு மனம் மயங்கும் மாலைப்பொழுதுதான். மைதிலி... பட்டாணியை எப்போதும் தன் வீட்டின் தோட்டத்தில் இருக்கும் கிணற்றடியில்தான் சந்திப்பாள். அப்போதுதான் அவள் அந்த தெருவில் உள்ள குழந்தைகளுக்கு பாடம் எடுப்பாள். வழக்கம்போல் அன்றும் மாலை நேர டியூஷன் நடந்துகொண்டிருந்தது. மைதிலி கிணற்றின் மீது உட்கார்ந்துகொண்டு சூம்பிப் போன தனது காலை ஒரு சர்வாதிகார போல ஆட்டிக்கொண்டே கையில் உள்ள பாலகுமாரனின் நாவலின் பக்கத்தை வாசித்தபடி இருந்தாள். இடையிடையே கறுமை அப்பிய தன் விழிகளால் பக்கோடாவுக்காக வெங்காயத்தோடு மைதா மாவை பிசையும் பட்டாணியின் தேகத்தில் வழியும் வியர்வையின் மீது அவளது கண்கள் ஊர்ந்து சென்றது.... பட்டாணி மாவு பிசைவதிலேயே குறியாக இருந்தான்....’’  இப்படியாக போய்க்கொண்டிருக்கும் நாவலின் ஓர் இடத்தில் ‘‘அதே கிணற்றடியில் பனி பெய்துகொண்டிருக்கும் ஒரு நள்ளிரவில் மைதிலி பட்டாணியின் மடியில் படுத்துக்கொண்டு அவனது கைகளை பிடித்து, சுலுக்கெடுத்தபடியே மெதுவாக கேட்கிறாள்.... 




‘‘ஏண்டா பட்டா....
காமம் கடக்க முடியாத
கடலா, நதியா, ஓடையா, ஆறா...?’’ 




‘‘..................................
...................................... ’’ 




என்று அவளது காதோரம் சொல்லியபடியே பட்டாணி அவளது சூம்பிப்போன பாதத்தின் மீது மெல்லியதாக முத்தமிட்டான். அதிகமாய் பனி பெய்த அந்த நள்ளிரவு சட்டென்று சூடாக ஆரம்பித்தது!’’  மைதிலியின் காமம் குறித்த இந்த எளிய கேள்விக்கு பட்டாணி பதில் சொல்ல வேண்டும்.... ஆனால் அவன் என்ன பதில் சொல்லியிருப்பான்? நண்பர்கள் இந்த இடத்தை நிரப்பலாம். சரியான பதில் நாவலில் இடம்பெறும்!

Comments

Popular Posts