திரை - 1

திரை - 1

மிழ் சினிமா இன்று உலகளவில் தலை நிமிர்ந்து நிற்பதற்கு பின்னால் தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சி, பலவாறான கதை சொல்லல் முறைகள், அரிய முயற்சிகள் என்பதைத் தாண்டி பலரது அசாத்திய உழைப்பும், திறமையும் அடங்கியிருக்கிறது என்பதை நாமறிவோம். தமிழகத்தின் அரசியல் மாற்றத்திற்கு மிகப்பெரிய பங்காற்றியது, நடிகர்களை ஆட்சி கட்டிலில் அமர வைத்து அழகு பார்த்தது போன்றவற்றிக்கு பின்னால் சினிமாவின் பங்கு அதிகமிருக்கிறது. இத்தகைய சிறப்புகளுக்கு உரிய தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு சப்தமில்லாமல் ஐம்பது ஆண்டுகளைத் தாண்டி தன் சேவையை ஆற்றியுள்ளது "எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரி'. சென்னை தரமணியில் உள்ள இக்கல்லூரியில் இருந்துதான் இந்தியாவின் சிறந்த இயக்குனர்களும், ஒளிப்பதிவாளர்களும், படத்தொகுப்பாளர்களும், சவுண்ட் இன்ஜினியர்களும், நடிகர்களும் பரிணமித்தார்கள் என்பது காலத்தில் பதிந்த வரலாறு. திரைப்படத் தொழில்நுட்பத்தைக் கற்றுத்தருவதற்கு இன்று எத்தனையோ கல்லூரிகள் முளை விட்டிருந்தாலும், இந்திய சினிமாவின் தொடக்கத்தில் அவற்றை சொல்லித் தருவதற்கு கொல்கத்தா, புனே, சென்னை ஆகிய இடங்களில் மட்டுமே திரைப்படக் கல்லூரிகள் இருந்தன. இக் கல்லூரிகளில் இருந்துதான் இன்று நாம் வியந்து பார்க்கும் ஜாம்பவான்கள் உருவாக்கப்பட்டனர். சத்யஜித்ரே, பாலுமகேந்திரா, ஆபாவாணன், ருத்ரய்யா, ராபர்ட், ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே. செல்வமணி, பி.சி.ஸ்ரீராம், தங்கர் பச்சான், தரணி, பி.லெனின், நாசர், ரகுவரன், சுஹாசினியிலிருந்து இன்று அடையாளம் காணப்பட்டிருக்கும் இயக்குனர் அறிவழகன் வரைக்கும் எல்லோரும் தங்களை முதலில் பட்டைத் தீட்டிக்கொண்டது இக் கல்லூரியில்தான். 1945ம் ஆண்டு மைய தொழில்நுட்பக் கல்லூரியின் தொழில்நுட்ப பிரிவுகளில் ஒன்றாகத்தான் ஒளிப்பதிவு மற்றும் சவுண்டு இன்ஜினீயரிங் பாடப்பிரிவுகள் இருந்தன. குறைந்தபட்சம் பத்து மாணவர்கள் இப்பிரிவுகளில் மூன்றாண்டுகள் பயின்றனர். பிறகு 1960ல் வட சென்னையில், "ரீஜினல் ஸ்கூல் ஆஃப் பிரிண்டிங்' கட்டிடத்தில், திரைப்பட தொழில்நுட்பம் சார்ந்த கல்லூரியாக தனித்து நடைபோடத் துவங்கியது. அப்போது ஃபிலிம் பிராஸஸிங் (மூன்று ஆண்டுகள்) என்ற பாடப்பிரிவும் சேர்க்கப்பட்டது. திரைப்படத்துறையை வளர்க்கும் பொருட்டு மத்திய அரசின் ஒப்புதலோடு, ஐம்பத்தி நான்கு ஏக்கர் நிலத்தை, தரமணியில் தமிழக அரசு இக்கல்லூரிக்காக ஒதுக்கியது. அப்போதைய முதல்வர் காமராஜர் தலைமையில், தொழில்துறை மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் அமைச்சர் வெங்கட்ராமன் முன்னிலையில் 1964ம் ஆண்டு அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியால் கல்லூரி திறந்து வைக்கப்பட்டது. புதிய வீச்சுடன் தமிழ் சினிமாவிற்கு மேலும் பல படைப்பாளிகளை உருவாக்கத் தொடங்கியது கல்லூரி! தமிழ் சினிமா வீறுநடை போட்டு நடக்கத் துவங்கியதால், கல்லூரியில் மேலும் பல புதிய துறைகள் தேவைப்பட்டன. 1970 மற்றும் 71ஆம் ஆண்டுகளில் முறையே இயக்கம் (மூன்று ஆண்டுகள்), படத்தொகுப்பு(இரண்டு ஆண்டுகள்), நடிப்பு (இரண்டு ஆண்டுகள்) போன்ற பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டு, கல்லூரி செயல்படத் தொடங்கியது. மேலும் ஒரு வருட முதுநிலை பட்டயப் படிப்பாக ஒளிப்பதிவு பாடப் பிரிவும் தொடங்கப்பட்டன. பாடப்பிரிவுகளில் மாணவர் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு தொலைக்காட்சியின் தாக்கம் மக்கள் மத்தியில் மிக வேகமாகப் பரவத் தொடங்கியதால் 1984ம் ஆண்டிலிருந்து தொலைக்காட்சித் தொடர்பான பாடங்களும் இத்துறைகளில் சேர்க்கப்பட்டதோடு, கல்லூரியின் பெயரும் "திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிலகம்' என்று மாற்றப்பட்டது. 1997 மற்றும் 1998ம் ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் மற்ற மாநில மாணவர்களும் சேர்ந்து பயில வழிவகை செய்யப்பட்டது. 1947 முதல் 2008 வரை, ஏறக்குறைய 1600 மாணவர்களுக்கு திரைக்கல்வி பயிற்றுவித்து சிறப்பான சேவையை ஆற்றியுள்ளது இக்கல்லூரி. அந்த வகையில் திரைப்படக் கல்லூரியின் மூத்த மாணவரான வி.எஸ்.மூர்த்தி தற்போது நம்மிடையே உள்ளார். தமிழ் சினிமாவில் ஒலிப்பதிவு துறையில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருபவர். நான்கு தலைமுறைகளைத் தாண்டியும் அவரது கலைச்சேவை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏறக்குறைய அவர் கல்லூரியில் பயின்று நாற்பத்தி நான்கு ஆண்டுகள் ஆகிறது. தற்போது "எல்.வி.பிரசாத் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் அகாடமியி'ல் ஒலிப்பதிவு துறைக்கு பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மிதமான வெயில் தலைக்காட்டத் துவங்கிய ஒரு மாலை வேளையில் அவரைச் சந்தித்து அவருடைய சினிமாப் பயணம் குறித்தும், கல்லூரியின் நினைவுகள் குறித்தும் பகிர்ந்து கொண்டோம்.
""1963 - 1966ம் ஆண்டுகளில்தான் திரைப்படக் கல்லூரியில் நான் ஒலிப்பதிவு துறையில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். அப்போது எனக்கு வயது இருபத்தியாறு என்று நினைக்கிறேன். பிரபல ஒளிப்பதிவாளர்களான அசோக்குமார் ("நெஞ்சத்தை கிள்ளாதே'), மஞ்சுநாத் பென்டாகூர் போன்றவர்கள் என் வகுப்பு தோழர்களாக இருந்தார்கள். தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளரான அசோக்குமாரை எல்லோருக்குமே தெரியும். ஆனால் மஞ்சுநாத்தை பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் தற்போது அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தில் ஒரு திரைப்பட பல்கலைக்கழகத்திற்கு டீனாக இருக்கிறார். இவர்கள் இருவரும்தான் கல்லூரியில் படிக்கும்போது எனக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். கல்லூரியில் நாங்கள் படிக்கும்போதும் சைலண்ட் இராவிலிருந்து சவுண்டு இராவிற்கு மாறினோம். கல்லூரியில் அப்போது வேன் வசதியெல்லாம் இல்லை. எல்லாவற்றையும் கையில் தூக்கிக்கொண்டோ அல்லது ஆட்டோ வைத்துதான் படம் பிடிக்க செல்ல வேண்டும். அப்போது முதல்வராக பக்தவச்லம் இருந்தார். திரைப்பட கல்லூரியின் முதல்வராக சிவதாணு பிள்ளை பொறுப்பு வகித்தார். அந்த சமயத்தில் கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரியும், கல்லூரியில் புதிய தொழில்நுட்ப கருவிகளை கேட்டும் போராட்டம் நடத்தினோம். இதனால் எந்த பலனும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. இரண்டு மாணவர்கள் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் மட்டுமே நடந்தேறியது. ஆனால், இன்று கல்லூரியில் ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்ப மாற்றங்களை பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. தற்போது மாணவர்கள் இறுதியாண்டில் தாங்கள் எடுக்கும் படங்களை டி.டி.எஸ். பண்ணும் அளவிற்கு கல்லூரி மாறியிருக்கிறது. கல்லூரி படிப்பை முடித்தவுடன் ஓராண்டு காலம் நான் எங்கேயும் பணிபுரியவில்லை. எனது நெருங்கிய உறவினர் ஒருவரின் மூலமாக, சவுண்டு இன்ஜினீயர் கே.ஆர்.ராமசாமியிடம் முதலில் மூன்று மாத காலம் சம்பளம் இல்லா பயிற்சியாளராக, புளோர் அசிஸ்டெண்ட்டாக வேலைக்குச் சேர்ந்தேன். தெலுங்கில் "கதாநாயகுடு' என்னும் படம்தான் நான் பணிபுரிந்த முதல் படம். இந்தப் படத்தில் என்.டி.ராமாராவ், ரங்காராவ், ஜெயலலிதா ஆகியோர் நடித்திருந்தனர். திரைக்கு வந்து இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆக, வெற்றியின் துவக்கமாக என்னுடய திரையுலக பிரவேசம் துவங்கியது. சுஜாதா இன்டர்நேஷனல் கம்பெனியில் அப்போது "திருடன்' என்னும் படத்தை எடுத்துக் கொண்டிருந்தார்கள். தமிழில் இதுதான் எனக்கு முதல் படமாக அமைந்தது. நாயகனாக சிவாஜி ஸôரும், நாயகியாக கே.ஆர்.விஜயா மேடமும் நடித்துக்கொண்டிருந்தார்கள். அதற்கு மஸ்தான்தான் ஒளிப்பதிவாளராக இருந்தார். அப்போது மணப்பந்தலில் திருமணம் நடப்பது போன்ற காட்சி படமாக்கப்பட வேண்டியிருந்தது. அப்போது ஒலியை பதிவு செய்ய பிஷ் போல் பயன்படுத்துவோம். நீண்ட உருளை வடிவ கம்பியின் முனையில் மைக் பொருத்தப்பட்டிருக்கும். இதை நாம் வசனம் பேசும் நடிகருக்கு மேலாக தூக்கிப் பிடித்து அவர்களுடைய ஒலியை பதிவு செய்ய வேண்டும். பிஷ் போல் எக்காரணம் கொண்டும் ஃப்ரேமிற்குள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்தக் காட்சியில் நான் பிஷ் போலை எப்படி பிடித்தாலும், அது ஃப்ரேமிற்குள் வந்து கொண்டே இருந்தது. இதனால் நாம் மிகவும் சிரமப்பட்டேன். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிவாஜி ஸôர், அழைத்து, மணப்பந்தலில் இருபுறமும் கட்டியிருந்த வாழைமரத்தின் இலைகளுக்கு மத்தியில் வைத்து ஒலியை பதிவு செய்ய சொன்னார். பிறகு, எவ்வித பயமுமின்றி, தடங்கலுமின்றி ஒலியை பதிவு செய்தேன். தன் நடிப்பில் மட்டுமல்லாது மற்றவர்களின் பிரச்சினையையும் கவனித்து அதை தீர்க்கும் அவருடைய அறிவைக்கண்டு பல சமயங்களில் நான் வியந்திருக்கிறேன். நடிப்பில் மட்டுமல்லாது சினிமா தொழில்நுட்பத்தின் மீதும் அவருக்கு அளவிலா காதல் இருந்ததை நான் அறிவேன். அவருடன் பிறகு பல படங்களில் வேலைப் பார்த்திருக்கிறேன். பல வருடங்களுக்குப் பிறகும் கூட இன்றைக்கும் அந்த சம்பவம் என் மனதில் ஒரு நிழல்போல் கூடவே வருகிறது. "உல்லாசப் பறவைகள்' படத்தில்தான் என்னுடைய நண்பர் அசோக்குமாருடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது போல மல்டி டிராக்கில் ஒலியை பதிவு செய்யும் நிலையெல்லாம் அப்போது இல்லை. மூன்று டிராக்குகளில் மட்டும்தான் நாம் ஒலியை பதிவு செய்ய முடியும். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் பதிவு செய்து முடித்த பிறகு பார்த்தால் அதில் ஒரு டிராக் மட்டும்தான் பதிவாகியிருந்தது. நாங்கள் எல்லோருமே என்ன செய்வதென்று அறியாது திகைத்தோம். வேறு வழியின்றி அதை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்து ஒலியை சரி செய்து படம் பிடித்தோம். அந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் மெகா வெற்றியடைந்தது தனிக்கதை. பிரபல இயக்குனர் பாலசந்தரின் "அரங்கேற்றம்' படத்திலிருந்து தொடர்ந்து பல படங்களுக்கு வேலைப் பார்த்திருக்கிறேன். இயக்குனர் பாலசந்தர் ஸôரிடம் ஒரு ஸ்பெஷல் உண்டு. அவரிடம் இணைந்து பணியாற்றிய இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், ஒளிப்பதிவாளர் லோகநாதன், ஒலிப்பதிவாளர் எஸ்.பி.ராமநாதன் எல்லோரின் பெயரும் நாதனை கொண்டு முடிந்திருக்கும். இந்த ஒற்றுமையை நான் பலமுறை ரசித்திருக்கிறேன். எல்.வி.பிரசாத் ஸ்டூடியோவில் 1970லிருந்து 1980வரை ஏறக்குறைய பத்தாண்டுகள் ஒலிப்பதிவு துறையில் எஸ்.பி.ராமநாதனிடம் உதவி ஒலிப்பதிவாளராக வேலைப் பார்த்தேன். அப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் மூன்று மொழி இசையமைப்பாளர்களிடம் வேலைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேசனிடம் கிடார் வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் இருந்தே இளையராஜா ஸôரை எனக்குத் தெரியும். அதன்பிறகு அவர் இசையமைப்பாளராக ஆன பிறகும், ராஜா நாகேந்திரா, சக்கரவர்த்தி போன்ற அண்டை மாநில இசையமைப்பாளர்களுடனும் சவுண்டு இன்ஜினீயராக பணிபுரிந்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஸ்டூடியோவில் காலை ஏழு மணியிலிருந்து இரவு இரண்டு மணி வரை தொடர்ந்து இரவு, பகல் என வேலை நடந்துகொண்டே இருக்கும். என்னுடைய குருநாதரான எஸ்.பி.ராமநாதன் ஸôரிடம் நான் உதவியாளராக இருந்தபோது, அவர் நான்கு முறை சிறந்த ஒலிப்பதிவிற்கான தேசிய விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த ஒலிப்பதிவு வேண்டும் என்பதற்காக தன்னுடைய கன்னடப் படமான "கோகிலா' படத்திற்கு ஒலிப்பதிவு செய்ய வந்த இயக்குனர் பாலுமகேந்திரா அதன் பிறகு தொடர்ந்து எங்களுடைய வாடிக்கையாளராக ஆனார். அதேப்போல, முதன் முதலில் நான் "அபூர்வ ராகங்கள்' படத்தின் டப்பிங் வேலைகளின்போதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினி ஸôரைப் பார்த்தேன். இப்போது இருப்பது போல, அப்போதும் அமைதியாகத்தான் இருப்பார். பாலசந்தர் ஸôரைப் பார்த்தால் மட்டும் பயப்படுவார். அதனால் டப்பிங்கிற்கு கூப்பிடும்வரை வெளியிலேதான் நின்று கொண்டிருப்பார். ஆனால், அன்று நான் பார்த்த மனிதர் இந்த அளவிற்கு சிகரம் தொட்ட மனிதராக உலா வருவார் என்று நான் எண்ணியதே இல்லை. அவருடைய இந்த வளர்ச்சிக்குப் பின்னால் அவருடைய கடுமையான உழைப்பும், அர்ப்பணிப்பும் இருந்ததை அன்றே நான் கண்கூடாக கண்டிருக்கிறேன். தொடர்ந்து அவர் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த நேரங்களில் டப்பிங்கின் போது சில நேரங்களில் அவர் மிகவும் சோர்ந்து போயிருப்பார். தான் டப்பிங் பேச சற்று நேரமாகும் என்று தெரிந்தால் எந்த இடம் என்று பார்க்க மாட்டார். உடனே கிழே படுத்து தூங்கிவிடுவார். நாங்கள்தான் அவரை எழுப்பி, பிறகு டப்பிங் பேச வைப்போம். அவர் டப்பிங் பேசும்போது சில நேரங்களில் வசனங்களை வேகம் வேகமாகப் பேசி விடுவார். அது சரியில்லை என்பதற்காக ரீ-டேக் போவோம். இப்படி திரும்பி பேசும்போது கொஞ்சமும் சளைக்காமல் பேசிக் கொடுப்பார். சில நேரங்களில் மட்டும், ""உங்களுக்குப் என் பேச்சு புரிகிறது இல்லையா, நிச்சயம் ரசிகர்களுக்கும் புரியும்'' என்று எங்களோடு வாதிடுவார். அப்போதே தன் ரசிகர்களைப் பற்றி மிகத் தெளிவாக தெரிந்து வைத்திருந்தவர் ரஜினி ஸôர். சினிமா மீதான அவருடைய பொறுப்புணர்ச்சியையும், எளிமையையும்தான் இன்றுவரை நான் அவரிடம் வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். 1980களுக்குப் பிறகு, சுஜாதா இன்டர்நேஷனல் நிறுவனத்தில் "டப்பிங் தியேட்டர்' ஒன்றை நிர்ணயிப்பதற்கான முனைப்பில் இருந்தார் பாலாஜி ஸôர். எங்கள் ஸ்டூடியோவிற்கு ஒரு முறை வந்திருந்தவர், என்னை அழைத்து, ""நான் டப்பிங் தியேட்டர் ஒன்றை கட்டப் போகிறேன். அதற்கு உன்னைத்தான் மேலாளராக நியமிக்க முடிவு எடுத்திருக்கிறேன். சம்பளம் ஆயிரம் ரூபாய். என்ன சொல்கிறாய்?'' என்றார். இங்கே பாலாஜி ஸôரைப் பற்றி ஒன்று சொல்லியாக வேண்டும். அவர் ஒரு விஷயத்தை முடிக்க வேண்டும் என்றால் உடனே முடித்து விடுவார். அவரிடம் தாமதம், நாளை என்கிற எந்த வார்த்தையும் எடுபடாது. அவர் இப்படி கேட்டதும் நான் கொஞ்சம் தயங்கினேன். பிறகு, வீட்டில் கலந்து ஆலோசித்து விட்டு சொல்வதாக கூறினேன். வீட்டிலோ, ""இது உன்னுடைய வாழ்க்கை. அதனால் எந்த முடிவு எடுத்தாலும் எங்களுக்கு ஒன்றுதான்'' என்று கூறிவிட்டார்கள். எனக்கு அப்போது பிரசாத்தில் நானூறு ரூபாய்தான் சம்பளம். அதுவும் இல்லாமல் நான் வேலைப்பார்த்துக் கொண்டிருந்ததோ, சவுண்டு இன்ஜினீயரிங்கில். பெரும்பாலும் டப்பிங்கிலிருந்துதான், சவுண்டு இன்னீயரிங்கிற்கு மாறுவார்கள். இதுதான் வளர்ச்சி. ஆனால், இதற்கு நேர்மாறாக, சவுண்டு இன்ஜினீயரிங்கிலிருந்து, டப்பிங்கிற்கு மாறுவதை என்னுடைய பல நண்பர்கள் ஏற்கவில்லை. நானும் அவ்வாறே எண்ணினேன். இளையராஜா ஸôர்கூட அப்படி டப்பிங் போனால், என்னிடம் மறுபடியும் வேலைப் பார்க்க முடியாது என்று தீர்மானாக வேறு சொல்லியிருந்தார். ஆகவே, எல்லாவற்றையும் யோசித்துவிட்டு, தெளிவாக பாலாஜி ஸôரைப் பார்த்து, நான் மேலாளராக வேலைப் பார்க்க இயலாது என்பதை தெரிவிக்கலாம் என்று அவரது அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்றேன். ஆனால், நடந்ததோ வேறு! நான் அலுவலகத்திற்குச் சென்ற போது, வெளிநாட்டிலிருந்து டப்பிங் செய்வதற்கான தொழில்நுட்ப கருவிகள், "மெகானாடெக்' நிறுவனத்திலிருந்து அப்போதுதான் அங்கே வந்து இறங்கியிருந்தது. அதுவும் இல்லாமல், பில்வோனில் எனும் பெயர் கொண்ட இன்ஸ்டாலேஷன் இன்ஜினீயரும் வேறு வந்திருந்தார். அலுவலகத்தில் என்னைப் பார்த்த பாலாஜி ஸôர், என்னிடம் எதுவும் கேட்காமலேயே, பில்வோனிடம் அறிமுகப்படுத்தி, ""இவர்தான் மூர்த்தி. நம்முடைய டப்பிங் தியேட்டருக்கு மேலாளர். இன்றுதான் பணியில் அமர்ந்திருக்கிறார்'' என்று சொல்லிவிட்டார். நான் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். பாலாஜி ஸôர் அறிமுகப்படுத்தி விட்டு வெளியே போய்விட்டார். அப்போது வெளிநாட்டில் "தீ' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அதனுடைய டப்பிங் வேலைகள் எல்லாம் புதியதாக அமையும் டப்பிங் தியேட்டரில்தான் பண்ண வேண்டும் என்று அவர் முடிவெடுத்திருந்தார். ஆகவே, வேலைகளை துரிதப்படுத்தியிருந்தார். நானும், அந்த இன்ஸ்டாலேஷன் இன்ஜினீயரும் இணைந்து வேலைகளை தொடங்கினோம். நாங்கள் வேலையைத் தொடங்கியவுடன், சரியாக மின்சாரத்தடை ஏற்பட்டது. என்னடா இது! ஆரம்பமே சரியில்லையே என்று நான் வருத்தப்பட்டு, பாலாஜி ஸôரிடம் சொன்னேன். அவரோ, ""அப்படியா! அது எனக்கு ராசியான விஷயமாச்சே! கண்டிப்பாக, இந்த டப்பிங் தியேட்டர் வெற்றிகரமாக இயங்கும்'' என்றாரே பார்க்கணும். நான் அவருடைய பாஸிட்டிவ் எண்ணத்தைப் பார்த்து வியந்து போனேன். அதன்பிறகு இருபது வருடங்கள் (1980 லிருந்து 2002வரை) அந்த டப்பிங் தியேட்டரில், வெற்றிகரமான மேலாளராக வேலைப் பார்த்தேன். திரைப்படக்கல்லூரியில் படிக்கும்போது என்னுடைய இறுதியாண்டு படம் "தியாகம்'. அதை 35எம்.எம். ஃபிலிமில் எடுத்தோம். இதில் நான் மேக்-அப் மேனாகவும், வசனகர்த்தாவாகவும், சவுண்டு ரெக்கார்டிஸ்டாகவும் வேலைப் பார்த்தேன். இப்படத்திற்கு ஒளிப்பதிவை பிரபாகர் செய்தார். தமிழ் சினிமாவில் பரவலாக அறியப்பட்ட அசோக்குமார்தான் படத்தின் இயக்குனர். அப்போது எங்களுக்கு வெங்கடாச்சலம் ஸôர்தான், கல்லூரியின் ஒலிப்பதிவு பிரிவுக்கு பொறுப்பு வகித்தார். இந்த படம் எடுத்தப் பிறகு எங்களுக்கு ஒரு சோதனை வந்தது. அது இந்தப் படத்தின் கதை பிரபல "ஆனந்த விகடன்' இதழில் வெளிவந்த கதையை மையமாகக் கொண்டது. அந்தக் கதையின் எழுத்தாளர் ஒரு பெண். அவர் இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி, நீதிமன்றத்தை நாடப்போவதாக மிரட்டல் விடுத்தார். எங்கள் கல்லூரி முதல்வர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் அதை கைவிட்டார். நாற்பதாண்டு காலத்திற்கு பிறகும் என் கல்லூரியை திரும்பிப் பார்க்கும்போது, அதனுடைய முகம்தான் மாறியிருக்கிறதே தவிர, மற்றபடி அது தொடர்ந்து இளமையோடும், துடிப்போடும் படைப்பாளியை உருவாக்கியபடியேதான் இருக்கிறது. அந்த காலங்கள் மறக்க முடியாதவை...''என்று தன் கடந்துபோன கல்லூரி வாழ்க்கையின் வாழ்வை சொல்லி முடித்த மூர்த்தியின் கண்களிலும், முகத்திலும் சந்தோஷத்தின் தீர்க்க ரேகைகள் படிந்ததை நாங்கள் கண்டோம். உற்சாகம் கொப்பளிக்க கைக்குலுக்கி விடைப்பெற்றோம்.

( தொடரும் )

Comments

Popular Posts