நம்பிக்கையளிக்கும் புது வரவுகள்...

மாற்று சினிமா

மிழ் சினிமா முன்பு இருந்த நிலையை விட, தற்போது பல படிகள் தொழில் நுட்பத்திலும், கதை சொல்லும் முறையிலும் முன்னேறியிருக்கிறது. உதாரணம், தொழில்நுட்பத்திற்கு "எந்திரன்', கதை சொல்லலுக்கு "களவாணி' போன்ற படங்களைச் சொல்லலாம். மேன்மை பொருந்திய ரசிகப் பெருமக்களும், நல்ல திரைப்படங்களைத் தவறாது கண்டுகளித்து, தங்கள் நன்றியுணர்ச்சியைக் காட்டி, புதிய இயக்குநர்களுக்கு சிகப்புக் கம்பள வரவேற்பு அளிக்கிறார்கள். இவ்வாறு தமிழ்ப் பட சூழலில் சிறந்த திரைப்படங்கள் உருவாவதற்கு "மாற்று சினிமா' என்றழைக்கப்படும் குறும்படங்களும் பங்கு வகித்தன என்பதை நாம் மறக்கலாகாது. திரையில் சொல்லத் தயங்கிய பல பாடு பொருள்களைக் கதைக் கருவாகவும், கதைக் களமாகவும் எடுத்துக்கொண்டு, புதிய இளைஞர்கள் சிறந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் வரவேற்கும்படியான பல குறும்படங்களை சமீபத்தில் எடுத்திருக்கிறார்கள். அந்த வகையில், இவர்கள் இயக்கிய படங்கள் இந்திய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் குறும்பட விழாக்களிலும் முக்கிய கவனம் பெற்றிருக்கின்றன. அதுமட்டுமின்றி, தமிழ்த் திரைப்பட சூழலிலும், தொலைக்காட்சிகளிலும் கூட "மாற்று சினிமா' என்றழைக்கப்படும் குறும்படங்களுக்கான சிறப்பு ஒளிபரப்புகளும், தொடர்களும் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். "மக்கள் தொலைக்காட்சியில்' "பத்து நிமிடக் கதைகள்' என்ற பெயரிலும், "கலைஞர் தொலைக்காட்சி'யில் "நாளைய இயக்குநர்' என்ற பெயரிலும் குறும்படங்களுக்கான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவது, "சினிமா எக்ஸ்பிரஸ்' உள்ளிட்ட சில பிரபலமான இதழ்களில் மாற்று குறும்படங்களுக்கான விமர்சனங்கள் எழுதப்படுவது போன்றவை குறும்படங்கள் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதற்கு சான்றுகளாகும். முன்பெல்லாம் குறும்படத்தை ஒரு திரைப்பட இயக்குநரிடம் உதவி இயக்குநராக சேருவதற்கு "விசிட்டிங் கார்டா'க மட்டுமே பயன்படுத்தி வந்த இளைய தலைமுறை, தற்போது குறும்படங்களை சிறந்த "கருத்து சாதனமாக' மாற்றியுள்ளனர். திரையில் இரண்டரை மணி நேரத்தில் சொல்லப்படும் சினிமா உருவாக்கும் தாக்கத்தைக் காட்டிலும், இவர்கள் அரை மணி நேரத்திலோ, பத்து நிமிடத்திலோ சொல்லும் கதைகள் பரவலான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. கருத்தியல் ரீதியாகவும், பொருள் ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் இவர்கள் தங்கள் படங்களை இயக்கி, மக்களை சிறப்பு கவனம் பெற வைத்திருக்கிறார்கள். அதற்குக் காரணம், தற்போது தமிழகத்தில் சிறந்த திரைப்படக் கல்லூரிகளும் உருவாகியிருப்பதுதான்! தமிழகத்தில் முன்பு சினிமாவைக் கற்றுக் கொடுப்பதற்கு விரல் விட்டு எண்ணும் அளவிற்கே திரைப்படக் கல்லூரிகள் இருந்து வந்தன. ஆனால் இப்போது நிலைமையோ தலைகீழாக உள்ளது. புதியதாக பல திரைப்படக் கல்லூரிகள் சென்னையில் உருவாகியுள்ளன. குறிப்பாக திரைப்படத் துறையில் பல வருட அனுபவம் பெற்ற பிரசாத் நிறுவனம், திரைப்படத் தொழில் நுட்பம், திரைக்கதை போன்றவை குறித்த பயிற்சிகளை தனது "பிரசாத் ஃபிலிம் மற்றும் டி.வி. அகடமி' வாயிலாக வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் பிரபல இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர்களிடம் இவர்களது மாணவர்கள் உதவியாளராகப் பணியாற்றுகின்றனர். மேலும், சிலர் திரைத்துறையில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகிறார்கள். எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம், "சிவாஜி கணேசன் திரைப்படக் கல்லூரி'யையும், பிரபல ஒளிப்பதிவாளரான ராஜீவ்மேனன் "மைன்ட்ஸ்கீரின் திரைப்படக் கல்லூரி'யையும் துவக்கியுள்ளனர். மேலும், மீடியா சம்பந்தமான "விஷுவல் கம்யூனிகேஷன்' படிப்பு பல கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் தொடங்கப்பட்டுள்ளதும் சிறந்த படங்கள் உருவாவதற்கு வழிகோலியுள்ளன. புதிய கல்லூரிகள் பல தொடங்கப்பட்டிருந்தாலும், இவற்றிலிருந்து உருவான திரைப்படங்களைவிட, அனுபவ ரீதியாக திரைத் தொழில்நுட்பத்தையும், இயக்கத்தையும் கற்றுக்கொண்டவர்கள் எடுத்த குறும்படங்களே சிறந்த படங்களாக சர்வதேச கவனத்தைப் பெற்றிருக்கின்றன. அந்த வகையில், குறிப்பாக இயக்குநர் பொன்.சுதா இயக்கிய "நடந்த கதை'யைச் சொல்லலாம். இந்த ஆண்டில் அதிகமான விருதுகளைப் பெற்ற குறும்படமாகவும், தொடர்ந்து திரையிடப்பட்டிருக்கும் குறும்படமாகவும் இதுவே முன்னணியில் நிற்கிறது. அடுத்து, திரைப்படக் கல்லூரிகளில் பயின்ற மாணவர்களான இயக்குநர் பிரின்சு என்னெரசு பெரியார் இயக்கிய "திற', இயக்குநர் முரளி மனோகர் இயக்கிய "கர்ணமோட்சம்' ஆகியோரின் படங்களும் பல திரையிடல்களைக் கண்டு கொண்டிருப்பதோடு, பல்வேறு குறும்படப் போட்டிகளிலும் பரிசுகளை பெற்றவாறு இருக்கிறது. இவை மட்டுமின்றி பாவல் நவகீதன் இயக்கிய "ஓர் இரவு', "கவிதையின் பாடல்', "நானும் ஒரு பெண்' போன்ற படங்களும் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன. தமிழகத்தில் உருவாகும் குறும்படங்கள் மட்டுமின்றி, ஏனைய நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியிலும் பல நல்ல குறும்படங்கள் உருவாகியுள்ளன. சமீபத்தில் ஓவியர் டிராட்ஸ்கி மருது மற்றும் ஒளிப்பதிவாளர் செழியன் ஆகியோர் பிரான்சு சென்று சிறந்த குறும்படங்களைத் தேர்வு செய்து வந்துள்ளனர். ஆக, தமிழகம் மட்டுமின்றி, உலகளவிலும் குறும்படங்களுக்கான சந்தையும், திரையிடலும் உருவாகியிருப்பதை நாம் இங்கே கவனித்தாக வேண்டும். பல்வேறு குறும்பட விழாக்களில் சிறந்த குறும்படமாகத் தேர்வு செய்யப்பட்ட பல படங்கள் பெரும்பாலும் சமூகப் பார்வையோடு எடுக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, தீண்டாமையை சொல்லும் "நடந்த கதை', மதத் தீவிரவாதத்தைத் தோலிரித்துக் காட்டும் "திற', நலிந்த கிராமப்புறக் கலைஞர்களின் வாழ்க்கையைக் காட்டும் "கர்ணமோட்சம்', குடும்ப வன்முறையால் குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் சிக்கல்களை வெளிச்சம் போட்ட "ஓர் இரவு', மூன்றாம் பாலினமான திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பில் ஏற்படும் பிரச்சினைகளைத் தொட்ட "நானும் ஒரு பெண்' போன்ற குறும்படங்கள் யாவும் சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டவையே! இக்குறும்படங்கள்தான் பலருக்கு ஒரு முன் மாதிரியாகவும் இருக்கின்றன. இவை மட்டுமின்றி ஆவணப் படங்களும் கவனிக்கத்தக்க ஒரு நிலையை அடைந்திருக்கின்றன. அந்த வகையில், இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், தஞ்சை கீழ்வெண்மனி சம்பவத்தை மையமாக வைத்து எடுத்த "ராமைய்யாவின் குடிசை', பத்திரிகையாளர் கோவி. லெனின் இயக்கிய "அறிஞர் அண்ணா' போன்ற படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். குறும்படச் சூழலில் ஏராளமான படங்கள் எடுக்கப்பட்டாலும், சில படங்கள் மட்டுமே கவனம் பெற்றன. பல படங்கள் வந்த வேகத்திலேயே காணாமல் போயின. இப்படங்கள் வரவேற்கத்தக்க பதிவைப் பெறாமல் போனதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானவை தாங்கள் எடுத்துக்கொண்ட கதையைத் திரை மொழிக்கு மாற்றும் திறனை சம்பந்தப்பட்ட இயக்குநர்கள் பெறாததுதான். "திரைக்கதை' என்னும் மாய வித்தையைப் பலர் கற்றுக்கொள்ளாமலேயே குறும்படங்களை இயக்க முன் வந்திருந்தனர். வெறும் தொழில்நுட்பமும், கதையும் மட்டுமே சிறந்த குறும்படமாக ஆகிவிட முடியாது என்பதை இவர்களுடைய படங்களே இவர்களுக்கு எடுத்துக்காட்டியதுதான் சிறப்பான விஷயமாகும். மற்றபடி நல்ல குறும்படங்கள் உருவாவதற்கான சூழலும், முயற்சியும் அதிகரித்திருப்பது தமிழ் சினிமாவிற்கும், குறும்படச் சூழலுக்கும் ஆரோக்கியமானதாகும். மேலும் நல்ல முயற்சிகளும் இந்த ஆண்டு காத்திருக்கின்றன.

Comments

Popular Posts