கதை எழுது - 26

1. கற்பனை என்பது என்ன? இல்லாத தொன்றை உருவாக்குவதும் இருப்பதற்குப் புதிய பொருள் கூட்டுவதும் கற்பனையின் செயல். கருத்துக்கு வளர்ச்சியும், உருவமும் கொடுக்கும் சமாதானம்தான் கற்பனை. உலகத்தை மனோமயமாகப் பார்ப்பதுதான் கற்பனையின் முதல் வேலை - முழு வேலையும்கூட. வாழ்வை விவரிக்கும் சக்தி கற்பனை. பலவாகத் தோன்றுவதை ஒருமைப் படுத்துவது ம் கற்பனைதான். கற்பனையின் துணைகொண்டெழுவது இலக்கியம்.
2. இலக்கியம் தோன்றுவதற்கு எந்த அளவு கற்பனை தேவையோ அந்த அளவு வாழ்வும் தேவைப்படும். உலகத்தில், வாழ்வில் நடப்பவற்றை எல்லாம் இலக்கிய கர்த்தரின் மனது பதிவு செய்து கொண்டே இருக்கிறது. இப் பதிவுகளைத்தான் கற்பனை பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்ளுகிறது. தள்ளுவதைத் தள்ளி வேண்டியவற்றைச் சேர்த்து, இலக்கிய சிருஷ்டியை உருவாக்குகிறது. அதனால்தான் வாழ்வுக்குப் போட்டியான உலகமாக அது அமைகிறது - திரிசங்குவின் உலகத்தைப் போல.
3. இலக்கியமென்பது ஒரு சிலருக்காக அல்ல. எல்லோருக்கும்தான் என்னும் அடிப்படை ஒப்புக் கொள்ளப்படுமானால் இலக்கிய நடையைப்பற்றி அதிக விவாதத்துக்கு இடமில்லை. சாதாரன ஜனங்களுக்கு இலக்கியத்தின் மூலம், இன்பத்தையும் புது திருஷ்டியையும் உண்டாக்க விரும்பும் இலக்கியகர்த்தன் நடைமுறை பாஷையைப் புறக்கணிக்க முடியாத். புறக்கணித்தால் தன் நோக்கத்தில் வெற்றிகாண இயலாது.
4. பாம்பு அடிக்கடிசட்டை உரித்துக் கொள்வதுபோல எழுத்தாளன் - தன்னைப் புதிசுபடுத்திக் கொள்ள வேண்டும்.
5. எனக்கு எப்போதும் உனர்ச்சிதான் முக்கியம். தர்க்கரீதியான அறிவுக்கு இரண்டாம் இடந்தான்.
6. தன்னை அறியப் பல வழியுண்டு. எழுத்தும் ஒரு வழி.
7. எழுத்தின் மூலமாக வாழ்க்கையைப் போட்டோ பிடிப்பது முடியாத காரியம். எழுத்தாளனுடைய மனமென்னும் மஞ்சள் நீர் பட்டால் சம்பவத்தின் கோலம் புதுமையாய் மாறிவிடும்.
8. இலக்கியத்தைப் பிரசாரம் ஆக்க முயண்றாலும், பிரசாரத்தை இலக்கியமாக்க முயன்றாலும், 'விதைக்கும் ஆகாமல் கறிக்கும் உதாமல் போவது' என்பார்களே, அதைப் போன்ற நிலையைத்தான் தமிழ் இலக்கியம் அடையும்.....வாழ்வின் கோட்பாடுகளை மறக்கும் இலக்கியத்துக்கு - மறுக்கும் சிருஷ்டித்திறனுக்கு அமரத்துவம் கிட்டுவது சந்தேகமே....

Comments

Popular Posts