கதை எழுது - 15

பிரபஞ்சன்
1. சிறுகதை என்பது குளத்தில் விழுந்த கல். அமைதியைக் குலைத்துக்கொண்டு 'களக்' என்கிற சிறு சப்தத்துடன், தண்ணீர்ப் பரப்பைப் பொத்துக்கொண்டு, அதற்குள் நுழைந்து, சலனங்களை ஏற்படுத்துகிற முயற்சி. வாழ்வின் ஒற்றைச் சலனத்தின் படப்பிடிப்பு. மனித உறவுகளில் ஏற்படும் சிக்கல்களின் ஒற்றைச் சித்தரிப்பு. ஒரு சிறு நிகழ்ச்சி, சிறுகதைக்குப் போதுமானது.
2. திட்டவட்டமாகப் பக்கக் கணக்கில் சிறுகதையை அடக்க முடியாது. புதுமைப் பித்தனின் 'பொன்னகரம்' இரண்டு பக்கங்களில் அமைந்த கதை. 'சாப விமோசனம்', 'சிற்பியின் நரகம்' ஆகிய கதைகள் பத்துப் பக்கங்களுக்கு மேலாகப் போகும். ஆகவே, பக்கங்களை வைத்துக் கணக்கிடலாகாது. உள்ளடக்கக் குணாம்சங்களை வைத்தே தீர்மானிக்கப்படும்.
3. ஒரு நாவல், சொல்ல வந்த விஷயங்களின் அல்லது விஷயத்தின் சகல பரிமாணங் களையும், சரித்திர, பொருளதார, மனோபாவ பரிமாணங்கள் அத்தனையையும் உள்ளடக்கி விவரிப்பது. சிறுகதைக்கு அத்தனை பரிமாணம் தேவையில்லை. விவரணங்களும் தேவையில்லை. ஒரு சிறு சம்பவமும், அதன் தன்மையைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு விவரிப்பும் போதும். ஒன்றிரண்டு மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் எவ்வாறு அதை எதிர்கொண்டு, எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறார்கள் என்பது ஒரு சிறுகதைக்குப் போதும். இன்னும் சொன்னால், அந்தப் பிரச்சினையை எவ்வாறு எதிர் கொண்டார்கள் என்பதேகூடப் போதுமானது.
4. சிறுகதை குறியை நோக்கி, ஒரு துப்பாக்கித் தோட்டா மாதிரி பயணம் செய்யும் தன்மையது. பள்ளிக்கூடப் பையன் மாதிரி பராக்குப் பார்க்கக்கூடாது. சிறுகதை ஆசிரியன், கண்பட்டை போட்ட குதிரை மாதிரி, மற்றதைப் பார்க்கவேண்டிய அவசியம் இல்லாதவன். அவன் இலட்சியம் அவன் சொல்லத் தேர்ந்த விஷயம்!
5. சிறுகதைக்குரிய கருவை எங்கிருந்தும் பெறலாம். அது எங்கும் காற்றுப்போலவும், ஓளி போலவும் நிறைந்திருக்கிறது. பார்ப்பதற்குக் கண்களையும், உணருவதற்கு மனத்தையும் இயக்குவதொன்றே கருவைப் பெறும் வழி. உங்களுக்கு நேரும் அனுபவமே உங்களுக்குக் 'கரு' ஆகுமே!
6. சிறுகதை எந்த விஷயத்தையும் தொடலாம். வானமும், அதற்குக் கீழே இருக்கிற அனைத்தையும் அது தொடும். ஆனால், தொடும் விஷயம் நீங்கள் நன்கு அறிந்ததாய் இருக்க வேண்டும். விமானப் பயணம் செய்யாத எழுத்தாளன், விமானப் பயணம்செய்யும் தன் பாத்திரத்தின்அனுபவத்தைச் சரியாகச் சொல்ல முடியாது.
7. சிறுகதைகளில் சம்பவ ஓர்மை அவசியம். ஒரு நிகழ்ச்சி மற்ற நிகழ்ச்சிக்கு வழியமைத்து சொல்ல வந்த விஷயத்துக்கு இசைவாக இருத்தல் முக்கியம். கதை இறுக்கம் கொண்டு இலங்குவது நல்லது.
8. முதல் வாக்கியத்தில் கதை தொடங்கியிருக்க வேண்டும். கதை நேரான தளத்தில் மளமளவென்று நடக்க வேண்டும். தயக்கம் கூடாது. சொல்ல வந்த விஷயந்தான் தீர்மானம் ஆகிவிட்டதே அப்புறம் ஏன் தயக்கம்?

Comments

Popular Posts