கதை எழுது - 20

1. சிறுகதை ஒரு இலக்கிய வடிவம். அது ஒரு அனுபவந்தான். ஆனால் புலன்களின் நுகர்ச்சி அனுபவம் அல்ல. அதற்கும் அப்பால் மனத்தினால், உணர்ச்சியிலே அடையப் பெறும் அனுபவம்.

2. கதை என்று பொதுவாகச் சொன்னால் அதில் எல்லாக் கதைகளும் அடங்கிவிடும். சிறுகதை என்று சொன்னால் அதில் குறிப்பிட்ட இலக்கணங்கள் கொண்ட கதைகள் மட்டும்தான் அடங்க முடியும். அதாவது சிறுகதைக்கு ஒரு இலக்கணம் உண்டு.

3. சிறுகதைக்குத் தாய்ச்சரக்கு மனிதமனம் அல்லது உண்மை தான். மனிதமனப் போக்குகள் அவற்றிற்கு ஆதாரமான உள்ளத்து உணர்ச்சிகள் இவற்றை மின்வெட்டுக்கள்போல எடுத்துக்காட்டுவதுதான் சிறுகதை.
4. கடல் போன்ற வாழ்க்கையில் ஒரு தனிமனித நிலையை, மனப்போக்கை ஒரு உணர்ச்சிவேகத்தை, அழகாக எடுத்துக்காடுவதுதான் சிறுகதை. நமது வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகளில் அவரவர் மனப்போக்குக்கு ஏற்ப சிக்கி, உழன்று, அந்த நெருக்கடி ஓட்டத்தில் ஒரு சிறு நிகழ்ச்சியில் நம் கவனத்தை ஊன்றி வைத்து, அதன் காரண - காரிய தொடர்புகளை அலசிப் பார்த்து அடையும் அனுபவத்தை, பக்குவமாக, தேவையற்ற விவரங்களை வடிகட்டி ஒதுக்கிவிட்டு, சுண்டவைத்த கஷாயம்போல, சாரத்தை சுவையாகவும், கவர்ச்சிகரமாகவும் கொடுப்பதுதான் சிறுகதை.

5. ஒரு நல்ல உயர்ந்த சிறுகதையைப் படித்ததும் படிப்பவர் உள்ளம் உயர வேண்டும்.

6. மனிதனது வாழ்வில் பிறப்பும், வாழ்வும், இறப்பும் அவனைக் கட்டுப்படுத்தி விடுகின்றன. அந்தக் கட்டுப்பாட்டை மீற, அவன் செய்யும் முயற்சிகநிளையும், போராட்டங்களையும் அவற்றில் அவன் அடையும் வெற்றி தோல்விகளையும் எடுத்துகாட்ட முயல்வதுதான் சிறுகதை.

7. ஒரு நல்ல சிறுகதை என்பது ஒரு குறிப்பிட்ட கொள்கை அல்லது லட்சியத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்டாலும் அந்தக் கொள்கையிலும் லட்சியத்திலும் உண்மையின் பலம் இருக்க வேண்டும்.

8. சிறுகதையில் தொட்டுக் காட்டப்படும் மனநிலை குறுகிய, தற்காலிகமான தடைகளால் ஏற்படும் அனுபவங்களாக இருக்கக் கூடாது.

9. சமூக அநீதிகளை எதிர்த்து, திமிறி எழுந்து நியாயம் கிடைக்கச் செய்யக்கூடியதான மனோபாவம் வெளிப்படுத்தும் சிறுகதைகள் அமைக்கப்பட வேண்டும்.

10. சிறுகதைகளுக்குச் சுருக்கம் எழுத முடியாது, எழுதக் கூடாது. சிறுகதையில் ஒரு வரி விட்டுச் சொன்னால் கூட அதன் அழகு மூளியாகிவிடும். அது ஒரு வார்ப்பு.

Comments

Popular Posts