கதை எழுது - 39

1. என்னைப் பெரிதும் பாதிப்பவை மனித வாழ்வின் பிரச்சினைகளே. என்னைப் பொறுத்தவரையில் எழுத்தாளனுக்கு அவனுடைய படைப்புகளுக்குப் பகைப்புலனாக அமைய வேண்டியது மனித வாழ்வின் பிரச்சினைகளே. சமுதாயத்தின் தனிப்பட்ட முறையில் தீவிர சுயஉணர்வு (இண்டென்ஸ் ஸெல்க்ஷிப்பீலிங்) இல்லை என்பேன். ஆனால் எழுத்தாளனுக்கு இது இன்றியமையாதது. அவனுடைய படைப்புகளில் சமுதாய நோக்கமே முதலிடம் பெறவேண்டும். உருவம், உத்தி முதலிய நுணுக்கங்கள் உள்ளடக்கத்தைப் பொறுத்தே அமைகின்றன. சமுதாயத்தின் வாழ்க்கைமுறையினால், ஏற்றத்தாழ்வுகளினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி எழுதுவது அவசியம் என்பேன்.


2. சும்மாவானும் 'கிளி 'கீகீ' என்று கத்தியது, நதி சலலத்து ஓடிக்கொண்டிருந்தது, காற்று மந்தஹாசமாக வீசிக் கொண்டிருந்தது' என்று எழுதிக் கதை பண்ணிக் கொண்டிருப்பதைவிட, எங்கெங்கே இதயங்கள் எப்படி எப்படியெல்லாம் பற்றிக் கொண்டு எரிகிறது என்று எடுத்துக் காட்டி, நமது சமூகத்தின் பெரிய பீடங்களை அச்சுறுத்தி எச்சரிக்கவேண்டுவது இக்கால இலக்கியத்தின் தவிர்க்கவொண்ணாத கடமையாகும்.


3. வாழ்க்கை என்பது காதல் மட்டுமே அல்ல; ஏனென்றால் இங்கு நம்மில் பலர் வாழவே இல்லை. காதலென்பது நமது இளைஞர்களைப் பொறுத்தவரை வெறும் மனப் பிரமைதான். சமூகத்தில் 'வாழாதவர்களி'ன் வாழ்வுக்கு இலக்கியத்தில்கூட இடமே இல்லை. காதலித்தவர்களைப் பற்றியே எழுதிக் கொண்டிருந்தால் காதலிக்க முடியாதவனைப் பற்றி யார் எழுதுவது? பூர்ண சந்திரனைப் பற்றியே எழுதிக் கொண்டிருந்தால் அமாவாசை இருளில் அக்கம்பக்கத்தாருக்குத் தெரியாமல் சோரம்போகும் கைம்பெண்களைப் பற்றி யார் எழுதுவது?


4. கவிமனம் கொண்டவனுக்கு வாழ்க்கையின் ஒவ்வோர் அசைவிலும் கவிதை தென்படும். அதுபோலவே, நீண்ட நெடிய இவ்வாழ்க்கைக்காதை சிறுகதை மனம் கொண்டவனுக்கு கதைகதைகளாய்ப் பூத்துச் சொரியும். காதைகள் சொரிவன செவிநுகர் கனிகள்.


5. ஓர் ஒலி, ஒரு சொல், யாரோ யாரிடமோ எதற்கோ சொன்ன அசரீரி போன்றதொரு வாக்கு, வேகமாய்ப் போகிற ஒரு வாகனத்தில் பிரயாணம் செய்து கொண்டிருக்கிற போது, ஒரு நொடியில் கண்ணில் பட்டு மறைந்த காட்சி இவையாவும் ஒரு கவியின் உள்ளத்தில் பட்டுப் பிரதிபலிப்பதால் ஏற்படும் ஒரு வடிவமே நவீனகாலச் சிறுகதை ஆயிற்று; ஆகிவிடமுடியும்.


6. ஒரு நல்ல நோக்கமில்லாமல் எந்த நல்ல கலை வடிவமும் வர முடியாது. சிறுகதை எழுதவேண்டும் என்ற ஆசையினால் எழுதப்படுவது சிறுகதை ஆகாது. வடிவ அமைப்பில் அது சிறுகதை என்று என்னதான் எழுதுபவனாலும், பத்திரிகைக்கார னாலும் நிறுவப்படினும், அது திரும்பவும் படிக்கத்தக்க சிறப்புடைய சிறுகதை ஆகாது. ஏன்? அதில் ஒரு நன்னோக்கமில்லை. அதன் நோக்கமே அது அதுவாக இருப்பது என்று அமைந்துவிட்டால், அது செயல் திறனற்ற சிறுகதையின் சிதைந்த வடிவமாகவே எஞ்சி நிற்கும்.


7. 'காட்டும் வையப் பொருள்களில் உண்மை கண்டு' சேர்க்கும் சாத்திரம் சிறுகதை ஆகும். இதில் கற்பனைக்கு இடமே இல்லை. வாழ்க்கை காட்டுவதைக் கொண்டு நாம் காட்ட விரும்புவதை அதன் முலமே உணர்த்துகின்ற ஒரு முயற்சியே என் அனுபவத்தில் சிறுகதைக்கு ஆதாரம் ஆகும்.


8. சிறுகதைக்கு அடிப்படையும், கருவும், வித்தும் ஒரு கருத்தே அகும். அந்தக் கருத்து எழுதுபவனின் மனத்தில் எவ்வளவு ஆழமாக கூர்மையாகப் பதிந்து, பாதித்து அவனை அலைக்கழிக்கிறதோ அந்த அளவு அந்தச் சிறுகதையும் ஆழமானதாய், கூர்மையாய்ப் படிப்பவர் நெஞ்சத்தில்- எப்படி எழுதுபவனின் நெஞ்சத்தில் எழுந்து அலைக்கழித்ததோ, அதனினும் ஆயிரம் மடங்கு அதிகமான அலைகளையும் பாதிப்புகளையும் - ஏற்படுத்தி அந்த மூலக் கருத்தை முழுமையாகப் பதிய வைத்து விடும்.


9. ஒரு சிறுகதை சிறந்ததாயின் அதைப் படித்தவர் வாழ்நாள் முழுதும் அந்தச் சிறுகதையை மறத்தல் ஏலாது. எழுதியவனின் பெயர்கூட மறந்துவிடும்; கதையில் வரும் பாத்திரங்கள் பெயர்கூட நினைவில் நிற்காமல் போய்விடும். ஆனால், அது சொல்ல வந்த கருத்தை இலக்கிய வாசகரின் இதயத்திலும் இலக்கியத்தின் சரித்திரத்திலும் நிரந்தரமாய்ப் பதித்துவிடும்.


10.சிறந்த சிறுகதைகளையும் இலக்கியங்களையும் பயில்வதன் நோக்கம் தாமும் அது மாதிரிச் சிறுகதைகளை எழுத வேண்டும் என்பதாக அமைந்து விடலாகாது.
அந்தச் சிறந்த சிறுகதையாசிரியர்களின் நோக்கமும் அதுவல்ல. அக்கதைகளைப் பயில்வதன் மூலம் வாசகர்களின் - அதாவது மக்களின் - அறிவும் மனமும் உயர்ந்து சிறக்கவேண்டும் என்பதே ஆகும்.


11. சிறுகதை என்பது சிறிய, குறுகிய சின்ன உள்ளங்களிலிருந்து உருவாக முடியாது. கதை எழுதுவதற்கு அறிவும், அனுபவமும், மனிதர்கள்பால் அன்பும் எந்த ஒரு மகா ஞானிக்கும் இணையாக எந்த ஒரு சாதாரண மனிதனுக்கு அமைந்து விடுகிறதோ அவன் ஒரு நல்ல சிறுகதையை எழுதிவிட முடியும்.


12. 'பொழுது போக்குக்காக இலக்கியம்' என்கிற வாதம் மிகவும் பொல்லாதது. பொழுது போக்குக்காக, காதல் என்ற பெயரில் ஆண்-பெண் உறவு உறவு கொள்ளுகிற போக்கு எப்படிஒருவனை அல்லது ஒருத்தியை ஒழுக்க வீழ்ச்சியில் கொண்டுபோய் விடுமோ அதே போன்ற வீழ்ச்சியில் இந்தப் 'பொழுது போக்குக்காக இலக்கியம்' என்கிற வாதம், கொண்டுபோய் விட்டுவிடும்.

Comments

Popular Posts