சினிமா - 5


(திற)


னித குல வரலாற்றில் எத்தனையோ துயரச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. எல்லாத் துயரச் சம்பவங்களுக்குப் பின்னாலும் மூடி மறைக்கப்பட்ட உண்மைகளே அதிகம் இருக்கின்றன. ஜாலியன் வாலாபாக் படுகொலையாகட்டும், பாஸிஸத்தின் தலைவனான ஹிட்லரின் இன அழிப்புச் செயலாகட்டும், சம காலத்தில் நம் கண்முன்னே அழித்து ஒழிக்கப்பட்ட ஈழத் தமிழர்களாட்டும் எல்லாவற்றிக்குப் பின்னாலும் மக்கள் அறிந்து கொள்ளாமல் தடுக்கப்பட்ட உண்மைகளே ஏராளம். எந்த ஏட்டிலும், வீடியோ பதிவுகளிலும், இணையங்களிலும் காணக் கிடைக்காத அந்த வரலாற்றுப் பேருண்மைகளை யார் உலகிற்குச் சொல்ல முன் வருவார்? பலரது மனங்களில் வெறும் சம்பவமாக மட்டுமே உறைந்துப் போய்விட்ட இவ்வரலாற்றுக் கொடுமைகளுக்கு நீதி வழங்கப் போவது யார்? ஏன் ஒருபோதும் இதுக் குறித்து நாம் யோசிக்கவோ, விவாதிக்கவோ மறுக்கிறோம்? ஒருவேளை நாம் அதிகம் மறதிக்காரர்களாக இருக்கிறோம் என்பதுதான் இதற்கெல்லாம் அடிப்படைக் காரணமா? மறப்பது எவ்வளவு மோசமான விஷயம் என்று ஏன் நம்மில் பலருக்கும் தெரிவதேயில்லை? நம் பலத்தை நாம் ஏன் மறந்தோம்? நம் கோபமும், வீரமும் எங்கே போயிற்று? நமது வீரம் மழுங்கடிக்கப்பட்டு விட்டதா என்ன? "ரெüத்திரம் பழகு' என்று நம் பாட்டன் சொன்னானே? அந்தக் கோபபெருமூச்சு நம் காதுகளில் எதிரொலிக்கவில்லையோ? இறுகிப் போய்விட்ட சமூகத்தை யார் தட்டித் திறப்பது? நமது மெüனத்தின் பூட்டு உடையாதவரை நமக்கான வாழ்வு நம்மிடம் இல்லை!
குஜராத் - கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தினால் சொந்த நாட்டிலேயே அகதியாகி, முகாமில் மக்கள் கூட்டத்தினிடையே அமர்ந்திருக்கும் சிராஜுதீன் சுயநினைவின்றி வானத்தையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். தன்னுடைய மகளான ஷகினாவின் ஞாபகம் அவருக்குள் வருகிறது. பல இடங்களில் தேடியும் கிடைக்காத தன் மகளை எங்கு தொலைத்திருப்போம்? என்று நினைவுகளைப் பின்னோக்கிப் பார்க்கிறார். கலவரத்தின்போது அவருடைய மனைவி கலவரக்காரர்களால் கொல்லப்பட்டதற்குப் பிறகு, மகளை அழைத்துக்கொண்டு தப்பித்து வருகையில் ஏதோ ஒரு இடத்தில் தான் மயக்கமடைந்ததும், அதன்பிறகுதான் தன்னுடைய மகள் காணாமல் போயிருக்கக் கூடும் என்பது அவருக்குத் தெரிய வருகிறது. அவர் தங்கியிருக்கும் முகாமில் யாரும் அவருக்கு உதவாததால், அவர் விரக்தியில் இருக்கிறார். அங்கே சில சமூக சேவக இளைஞர்கள், காணாமல் போன குழந்தைகளை தேடிக் கண்டுபிடித்து, கொண்டு வந்து முகாமிற்குள் தங்க வைக்கிறார்கள். அப்போது சிராஜுதீன் அவர்களின் உதவியை நாடுகிறார். அவர்களும் தாங்கள் கண்டுபிடித்துத் தருவதாக நம்பிக்கையளிக்கிறார்கள். சில நாட்களுக்குப் பிறகு, அந்த சமூக சேவக இளைஞர்களின் கையில் ஷகினா சிக்குகிறாள். அவளுடைய தந்தையிடம் கொண்டு சேர்ப்பதாகச் சொல்லி, அவளை அழைத்துவரும் சமூக சேவகர்கள் அவளை தந்தையிடம் சேர்க்காமல், வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, அவளைச் சிதைத்து விடுகின்றனர். இச்சம்பவம் நடந்த அன்றைய மாலை வேளையில் முகாமில் இருக்கும் சிராஜுதீனுக்கு அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு ஒரு பெண்ணை கொண்டு வந்திருக்கும் செய்தி கிடைக்கிறது. பதட்டத்துடனும், தேடலுடனும் செல்லும் சிராஜுதீன் தன் மகளை கண்டதும் அதர்ச்சியடைகிறார். அவள் சின்னாபின்னாமாக்கப்பட்டு, சுயநினைவின்றி படுக்கையில் கிடக்கிறாள். அவளை பரிசோதிக்க வரும் மருத்துவர் சிராஜுதீனிடம், "கதவைத் திற...'' என்று கூறும்போது, ஷகினா தன் இடுப்பில் இருக்கும் பாவாடையின் நாடாவை அவிழ்க்கிறாள். அவளது மனநிலையில் அந்த சமூக சேவக இளைஞர்களின் காம வெறிச்செயல் மனதில் நிழலாடுகிறது. அவளின் செய்கையைப் பார்க்கும் மருத்துவரின் முகம் அதிர்ச்சியில் உறைவதோடு படம் நிறைவடைகிறது.
சமீபத்தில் எடுக்கப்படும் பெரும்பாலான குறும்படங்கள் சமூகப் பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டாலும் அவற்றை திரையில் வெளிப்படுத்தும் விதத்திலும், காரண, காரியங்களை மிகத் தெளிவாக எடுத்துரைக்கும் விஷயத்திலும் கோட்டை விட்டு விடுகின்றன. மேலும், திரைக்கதையில் அவர்கள் கவனம் செலுத்துவதேயில்லை. கையில் ஒரு டிஜிட்டல் கேமரா இருந்தால் உடனே அதைக் கொண்டு ஒரு குறும்படம் எடுத்துவிடலாம் என்கிற எண்ணத்தில் படைக்கப்படும் குறும்படங்களே தமிழகத்தில் அதிகம். சரியான, தெளிவான சமூகப் புரிதல், இலக்கிய வாசிப்பு, முறையான தொழில்நுட்ப அறிவு இவற்றோடு மக்களின் சமகால மனோபாவம் இவற்றை மனதில் கொண்டு படைக்கப்படும் படைப்புகளே அதிகம் கவனம் ஈர்க்கின்றன. அந்த வகையில் கவனிக்கத்தக்க படைப்புதான் திரைப்படக்கல்லூரி மாணவரான ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இயக்கியிருக்கும் "திற' குறும்படம். 2002-ம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலையையும், அவர்களது வலிகளையும், வேதனைகளையும் மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார். பிரபல எழுத்தாளரான சதக் ஹசன் மன்ட்டோ, பாகிஸ்தான் பிரிவினையை மையமாக வைத்து எழுதியக் கதையைப் படித்து, அதன் பாதிப்பால் ச.பிரின்சு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் சிராஜுதீனாக நடித்திருக்கும் தி.சு.சதாசிவத்தின் நடிப்பு திரையில் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. அதைவிட மிகச் சொற்பமான காட்சிகளிலே வந்து போனாலும் மிகப்பெரிய பாதிப்பை நம் மனத்திரையில் உருவாக்குகிறார் ஷகினாவாக வரும் சினேகா. மற்ற பாத்திரங்கள் தங்களுக்குரிய தன்மையை உணர்ந்து நடித்திருப்பது சிறப்பு. ஒளிப்பதிவும், படத்தொகுப்பும், பின்னணி இசையும் கதையின் அழுத்தத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன. சமூக நோக்குள்ள கதைக்கருவை எடுத்துக்கொண்டதற்காகவே இயக்குநரை மனம் திறந்து பாராட்டலாம்.
பெரியாரிய கருத்துக்களின் மீது மிகுந்த ஈடுபாடுள்ளவர் இயக்குநரான ச. பிரின்சு என்னாரசு பெரியார். இவர், எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியில் இயக்குநர் பிரிவில் படிக்கும்போது இறுதியாண்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்தான் "திற'. இப்படம் தமிழக அரசின் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதும், நெய்வேலி குறும்பட போட்டியில் சிறந்த இயக்குநருக்கான விருதும், ஜெய்ப்பூர் உலகத் திரைப்பட விழாவில் ஸ்பெஷல் ஜூரி விருதையும் பெற்றிருக்கிறது. பிரின்சு இக்குறும்படம் மட்டுமின்றி "புகை', "காதல் சுவடு' உள்ளிட்ட குறும்படங்களையும், "பகுத்தறிவு கிராமம்', "மனிதர்கள்' போன்ற ஆவணப் படங்களையும் இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல இயக்குநர் கெüதம் வாசுதேவ் மேனனிடம் சில காலங்கள் உதவி இயக்குநராக வேலைப் பார்த்தவர், தற்போது திராவிடக் கழகத்திலிருந்து வெளிவரும் "உண்மை', "பெரியார் பிஞ்சு' போன்ற இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

Comments

Popular Posts