சினிமா - 2


(எய்தவன் யாரடி?)


சில வருடங்களுக்கு முன்பு, படப்பிடிப்பு சம்பந்தமாக மிக நீண்ட பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டியிருந்தது. சுமார் இரண்டு நாட்கள் ரயிலிலும் பிறகு பேருந்திலும் சென்றால்தான் அந்த இடத்தைச் சென்று அடைய முடியும். படப்பிடிப்புக் குழுவினர்களில் சிலர் வெவ்வேறு வாகனங்களில் செல்ல, உதவி இயக்குநர்களாகிய நாங்கள் மட்டும் ரயிலிலும் பேருந்திலும் செல்வதாக ஏற்பாடாகியிருந்தது. அதன்படி ஒரு பேருந்து நிலையத்தை அடைந்தோம். ஆனால் பேருந்து நிலையமா? அல்லது பொட்டல் காடா? என்று பிரித்துணர முடியாதவாறு மிகுந்த விசாலத்துடன் தனித்துக் காட்சியளித்துக் கொண்டிருந்தது. அந்த நிலப்பகுதி முழுவதும் மஞ்சள் நிறத்தைப் போர்த்திக் கொண்டிருக்க, அதிகாலைப் பனி அதைச் சூழ்ந்திருந்தது. விடியற்காலை என்பதாலும், நாங்கள் இரண்டு நாட்கள் தொடர்ந்து ரயிலில் பயணம் செய்திருந்ததாலும் உடல் சோர்வு தட்டியிருந்தது. எங்கள் குழு பேருந்தில் இருக்கையைத் தேடி அமர்ந்து கொண்டது. நாம் பேருந்தின் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து கொண்டோம். பேருந்தினுள்ளே எங்களைத் தவிர வேறு யாரும் ஏறி அமராமல் வெளியே நின்று கொண்டிருந்தார்கள். எங்கள் குழுவிற்கே அது வித்தியாசமாக இருந்தது. அந்தப் பகுதியைச் சேர்ந்த யாரும் பேருந்தில் அமர்ந்திருக்கவில்லை என்பதைப் பிறகுதான் புரிந்து கொண்டோம். அந்த ஊர் மக்கள் ஏதோ ஒன்றுக்காகக் காத்திருப்பது போல ஒவ்வொரும் தங்களது முகத்தை வைத்துக் கொண்டிருந்தார்கள். நாம் கொஞ்சம் தூக்கக் கலக்கத்தில் இருந்தாலும் அவர்களது உடல்மொழியையும் அவர்களையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தோம். "உதவி இயக்குநர் புத்தி உங்களை விட்டு எங்கேப் போய்விடப் போகிறது?' என்கிறீர்களா? உண்மைதான்! அங்கு நின்றிருந்த அந்தப் பகுதி மக்களின் ஆடைகள் மஞ்சள் நிறப் புழுதி படிந்து பழுப்பேறியிருந்தது. உடல்கள் மெலிந்து காணப்பட்டன. நாம் யோசித்துக் கொண்டிருக்கும்போதே ஓட்டுநரும், நடத்துனரும் பேருந்தில் ஏறினார்கள். என்ன விசித்திரம்? ஓட்டுநர் பேருந்தை ஸ்டார்ட் செய்ததுதான் தாமதம். அதற்குள் வெளியில் நின்று கொண்டிருந்த அந்தக் கூட்டம் திபுதிபுவென ஏறியது. பேருந்து நகரத் தொடங்கியதும் எங்கேதான் அதைப் பதுக்கி வைத்திருந்தார்களோ தெரியவில்லை. ஒரே நேரத்தில் எல்லோரது கை இடுக்கிலும் அந்த ஜந்து வந்து உட்கார்ந்திருந்தது. அவர்கள் நிதானமாக அந்த ஜந்துவைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். பேருந்து முழுக்க ஒருவித நெடியுடன் எங்களைச் சுற்றி அசுத்தக் காற்று சுற்றிக் கொண்டது. எங்களது குழுவில் இருந்த ஒருவருக்கு ஆஸ்துமா பிரச்சினை இருந்ததால் அவரால் அந்த நச்சுக்காற்றை சுவாசிக்க முடியாது திணறி, தொடர்ந்து இரும ஆரம்பித்து விட்டார். ஏறக்குறைய எங்கள் படக்குழு அந்த இடத்தை அடைய அரைமணி நேரத்திற்கு மேலாக ஆகும் என்பதால் அந்த அரைமணி நேரமும் நாங்கள் அந்த சித்ரவதையிலிருந்து தப்பவே முடியவில்லை. எங்களை சித்ரவதை செய்த அந்த ஜந்து என்னவென்றா கேட்கிறீர்கள்? பீடிய்ய்ய்......

அது பரபரப்பான சாலையின் ஓரம் இருக்கும் டீக்கடை. அங்கே இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்து, டீயை சாப்பிட்டுக்கொண்டே சிகரெட் பிடிக்கிறார்கள். அந்த டீக்கடையை நடத்தும் முனுசாமிக்கு புகைபிடிக்கும் பழக்கம் இல்லை. ஆனால், அவனது நண்பனான சிலம்பரசனுக்கு அப்பழக்கம் இருக்கிறது. அவனும் அந்தக் கடைக்கு வந்துதான் சிகரெட் பிடிக்கிறான். சிகரெட் பிடிப்பதோடு அப்புகையை முனுசாமியின் முகத்திலே செல்லமாக ஊதியபடி பேசுவது அவனுக்குப் பிடித்த பொழுதுபோக்கு. முனுசாமியும் தன் நண்பன் என்பதால் அதைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. இந்த செயல் அவர்களது வாழ்க்கையில் தினசரி வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் சிலம்புவுக்கு ஒரு பெண்ணின் மீது காதல் வருகிறது. அந்தக் காதல் கொடுக்கும் பரவசத்தாலும் அவன் சிகரெட்டுகளை அதிகமாகப் புகைக்கிறான். தன் நண்பனின் முகத்தில் தெரியும் மாறுதல்களை வைத்து முனுசாமி அவனுக்குள் காதல் முளை விட்டிருப்பதை அறிந்து கொள்கிறான். அதே சமயத்தில் வாடிக்கையாளர்களும் அவனது கடைக்குள் வந்து ஒரு டீயைப் பருகியபடியே நிதானமாகக் புகைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் விடும் நச்சுப் புகையையும் அவன் சுவாசிக்கத்தான் வேண்டியிருக்கிறது. ஒரு நாள் சிலம்பு சோர்வோடு திரும்பி வருவதைப் பார்க்கும் முனுசாமி, ""என்னாச்சுடா பங்காளி? ஏன்டா ஒரு மாதிரியா இருக்க... சொல்லுடா?... சொல்லுடா'' என்று கெஞ்சுகிறான். அவனோ, கடையின் மோட்டு வளையை சோகம் அப்பிய முகத்துடன் பார்த்துக் கொண்டேயிருக்கிறான். பிறகு தனது காதல் தோல்வியை அவனிடம் சொல்லிவிட்டு அந்தக் கடையிலேயே மயக்கம் போட்டு விழுந்து விடுகிறான். தன் நண்பனின் நிலையைப் பார்த்துக் கதறும் முனுசாமி, அவனை சக நண்பன் ஒருவனின் உதவியோடு தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தில் பறக்கிறான். குறுக்கு வழியில் அவர்கள் செல்வதால் ஒரு மின்கம்ப மரத்தில் மோதி அவர்களது வாகனம் விபத்துக்குள்ளாகிறது. மருத்துவமனையில் முனுசாமியும், சிலம்புவும் ஒரு சேர அனுமதிக்கப்பட்டு சோதிக்கப்படும்போது முனுசாமிக்கு கேன்ஸர் இருப்பது தெரிய வருகிறது. ஆனால் சிலம்புவோ பூரண நலத்துடன் இருப்பதாக மருத்துவர் அவனது பெற்றோரிடத்தில் கூறுகிறார். முனுசாமியின் அண்ணன், தன் தம்பியின் நிலையைக் கண்டு ""எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாதவனுக்கு கேன்ஸர் எங்கிருந்துடா வந்தது....'' என்று அவன் மீது விழுந்து கதறுகிறார். அப்போது ஒரு இடைச்செறுகல் காட்சி வருகிறது. அது டீக்கடையில் எல்லோரும் அமர்ந்து புகைக்கும் புகையை சுவாசிக்கும் முனுசாமியின் பரிதாபத்துக்குரிய முகம்... பின் மனதைக் கரைக்கும் பின்னணி இசையோடு படம் நிறைவடைகிறது.

புகைப்பவர்களைவிட புகைப்பவர்களின் அருகில் இருப்பவர்களுக்குத்தான் அதிகமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் "எய்தவன் யாரடி?'. இப்படமானது குறும்படத்திற்குண்டான இலக்கணங்களை மீறி ஒரு நெடுந்தொடருக்கான இலக்கணங்களோடு உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் நடித்து, இயக்கியிருக்கிறார் தெ.க.சிலம்பரசன். படத்தில் அனைத்து பாத்திரங்களுமே மிகை உணர்ச்சியை வெளிப்படுத்தி, நம்மை அழ வைக்க முயற்சி செய்து தோற்றுப் போகின்றன. ஆனால் சிற்சில காட்சிகளே வந்திருந்தாலும் முனுசாமியின் அண்ணன் பாத்திரமே நம் மனதை விட்டு அகல மறுக்கிறது. சில நேரங்களில் இயக்குநரை மீறியும் சில இயல்பான நல்ல விஷயங்கள் ஒரு குறும்படத்தில் அமைந்து விடுவதுண்டு. அதற்கு உதாரணமாக முனுசாமியின் அண்ணன் நடிப்பைச் சொல்லலாம். படத்தின் தொழில்நுட்ப விஷயங்கள் கனகச்சிதமாக உள்ளன. படத்தின் கேமரா கோணங்கள், படத்தொகுப்பு, பின்னணி இசை உள்ளிட்ட யாவும் படத்தின் கதைக்கேற்ற அளவில் மிகச் சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளன. சமீப காலமாக, குறும்பட இயக்குநர்கள் தொழில்நுட்ப விஷயங்களில் தீவிர கவனம் செலுத்தி வருவதை இக்குறும்படத்திலும் காண முடிகிறது. திரைக்கதை பரவாயில்லை ரகம். கதையின் பாத்திரங்கள் "ஓவர் ஆக்டிங்' செய்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். அதேபோல, ஒரு கருத்து மிகக் குறுகிய நேரத்தில் சொல்லப்படுவது மட்டுமல்ல குறும்படம். சொல்ல வேண்டிய விஷயங்களை சில நேரங்களில் விரிவாக சொல்லிச் செல்வதும்தான் குறும்படத்தில் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்களில் ஒன்றாகும். கதைக் கருவைச் சிதைக்காமல் சில காட்சிகளை "எய்தவன் யாரடி?' படத்தில் இணைத்திருந்தால் இப்படம் மேலும் கவனிக்கத்தக்க வரவேற்பைப் பெற்றிருக்கும்.
"எய்தவன் யாரடி?' என்னும் குறும்படத்தின் இயக்குநரான தெ.க.சிலம்பரசன், சென்னை-தாமஸ் கல்லூரியில் காட்சி ஊடகத்துறை சம்பந்தமான படிப்பை இறுதியாண்டு படித்து வருகிறார். இதற்கு முன் இவர் "எட்டணா' என்னும் குறும்படத்தையும் எழுதி, இயக்கியிருக்கிறார். இப்படம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி மற்றும் சத்யபாமா கல்லூரிகளில் நடைபெற்ற குறும்பட போட்டிகளில் கலந்துகொண்டு முதல் பரிசைப் பெற்றிருக்கிறது. "எய்தவன் யாரடி?' குறும்படம் மக்கள் தொலைக்காட்சியில் "பத்து நிமிடக் கதைகள்' போட்டியில் கலந்து கொண்ட படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular Posts