சினிமா - 12


(மூன்று இரவுகளும், நான்கு நாட்களும்)


"தை - அரைக்கம்பத்தில் தொப்புள் கொடி' கவிதைப் புத்தகம் டேபிளின் மீது ஒரு சில வாரங்களாய் அமைதியற்று கிடக்கிறது. கையில் புத்தகத்தை எடுத்து வாசிப்பதும், பிறகு மனம் கனத்து மூடி வைப்பதுமாய் இரவுகள் கழிகின்றன. நடு இரவில் திடீரென துர்கனவுகள் வந்து எழுந்து உட்கார்ந்து கொள்கிறேன். தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு அமைதியை போர்த்திக் கொண்டு இருக்கிறது. சுழலும் மின் விசிறியின் சப்தமும், ஆழ்ந்து குறட்டை சப்தத்தோடு உறங்கும் நண்பனும் மட்டுமே அருகில் இருக்கிறார்கள். சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு தெருவில் இறங்கி, புத்தகங்களோடு நடக்கிறேன். இருளில் தெரு நிச்சலனமாய் இருக்க, பனி மோசமாக பெய்து கொண்டிருக்கிறது. தெரு மின் விளக்கின் கீழ் வெளிச்சத்தில் அமர்ந்து, புத்தகம் திறக்கிறேன். குண்டுகள் வெடிக்கின்றன. அழுகுரல்கள் காதை பிளக்கின்றன. எங்கும் மரண ஓலம். குண்டுகள் துளைத்த உடலுடன் எம்மவர்கள் முன்னேறிச் செல்கிறார்கள். நிலம் ரத்தத்தின் ஊறல்களால் சிவந்து போகிறது. மண்ணில் விழுந்த பெருந்துளிகளின் ரத்தம் ஆற்றாய் பெருக்கெடுத்து எம் கால்களை நனைக்கிறது. குழந்தைகளின் அலறலும், இடைவிடாத பெரும் தோட்டாக்களின் சீறலும், பெருவெடிப்பாய் காதில் ஒலிக்கத் துவங்கி, சன்னமாய் மாறி, பிறகு ஒலி மங்குகிறது. திமிறியெழும் குரல்களில் மண்ணின் வாசனை. திருப்பும் காகிதத்தின் பக்கங்களில் எல்லாம் தோட்டக்கள் துளைத்த நிர்வாண உடலோடு அண்ணன்கள் மண்ணை முத்தமிட்டு, நம்பிக்கையோடு கிடக்கிறார்கள். எம் நகரம் பெரும் மெüனத்தால் சிறைப்பிடிக்கப்பட்டு கிடக்க, மனம் மட்டும் இறுகி நிற்கிறது. நாங்கள் என்ன செய்ய?
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் பிரான்ஸ் தமிழர்கள் ஆண்டுதோறும் குறும்பட விழாக்களை நடத்தி வருகிறார்கள். இப்பட விழாவில் கலந்து கொள்ளும் படங்களிலிருந்து சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து அவற்றிக்கு "சங்கிலியன் விருது' என்ற பெயரில் கொடுத்து கெüரவிக்கிறார்கள். 2009ற்கான சங்கிலியின் விருதை தேர்வு செய்ய தமிழகத்திலிருந்து ஓவியர் ட்ராஸ்ட்கி மருதும், ஒளிப்பதிவாளர் செழியனும் அழைக்கப்பட்டிருந்தார்கள். திரையிடப்பட்ட பல படங்களிலிருந்து மூன்று படங்களை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அதில் "மூன்று இரவுகளும், நான்கு நாட்களும்' குறும்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. உறங்காத இரவின் ஒரு அதிகாலைப் பொழுதில் ஓவியர் ட்ராஸ்ட்கியின் மருதுவின் இல்லத்தில் தேர்வு செய்யப்பட்ட மூன்று படங்களை நாம் கண்டு களித்தோம். சூடான தேநீரோடு அவரிடம் படம் குறித்து அவரிடம் உரையாடி தகவல்களைப் பெற்றுக்கொண்டோம். அவ்வாறாகத்தான் இக்குறும்படம் பற்றி நாம் அறிய வந்தது.
ஈழ மண்ணில் விடாது சிங்கள ராணுவம் குண்டுகளை சரமாரியாக பொழிந்து கொண்டிருக்கிறது. மக்கள் திசைகளின் வழி தெரியாமல் நாலா பக்கமும் சிதறி ஓடுகிறார்கள். அம்மண்ணிலிருந்து ஒரு தமிழ்க்குடும்பம் தப்பித்து, விமானம் மூலம் ரஷ்யாவின் குளிர் மிகுந்த ஒரு காட்டுப்பகுதியில் இரவில் அகதிகளாக வந்து இறங்குகிறார்கள். முறையான அரசாங்க விதிமுறைகளோடு அவர்கள் வராததால், பனியும், குளிரும் உறைந்து கிடக்கும் அந்த காட்டில் அவர்கள் பயத்தின் பீதியில் உறைந்து நிற்கிறார்கள். அந்த குடும்பத்தின் அனைவரின் முகமும் வெளிறிய நிலையில் எதற்கோ காத்து நிற்கிறார்கள். அங்கே ஒரு ஏஜென்ட் அவர்களை, மந்தைகளை அடைப்பது போல, ஒரு வேனில் அடைத்துக் கொண்டு புறப்படுகிறான். பிறகு ஓர் மறைவிடத்தில் அவர்கள் தங்க வைக்கப்படுகிறார்கள். அது ஒரு இருண்ட பாழடைந்த மண்டபம். பசி அவர்களின் வயிற்றை பிய்த்து திங்கிறது. இடைவிடாது உறை பணியில் நடந்ததாலும், பயணத்தாலும் அவர்களது உடல் சோர்ந்து கிடக்க, குழந்தைகளில் இருவர் மயக்கமாகிறார்கள்.
ஏஜென்டுகள் அவர்களுக்கு தின்பதற்கு ரொட்டியும், ஏதோ ஒரு ஜாமையும் கொடுக்கிறார்கள். அதை அந்த குடும்பம் பங்கிட்டு உண்கிறது. அந்த குடும்பத்தின் வளர் இளைஞனுக்கு (வயது 16) அந்த உணவு ஒவ்வாமையை ஏற்படுத்த, சாப்பிட்டவற்றை அவன் வெளியே எடுக்கிறான். அவனது கண்கள் சொக்கிய நிலையில் மயக்கமாகிறான். ஏஜென்டுகள் இவர்களது மறைவிடத்தின் அருகேயுள்ள சாலையில் வேனை நிறுத்தி குளிர்பானத்தை குடித்துக்கொண்டே புகைத்துக் கொள்கிறார்கள். அவர்களிடம் வரும் வேறு இரண்டு பேர் ஏஜென்டிடம் கைக்குலுக்கிறார்கள். அவர்களும் ஏஜென்டுகள்தான். மறைவிடத்தில் இருக்கும் அந்த குடும்பத்தில் உள்ள இளைஞனை மட்டும் அவர்கள் காரில் அழைத்துக்கொண்டு புறப்படுகிறார்கள். அவர்களது கார் ரஷ்யாவிலிருந்து போலந்து வருகிறது. பிறகு, யாருமற்ற ஓர் சாலையின் ஓரம் கார் நிறுத்தப்பட்டு, காரின் பின்பகுதியில் உடல் குறுகிய நிலையில் அந்த இளைஞனை அடைத்து வைத்துவிட்டு, பயணத்தை தொடர்கிறார்கள் ஏஜென்டுகள். பசியிலும், மிரட்சியிலும் அவன் அயற்சியடைந்து கிடக்கிறான். அவர்களது கார் ஜெர்மனி வழியாக பிரான்ûஸ அடைகிறது. பிரான்ûஸ அடைந்து பிறகு, அவனை காரின் உள்ளே அமர வைத்து அவன் உன்பதற்கு ஏதோ ஒரு வகை உணவை கொடுக்கிறார்கள். பிரான்ஸில் உள்ள அந்த இளைஞனது அண்ணன் இருக்கும் பகுதிக்கு கார் விரைகிறது. காரினுள் இருக்கும் இளைஞன் அந் நகரத்தை வியப்பும், மகிழ்ச்சியும் மேலிட வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வருகிறான்.
பிரான்ஸ் நகரத்தின் நடைபாதை ஒன்றில் ஏஜென்டின் கார் நிறுத்தப்படுகிறது. ஏஜென்டில் ஒருவன் வெளியில் இறங்கி நோட்டமிடுகிறான். நடைபாதையின் அருகில் போலீஸ் ஒருவர் நின்று கொண்டிருக்கவே...ஏஜென்ட் அழைத்து வந்த இளைஞனை உள்ளேயே வைத்து காரின் கதவை சாத்துகிறான். சிறிது நேரத்தில் அந்த இடத்திற்கு அந்த இளைஞனது அண்ணன் வருகிறான். தனது தம்பியைப் பார்த்த அவனது முகத்தில் சந்தோஷமும், பதற்றமும் தொற்றிக் கொள்கிறது. கையில் கொண்டு வந்திருக்கும் பணத்தை அந்த ஏஜென்டிடம் கொடுக்கும் அவன், தம்பியை அழைத்துக்கொண்டு செல்ல முற்படும்போது, ஏஜென்ட் அவனை தடுத்து, மேலும் பணம் கேட்கிறான். தன் னிடம் இருக்கும் முழுப் பணத்தையும் கொடுத்து விட்டதாகவும், இனி பணம் இல்லை என்றும் கூறுகிறான். ""பணத்தை கொடுத்து விட்டு தம்பியை அழைத்துப் போ'' என்று அவர்கள் உறுதியாக மறுத்து விடவே, நம்பிக்கையிழந்தவனாய் அவன் ஏ.டி.எம். மிஷின் இருக்கும் இடம் நோக்கி விரைகிறான். ஏஜென்டுகள் அவனுக்காக காத்திருக்கிறார்கள். தன் கணக்கில் இருக்கும் முழுப் பணத்தையும் எடுத்துக் கொண்டு ஓடி வரும் அவன் அவர்களிடம் மீதித் தொகையைக் கொடுக்கவும், அவர்கள் அந்த இளைஞனை காரிலிருந்து வெளியே விடுகிறார்கள். நீண்ட நாட்களாய் பிரிந்திருந்த தம்பியைக் கண்டதும் அவனை கட்டித் தழுவுகிறான். தம்பியை அழைத்துக்கொண்டு தன்னுடைய அறையை நோக்கி செல்ல, பாதாள ரயில் நிலையத்திற்கு வருகிறான். ரயில் பயணச் சீட்டு, எடுக்க பையில் கையில் விடும்போது அவனிடம் ஒரு பயணச்சீட்டு எடுப்பதற்கான சில்லறைகள் மட்டுமே மிஞ்சியிருக்கிறது.
செய்வதறியாது திகைக்கும் அவன் வேறு வழியின்றி, ஒரு பயணச்சீட்டு மட்டும் பெற்றுக்கொண்டு, தன் தம்பியை யாருக்கும் தெரியாமல் அழைத்துச் செல்லும்போது, ரயில் நிலைய பரிசோதனை அதிகாரிகள் மறித்து, அவனிடம் பயணச்சீட்டை காண்பிக்கச் சொல்கிறார்கள். தன்னிடம் இருக்கும் சீட்டை காண்பிக்க, அவர்கள் அவனது தம்பியிடம் பயணச்சீட்டைக் கேட்கிறார்கள். அவனிடம் இல்லையென்பதை அறிந்தவுடன் அவர்கள் போலீûஸ அழைக்கிறார்கள். அவன் தன் தம்பியை விட்டுவிடும்படி கெஞ்சுகிறான். போலீஸ் அங்கே வந்து அவனது தம்பியிடம் அடையாள அட்டையைக் கேட்கிறது? அவன் விழிக்கவே, அவனை கைது செய்கிறது. அண்ணன், தனது தம்பியை விட்டு விடுமாறு அவர்களிடம் கண்ணீருடன் மன்றாடுகிறான். அவனை தவிர்த்து விட்டு, தம்பியை அழைத்துக்கொண்டு போகிறார்கள். தம்பி, போலீஸிடமிருந்து திமிறியெழுந்தவாறே அண்ணனிடம் வர முயற்சிக்க, போலீஸôரோ வலுக்கட்டாயமாக அவனை இழுத்துச் செல்கிறார்கள். அண்ணன் பெருங்குரலெடுத்து அழுதவாறே ரயில் நிலைய சுவரின் ஓரம் அமர்கிறான். ரயில் நிலைய அதிகாரிகள் அவனை நகர சொல்கிறார்கள். பீறிட்டுக்கொண்டு வரும் இயலாமையின் அழுகையோடு அவனது வாழ்வை இருள் சூழ, படம் நிறைவடைகிறது. தாம் பிறந்த மண்ணை விட்டு, அகதிகளாக வெறொரு மண்ணிற்கு புலம்பெயரும் ஈழத்து மக்களின் வலிகளையும், வேதனைகளையும் அவர்கள் தங்களது பயணத்தில் எதிர்கொள்கிற சிக்கல்களையும் எதிர்கொள்கிற படமாக "மூன்று இரவுகளும் நான்கு நாட்களும்' குறும்படம் உருவாகியிருக்கிறது. இது தமிழ்நாட்டிற்கு வெளியே நடைபெற்றிருக்கும் அரிய முயற்சி என்பது நாம் இங்கே கவனிக்கத்தக்க ஒன்று! கதையின் உள்ளடக்கத்திலும், தொழில்நுட்ப விஷயங்களிலும் இக்குறும்படம் மிகச்சிறந்த தேர்ச்சியை பெற்றிருக்கிறது. இதுவரை பாப்புலர் சினிமா மீதான மோகத்திலிருந்த இளைஞர்கள் உண்மையைத் தேடும் பயணமாக, முயற்சியாக அவர்கள் பயணிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதை இக்குறும்படம் அடையாளப்படுத்துகிறது. அண்ணனாக நடித்திருக்கும் பாஸ்கரின் நடிப்பு, மனதில் கண்ணீரை வரவழைக்கிறது. சாருவின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். வசனங்கள் அதிகமின்றி, காட்சிகளின் மூலமாகவே புலம்பெயர் மக்களின் வாழ்வை வலியோடு சொல்லியிருக்கும் இயக்குனர் ஐ.வி. ஜனாவின் கைகளை வலிக்கும்வரை குலுக்கலாம்.

Comments

Popular Posts