சினிமா - 4

(மக்-அப் மங்கம்மா)

ழலைப் பருவத்தின் சேட்டைகள் ரசிப்பிற்கு உரியன மட்டுமல்ல அது ஆய்வுக்கு உட்பட வேண்டியதும் கூட! வாழ்வின் போக்கில் நிகழும் எந்த ஒரு சம்பவத்தையும் வெறுமனே பார்த்துவிட்டு அவற்றை கூர்ந்து நோக்காமல் பல அரிய தரிசனங்களை நாம் தவற விட்டுவிடுகிறோம். தத்தி தத்தி நடக்கும் மழலைத் தன் தாயின் பயத்தை உதறிவிட்டு நடக்க எத்தனிப்பது போல, நாம் நம் வாழ்க்கையின் பயத்தை உதறிவிட்டு நடக்க ஒருபோதும் முயலுவதில்லை. சிறுவனாய்/சிறுமியாய் இருக்கும்போது நம்மை பாதிக்கும் பல செயல்கள் நம் வாழ்க்கையின் போக்கை தீர்மானிக்கப் போகின்றன என்பதை நாம் எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கோமா? சிறுவயதில் பாட்டியின் விரல்களைப் பிடித்துக்கொண்டு அந்தி வானத்தைப் பார்த்து, வியந்து, சந்தோஷமடைந்த நமது மனம், காலத்தின் போக்கில் மேடு தட்டி, ஏதோ ஒர் இடத்தில் நிலைகுத்தி நின்று விடுகின்றன. வண்ணத்துப் பூச்சிகளும், தட்டான்களும், பூக்களும், வீட்டு விலங்களும் செல்ல நண்பர்களாய் நம்மோடு இருந்த தருணங்களும், அவற்றோடு நாம் பழகிய நாட்களும் காலத்தின் போக்கில் கரைந்துபோய் விடுகின்றன. மணல் குவித்து அதன் மீது அமர்ந்து டூரிங் டாக்கீஸில் தலைவர் படத்தைப் பார்த்து விசிலடிக்கும் ரசிகனின் மனவுலத்தைப் போல நாம் நம் மனதை இலகுவாக வைத்துக் கொள்ளுவதில்லை. பூமியை தரிசித்துவிட்ட சந்தோஷத்தில் துள்ளித் திரியும் பசுவின் கன்றுகுட்டியைப் போல சிறார் பருவத்தில் நமது ஊரின் எல்லாத் தெருக்களிலும் அலைந்து திரிந்திருப்போம். நமது மென் பாதங்கள் படாத தெருக்களும், வீதிகளும் ஏதேனும் இருக்கிறதா? கொடுக்காப்புளி, நாவல், எலந்தை, விலாப்பழங்களின் சுவைகள் நம் நாவின் சுவையிலிருந்து வேண்டுமானால் மறைந்து போயிருக்கலாம். ஆனால், அவற்றைத் தேடியலைந்த நாட்களையும், தேடியலைந்தபோது நம் காலில் குத்திய முட்களின் வலியையும் நாம் ஒருபோதும் மறந்திருக்க இயலுமா? திருடன் - போலீஸ் விளையாட்டை மறந்த குழந்தைகளின் வரவுக்காக இப்போதும் இரவுகளும், வீடுகளும் காத்திருக்கத்தான் செய்கின்றன. தம் குழந்தைகளை பள்ளியில் சேர்த்துவிட்டு, வெளியே வந்து, பிரிவில் பெருங்குரலெடுத்து அழுத தகப்பன்களை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா நண்பர்களே? பள்ளி விட்டதும் பெற்றவர்களைத் தேடி ஓடி வரும் குழந்தைகளின் முகத்தில் தெரியும் சந்தோஷ மின்னல்களை கவனித்திருக்கிறீர்களா? ஏன் காலம் காலமாய் பள்ளிக்கூடங்கள் நம் குழந்தைகளை பயமுறுத்திக் கொண்டேயிருக்கிறது? குழந்தைகள் எப்போதும் குழந்தைகளாகத்தான் இருக்கின்றன. நாம்தான் பெரியவர்களாக இருக்க பெரும்பாலும் தவறி விடுகிறோம். குழந்தையைப் புரிந்து கொள்வது வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கு ஒப்பானது என்ற வார்த்தைகளை நாம் சாதாரணமாக விட்டு விட முடியுமா என்ன?

பள்ளிகள் மாணவர்களுக்குப் புரியும்படி பாடங்களைச் சொல்லிக் கொடுப்பதை விட திணிக்கவே செய்கின்றன. மாணவர்கள் பொதுவாக ஏதேனும் ஒரு தனித்திறமையோடுதான் வளர்கிறார்கள். அந்த திறமைகளை பள்ளிக்கூடங்கள் வளர்த்தெடுப்பதை விட புறக்கணிக்கவே செய்கின்றன. நமது பாடத்திட்டங்கள் பொதுவாக மனப்பாடம் செய்து, தேர்வின்போது எழுதி, விட்டு மறந்து விடுபவையாகத்தான் இப்போதும் இருக்கின்றன. பெரும்பாலான மாணவர்கள் மதிப்பெண்களுக்காகத்தான் போராடுகிறார்களே தவிர, பாடத்தைப் புரிந்து கொள்வதற்கு அவர்கள் முயற்சிப்பதேயில்லை. அவர்கள் முயற்சிக்காமல் போனதற்கு ஆசிரியர்களை மட்டும் தொடர்ந்து குறை சொல்வதால் எந்த பயனுமில்லை என்பதையும் குறை நம் சமூகத்திடம்தான் என்பதையும் இங்கே நாம் புரிந்துகொள்ள வேண்டும். பாடத்தின் அடிப்படையை, அதனால் சமூகத்தில் விளையும் பயனை அல்லது பங்கை பெரும்பான்மையான ஆசிரியர்கள் மாணவரிடத்தில் விவரிப்பதேயில்லை அல்லது மாணவர்களுக்கு புரியும்படி சொல்லித்தர ஆசிரியர்களை கல்வித்துறை நிர்பந்திப்பதும் இல்லை. வருடந்தோறும் பள்ளித் தேர்வில் தோல்வியடைந்ததற்காக தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதானே செல்கிறது. பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியாகும் மாணவர்கள்/மாணவிகள் அதன் பிறகு சமூகத்தில் அடையாளமற்றவர்களாகத்தான் இருக்கிறார்கள். சமூகத்தில் முக்கிய பதவிகளையோ அல்லது பிரபலமாகவோ இருப்பவர்கள் பெரும்பாலும் குறைந்த மதிப்பெண்களில் தேர்ச்சியானவர்களாத்தான் இருக்கிறார்கள். இந்த பெருத்த முரண்பாடு எதனால் விளைந்தது? இவை எல்லாவற்றிக்கும் மிக எளிதான ஒரு பதிலை மிக யதார்த்தமாக தனது "மக்-அப் மங்கம்மா' குறும்படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநரான பாவல் நவகீதன். மாணவர்களுக்கு எந்த ஒரு பாடத்தையும் அவர்களுக்கு புரியும்படியான சிறு சிறு உலக நடப்புகளின் மூலம் சொல்லிக் கொடுத்தால் எளிதாக அதனைப் புரிந்து கொள்ளுவார்கள். இதனால் கண்ணை மூடிக்கொண்டு மனப்பாடம் செய்யும் வேலை அவர்களுக்கு அவசியமிருக்காது என்பதை மாணவர்களின் இயல்பை கெடுக்காமல், நகைச்சுவை உணர்வோடு திரையில் கொண்டு வந்திருக்கிறார். திரைப்படங்கள் மாணவர்களை எந்தளவில் பாதிக்கிறது என்பதும் படத்தில் நம் முகத்தில் அறையும்படி சொல்லப்பட்டிருப்பது சிறப்பு. சமீபத்திய நம்பிக்கையளிக்கும் புது முகங்களில் கவனம் ஈர்க்கும் இவரால் சிறுவர்/சிறுமிகளை மிக யதார்த்தமாக திரையில் உலவவிட முடிகிறது. அவர்கள் நடிக்கிறார்களா? இல்லை அவர்களுக்கு தெரியாமல் இவர் படம் பிடித்தாரா? என்ற கேள்வி படம் பார்க்கும் நமக்கு நிச்சயமாக எழுகிறது. சிறுவர், சிறுமியைக் கொண்டு அவர்களுக்கான கதையை அவர்களது யதார்த்தம் கெடமால் படம் பிடிப்பது மிக அரிதான விஷயமே. அந்த செயலில் வெற்றிப் பெற்றிருப்பதால் இயக்குநரை மனம் திறந்து வரவேற்கலாம்!
"மக்-அப் மங்கம்மா' குறும்படத்தை இயக்கியிருக்கும் பாவல் நவகீதன் செங்கல்பட்டைச் சேர்ந்தவர். பி.ஏ. பட்டதாரியான இவர், டிப்ளமோவில் காட்சியல் தொடர்பான படிப்பை முடித்திருக்கிறார். "பாலை' என்னும் குறும்படத்தை 2003-ம் ஆண்டு முதன் முதலாக இயக்கியது முதல் இதுவரை பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய குறும்படங்கள் பல்வேறு குறும்பட விழாக்களில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றிருக்கிறது. அந்த வகையில் "மக்-அப் மங்கம்மா'வும் நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் நடைபெறும் குறும்பட போட்டியில் சிறந்த படத்திற்கான விருதை 2006-ல் பெற்றிருக்கிறது. இதே ஆண்டில் சி.எப்.எஸ்.ஐ.கோல்டன் ஜூப்லி திரைப்பட விழாவிலும், 2007-ல் டெல்லி மற்றும் ஈரோடு புத்தகக் கண்காட்சி ஆகியவற்றிலும் சிறப்பு திரையிடலாக இப்படத்தைத் திரையிட்டு இருக்கிறார்கள். தற்போது "ரங்க ராட்டினம்' என்னும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார் பாவல் நவகீதன். வரவேற்கத்தக்க படைப்பு!

Comments

Popular Posts