விருதுகளைக் குவிக்கும்மாற்று சினிமாக்கள்...

மிழில் எடுக்கப்படும் மாற்று சினிமாக்கள் தற்போது தமிழகத்தில் மட்டுமின்றி, உலகளவில் ஏராளமான திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதோடு, விருதுகளை வாரிக் குவித்த வண்ணம் உள்ளன. பெரும் பொருட் செலவில் எடுக்கப்படும் திரைப்படங்கள் கொடுக்கும் பரவசம், ஏற்படுத்தும் பாதிப்பு, சமூகத்தில் நிகழ்த்தும் மாற்றங்களைக் காட்டிலும், அதிகமான பாதிப்பை தமிழகத்தில் தற்போது பல இடங்களில் உருவாக்கி வருகிறன்றன குறைந்த செலவில், செறிவான தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படும் மாற்று சினிமாக்கள். அந்த வகையில் தற்போது எல்.வி.பிரசாத் அகடமியில் படித்த மாணவர்களில் பலர் உலக திரைப்பட விழாக்களில் பங்கு கொண்டு, விருதுகளையும், பரிசுப் பொருட்களையும் பெற்று வந்துள்ளனர். அந்த வகையில் ரோஹின் இயக்கிய "நண்பா' குறும்படம் பிரான்ஸ் திரைப்பட விழாவில் நடைப்பெற்ற குறும்பட விழாவில் ரூபாய் ஒன்றரை லட்சத்தையும், பிரசன்னா இயக்கிய "பெண் வேஷம்' கொரியா மற்றும் ஜெர்மனியில் திரையிடப்பட்டிருக்கிறது. இலங்கை அகதிகளை மையமாக வைத்து தன்வீர் இயக்கிய "அவள் பறக்கிறாள்' படம் போலந்து திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதைப் பெற்றிருக்கிறது. ராமநாதன் இயக்கிய "நானும் ஒரு பெண்' கோவா திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருக்கிறது. மேலும் பிரேம் இயக்கிய "மாற்றம்' ஜப்பான் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதை, சிறந்த கதை ஆகிய பிரிவுகளில் விருதையும், மனோகர் இயக்கிய "போஸ்ட்மேன்' ஜப்பான் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதையும், சொரூப் சீனிவாசன் இயக்கிய "மை பெஸ்ட் ஃப்ரண்ட்' போலந்து திரைப்பட விழாவில் சிறந்த கதைக்கான விருதையும் பெற்றுள்ளது. அபிலாஷா இயக்கிய "ஒரே ஒரு நாள்' திரைப்படம் கொரிய திரைப்பட விழாவில் பெண்களுக்கான பிரிவில் கலந்து கொண்டு, அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறது. சமீபத்தில் இதற்கான பாராட்டு விழா பிரசாத் ஸ்டூடியோவில் நடைப்பெற்றது. இவ்விழாவில் விருதுப் பெற்ற மாணவர்களுக்கு எல்.வி.பிரசாத் நினைவாக விருதுகள் வழங்கி கெüரவிக்கப்பட்டனர். விழாவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் வந்திருந்து சிறப்பித்தனர். விழாவில் பேசிய இயக்குநர் பாலுமகேந்திரா, ""சென்னையில் உள்ள அமெரிக்கன் நூலகத்தில் ஹாலிவுட்டைச் சேர்ந்த இயக்குநர் வில்லியம் கிரீவ்ûஸச் சந்தித்தேன். அவர் அப்போது தரமணியிலுள்ள திரைப்படக் கல்லூரியில் ஒரு வாரம் மாணவர்களோடு கலந்தாய்வில் இருந்தார். அந்த வகையில் அக்கல்லூரியில் நடிப்புப் பிரிவில் படித்துக் கொண்டிருந்த நாசர் மற்றும் அர்ச்சனாவையும் தன்னோடு நூலகத்திற்கு அழைத்து வந்திருந்தவர், அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். பொதுவாக எனக்குப் பெண்கள் மீது ஈர்ப்பு உண்டு என்பதால் (சிரித்தபடியே) அர்ச்சனாவை என் படங்களில் நடிக்கப் பயன்படுத்திக் கொண்டேன். ஆனால், நாசரை நான் பயன்படுத்திக் கொள்ளவேயில்லை. இரண்டுமுறை அவரை என் படங்களில் நடிக்க, அழைத்தப்போது அவரிடம் தேதிகள் இல்லாததால் அவரை நான் இழந்து விட்டேன்'' என்றார். ""எந்தக் கல்லூரியிலும் பார்க்காத தனித்தன்மையை இந்தக் கல்லூரியில் பார்க்கிறேன். இந்த கல்லூரிதான் திரைப்பட தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொடுப்பதோடு, மாணவர்களை நல்ல மனிதனாக உருவாவதற்கான சூழலையும் உருவாக்குகிறது'' என்றார் நடிகர் நாசர். இதனைத் தொடர்ந்து பேசிய எல்.வி.பிரசாத் அகடமியின் நிர்வாக இயக்குநர் கே.ஹரிஹரன் பேசும்போது, ""எங்கள் கல்லூரியில் பயிலும் மாணவர்களை நாங்கள் வியாபார சினிமாவிற்கோ, மக்களுக்கான சினிமாவிற்கோ தனித்தனியாக தயார் படுத்தாமல், அவர்களை நல்ல கலைத்தன்மையுடன் கூடிய சினிமாக்களை எடுக்கவே ஊக்குவிக்கிறோம். பயிற்றுவிக்கிறோம். மாணவர்களுக்கு நாம் திரைப்படம் குறித்து கற்றுக்கொடுக்க முடியாது. அவர்கள்தான் கற்றுக் கொள்ள வேண்டும் .
எங்கள் கல்லூரியில் பயின்ற மாணவர்களின் திரைப்படங்கள், உலக நாடுகளில் நடக்கும் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு வெற்றிப் பெறுவது எங்களுக்கும், எங்களது நிறுவனத்திற்கும் பெருமையாக இருக்கிறது'' என்றார். சமீபத்தில் வெளியான "ஈரம்', "விண்ணைத்தாண்டி வருவாயா' படங்களின் மூலமாக கவனம் பெற்ற ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பேசும்போது, ""இனி என் ஒவ்வொரு படத்திற்கும் இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வேன்'' என்றார். விழாவில் விருது வாங்கிய மாணவர்களின் பெற்றோர்களும் பேசினார்கள். ரம்மியமான மாலை வேளையில் தொடங்கிய இவ்விழா இருட்டத் தொடங்கியவுடன் நிறைவுப் பெற்றது.

Comments

Popular Posts